இளையர் அறிவியல் களஞ்சியம்/தீக்குச்சி

விக்கிமூலம் இலிருந்து

தீக்குச்சி : ஆதி மனிதர்கள் தீயின் உபயோகத்தை அறிந்தபின்னர் சக்கிமுக்கிக் கற்களை வேகமாகத் தட்டி உராயச் செய்தும், தடியைக் கொண்டு கடைந்தும் தீப்பொறி உண்டாகச் செய்தும் அதைக்கொண்டு நெருப்பை உருவாக்கி வந்தனர்.

இராசயனக் கலவையைக் கொண்டு தீக்குச்சி வடிவாக்கும் முயற்சியை 1827ஆம் ஆண்டில் ஜான் வாக்கர் எனும் ஆங்கிலேயர் தொடங்கினார். பலவித முயற்சிகளுக்குப்பின் 1855ஆம் ஆண்டில்தான் கஸ்ட்டாவ் பாஸ்க் எனும் சுவீடன் நாட்டு அறிவியலாளர் இன்றுள்ள தீப்பெட்டி, தீக்குச்சி முறையைக் கண்டறிந்தார். இதுவே முன்புள்ள முறைகளைவிடப் பெரும் பாதுகாப்புடன் கூடிய முறையாக அமைந்தது.

தீக்குச்சி செய்வதற்கேற்ற பைன், ஆஸ்பென் போன்ற மரங்களைப் பலகைகளாக அறுத்து, அதை சிறு குச்சிகளாக வெட்டிச் சேகரிக்கின்றனர். இவற்றைச் சிறு துவாரமுள்ள சட்டகத்தில் வரிசையாக அடுக்கி, அக் குச்சி முனைகளை உருகிய பாரபின் மெழுகில் தோய்த்தெடுக்கின்றனர். பின், அம்முனைகளை இராசயனக் கலவைக் குழம்பில் தோய்த் தெடுக்கின்றார். ஒட்டிய இராசயனக் கலவை காய்ந்தபின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குச்சிகளை மெல்லிய தகடுபோல் செதுக்கிய மரப் பலகையை மடித்து உண்டாக்கிய தீப்பெட்டியில் பொதிந்து வைப்பர். பின் அதன் மீது காகிதத்தை ஒட்டுவர். தீப்பெட்டியின் இருபுறமும் தீக்குச்சி உராய்ந்தவுடன் தீப்பிடிக்கக் கூடிய பாஸ்வரம் கலந்த கலவை பெட்டியின் இருபுறமும் தடவப்படும். அதன் பின் முழுமையான வடிவில் தீப்பெட்டி விற்பனைக்கு அனுப்பப்படும். தற்போது மரக் குச்சிகளுக்குப் பதிலாக மெழுகு பூசிய பேப்பர் குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன . நம் நாட்டில் தீப்பெட்டித் தொழில் பெரும்பாலும் குடிசைத் தொழிலாகவே நடைபெற்று வருகிறது.