இளையர் அறிவியல் களஞ்சியம்/தீ அணைப்பான்

விக்கிமூலம் இலிருந்து

தீ அணைப்பான் : திடீரென வீடுகளிலோ, அலுவலகங்களிலோ அல்லது பொது இடங்களிலோ, தீப்பற்றி எரியும்போது உடனடியாகத் தீயை அணைக்க உருவாக்கப்பட்ட சாதனமே தீ அணைப்பான் கருவி (Fire extin guisher) ஆகும். இக்கருவி சாதாரணமாக அடிப்பருத்தும் மேற்பகுதி கூம்பியும், கூம்பு வடிவில் இருக்கும். தற்போது பல்வேறு வடிவங்களில் தீ அணைப்பான் கருவிகள் உள்ளன.

இக்கருவியின் அடிப்பகுதியில் சோடியம் கார்பனேட் கரைசல் வைக்கப்பட்டிருக்கும். அதன் மேலாக மெல்லிய தகடு அமைந்திருக்கும். அதற்கும் மேலாக நீர்த்த கந்தக அமிலம் வைக்கப்பட்டிருக்கும். இக்கருவியின் கூம்புப் பகுதி முகட்டின் நுனி வெளியே துருத்திக் கொண்டிருக்கும். திடீரென ஏற்பட்ட நெருப்பை அணைக்க முனைபவர் இக் கருவியை எடுத்து துருத்திக் கொண்டிருக்கும் முனைப்பகுதியை தரையோடு வேகமாக மோதி உடைக்க வேண்டும். அப்போது முனை உடைபடுவதோடு கருவியினுள் நடுப் பகுதியில் உள்ள மெல்லிய தகடும் உடைபடும். அப்போது கீழேயுள்ள சோடியம் கார்பனேட்டும் கந்தக அமிலமும் ஒன்று கலக்கும். இதன் விளைவாக கார்பன்-டை யாக்சைடு எனும் கரியமில வாயு உருவாவதால் மிகுந்த அழுத்தத்தோடு விரைந்து வெளிப்படும். இவ்வாறு பீறிட்டு வரும் கரியமில வாயு எரியும் தீயை உடனடியாக அணைக்கிறது. சாதாரணத் தீ அணைப்புக்கு இவ்வகைக் கருவியே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

சில சமயங்களில் எண்ணெய்க் கலன்கள் தீப்பிடித்து எரிவதுண்டு. தீம்பிழம்பாக வெளிப்படும் இப்பெருந்தீயை அணைக்க வேறு வகையான தீ அணைப்பான் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதில் நுரையை உண்டாக்கும் இரசாயனப் பொருள்கள் நிரப்பப்பட்டிருக்கும். எண்ணெய் எரியும்போது இக்கருவியின் முனையைத் தட்டினால் பெருமளவில் நுரை வெளிப்பட்டுப் பெருகி எரியும் எண்ணெய் மீது போர்வைபோல் படிந்து எரியும் தீயை அணைக்கும். இவ்வாறு தீயின் அளவுக்கும் தன்மைக்கேற்ப தீ அணைப்புக் கருவிகளும் பல வகைகளில் உள்ளன. முன்பு அளவில் பெரிதாக இருந்த தீ அணைப்பான்கள் இன்று புது வடிவுகளில் கையடக்கக் கருவிகளாக உள்ளன.

தீ அணைப்பான் கருவிகளை அதிகபட்சம் ஆண்டுக்கொரு முறையாவது கருவியுள் வைக்கப்பட்டுள்ள இரசாயன வேதிப் பொருட்கள் கெடாமல் உள்ளனவா என்பதைப் பரிசோதித்து அறிவது அவசியமாகும்.