பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காரணம் என்பதை அறியவேண்டும். இது முற்போக்கான அரசாங்கத்தின் கருத்தும் அமைப்புமாகும்.

ஆதலால் அரசு மக்களிடமுள்ள குற்றத்தைக் காணுமானால் அந்தக் குற்றங்கள் தோற்றுதற்குரிய தன்னுடைய குற்றத்தை நீக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாட்டு மக்களிடையே குற்றங்கள் தோன்றுவதற்குரிய வாய்ப்புகள் இல்லாமற் போகும். எவ்வளவு சிறந்த முற்போக்கான அரசியல் கருத்து என்பதை எண்ணி மகிழ்ந்து செயற்படுத்தவேண்டும். இதனை,


"தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றமாகும் இறைக்கு"

(436)


என்று திருக்குறள் பேசுகிறது.

அரசின் தன் குற்றம் நீங்கிய அளவிலேயே, பிறர் குற்றம் ஒன்று இல்லையென்பது உணரத்தக்கது. ஆனால் இன்றைய நடைமுறையில் அரசுகள் அதிகார அமைப்பின் மேல்மட்டங்களாக விளங்குகின்றனவே யொழிய, அறநெறியின் மேல்மட்ட அமைப்புகளாக விளங்கவில்லை. ஆட்சியின் வட்டங்களைச் சார்ந்தவர்களுக்கு இலாபம் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். பலரும் அந்த மையத்தைப் போட்டா போட்டி மனப்போக்குடன் வட்டமிடுகிறார்கள். அங்கு ஆர்ப்பாட்டமிருக்கிறது. ஆரவாரம் இருக்கிறது. போட்டா போட்டிகள் இருக்கின்றன. தந்திரங்களும் மந்திரங்களும் தலைகாட்டத் தொடங்கிவிட்டன. இவைகள் அரசு அறநெறிச் சார்பினின்றும் பிறக்கின்றனவோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. அதுமட்டுமின்றி அரசின் அறிக்கைகளும்கூட குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அரசு சாதித்த சாதனைகளைப் பட்டியல் போட்டுக் காண்பிக் கின்றன. அதற்கு மாறாக மக்கள் மன்றத்தின் நிறைநல வளர்ச்சி குறித்து மதிப்பிடுவதில்லை.