பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நங்கை பரவையாருக்கும் நம்பி தம்பிரான் தோழருக்கும் ஏற்பட்ட காதலை, சேக்கிழார் அகத்திணை மரபுப் படி விளக்குகின்றார். யார் யார் மனம் எதில் தோய்ந்து கிடக்கிறதோ அது அதற்கேற்பச் சொற்கள் வெளிவரும் என்பார் திருவள்ளுவர்.

தம்பிரான் தோழரும் சிவபக்தர்; நங்கை பரவையாரும் அப்படியே. ஆதலால் அவர்களிடையே முகிழ்த்த காதல் பற்றிப் பெரியபுராணம் பேசுவது எண்ணத்தக்கது. நங்கை பரவையாரைக் கண்ட தம்பிரான் தோழர் நிலைபற்றி,

கற்பகத்தின் பூங்கொம்போ
காமன்றன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின்
புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர்
மதியூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ
அறியேனென் றதிசயித்தார்

,

(தடுத்தாட்கொண்ட புராணம் 140)

என்று கூறுகிறது பெரியபுராணம்.

தம்பிரான் தோழரைக் கண்ட நங்கை பரவையார்,

முன்னேவந் தெதிர்தோன்றும்
முருகனோ பெருகொளியால்
தன்நேரில் மாரனோ
தார்மார்பின் விஞ்சையனோ
மின்நேர்செஞ் சடைஅண்ணல்
மெய்யருள்பெற் றுடையவனோ
என்னே!என் மனத்திரித்த
இவன்யாரோ? எனநினைத்தார்,

(தடுத்தாட்கொண்ட புராணம் 144)