உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/தீமையை எதிர்த்து நில்

விக்கிமூலம் இலிருந்து

75. தீமையை எதிர்த்து நில்

இனிய செல்வ,

மக்கள் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை; இருப்பதும் இயலாது. ஆயினும் நல்லவர்களாக இல்லாது போனாலும் கெட்டவர்களாகாமல் இருக்கக்கூடாதா? மற்றவர் மனம் புண்படப்பேசுவதும் நடந்து கொள்வதும் நல்லதா? அவசியமா? இனிய செல்வ! கருத்து வேற்றுமை கலகங்களை வளர்க்க வேண்டுமா? சொத்துத் தகராறுகளைப் பேசித் தீர்க்க இயலாதா? மனிதன் மனம் வைத்தால் எது நடக்காது?

இனிய செல்வ, இன்று எல்லோரிடமும் ஓர் ஆசை வளர்ந்து வருகிறது. அதுதான் தலைவர் ஆகவேண்டும் என்ற ஆசை! அதற்காக எளிதாக முடியக்கூடிய காரியத்தைக்கூட அணுகாமல், பேசாமல் விவகாரமாக்குகிறார்கள்; கட்சியாக்குகிறார்கள். கொடிக்கம்பங்கள் தலை தூக்குகின்றன. இந்த நடைமுறை பாராளுமன்றத்திலிருந்து சிற்றூர்வரை வளர்ந்துவிட்டது. இனிய செல்வ, மக்களுக்கு ஒரு யோகம்? அடிக்கடி மேடைகளைப் பார்க்கிறார்கள்! பயன் இருக்கிறதோ இல்லையோ கேட்கிறார்கள்! இல்லை, ஒலிபெருக்கி மூலம் கேட்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

இனிய செல்வ, இன்று நமது தேவை, சமுதாய அமைப்பு! சமுதாய அமைப்பு-இது உருவாகவில்லை! இனி எதிர்வரும் காலத்திலும் உருவாகாதுபோல் தெரிகிறது. நாடு முழுவதும் பல குழுக்கள்! ஒருங்கிணைப்பு இல்லாத கூட்டம்! வெறுங்கூட்டம்! கூச்சல் போடும் கூட்டம்! கலாட்டா செய்யும் கூட்டம்! இனிய செல்வ, சமுதாய நாகரிகத்திற்குப் பதிலாக கும்பல் கலாசாரம் (Mob Culture) வளர்கிறது, இதனால் உழைப்பாற்றல் வீணாகிறது; பொருளுற்பத்தி பாதிக்கிறது; அமைதி கெடுகிறது! இந்த அவலம் ஏன்? "நான்” தான் காரணம்! எல்லோரும் வளரத்தான் வேண்டும். குடியரசு நாட்டுக்கு இது அவசியமானதும் கூட! ஆயினும், வளராமலே-வளர்த்துக் கொள்ளாமலே தலைமை ஏற்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்! விபரீதமான ஆசை; தன்னலம் சார்ந்த ஆசைகளால் தூண்டப்பெற்று செயல்படுகின்றனர். இத்தகைய மனப்போக்கில் செல்பவர்களுக்கு வரலாற்றைப் பற்றிய கவலை இல்லை. வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும் விரும்பமாட்டார்கள். தெரிந்தாலும் தெரியாததுபோல் நடிப்பார்கள். இல்லை-இல்லை மறந்துவிடுவார்கள். விளைவுகளைப் பற்றிய கவலையே இல்லை; எதிர்விளைவுகளைப் பற்றிக் கவலையே படமாட்டார்கள். எதிர்விளைவுகளைத் தாங்கமுடியாமல் கூச்சல் போடுவார்கள்! பழி தூற்றுவார்கள்! அணுகிப் பார்த்தால் அற்பமான விஷயங்களுக்காக இவ்வளவு ஆரவாரம் என்று தெரியும்! இனிய செல்வ, இது மட்டுமா? இங்ஙனம் கோஷ்டி சேர்ப்பதிலே இவர்களுக்குப் பிழைப்பு வேறு நடக்கிறது! மக்களிடத்தில் நன்கொடை தண்டல்! ரௌடிசத்துக்குப் பயந்து பலர் கொடுக்கிறார்கள்! பண முடை இல்லை.

தி.30.

இனிய செல்வ, இப்படி ஒரு "கும்பல் நாகரிகம்” நமது நாட்டில் வளர்கிறது! இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அடக்குவாரின்றித் திருவிளையாடல்கள் செய்கின்றனர். நாழிகைக்கு ஒரு கொலை; நாளுக்கு ஒரு கொள்ளை என்று வளர்கிறது. பயணம் செய்வோருக்குப் பாதுகாப்பு இல்லை! வெடி குண்டுகள் தாராளமாக நாட்டில் புழங்குகின்றன. அமைதிப் பூங்காவாக, செல்வக் களஞ்சியமாக இருக்க வேண்டிய நாட்டில் இந்த அவலம் ஏன்? பொது மக்கள் இப்போது எதைப் பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. படித்தவர்கள்-சராசரி வளர்ந்தவர்கள் தன் பெண்டு, தன் பிள்ளை, என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். ஒரு சிலருக்கு அச்சம். பயம்! எல்லாரும் விதுரர், துரோணர், பீஷ்மர் போல வாழ்கின்றனர்.

இனிய செல்வ, நமது நாட்டில் இன்று நேற்றுத் தோன்றியதல்ல. இந்த நிலை! மகாபாரத காலத்திலேயே துச்சாதனன் துடுக்குத் தனத்தைத் தட்டிக் கேட்க ஆளில்லையே! பாஞ்சாலியை அரசவையில் துகிலுரியும் பொழுது கணவன்மார்கள் கூடக் கையறு நிலையில் நெட்டை மரங்கள் என நின்றனர்! மிகப் பெரிய அறிஞர்களாகிய விதுரர், துரோணர், பீஷ்மர்கூட வாய்திறக்க மௌனம்! மௌனம்! ஏன்? பாண்டிய நாட்டில் கண்ணகிக்கு ஏற்பட்ட கொடுமை கண்டு மக்கள் கொதித்து எழுந்தனரா? இல்லை! அதனால்தானே கண்ணகி மதுரையை எரிக்கின்றாள்!

வரலாறு தொடர்கிறது; அவ்வளவுதான். அன்றெல்லாம் முடியரசு! இன்று மக்கள் அரசு! இன்று மக்கள் தட்டிக் கேட்கலாம்! கேட்கவேண்டும்! ஆனால் கேட்கமாட்டார்கள். இனிய செல்வ, இன்று விருப்பம்போல் நடப்பவர்கள் எண்ணிக்கை கூடுகிறது. மக்களே போல் நடமாடித் தீமைகள் செய்கின்றனர். இது கயமை உலகம்!

"தேவரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்!’

என்றார் வள்ளுவர். இந்த நிலை மாறினாலேயே நாடு வளரும்; இதற்கு ஒரே வழி நாட்டு மக்கள் அனைவரும் அரசியலில் ஈடுபாடு காட்டுதல்! சமுதாய அமைப்புக்கு உழைத்தல், பொதுவாழ்க்கைக்கு என்று சில மணி நேரமாவது ஒதுக்குதல், பயத்திலிருந்து விடுதலை பெறுதல்!

இன்ப அன்பு

அடிகளார்