குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/தோழமையைத் தேடுவோம்

விக்கிமூலம் இலிருந்து

74. தோழமையைத் தேடுவோம்

இனிய செல்வ!

நம்மனோர் வாழ்க்கையிலும்-நம்மை அறியாது திருக்குறள் தத்துவம் இடம் பெற்றுவிடுகிறது. அதுதான் ஊழோ! இனிய செல்வ! ஊழில்கூட நம்பிக்கை வந்து விட்டதா என்பது உன் கேள்வி! ஊழ்த் தத்துவத்தில் நமக்கு என்றும் நம்பிக்கை உண்டு. ஆயினும் ஊழைப்பற்றிய இலக்கணத்தில் நமக்கு மாறுபாடு உண்டு! மேலும் "ஊழ் வெற்றிபெற இயலாதது" என்று கூறப்பெறுவதையும் நாம் ஏற்பதில்லை! ஊழ்-மனிதனுடைய பழக்க வழக்கங்களில் உருவாவதேயாம்! இனிய செல்வ! நம்மை நாள்தோறும் இட்டுச் செல்வது அல்லது வழிநடத்திச் செல்வது நமது பழக்கங்களும் வழக்கங்களுமேயாம். பழக்கம் தவிரப் பழகும் அறிவும் ஆளுமையும் நமக்கு இருப்பின் ஊழ்உருவாகாமலே தடுக்கலாம். ஒரோ வழி எளிதில் வெற்றியும் பெறலாம். இதுவே நமது கருத்து.

மார்ச்சு 13,14-ல் திருக்குறள் பேரவை மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் ‘வள்ளுவர் வழி’ ஆசிரியர் இனிய அன்பர் கல்லை தே.கண்ணன் அவர்களுக்குப் பாராட்டுச் செய்யவும் பொன்னாடை போர்த்தவும் ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. வழக்கம்போல நம்மவர்கள் விழாவைக் காலந்தாழ்த்தினர். ஆதலால் தே.கண்ணன் அவர்களுடைய பாராட்டு விழாவிற்கு அடுத்த படியாக இருந்த ஒரு பாராட்டு விழாவும் ஒரே விழாவாக நடத்தவேண்டிய அறச்சங்கடம் தோன்றிவிட்டது. அந்த விழாவில் திருக்குறளை, செளராஷ்டிர மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்ட பூஜ்யஶ்ரீ சித்தநரஹரி அவர்களுக்கும் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தை நடத்திச் சாதனை செய்த அறநெறியண்ணல் கி.பழநியப்பனார் அவர்களுக்கும் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரே மேடையில் நால்வருக்கும் பாராட்டுவிழா; விழாக் குழுவினர் பொறுப்பில் ஏற்பாடு! நமது ஏற்பாடும் கலந்து பேசி முடிவெடுக்கவில்லை. ஏன்? விழா நேரம் வெவ்வேறுதானே! விழாக் குழுவினர் எல்லா விழாக்காரர்களையும் போலப் 'பொன்னாடை’ வாங்கி வைத்திருந்தனர். நமது ஏற்பாடு பொன்னாடைகளே! இனிய செல்வ, விழா மேடையில் வேறுபாட்டைத் தவிர்க்க இயலவில்லை, ஏன்? விழா நாள் ஞாயிற்றுக் கிழமை! புதியதாகப் பொன்னாடைகள் வாங்க இயலவில்லை. நமக்கும் அவர்கள் ‘பொன்னாடை’ தான் வாங்கியிருக்கிறார்கள் என்று முன்கூட்டியும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் இயலாத நிலையில் பணி நெருக்கடி! என்ன செய்வது? விருந்தினருக்குப் பொன்னாடை போர்த்தப் பெற்றது. நமது உறுப்பினர்களுக்கும் ‘பொன்னாடை’ போர்த்தப் பெற்றது. இனிய செல்வ,

"பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடை”

என்று திருக்குறள் கூறும் இலக்கணப்படி தே.கண்ணன் அவர்களும் கலைவாணி சீனி திருநாவுக்கரசு அவர்களும் பொறுத்து ஏற்றுக் கொண்டு இன்முகங்காட்டியது அன்றைய இராமனை நினைவூட்டியது. திருக்குறள் மரபுநெறி ஏற்றுப் போற்றல் என்பது உயர் பண்பல்லவா?

இனிய செல்வ, திருக்குறள் நட்பியல் பற்றி நிறைய ஆய்வு செய்திருக்கிறது. நம்மையும் ஆய்வு செய்யும்படி வற்புறுத்துகிறது. ‘நட்பாராய்தல்’ என்றே ஒரு அதிகாரம்! ‘தீ நட்பு’ என்றும் ஒரு அதிகாரம்! இவ்வளவும் கூறியபின் 'பழைமை’ என்று ஒரு அதிகார அமைப்பு ஏன்? நாம் என்ன முற்றறிவினரா? இல்லையே! நமக்கும் சில எதிர்பார்ப்புக்கள் உண்டல்லவா? அவ்வழி யாரோடாவது நட்பு ஏற்பட்டு விடலாம்! காலம் போகப் போக அந்த நட்பில் மாறுபாடு தோன்றலாம். என்ன செய்வது? பழகிய நட்பில் பிரிவுகளைத் தவிர்ப்பதற்குத் தான் பழைமை அதிகாரம். நண்பரும் தவறு செய்யலாம். அல்லது நாமேகூட நன்று-தீது ஆராயும் அறிவில் சோர்வுபட்டு நல்லனவே செய்யும் நண்பரைக் கூட வேறாகக் கருதலாம் அல்லவா? இந்த மாதிரி சமயங்களில் நட்பினை நிலைநிறுத்தப் பழைமை பாராட்டல் என்ற பண்பு பயன்படும்! இனிய செல்வ, இன்று நாட்டில் நட்பியல் இருக்கிறதா என்பதே கேள்வி! மனிதன் விரைந்தோடுகின்றான்! அவனுக்குத் தெரிந்தவர்கள் உண்டு; அறிமுகமானவர்கள் உண்டு. நண்பன் உண்டா? நீயே கேட்டுப் பார்!

நட்புக்கு ஈடான சொல் தோழமை என்பது. நட்பு, நண்பன் என்ற சொற்களைவிட தோழமை, தோழன் என்ற சொற்கள் ஈர்ப்புள்ளவையாக உள்ளன. சேக்கிழார் அறிமுகப்படுத்தும் சொல் ‘தோழன்’ என்ற சொல்லாகும். ருஷ்யப் புரட்சியின்போது ‘தவாரிஷ்’ என்ற சொல் மந்திரச் சொல் போல் விளங்கியது. ‘தவாரிஷ்’ என்றால் ‘தோழன்’ என்பது பொருள். அதுமுதல், பொதுவுடைமை இயக்கத்தில் தோழன் என்ற சொல் பெருவழக்காயிற்று. ஆதலால் தோழன் என்ற சொல்லை பொதுவுடைமைக் கட்சி சாராதவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. இது தவறு. "தோழன்” என்ற சொல் வழக்கு நல்ல வழக்கு. தோழர்களைத் தேடுவோம்! கோப்பெருஞ் சோழனுக்கு ஒரு பிசிராந்தையாரும், வள்ளல் பாரிக்கு ஒரு கபிலரும், நற்றமிழ் நம்பியாரூரருக்கு ஒரு சில பெருமானும் போலத் தோழர்கள் வாய்த்தால் வாழ்வு சிறக்கும்! புரூட்டஸ் பக்கம் தலைவைத்துப் படுக்கக்கூடாது!
இன்ப அன்பு
அடிகளார்