குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/கயமை சாடு

விக்கிமூலம் இலிருந்து

73. கயமை சாடு

இனிய செல்வ,

இன்று நாட்டில் கயமைத் தனம் வளர்ந்து வருகிறது. கயமை என்றால் என்ன? கடமையை முறையாகச் செய்யாமை. வேலை செய்வதில் விருப்பமின்மை, ஊதியம் வாங்கும் பணியை முறையாகச் செய்யாமல் வேறு பல சுய சம்பாத்தியங்களில் ஈடுபடுவது, கையூட்டுகள் பெறுவது., கையூட்டுகள் பெறுவதன்மூலம் பொது நலனைக் கெடுத்தல்; நன்றி மறத்தல்; அவதூறு பேசுதல்-இன்னும் பல! அடுக்கினால் பெருகும்! இந்தக் கயமைத் தனம் இன்று பெருகி வளர்ந்து வருகிறது! அப்பட்டமான நிர்வாணமான சுயநலம்! காரியம் நிறைவேற வேண்டுமானால் அழைக்காமலே சந்திக்க வருவர். கடிவாளம் என்றால் மட்டும் ஐயோ பாவம்! இவர்களும் மனிதர்களா?

இன்று எங்குப் பார்த்தாலும் கயமைத்தனம் மேனி மேலோங்குகிறது. நாளுக்கு ஒரு கொலை! நாழிகைக்கு ஒரு திருடு! நாளொன்றுக்குப் பல விபத்துக்கள்! நாடு நகர்வதில்லை! இனிய செல்வ, இவர்களைத் திருத்துவது யார்? திருத்த முடியுமா? திருத்தமுடியும் என்ற நம்பிக்கை திருவள்ளுவருக்கு இருந்தால் ஏன் கயமை என்றே அதிகாரம் ஒன்றமைத்து ஓதுகிறார்? கயமை அதிகாரத்திலும் கயவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையைத் திருவள்ளுவர் தரவில்லை!

இனிய செல்வ, கயவர்கள் சுயமாகவும் சிந்திக்க மாட்டார்கள்! சொன்னாலும் கேட்கமாட்டார்கள், அவர்கள் நோய் போன்றவர்கள் என்று திருவள்ளுவர் கூறுகின்றார். இனிய செல்வ, இனிப்பு சுவையுடையது. கசப்புச் சுவையுடைய எட்டிக் காயை மறைவாகத் தேனில் ஊறப்போட்டால் எட்டிக்காய் இனிக்குமா, என்ன? ஒரு பொழுதும் இனிக்காது. ஏன்? கரியைப் பால் விட்டுக் கழுவினால் கரி வெள்ளையாகிவிடுமா, என்ன? ஒரு பொழுதும் வெள்ளை ஆகாது. அதுபோலத்தான் கயவர்கள் நிலை; கயவர்கள் சொல்லப் பயன்படார்.

இனிய செல்வ, இன்று எங்கும் கயமைத்தனமே மேவி வளர்ந்து வருகிறது. எந்த ஒன்றும் முறையாக நடப்பதில்லை. நடக்க வேண்டும் என்ற விருப்பமும் பலருக்கு இல்லை! இனிய செல்வ, நாடு தழுவிய, நிலையில் வளர்ந்துள்ள இந்த அநாகரிகத்தை எப்படிச் சந்திப்பது? யார் சந்திப்பது? மக்களாட்சிமுறை உள்ள நாட்டில் சட்டமே ஆட்சி செய்கிறது என்ற கோட்பாடுள்ளது. மக்கள்தான் விழிப்புணர்வு பெறவேண்டும். இனிய செல்வ, நமது நாடு-மக்கள் சக்தி சிந்திக்கத் தலைப்படுதல் வேண்டும். சிந்தித்தவைகளைத் தக்காருடன் கலந்து பேசவேண்டும். மனம்விட்டு விவாதிக்க வேண்டும்; தெளிந்த முடிவினை எடுக்க வேண்டும்; முடிவுகள் மீது செயற்பாட்டுக்கு வரவேண்டும்; இனிய செல்வ, மக்களில் இப்படி இருப்போர் எண்ணிக்கை குறைவு? இங்ஙனம் செயற்படுத்த இயலாவண்ணம் நிற்போருக்கு யார் துணை? கொடினுடைக்கும் பணியைத் தொடக்க வேண்டியது தான்! .

"இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு”

(987)

என்று கூறும் திருக்குறளிலேயே கயமை அதிகாரமும் வருகிறது. இனிய செல்வ, இன்னாதன செய்தல் வேறு. கயமைத்தனம் வேறு! கயமை என்பது சின்னத்தனம்! உள்ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுதல்! அள்ளிச் சாப்பிட்ட கை, ஈரம் காய்வதற்கு முன்பே சோறிட்டவரை மறப்பது. மறப்பது மட்டுமல்ல-உண்ட வீட்டுக்குத் தீமை செய்தல்! பலகாலும் பழகினால்கூட அந்நியர் போல நடந்து கொள்வது! இன்ன பிற கயமைத்தனங்கள்! வீட்டைக் காவல் செய்ய அமைத்தால் வீட்டையே திருடுவது! கோயில் பூசை செய்வோர் சிலை திருடி விற்பது! நாட்டுப் பணியில் அமர்த்தினால் நாட்டையை விலை பேசுவது! சுயநலத்திற்குப் பொதுநலத்தைக் கெடுப்பது! இன்ன பிறவும் கூட கயமைத் தனங்களேயாம்! இனிய செல்வ., இன்றைய நாடு எப்படி இருக்கிறது? நாளும் கயமைத்தனம் வளர்ந்து வரவில்லையா? "ஆம்" என்கிறாய்! அப்புறம் ஏன் சும்மா இருக்கிறாய்?

இனிய செல்வ, உன்னையும் சுயநலம் ஆட்கொண்டு விட்டதா? கோழையாக்கி விட்டதா? ஏன் மெளனம்? மெளனத்தைக் கலை! விழித்துக் கொள், போராடு! போராடு! நாட்டில் வளர்ந்து வரும் கயமைத்தனத்தை எதிர்த்துப் போராட ஆயத்தமாகு! என்ன, சாவுதானே வரும்? இந்த உலகில் சாகாமல் வாழ்ந்தவர் யார்? அவமானத்தைத் தூக்கிச் சுமந்து வாழ்வதைவிட சாதல் நல்லது. மக்கள் நலனுக்காகப் போராடிச் சாகும் சாவை-உளதாகும் சாக்காட்டை வாழ்த்தி வரவேற்போம்!
இன்ப அன்பு
அடிகளார்