குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/தாய்மொழிவழிக் கல்வி-4
இனிய தமிழ்ச் செல்வ,
நமது மடலின் சிந்தனைகள் செயலாக்கம் பெறுவதை நாட்காலையில் படிக்கும் செய்தித் தாள்கள் எடுத்துக் கூறுகின்றன! மகிழ்ச்சிதானே!
இனிய செல்வ, தமிழ்நாடு சட்டமன்றம் இந்திய ஆட்சி மொழி குறித்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தீர்மானமாவது; "இந்திய தேசிய மொழிகள் நடுவணரசின் ஆட்சி மொழியாகும் தகுதிபெறும் வரை ஆங்கிலம் நடுவணரசின் ஆட்சிமொழியாகத் தொடர்ந்து நீடிக்க வேண்டும்” என்பதாகும். அதாவது, "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும்வரை" என்பதற்குப் பதிலாக "இந்திய தேசிய மொழிகள் நடுவணரசின் ஆட்சி மொழியாக அமையும் காலம் வரை" என்பது திருத்தம். இனிய செல்வ, இந்திய தேசிய மொழிகள் 14. இவற்றுள் தமிழும் ஒன்று. இந்திய அரசின் அலுவல் மொழியாகத் தமிழும் இடம்பெறவேண்டும் என்பதே தீர்மானத்தின் சாரம். தமிழராகப் பிறந்தோர் அனைவரும் இந்தத் தீர்மானத்தை வரவேற்பர் என்பது தெளிவு. ஆனால், தீர்மானம் செயலாக்க அடிப்படையில் அமைந்ததாகத் தெரியவில்லை.
"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு”
என்ற திருவள்ளுவர் வழியில் சிந்திக்க வேண்டும். நடுவணரசின் ஆட்சி மொழியாகத் தமிழ் இடம்பெற வேண்டுமானால் தமிழ் நாட்டில் தமிழ் துறைதோறும் இடம் பெற வளர-திட்டமிடுதல் வேண்டும். காலவரையறைக்குட்பட்ட திட்டம் தேவை. தமிழகத்திலேயே பயிற்று மொழியில் தமிழுக்குரிய இடத்தை ஆங்கிலம் ஆக்கிரமிப்புச் செய்து கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தின் ஆக்கிரமிப்பை அகற்றித் தமிழுக்கு மீட்டுத் தரவேண்டும். அதுபோலவே தமிழ் நாட்டு அரசின் அனைத்துத் துறையிலும் தமிழே ஆட்சி மொழி என்று நடைமுறைப்படுத்தவேண்டும். தமிழ் மூலம் பயின்றோர் பட்டம் பெற்றோர் தமிழ்நாடு அரசின் பணியிடங்களில் அமர்தல் வேண்டும். இவை நடந்தாலே தமிழ் வளரும். அவ்வழி நடுவணரசின் ஆட்சிமொழியாதலுக்குரிய சூழ்நிலையைத் தமிழுக்கு வழங்க இயலும். இவை பற்றிய சிந்தனைகள் தென்படவில்லை.
இனிய செல்வ, அடுத்து இந்தி ஆட்சி மொழியாதல் மட்டுமே நோக்கமன்று. அஃது ஒரு பொது மொழியாக பொது உறவு மொழியாக விளங்கவேண்டும் என்பது நடுவண் அரசின் கொள்கை. இந்தப் பொதுமொழி உறவு மொழி குறித்துத் தமிழ்நாடு அரசின் கருத்து என்ன என்பது தெளிவாகத் தெரிதல் நல்லது. அவசியமும் கூட:
இனிய செல்வ, தமிழ், நடுவணரசின் ஆட்சி மொழியானால் நாட்டளவில் ஆங்கிலத்திற்குரிய இடம் என்ன? அஃது ஒரு மொழியாகக் கற்கப் படுமா? அல்லது கை விடப்படுமா? இனிய செல்வ, மேலும் ஒரு சிக்கல் உள்ளது. இந்தியா, ஒரு துணைக் கண்டம். பல்வேறு மொழிகள் பேசும் மாநிலங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் மக்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநிலத்தின் தாய் மொழியே ஆட்சி மொழி. தமிழ் மக்கள் இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை விரும்பி ஏற்காது போனால் அந்த மாநிலங்களில் வேலை வாய்ப்பு பெறுவதும் வாழ்வதும் பாதிக்கும். இப்படி எண்ணற்ற சிக்கல்கள் பற்றி எண்ண வேண்டியிருக்கிறது.
இனிய செல்வ, இந்திய தேசிய மொழிகள் தமிழ் உள்பட இந்திய ஆட்சி மொழியின் தகுதி பெற்றால் இந்தியை நாட்டின் பொது மொழியாக உறவு மொழியாக ஏற்றுக் கொள்ளலாம். இதனால் இந்திய ஒருமைப்பாடு உறுதி பெறும். தமிழ், நடுவணரசின் ஆட்சிமொழியாதல் பற்றி மட்டும் எடுத்துக் கூறினால் பாராளுமன்றம் ஏற்குமா என்பது ஐயம்! ஆதலால், ‘இந்திய தேசிய மொழிகள் நடுவணரசின் ஆட்சி மொழித் தகுதியை அரசியல் சட்ட அடிப்படையில் பெறவேண்டும். இந்தி, நாட்டுப் பொதுமொழியாக பொது உறவு மொழியாக இடம் பெறவேண்டும்’ என்ற தீர்மானம் சரியானது. அதனால் தமிழ் பயிற்றுமொழி, இந்தி நாட்டு மொழி என்ற இரு மொழித் திட்டத்தை நடைமுறைப் படுத்தலாம். இந்த இரண்டு மொழித் திட்ட அடிப்படையில் இந்தி பேசும் மாநிலங்கள் தென் இந்திய மொழி ஒன்றைக் கட்டாயமாகப் படிக்கவேண்டும். ஆனாலும் இந்த இரண்டு மொழிகளுடன் நிற்பது போதாது. விருப்பமொழிப் பாடமாக மூன்றாவது மொழியாக ஆங்கிலம் கற்க வேண்டும். மேலும் கற்கும் திறன் உள்ளவர்கள் படிக்க, பேசத்தக்க வகையில் இந்திய மொழிகளில் எந்த ஒன்றையாவது படிக்கலாம் அல்லது ஆய்வு அடிப்படையில் ருசிய மொழி, சப்பானிய மொழி போன்றவற்றைப் படிக்கலாம்.
இப்படி எண்ணித் திட்டமிட்டுப் பேசினால், எழுதினால், இக்கருத்துக்கு இயக்கருவும் கொடுத்தால் வெற்றி பெறலாம்.
இனிய தமிழ்ச் செல்வ, இந்தியா ஒரு பெரிய நாடு. இந்திய நிர்வாக இயந்திரம் மிகமிகப் பெரியது. இவ்வளவு பெரிய நிர்வாகத்தில் 14 மொழிகள் என்பது ஓரளவு சிக்கல் தான்! ஆயினும் இந்திய ஒருமைப்பாடு மிகப் பெரிய இலக்கு. ஆதலால் இந்தச் சிக்கலை-கூடுதல் செலவை-இழப்பை ஏற்பதைத் தவிர வழியில்லை. இதில் ஒரளவு எளிமைப்படுத்த நடுவணரசின் மாநில மைய அலுவலகம் ஒன்றினை அமைத்து மாநில அளவிற்கு மட்டுமே தொடர்புடைய
தி.19. செய்திகளை, அலுவல்களை அந்த மாநில மைய அலுவலகமே முடிவு செய்ய அனுமதித்தல் நல்லது.
இனிய செல்வ, தமிழ் மொழி தமிழ் நாட்டில் துறை தோறும் துரைத்தனம் செய்ய வேண்டிய மொழி! தமிழ், தமிழ்நாடு அரசின் ஆட்சிமொழி! தமிழும் பிற இந்திய தேசிய மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி மொழிகள், இந்தி, இந்தியாவில் நாட்டுப் பொதுமொழி; உறவு மொழி; ஆங்கிலம் அறிவியல் மொழி; கற்க வேண்டிய மொழி; மேலும் சில மொழிகளும் எழுத, படிக்க, கற்றுக் கொள்ளலாம். இனிய செல்வ, ஆய்வு செய்க!இன்ப அன்பு
அடிகளார்