உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/பதவிக்கு அழகு பகைத்திறம் அறிதல்

விக்கிமூலம் இலிருந்து
35. பதவிக்கு அழகு பகைத்திறம் அறிதல்

இனிய செல்வ,

மானுட வாழ்க்கைக்குப் பகை ஆகாது. அதனாலன்றோ, நமது திருக்குறள் "பகையென்னும் பண்பிலதனை" என்று கூறுகிறது. கம்பனும் "யாரோடும் பகை கொள்ளலன்" என்றான். இராமனுக்குக் கூட இராவணன் மீது பகை இல்லை. பகை இருந்திருந்தால் மூர்க்கத்தனமான போரே நடந்திருக்கும். தூது அனுப்பியிருக்கமாட்டான். “இன்று போய் நாளை வா" என்று சொல்லும் நிலை தோன்றியிருக்கிறது. பகை தீது, பகை கொடிது. ஆனால், பகையைக் கண்டு வாளா அஞ்சினால் பகை மாளாது. ஏன் பகை கூடாது என்பதனைக் காரண காரியத்துடன் ஆராய்ந்து அறிந்து பகையை விளக்கினாலேயே உண்மையாக-முற்றாகப் பகைமை அகலும். தமக்குத் துன்பம் வருமே என்ற அச்சத்தின் காரணமாக மட்டும் பகையை வெறுத்தல் கூடாது. மானுடத்தின் அகநிலை வாழ்க்கையும் சரி, புறநிலை வாழ்க்கையும் சரி பாதிக்கும்.

இனிய செல்வ, ஈழத்துத் தமிழர் சிக்கல்கள், நமது நாட்டைப் பொருத்தவரையில்,

"தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்"

என்றாயிற்று. ஆனால், இன்றைய இந்திய தமிழக-இலங்கைச் சமூக இயலில் தவிர்க்க இயலாதது என்பதையும் நினைவிற்கொள்க. தவிர்க்க இயலாத-முடியாத தீமை நம்பாலதாயிற்று. நாமும் விடுதலைப் புலிகளைத் தேர்ந்து தெளிந்து ஏற்றுக் கொள்ளவில்லை; ஆதரிக்கவில்லை. அவர்களுடைய விருப்பம் என்ன? வேனவா என்ன? என்று தெரியாமலேயே தற்செயலாக அல்லது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சரியான செயல் திட்டத்துடன் உறவுகள் கால் கொள்ளவில்லை; இலங்கையில் சிங்கள ராணுவத்தின் பிடியில் சிக்கித் தவித்த விடுதலைப் புலிகள் இந்தியாவை, சர்வதேச விதிமுறைகளை மீறிச் சரணடைந்தனர். தமிழ் நாட்டு மக்கள் இனவழிப் பரிவு காட்டினர். ஆதலால் தன்னிச்சையாக நடந்தது போலாகி விட்டது.

இனிய செல்வ, தமிழ்நாட்டுத் தமிழர்களிடமிருந்த பல்குழு மனப்பான்மை, ஈழத்துத் தமிழர் சிக்கல் ஒருதலையாகக் கேட்க - ஆய்வு செய்ய இயலாமல் தடுத்துவிட்டது. ஈழத்துத் தமிழர்கள் இருவேறு-பல்வேறு குழுக்களாகவே இந்தியத் தமிழ்நாட்டில் புகுந்தனர்; நடமாடினர்; அரசியல் ஆதாயம் தேடினர். இந்த அணிகளில் விடுதலைப்புலிகள், தமிழ்நாட்டின் அன்றைய ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்று விட்டதால், நடுவணரசின் ஆதரவையும் பெற்றது. திரு.சபாரத்தினம் தலைமையில் இயங்கிய எடலோ இயக்கம் அன்றைய எதிர்கட்சியின் திமுகவின் ஆதரவையும் பெற்றிருந்தது. அதனால் நடுவணரசு செவிசாய்க்கவில்லை. திடீரென ஒரு நாளில் விடுதலைப் புலிகளால் சபாரத்தினமும் அவரைச் சார்ந்தவர்கள் 300 பேரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலையால் நமது முதல்வர் கலைஞர் ஆற்றொனாத் துயரம் எய்தினார் இனிய செல்வ, இந்த வரலாற்றுப் போக்கில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் காலத்தின் கட்டாயமாக ஏற்பட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் சரியா? தவறா? என்று ஆராய்ந்து அறிய யாதொரு கட்சியும் முன்வரவில்லை. ஆனாலும் இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ஈழத்துத் தமிழர்களின் அனைத்து அமைப்புகளும் வரவேற்றன. விடுதலைப் புலிகளும் கூடத் தொடக்கத்தில் தயக்கத்துடன் வரவேற்றனர். ஆனால், அது நடிப்பே என்று பின் தெரிய வந்தது. ஆயுதங்களை ஒப்படைப்பதுபோல ஒத்திகை நடத்தினார்கள். ஆனால், காலப் போக்கில் அவர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரிக்காதது மட்டுமன்றி, இந்தியாவுக்கு எதிராக நினைக்கவும் தொடங்கிவிட்டனர். அவ்வண்ணமே பேசினர்; ஏன், இந்திய அமைதிப்படையை எதிர்த்துப் போராடினர்; ஏன் இந்த நிலை?

இன்று விடுதலைப் புலிகளும், இலங்கைக் குடியரசு தலைவரும் இந்திய அமைதிப்படையைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். இனிய செல்வ; நமக்கு ஏன் இந்த அவலம்? விடுதலைப்புலிகள், இலங்கை அரசுக்கும் சிங்கள தீவிர வாதிகளுக்கும் அஞ்சி இந்தியாவுக்கு வந்தனர். இவர்களுக்கு இலங்கை ஒருமைப்பாட்டிலும் அக்கறையில்லை, இந்திய அரசின் கொள்கையாகிய நடுநிலைக் கொள்கையிலும் நம்பிக்கையில்லை இலங்கை அரசும் இலங்கையின் ஒருமைப்பாட்டில் அதிக ஆர்வம் காட்டாமல் விடுதலைப் புலிகளைச் சமாளிப்பது எப்படி என்ற கவலையுடனேயே இந்திய அரசை அணுகியது. இலங்கை அரசுக்கு, இலங்கையின் இனப்பகையில்லாத ஆட்சிக் கொள்கையில் நம்பிக்கையில்லை. பெரும்பான்மை இனவழிச் செல்லும் இயல்பு இன்றைய இலங்கைக் குடியரசுத் தலைவரின் கொள்கையாக இருக்கிறது. இந்தியா-இலங்கை நட்பிலும் இன்றைய இலங்கை குடியரசுத் தலைவர் பிரேமதாசாவுக்கு நம்பிக்கையில்லை. இந்தச் சூழ்நிலைகளையெல்லாம் ஆராய்ந்தால் ஈழத்துத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது. ஆனால், இங்ஙணம் கருதுவது தவறு. இந்தியா தலையிடாது போனால், இந்தியாவின்மீது விரோதம் கொண்டுள்ள நாடுகள் தலையிடும். அது இந்தியாவுக்கு நல்லதன்று.

இனிய செல்வ! இன்று என்ன நிலை? இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம், ஈழத் தமிழ் மாநிலம் கிடைத்தது. தேர்தல் மூலம் அமைந்த மாநில ஆட்சி நடக்கிறது; ஆனாலும் ஒப்பந்தப்படி அதிகாரப் பகிர்வு முற்றாக நடக்கவில்லை; "மாநில ஆட்சி" என்ற அமைப்பு தோன்றியிருக்கிறது. இதற்கிடையில் இந்திய வெறுப்பில் வளர்ந்த இலங்கைக் குடியரசுத் தலைவர் பிரேமதாசா இப்போது புதிய அரசியல் வியூகம் வகுக்கிறார். விடுதலைப் புலிகளுடன் சமாதானம் பேசத் தொடங்கியுள்ளார். இந்திய நாட்டை நம்பிய விடுதலைப்புலிகள், பிரேமதாசாவின் பிரதி நிதிகளாக இந்திய அமைதிப்படையை வெளியேறச் சொல்கிறார்கள்; பிரேமதாசாவுடன் கூடிக் குலாவுகிறார்கள். இந்தியப்படை இலங்கையில் இருந்து என்ன ஆகப் போகிறது? திரும்ப அழைப்பதில் தவறு இல்லை. ஆனால், எப்போது திரும்ப அழைப்பது என்பதே கேள்வி!

விடுதலைப்புலிகள் தமிழ் ஈழம் கேட்டல்லவா போராடினர். அந்தத் தமிழ் ஈழத்தை, இலங்கைக் குடியரசுத் தலைவர் ஒத்துக் கொண்டு அறிவித்து விட்டாரா? அந்தத் தமிழ் ஈழத்தில் தேர்தல் நடந்து, தலைவர் பிரபாகரன் தமிழ் ஈழத்தின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்று விட்டாரா? இந்தச் சூழ்நிலை உருவானால்தானே இந்தியப்படை வெளியேற இயலும்! தமிழர்களிடத்தில் ஒற்றுமை வந்து விட்டதா? விடுதலைப்புலிகளால் மற்ற இயக்கத்தினருக்கு ஆபத்து இல்லை என்ற உத்தரவாதம் கிடைத்து விட்டதா? தமிழ் ஈழம் கேட்கும் தமிழர்களிடையில் இனவழி ஒற்றுமை இல்லை. சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் பகை இருப்பதாகத் தெரியவில்லை. தமிழர்களுக்குள்ளேதான் பகை மிகுதி. இந்தப் பகை நிலைமாறி ஒன்றுபட்டு விட்டார்களா? விடுதலைப் புலிகளின் எந்தெந்த லட்சியங்கள் நிறைவேற்றப் பட்டுவிட்டன. இந்திய அமைதிப்படை வெளியேற? இந்திய அரசு ஒரு தவறு செய்துவிட்டது. திருக்குறள் நெறி நிற்காத தவறுதான் அது.

"செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.”

(869)

நீதியை அறிந்து அவ்வழி அஞ்சாது பகைமைக்காக மட்டுமே அஞ்சும் பகைவரைப் பெற்றால் அவர்களைச் செறுத்து ஒறுத்தால் என்றும் இன்பங்கள் நீங்கா.

ஆம்! சிங்களப் பகைவர்களைக் கண்டு அஞ்சி, நமக்கு நட்பும் உறவும் போல வந்த விடுதலைப் புலிகளை ஏற்றது தவறு. விடுதலைப் புலிகளுக்கு அஞ்சி நமது நட்பும் உதவியும் நாடிவந்த இலங்கை அரசை நம்பியது தவறு. இவை இரண்டுமே செறுத்து ஒறுத்து ஒதுக்கத்தக்கவை. இனிய செல்வ! மேலும் விளக்கம் எழுத விரும்பவில்லை! உய்த்து உணர்க!

இன்ப அன்பு

அடிகளார்