குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/எழுத்துச் சீர்திருத்தம்

விக்கிமூலம் இலிருந்து

34. எழுத்துச் சீர்திருத்தம்

இனிய செல்வ!

திருக்குறள் ஒரு அற்புதமான நூல்! வாழ்வியலின் துறைதோறும் விளக்கும் பெருநூல்! இதனால் மட்டும் ஒரு நூல் சிறப்புடையதாகாது. எதிர்வரும் காலத்திற்குவளர்ச்சிக்கு வாயில் வைத்து பயிற்றும் நூலே சிறந்த நூல்! மானுடத்தின் சென்ற கால வரலாறு இனி கிடைக்கத்தக்கதில்லை. சென்றவை சென்றவைதான்! நிகழ்காலம் என்பது நீரில் குமிழி போன்றது; விரைந்து செல்வது. காலதேவன் இறக்கை கட்டிக்கொண்டு பரப்பவன்! ஆதலால் எதிர்காலம் என்பது நிச்சயம்!

இனிய செல்வ! நீ கேட்பது உண்மைதான். நம்முடைய எதிர்காலம் உறுதிப்படுத்தப் பெறவில்லை என்பது உண்மைதான். ஆனால், மானுடம் வாழ்தல் என்பது ஒரு தொடர் வரலாறு. ஆதலால், பெரிதும் மானுட இனத்திற்கு எதிர்காலம் உண்டு. அந்த எதிர்கால மானுடத்தின் வளர்ச்சிக்கு எதிர்காலம் உண்டு. அந்த எதிர்காலத்தைச் சீராக அமைப்பதற்குரியவாறு நிகழ்காலம் அமைய வேண்டும். எதிர்காலச் சமுதாயம் அறிவுடையதாக வாழ்தல் வேண்டும். அதற்கு இன்று வாழும் சமுதாயம் அடிப்படைகளை அமைத்தாக வேண்டும்.

இனிய செல்வ! அறிவு என்பது வளரும் தன்மையது; மாறும் தன்மையது. இது மொழியியல் வரலாறு; மொழியின் தன்மை! மானுடத்திற்கு வாய்த்த கருவிகளுள் சிறந்தது மொழியேயாம்! நம்முடைய தாய்மொழி, தமிழ், கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகக் காலம் தோறும் புதுமை நலன்கள் பெற்று வளர்ந்து வந்துள்ள மொழி! அதுபோல நம்முடைய மொழியின் வரிவடிவங்களும்-எழுத்துகளும் மாறி மாறி வளர்ந்து வந்துள்ளன.

இனிய செல்வ! இந்த யுகம் அறிவியல் யுகம், காலம், ஆற்றல் ஆகியவற்றைச் சிக்கனப்படுத்தும் யுகம். ஆதலால், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று கூறுகிறார்கள். அதே போழ்து தமிழ் எழுத்துக்களை மேலும் சீர்திருத்தினால் தமிழ் மொழி கெடும் என்று சிலர் கூறுகின்றனர். இன்றைய தமிழகம் பரவலாக விவாதிக்க வேண்டிய பொருள் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம். பல்கலைக் கழகங்கள் தோறும் விவாதித்து முடிவெடுக்க வேண்டிய பொருள் இது. எழுத்துச் சீர்திருத்தம் பற்றி அண்மைக்காலமாக, பெரியார் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்து ஒரு அறிஞர் குழு தொடர்ந்து கலந்துரையாடல்களையும் விவாதங்களையும் நடத்தி வருகிறது. அதே போழ்து தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையற்றது என்பது ஒர் அணியின் கருத்து.

இனிய செல்வ! இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஆராய்ந்தும் மக்கள் கருத்தறிந்தும் தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரை செய்ய ஒரு ஆய்வுக்குழுவை அமைத்திருக்கலாம். அந்த ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை அரசு மேலும் ஆராய்ந்து முடிவெடுப்பதே முறையான செயல்! இதனால் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஒரு பரவலான விவாதம் நடந்திருக்கும். இருவேறு கருத்துகளைச் சீர்தூக்கி ஆய்வு செய்யவும் வாய்ப்புக் கிடைத்திருக்கும்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டுமா? வேண்டாவா என்ற வினாவிற்கு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் விடை காண இயலாது; அறிவார்ந்த ஆய்வின் அடிப்படையில் முடிவு காணல் வேண்டும். இப்பொழுதும் ஒன்றும் காலம் நழுவி விடவில்லை; தமிழ்நாடு அரசு ஆய்வுக்குழுவை அமைக்க வேண்டுமென்பது நமது வேண்டுகோள். அங்ஙணம் இன்றி ஒருதலைப் பட்சமாகத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் இல்லை என்று அறிவிப்பது நன்மரபாகாது. நேற்றைய அறிவு சிறந்ததுதான். ஆனால் இன்றைய அறிவுக்கு, நேற்றைய அறிவு ஈடுகொடுக்குமா என்பதையும் ஆய்வு செய்தல் வேண்டும். இனிய செல்வ! தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஓர் ஆய்வுக்குழுவை அமைத்து முன்வர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

"அறிதோறு அறியாமை கண்டற்றால்”

என்னும் திருக்குறள் அடி நினையத்தக்கது.
இன்ப அன்பு
அடிகளார்