உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/ஊராட்சியும் பேராட்சியும்

விக்கிமூலம் இலிருந்து
33. ஊராட்சியும் பேராட்சியும்

இனிய செல்வ,

இன்று எங்கும் கிராம சுயராஜ்யம். கிராம பஞ்சாயத்துக்கு சுய நிர்ணய உரிமை பற்றிப் பேசுகிறார்கள். இஃது ஒரு வரவேற்கத்தக்க நிகழ்ச்சி. அண்ணல் காந்தியடிகள் கிராம சுயராஜ்யம் என்றே கூறினார். ஆனால் 40 ஆண்டுகள் கழித்துத்தான் கிராம பஞ்சாயத்துக்களின் அடிப்படை அதிகாரங்களைப் பற்றியே பேசத் தொடங்கியிருக்கின்றோம். காலங் கடந்தாவது இந்த எண்ணம் வந்தது பாராட்டுதலுக் குரியது.

இனிய செல்வ, இன்றைய கிராம பஞ்சாயத்துக்கள் தெரு துப்புரவு செய்யும் தொழில் செய்து வருகின்றன. தெருவிளக்குகள் எரிக்கப்படுகின்றன. இன்றைய பஞ்சாயத்துக்கு இதைத்தவிர வேறு இல்லை. ரூ.100கூட தலைவர் எடுக்க இயலாது. ஆணையர் அனுமதி வேண்டும். போதிய நிதி ஆதாரம் இல்லை. பல பஞ்சாயத்துகளுக்கு மின்சாரக் கட்டணம் கட்டக் கூடக் காசு இல்லை. இன்றைய பஞ்சாயத்துக்களின் நிலை பரிதாபமானதுதான்!

கிராம பஞ்சாயத்துக்கள் குடியரசுத் தத்துவப்படி நாட்டின் ஒருபகுதி கிராம வளர்ச்சிக்குத் திட்டமிடவும், திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றவும், கிராம பஞ்சாயத்துகளுக்கு நிதி ஆதாரங்கள் வேண்டும்; மேலாண்மையும் பொறுப்பும் இருக்க வேண்டும். ஒரு சுதந்திர சோசலிசக் குடியரசை விரும்புகின்றவர்கள் இதை நிச்சயம் ஏற்பார்கள். நமது நாட்டிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன. கிராம பஞ்சாயத்துகளுக்கு உரிமையும் மேலாண்மையும் வழங்கப்படுவதை யாரும் மறுக்கவில்லை. இஃது ஒரு வரவேற்கத்தக்க அம்சம். இனிய செல்வ, ஆனால் பஞ்சாயத்துகளுக்கு அதிக உரிமைகளும் மேலாண்மைகளும் யார் வழங்குவது? மைய அரசு வழங்குவதா? மாநில

தி.23. அரசுகள் வழங்குவதா? என்ற விவாதம் கிளம்பியிருக்கிறது. நம்மைப் பொருத்த வரையில் இதை வரவேற்கின்றோம்.

இனிய செல்வ, ஏற்கனவே நமது நாட்டில் மைய மாநில அரசுகளுக்கு இடையே மோதல்கள் இருந்து வருகின்றன. மைய அரசிடம் அதிகாரங்கள் குவிந்துள்ளன என்றெல்லாம் விவாதிக்கப்பட்டு வந்துள்ளன. இது தொடர்பாக சர்க்காரியா கமிஷன் அறிக்கை வேறு முடிவு செய்யப்பெறாமல் தேங்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மைய அரசு பஞ்சாயத்துத் திருத்தச் சட்டத்தைப் பற்றிப் பேசினால் ஐயம் தோன்றாமலிருப்பதற்கு வழியில்லை.

இனிய செல்வ,

"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை"

என்றார் திருவள்ளுவர். ஆதலால், கிராம பஞ்சாயத்தைப் பொறுத்தவரையில் நடுவணரசினுடைய எண்ணம் சரியானது. அதுமட்டுமல்ல செய்யவேண்டிய காலகட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் அரசைச் சார்ந்தே வாழும் மனநிலையைப் பெற்று வருகின்றனர். என்றைக்கு நாட்டு மக்கள் அரசுக்கு உடமையாகி, அரசுக்கு அரணாகவும் துணையாகவும் இருப்பார்களோ, அன்றைக்கே சுதந்திரத்துக்குப் பாதுகாப்பு, உண்மையான குடியரசு நாடாகவும் விளங்கும். ஆனால், இதை எப்படிச் செய்வது என்பதில்தான் கருத்து வேற்றுமை, முதலில் ஒவ்வொரு மாநில முதலமைச்சர்கள், ஊராட்சி அமைச்சர்கள் ஆகியவர்கள் முன்னிலையில் ஊராட்சி ஒன்றியங்கள் தலைவர்களையும் இந்தப் பிரச்சினையில் அக்கறையுடையவர்களையும் கொண்டுவிவாதித்திருக்க வேண்டும். ஊராட்சி மன்றங்களை நெறிப்படுத்த-வளர்க்க மாநில அரசுகளுக்கு மைய அரசு வழிகாட்டுதல் தந்து மாநிலச் சட்டசபைகளிலேயே சட்டம் இயற்றும்படி செய்யலாம். இதுவே போதுமானது. இதற்கு எந்த மாநில அரசாவது மறுத்தால் மைய அரசு பாராளு மன்றத்தில் சட்டமியற்ற முயற்சி செய்யலாம். இப்பொழுது மைய அரசு எடுத்துக் கொண்டிருக்கிற அணுகுமுறை ஏற்கெனவே மைய மாநில அரசுகளுக்கு இருக்கிற இடை வெளியை அதிகப்படுத்த வாய்ப்பளித்திருக்கிறது. ஒரு நல்ல காரியத்தைச் செய்யும்போது மைய அரசு தனது அணுகு முறையின் காரணமாகத் தவறுகள் நேரும்படி அனுமதித்து விடக் கூடாது. ஆதலால், உடனடியாக மைய அரசு, ஊராட்சி மன்றங்களைப் பொறுத்தவரையில் கட்டாயத் தேர்தல், திட்டமிடும் அதிகாரம் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் நிதியியல் பொறுப்பு ஆகியவற்றிற்கு உரிமையும் ஒப்புறுதியும் தருகிற ஒரு சட்ட முன்வரவைத் தந்து அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுக்குத் தந்து அந்தந்த மாநிலங்களில் சட்டம் இயற்றும்படி செய்யலாம். இதுவே சரியான அணுகுமுறை.

நல்ல காரியங்களை எண்ணினால் மட்டும் போதாது. செய்தால் மட்டும் போதாது. அவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் ஐயம் கொள்ளாத வகையில் அவர்களுடைய நம்பிக்கையையும் பெறத்தக்கவகையில் செய்வதுதான் முறையான அரசியலுக்குரிய பண்பு. ஆதலால்,

"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை"

என்ற திருக்குறள் நெறியைத் தேறி, அந்நெறியில் செயற்பட வேண்டும் என்பது இந்திய ஒருமைப்பாட்டை விரும்புகிற அனைவருடைய விருப்பம்.

இன்ப அன்பு

அடிகளார்