உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/எல்லார்க்கும் எல்லாம்

விக்கிமூலம் இலிருந்து

32. எல்லார்க்கும் எல்லாம்

இனிய செல்வ,

தமிழ்நாடு அரசின் நிதிநிலைத் திட்டத்தை, பாராட்டுதலுக்குரிய முதல்வர் கலைஞர் அளித்துள்ளார். பொதுவாக இன்றுள்ள சூழ்நிலையில் இதை விடச் சிற்ப்பாக நிதிநிலைத் திட்டம் தயாரிக்க இயலாது. ஆதலால், கலைஞர் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்!

கலைஞர் இயல்பாகவே மனிதநேயம் உடையவர். ஆதலால் நிதிநிலைத் திட்டத்தில் நலிந்தோருக்கு நலம் பயக்கும் திட்டங்கள் பல அறிவிக்கப் பெற்றுள்ளன. இந்த அம்சங்கள் மனநிறைவைத் தரத்தக்கன. ஆயினும்-இனிய செல்வ, ‘ஆயினும்’ என்ற சொல் உனக்கு அதிர்ச்சியைத் தருகிறதா? அதிர்ச்சி வேண்டாம்! நிதிநிலைத் திட்டத்தில் குறை காண்பது நமது குறிக்கோளன்று! ஒரு அரசு தயாரிக்கும் நிதிநிலைத் திட்டம் எப்படி அமையவேண்டும் என்று திருக்குறள் வழிகாட்டுகிறது? அந்த வழியில் மேலும் கலைஞர் அரசு நடைபோடவேண்டும் என்ற ஆர்வத்தால் சில பரிந்துரைகள்! ஆம், பரிந்துரைகளே! அதுவும் நமது பரிந்துரைகள் பரிந்துரைகள் அல்ல! திருவள்ளுவரின் பரிந்துரைகள்!

இனிய செல்வ! "வரவுக் கேற்ற செலவு” என்பது. இன்றைய அறிவுரை மட்டும் அல்ல. திருக்குறளும்,

"ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை
போகா றகலாக் கடை”

(478)

என்று பேசுகிறது! இந்தப் பொருள் நெறிமுறை இன்றைய சமூக வாழ்வில் நடைமுறைப் படுத்தக் கூடியதாக அமைந்துள்ளதா? இல்லையென்பதே நமது கருத்து. ஏன்? நாளும் விலைகள் உயருகின்றன. விலைகள் உயருகின்ற அளவுக்கு வருவாய் உயர்ந்து விடுவதில்லை. அப்படியே ஒரோ வழி அரசு அலுவலர்களுக்கு வருவாய் உயர்ந்தாலும் உடன் மீண்டும் விலை உயர்ந்துவிடும். விலை உயர்வும் ஊதிய உயர்வும் ஒரு நச்சுவட்டமாக நமது நாட்டில் சுழன்று வருகிறது. இதுபோக மேலும் ஒரு தீமை! எளிய வாழ்வுக்கு எதிரான நுகர்வுப் பொருள்கள் நாள்தோறும் சந்தையில் வந்து குவிகின்றன. நுகர்தலின் வளர்ச்சி-பொருளாதார வளர்ச்சி-சமூகத்தின் வளர்ச்சி என்பது ஒரு தத்துவம்! இது முற்றிலும் உண்மை! ஆயினும் வருவாய் வளர்ச்சி, தேவையின் பரிணாம அடிப்படையில் இன்றைய நுகர்வுப் பொருள்கள் படைப்பு நிகழவில்லை! இலாப நோக்கத்தில் படைக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, நுகர்வுப்பொருள்களைப் பெற்றிருப்பதின் அடிப்படையில் இன்று சமூக மதிப்பீடுகள் வேறு நிகழ்கின்றன. அதனால் சமூக மதிப்பு என்ற பெயரில் இன்று நுகர்வுப் பொருள்கள் வாங்கப்படுகின்றன. இனிய செல்வ, சான்றாக சைக்கிளை எடுத்துகொள்? காலால் நடந்து செல்ல இயலாத-முடியாத தூரத்தைக் கடக்க சைக்கிள் தேவை. இன்று 100 அடி கூடச் செல்ல வேண்டாதவர்களும் மதிப்பு என்ற பெயரில் சைக்கிள் வைத்துள்ளனர்.

அடுத்து ஒன்று! நமது நாட்டில் காலம் களவு போகாமல் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஏன், எந்த ஒரு நிகழ்ச்சியும் கடமையும் குறித்த காலத்தில் செய்யப்படுவதில்லை! நமது நாட்டில் காலம் தாழ்ந்து வருபவர்கள் பெரியவர்கள்! தலைவர்கள்! ஒரு சில பொது நிகழ்ச்சிகள் மணிக்கணக்கில் காலதாமதமாவதைக் கண்டிக்கிறாய் அல்லவா? இப்படியெல்லாம் காலம் கொலை செய்யப்பெறும் நமது நாட்டில் பலர் கடிகாரம் கட்டிக் கொள்கிறார்கள்! இன்று கடிகாரமும் ஓர் ‘அணி’ அழகுப் பொருள்; இல்லை, இல்லை! மதிப்பை உண்டாக்கும் ஒரு பொருள் என்றாகி விட்டது! இன்று நமது நாட்டில் நுகர்வுக்குரிய வருவாய்க்கும் (வாங்கும் சக்திக்கும்) நுகர்வுப் பொருள் படைப்புக்கும் உள்ள இடைவெளி மிகவும் கூடுதலானது.

தனிக் குடும்பநிலையே இப்படி என்றால் பல குடும்பங்களுக்குப் பொறுப்பேற்கக் கூடிய அரசின் சங்கடங்கள் மேலும் பலவாக இருக்கும் அல்லவா? எனவே, இதில் அரசு, தனது வருவாய்ப் பெருக்கத்திற்குரிய வாயில்களைக் கண்டறிய வேண்டும். மக்களிடம் வரி வாங்குவதன் மூலமே தன்னுடைய வருவாயை எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடாது. புதிய புதிய வருவாய் வாயில்களை அரசின் சார்பானதாகவே விளங்குமாறு கண்டறிந்து நடைமுறைப் படுத்தி, வருவாய் காணவேண்டும். அதாவது, அரசு தானே நடத்தக் கூடிய தொழிற்சாலைகள், பண்ணைகள் முதலியன நிறுவவேண்டும் (Public Sector), அங்ஙனம் அமைக்கப்பெறும் தொழிற்சாலைகள்-பண்ணைகள் மூலம் வரும் வருவாய்கள் மூலதனம் ஆகும் ஆற்றல் பெறும் வரை நிதியைத் தொகுக்க வேண்டும். தொகுத்த நிதியைக் காப்பாற்றவும் வேண்டும். இன்று அரசுக் கருவூலங்களில் நிதித் தொகுப்பு சேர்வதில்லை. முதலமைச்சர் பொறுப்பை கலைஞர் ஏற்றுக் கொண்ட பொழுது, "கஜானா காலி’ என்று சொன்னதை நினைவு கூர்க.

இனிய செல்வ, ஓரளவு அரசின் நிதி தொகுக்கப் பெற்ற நிலையில் அரசு, செலவுக்குரிய திட்டம் தயாரிக்க வேண்டும். இதனை ‘வகுத்தல்’ என்று கூறுகிறது, வள்ளுவம், இங்ஙனம் அரசு நிதியை வகுக்கும்பொழுது திட்டச் செலவுகள்-அதாவது மேலும் பொருள் வருவாயை அதிகரிப்பதற்குரியதாகவும், வேலை வாய்ப்புகள் அதிகம் தரக்கூடியதாகவும் உள்ள தொழிற்சாலைகள் அமைத்தல், பண்ணைகளை அமைத்தல், மனித வளத்தை மேம்படுத்தும் துறைக்கு அதிகமாக 60 விழுக்காட்டிற்குக் குறையாமல் ஒதுக்குதல் வேண்டும். ஒரு புதிய செலவை ஏற்கும்போது அதற்குள்ள நிதியைத் திரட்ட வேண்டும். சான்றாகச் சத்துணவில் கோழி முட்டை சேர்ப்பது என்று திட்டமிட்டால் மாவட்டத்திற்கு ஒரு நல்ல கோழிப் பண்ணை அமைக்கவேண்டும். இந்தக் கோழிப்பண்ணை, வியாபார ரீதியாகக் கோழி முட்டையைச் சத்துணவு மையங்களுக்கு விற்க வேண்டும். இலாபம் ஈட்ட வேண்டும். இதில் அரசுக்கு இலாபம், 200 பேருக்கு வேலைவாய்ப்பு, கோழி முட்டைகள் கிடைக்கும் உறுதிப்பாடு. தவறுகள் நடக்க வழியில்லை. கோழி முட்டைகளைச் சத்துணவு மையத்திற்கு வாங்கும் செலவு, கோழிப் பண்ணையின் இலாபமாக அமைய வேண்டும். இதுபோலச் செய்யலாம்.

இனிய செல்வ, நாளும் நிதி திரட்டும் புதுப்புது வாயில்கள் காணவேண்டும். நிதியைக் கணக்கிட்டுக் கச்சிதமாகத் தொகுக்க வேண்டும். தொகுத்த நிதியை மக்கள் மேம்பாட்டுக்கும் ஆட்சிக்கும் வகுத்துச் செலவழிக்க வேண்டும். இன்று உடனடியாக இல்லையானாலும் எதிர் காலத்திலாவது "எதுவும் இனாம் இல்லை" என்ற சமுதாயம் தோன்றி எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும்.

இன்ப அன்பு

அடிகளார்