உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/பிளேக்-நோய்கள்

விக்கிமூலம் இலிருந்து

89. பிளேக்–நோய்கள்

இனிய செல்வ,

நோய்கள் பரவுகின்றன! ஆம்! பிளேக்கையும் சேர்த்துத் தான் கூறுகின்றோம்! இனிய செல்வ, இன்று பிளேக் மட்டுமா பரவுகிறது? பிளேக் நோய் உடனே கொல்வதால் எல்லாரும் பயப்படுகிறார்கள். நித்தம் சாகடித்துக் கொண்டேயிருக்கும் வியாதிகள் பலப்பல! சாவதைவிடக் கொடியவை நாள் தோறும் அடையும் துன்பங்கள்! துயரங்கள்! வன்முறைகள்! வாழும் முறைமை அறியாநிலை! அறிந்தாலும் வாய்ப்புக்கள் இல்லை! வாய்ப்புக்கள் என்ன, நமது வீட்டுக் கதவைத் தட்டுமா? ஐயோ, பாவம்! இன்று நல் வாய்ப்புக்கள் வந்து வீட்டுக்கதவைத் தட்டினாலும் திறக்க மறுக்கும் மதோன் மத்தர்களின் எண்ணிக்கையே மிகுதி! எங்கும் நீக்கமற நிலவும் அசிரத்தை நோய்க்கு ஏது மருந்து?

இனிய செல்வ, சூரத் நகரம் ஒரு பெரிய நகரம்! நகராட்சி நடந்து வந்திருக்கிறது! ஆயினும் நகரம் சுத்தமாக, சுகாதாரமாகப் பேணப்படவில்லை, என்பதை பிளேக் நோய் ஊருக்கு அறிவித்திருக்கிறது; உலகத்திற்கு அறிவித்திருக்கிறது. தொலைக்காட்சியில் வேறு சூரத் நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப் படுத்துவதைக் காட்டுகிறார்கள். பல நாள்களாகச் செய்தும் இன்னமும் அள்ளி முடியவில்லையாம்! ஏன் இந்த அவலம்? நடைபெற்றுக் கொண்டிருந்த நகராட்சி, அன்றாடக் குப்பைகளை அள்ளி, கழிவுநீரை அகற்றி நகரைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்பது தானே பொருள்!

இன்று இத்தகைய அசிரத்தை நமதுநாடு முழுவதும் துறைதோறும் பரவிக்கிடக்கிறது; பரவிக்கொண்டு வருகிறது. இனிய செல்வ, நம்மவர்களைப் பீடித்துள்ள இந்த அசிரத்தை என்பது பிளேக்-கை விடக் கொடிய நோய்! அசிரத்தையால் பணிகள் முறையாக நடப்பதில்லை. ஆனால் வாழும் ஆசை யாரை விட்டது? வாழும் ஆசையும் சிரத்தையும் கூடினால் வாழலாம்! வாழ முடியும்! அசிரத்தையுடையவர்கள் வாழ்தல் அரிது! பிழைப்பு நடத்த முயல்வார்கள். இந்தச் சூழ்நிலையில் தான் கையூட்டு, கொள்ளை முதலியன நிகழ்கின்றன!

இனிய செல்வ, நோய்,-காரியம்! நிகழும் காரியங்களுக்குப் பரிகாரம் தேடிப் பயனில்லை. இந்தப் பரிகாரங்கள் நிரந்தரமாகா. நிரந்தரமான பரிகாரம் காணவேண்டின் நோயின் காரணங்களைக் கண்டறிய வேண்டும். நோயின் காரணங்களையே மாற்ற வேண்டும். இன்று நமது சமுதாயத்தில் நோய் பரவலாகி விட்டது. தவறுகளை நியாயப்படுத்தும் திறன் வளர்ந்து வருகிறது. எங்கும் அசிரத்தை! செய்யும் பணிகளின் பயனுக்கு உத்தரவாதம் இல்லை! இந்தச் சமூக வாழ்க்கை முறை பிளேக்-கை விடக் கொடியது!

இனிய செல்வ, வெற்றிகள் நிலையானவை அல்ல. வெற்றி நிலைபெற்று நம்பாலதாக இருக்க வேண்டும் எனில், தொடர்ந்து விழிப்புணர்வுடன் கூடிய முயற்சி வேண்டும். சென்ற தலைமுறையினர், மனிதரைக் கொல்லும் கொள்ளை நோய்களை அறவே ஒழித்து வெற்றி கண்டனர். இன்றோ நாம், மீண்டும் அந்த நோய்களுக்கு இறையாகின்றோம்! ஏன்? அன்று அவர்கள் வாழ்ந்தனர். நாட்டுக்கு உழைத்தலைத் தவமெனக் கொண்டனர். சிரத்தையுடன் பணிகளை நிறைவேற்றினர். முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் பணிகளையும் பின் வந்த திட்டங்களின் பணிகளையும் ஒப்பு நோக்குக!

சுதந்திரம் பெற்றவுடன் நமது நாட்டில் அமைதியான வகையில் பணிகள் பல நடந்தன. அதனால், இன்று நமது நாடு பலமான பொருளாதார அஸ்திவாரத்தைப் பெற்று விளங்குகிறது. இன்று நாம் அஸ்திவாரங்களை மறந்து விட்டோம்! புறஞ்சுவர் பூசி மகிழ்கின்றோம்! இனிய செல்வ, நாடு மீண்டும் ஆவேசத்தைப் பெற வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்று கருதிச் செய்தல் வேண்டும். இனிய செல்வ, வந்த பிளேக்கிற்கு விடைகொடுத்து அனுப்புவது எளிது! அது போதாது! நமக்கு சிரத்தை-அக்கறை தேவை! செய்யும் வேலைகளை இம்மாநிலம் பயனுறும் வகையில் செய்ய வேண்டும். இந்த நிலை உருவானால் நாடு வளரும்! நாமும் வளர்வோம்! இஃதன்றித் தினமும் சோறு தின்று, சின்னஞ் சிறுகதைகள் பேசிச் செத்துப்போகும். வேடிக்கை மனிதர்களின் எண்ணிக்கை பெருகி வளர்கிறது! இந்தப் போக்கு பிளேக்-கை விடக் கொடியது. இதற்கு தீர்வு கண்டாலே நம்நாடு சுதந்திரமாக வாழ இயலும். இனிய செல்வ, தோளில் சுமை அழுத்துகிறது! அந்நிய மூலதனச் சுமை! மூளையில் அழுத்தம் ஏற்பட இருக்கிறது! அந்நிய நாட்டுத் தொழில் நுட்பங்கள்! இனி படிக்கும் செய்தித்தாள்கள் கூட அந்நியத் தாள்களாக இருக்கும்! இனிய செல்வ, இந்தப் போக்கு-நம்மை-நமது மக்களை இந்த நாட்டுக்கு அந்நியமாக்கும் அபாயம் வந்து விடக்கூடாது! அசிரத்தையைத் தவிர்! எழுந்திரு! நாட்டுக்கு உழைத்திடும் தவம் செய்வோம்!

"கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்"

(668)

இன்ப அன்பு

அடிகளார்