இளையர் அறிவியல் களஞ்சியம்/பருவ காலங்கள்
பருவ காலங்கள் : பருவ நிலை ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, கோடை காலம், குளிர்காலம், மழைக்காலம் என மாறி மாறி வருகின்றன. நம் நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு பருவ காலமும் ஒரு சில மாதங்கள் நீடித்து, பின் வேறொரு பருவ காலமாக மாறி விடுகின்றது. ஆனால், மற்ற நாடுகளில் இப் பருவ காலங்கள் குறுகிய கால எல்லை அல்லது நீண்டகால எல்லைகளைக் கொண்டதாக உள்ளது.
இவ்வாறு உலகெங்கும் பருவகாலங்கள் மாறி மாறி அமைவதற்கு அடிப்படைக் காரணம் பூமி சூரியனைச் சுற்றி வருவதே யாகும். பூமி சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும் அதே சமயத்தில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சுழன்று வருகிறது. அவ்வாறு சுழலும்போது செங்குத்தாக இல்லாமல் 23½0 சாய்வாகவே சுழல்கிறது. அவ்வாறு சுழலும் போது ஆறு மாதங்கள் பூமியின் வட பகுதி சூரியனை நோக்கியபடியே சாய்ந்து இருக்கும். அச் சமயத்தில் பூமியின் வட பகுதி சூரிய ஒளியைப் பெறுகிறது. பூமியின் வட பகுதிக்கு அது கோடை காலமாகும். அதே சமயம் பூமியின் தென் பகுதியில் சூரிய ஒளி படியாததால் அங்குக் குளிர் காலமாக அமைகிறது. அடுத்த ஆறு மாதங்கள் பூமியின் தென்பகுதி சூரியனை நோக்கி இருப்பதால் தென் பகுதி கோடை காலமாகவும் வடபகுதி குளிர் காலமாகவும் அமைகிறது. இவ்வாறு பூமியின் வட தென் பகுதிகளில் கோடை காலமும் குளிர் காலமும் ஆறு மாதத்துக்கு ஒருமுறை மாறி மாறி அமைகிறது.
நீள் வட்டப் பாதையில் பூமி சூரியனைச் சுற்றி வரும் உலகின் எப்பகுதி சூரியனுக்கு நேராகவும் நெருக்கமாகவும் அல்லது சற்று விலகியும் இருக்குமோ அதற்கேற்ப குறிப்பிட்ட கால எல்லைகளோடு கூடிய பருவ காலங்கள் அமைகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடைக் காலமாகும். கோடை காலத்தில் வெயில் கடுமையாக இருக்கும். ஜூலை முதல் அக்டோபர் வரை மழை குறைவாகவும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மிகுதியாகவும் மழை பெய்யும். ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர் காலமாகும்.
ஆண்டில் சில மாதங்களில் பகல் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாகவும் இருக்கும். இன்னும் சில மாதங்களில் பகல் நேரம் குறைவாகவும் இரவு நேரம் அதிகமாகவும் இருக்கும். உலகம் முழுமையும் செப்டம்பர் 28ஆம் தேதியும் மார்ச் 21ஆம் தேதியும் சம அளவில் இரவும் பகலும் அமைகிறது.