இளையர் அறிவியல் களஞ்சியம்/பூகம்பம்

விக்கிமூலம் இலிருந்து

பூகம்பம் : பூமியின் நிலப்பரப்பில் பல்வேறு பகுதிகளில் நில அதிர்ச்சிகள் இருந்து கொண்டிருப்பதை 'நில நடுக்கம்’ என்ற கட்டுரையில் கண்டோம். இந்த அதிர்வுகள் வெவ்வேறு காரணங்களால் உருவாகின்றன என்பதையும் தெளிவாக அறிந்தோம். இந்த நிலநடுக்கம் குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியில் மிக அதிகமாகி வெடித்து வெளிப்பட்டால் அதைப் ‘பூகம்பம்’ என அழைக்கிறோம்.

நிலப்பரப்பின்மீது காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் வண்டல்கள் படிகின்றன. இவ்வாறு படியும் வண்டல்கள் பல அடுக்குகளாக

பூகம்பம்

அமைகின்றன. நீண்ட காலத்திற்குப் பின்னர் அவை கெட்டியாகின்றன. இவ்வாறு கெட்டியான மேற்பகுதி, கீழ்ப்பகுதியை அழுத்துகின்றது. மேற்பகுதியின் அழுத்தம் தாங்காத கீழ்ப்பகுதி வெடிக்கின்றது. அப்போது அழுத்தம் தாங்காத கீழடுக்குகள் பிளவுறுகின்றன. இப்பிளவின் விளைவாக உள்ளிருக்கும் கல்லும் மண்ணும் நெருப்புக் கோளமாக வெளிவருகின்றன. இந்த நிகழ்வுகளே ‘பூகம்பம்' ஆகும்.

இவ்வாறு பூகம்பம் ஏற்படும்போது அதன் பிளவு மையம் ஒரு கிலோ மீட்டரிலிருந்து 400 கிலோமீட்டர் ஆழம்வரை பரவியிருக்கும். பூகம்பம் ஏற்படும்போது பன்னூறு கிலோ மீட்டர் பரப்புகள் பாதிப்புக்குள்ளாகும்.

பெரிய மலைகள் அமைந்துள்ள பகுதிகளிலேயே பெரும்பாலும் பூகம்பங்கள் ஏற்படும். இந்தியாவில் இமயமலை அடிவாரப் பகுதிகளிலும், ஜப்பான் மலைப் பகுதியிலும் ஆல்ப்ஸ் மலைப் பகுதியிலும் அடிக்கடி பூகம்பங்கள் ஏற்படுவதுண்டு. அஸ்ஸாம், பீகார் பகுதிகளில் பூகம்பங்கள் ஏற்பட்டு பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.

பூகம்பத்தின் கடுமை எவ்வளவு என்பதைக் கணக்கிடவும் பூகம்பத்திற்கான அறிகுறிகளை முன்கூட்டியே அறியவும் பல நவீனக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.