உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 2/வீழி மிழலையார்

விக்கிமூலம் இலிருந்து
24

வீழி மிழலையார்

'எந்தப் பொருள் ஒன்று இல்லாதிருந்தால் இந்திய நாட்டின் கலை அழகு சிறப்பாக இராது?' என்று ஒரு கேள்வி. இந்தக் கேள்வியை நம்மிடம் கேட்டிருந்தால் நாம் விழித்திருப்போம். இந்தக் கேள்வியைக் கலாரசிகர் ஆனந்தக் குமாரசாமியிடமே ஒரு நண்பர் கேட்டிருக்கிறார். அவர் கொஞ்சமும் தயங்காமல் பதில் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லிய பதில் 'தாமரை' என்பது தான். கவிதை, காவியம், சிற்பம், சித்திரம், இசை, நடனம் முதலிய அருங்கலைகள் அனைத்தினுக்குமே உயிர் நிலையான பொருளாக அல்லவா தாமரை இருந்து வந்திருக்கிறது. 'பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை' எனக் கவிஞன் பாடுவான். ஏன், தூய்மைக்கே எடுத்துக் காட்டாகக் கூறப்படுவது தாமரைதானே. கமலம் பதுமம் எல்லாம் சிற்ப உலகிலும், சித்திர உலகிலும் பிரசித்தமானவையாயிற்றே! முகை அவிழ்தாமரையை நடனம் ஆடும் பெண் முத்திரையாகக் காட்டுவதில்தான் எத்தனை எத்தனை அழகு. நிரம்பச் சொல்வானேன்? அலைமகளும் கலைமகளும் இன்னும் எண்ணற்ற தேவர்களும் இருப்பிடமாகக் கொண்டிருப்பது தாமரையைத்தானே. புத்தரும் அருகனும்கூட ‘மலர்மிசை ஏகினான்' என்றுதானே அழகுணர்ச்சியைத் தூண்டி அவனுக்கு ஆனந்தம் அளித்து அவனைக் கலைஞனாகச் செய்கிறாளே பெண், அந்தப் பெண்ணின் முகம், கண், வாய், கை, வயிறு, கால் எல்லாவற்றுக்கும் உவமை தேடித் திரிந்த கலைஞன் அத்தனைக்கும் தாமரையைத் தானே கண்டுத் பிடித்திருக்கிறான். இதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் தணிகைப் புராணம் பாடிய கச்சியப்ப முனிவர். மலர்களுக்கு எல்லாம் அரசியாகத் தாமரை ஏன் விளங்குகிறது என்பதற்குக் காரணமும் அவர் கூறுகிறார்.

திருமுகம் கமலம், இணைவிழி கமலம்,
செய்யவாய் கமலம், நித்திலம் தாழ்
வருமுலை கமலம், மணிக்கரம் கமலம்,
மலர்ந்த பொன் உந்தியும் கமலம்,
பெருகிய அல்குல் மணித்தடம் கமலம்,
பிடி நடைத்தாள்களும் கமலம்,
உரு அவட்கு அவ்வாறு ஆதலின் அன்றே
உயர்ந்தது பூவினுட் கமலம்.

என்பதுதானே அவர் பாட்டு. இப்படி மலர்களில் எல்லாம் உயர்ந்தது தாமரை என்பதையும், அந்தத்தாமரையை ஒத்ததே இணைவிழிகள் என்பதையும் அந்தத் திருமால் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் எத்தனையோ யுகங்களுக்கு முன்பே. திருமாலுக்குச் சலந்தரனைச் சம்ஹரிக்கச் சக்கரம் வேண்டியிருந்திருக்கிறது. அதைப் பெறச் சிவனிடம் வருகிறார். ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அருச்சித்தால் எண்ணியது கிட்டும் என்று அறிகிறார். அப்படியே ஆயிரம் தாமரை மலர்கள் சேர்த்து அருச்சனை பண்ண ஆரம்பிக்கிறார். ஒன்று, இரண்டு, மூன்று என்று கணக்கிட்டுக் கொண்டே தான் அருச்சனை நடக்கிறது. 999 மலர் அருச்சனை முடிந்து விடுகிறது. ஆனால் அதற்குமேல் மலர் இல்லை, அவைகளை வைத்திருந்த தாலத்தில், அருச்சனை குறைவுபடக்கூடாதே என நினைக்கிறார். அதற்காக இன்னொரு தாமரை மலர் தேடித்திரியவோ நேரமும் இல்லை. அப்போது தோன்றியிருக்கிறது நமது கண்களுமே நல்ல தாமரை மலர்கள் தானே என்று. உடனே அந்தத் தாமரைக் கண்ணன் தம் கண்களில் ஒன்றையே இடந்து இறைவனுக்குச் சாத்தியிருக்கிறார். அருச்சனையும் குறைவுபடாமல் நிறைவு பெற்றிருக்கிறது. இறைவனும் திருமால் விரும்பியபடியே அவருக்குச் சக்கரத்தை அருளியிருக்கிறார். இப்படித் திருமால் தம் கண்ணையே இடந்து சாத்திய தலம்தான் திருவீழிமிழலை (விழிக்கும் வீழிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. மிழலை என்பது ஊரின் பெயர், வீழி என்பது அங்கு கிடைக்கும் ஒரு கொடி. அந்தக் கொடியின் பெயரையும் சேர்த்தே வீழிமிழலை என்று அழைக்கப் படுகிறது) இப்படித் திருமால் வழிபட்ட செய்தியை,

நீற்றினை நிறையப்பூசி, நித்தம்
ஆயிரம் பூக் கொண்டு
ஏற்றுழி, ஒருநாள் ஒன்று குறைய
கண் நிறைய விட்ட
ஆற்றலுக்கு ஆழிநல்கி, அவன்
கொணர்ந்து இழிச்சுங் கோயில்
வீற்றிருந்து அளிப்பர், வீழி
மிழலையுள் விகிர்தானாரே.

என்று பாடுகிறார் அப்பர். மணவாளக் கோலத்தோடு அக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருவடியில் திருமால் தம் கண்ணைப் பறித்து அருச்சித்த அடையாளமும் கீழே சக்கரமும் இருப்பதை இன்றும் பார்க்கலாம். இத்தகைய புகழ்பெற்ற தலமாகிய திருவீழிமிழலைக்கே செல்கிறோம் நாம் இன்று.

‘காதல் வழி கரடு முரடானது' என்பர். திருவீழி மிழலைக்குச் செல்லும் வழியோ அதைவிட மிகக் கரடு முரடானது. இத்தலத்துக்கு எத்தனையோ வழிகள் உண்டு. மாயூரத்தை யடுத்த குற்றாலம், ஆடுதுறை, இல்லை திருவிடைமருதூர் ஸ்டேஷனில் இறங்கிப் பத்துமைல் வண்டியில் வரலாம். எல்லா வழிகளுமே மண்பாதைகள்தாம். அவற்றில் வண்டிகள் மாத்திரமே போகும். மாயூரம் திருவாரூர் ரயில் பாதையில் பூந்தோட்டம் ஸ்டேஷனில் இறங்கி ஆறுமைல் மேற்கே வந்தாலும் இத்தலம் வந்து சேரலாம். இல்லை, கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோயில் வந்து அங்கிருந்து கிழக்கே திரும்பி ஏழு எட்டு மைல் வந்தாலும் திருவீழிமிழலை வந்து சேரலாம். எனக்கு என்னவோ இத்தனை வழிகளுமே சௌகரியமானதல்ல என்றுதான் தோன்றுகிறது. கும்பகோணத்தில் இறங்கி அங்கிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் பஸ் பிடித்தோ, கார் ஏற்பாடு பண்ணியோ சென்றால் பன்னிராண்டாவது மைலில் புதூர் வந்து சேருவோம். அங்கிருந்து தெற்கே திரும்பி இரண்டு மைல் வந்தால் கிழக்கே ஒரு பாதை பிரியும். அங்கே ஒரு கோபுரம் தெரியும். ஆனால் அது திருவீழிமிழலை இல்லை. விசாரித்தால் அது தான் கோனேரிராஜபுரம் என்பார்கள். இதனையே தேவாரத்தில் நல்லம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு தானே அந்தப் பிரபலமான நடராஜர் இருக்கிறார் என்பதும் ஞாபகத்துக்கு வரும். ஆதலால் அந்தப் பாதையிலே திரும்பிக் கோயில் முன்னுள்ள சக்தி தீர்த்தத்தையும் வலம் வந்தால் கோயில் வாசல் வந்து சேருவோம்.

கோயிலுள் நுழைந்து உமாமகேசுவரரையும், மங்கள நாயகியையும் தரிசிக்கும் முன் மகா மண்டபத்தையொட்டிய ஒரு மண்டபத்தில் நடராஜர் திருவுருவைக்காண்போம், செப்புச்சிலைவடிவில். செப்புச்சிலை என்றால் ஏதோ மூன்று அடி நான்கடி உயரம் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. கீழே பீடத்திலிருந்து திருவாசிவரை ஒன்பது அடி உயரம். ஆறு அடி அர்ச்சகர் பக்கத்தில் நின்றால் நடராஜரது தோள் உயரம் கூட இருக்கமாட்டார். நடராஜ ருக்கு ஏற்ற
கோனரி ராஜபுரம் நடராஜர்

உயரத்தில் சிவகாமி. இருவரும் செப்புச்சிலை வடிவில் இருந்தாலும் அவர்கள் நிலைத்தே நிற்கிறார்கள், உற்சவ காலத்தில் வெளியே எடுப்பது தெரு வீதிகளில் உலா வரப் பண்ணுவது என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. இதற்காகவே ஒரு சிறு நடராஜரையும் செய்து வைத்திருக்கிறார்கள். இரண்டு நடராஜரையும் ஒப்பிட்டு நோக்கினால்தான், கலை அழகு என்றால் என்ன என்பது தெரியும். காத்திரமான பெரிய நடராஜர்; கலை உலகிலேயே பெரியவர். இன்னும் திரிபுராந்தகர், திரிபுரசுந்தரி இருவரும் செப்புச்சிலைவடிவில் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர மணக்கோல நாதர் வேறே இருக்கிறார். எல்லோருமே நல்ல கலை அழகு வாய்ந்தவர்கள்.

முன்பு செங்கல்லால் கட்டப்பட்டிருந்த கோயிலைக் கற்றளியாக்கிய பெருமை, அந்தச் செம்பியன் மாதேவி என்ற பெருமாட்டியைச் சேரும். அவள் தன் கணவர் கண்டராதித்தர் சிவலிங்கத்துக்குப் பூஜைசெய்வது போல ஒரு சித்திரம் அமைத்து வைத்திருக்கிறாள். சிறியன சிந்தியாது பெரு உடையாருக்குப் பெரிய கோயில் எடுப்பித்த ராஜராஜனே இக்கோயிலில் உள்ள பெரிய நடராஜனையும் உருவாக்கி இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது எனக்கு. அவனைத் தவிர இவ்வளவு பெரிய அளவில் உருவம் அமைக்கவேண்டும் என்று வேறு யாருக்குத் தோன்றப் போகிறது? இங்குள்ள திருக்கோலங்களைக் கண்டு வணங்கி மேலும் இரண்டு மைல் தெற்கு நோக்கி நடந்தால் திருவீழிமிழலை வந்து சேர்வோம். வழி கொஞ்சம் நீளமானதுதான் என்றாலும் அதற்குத்தான் தக்க பலன் கிடைத்து விட்டதே. கோனேரிராஜபுரம் நடராஜரைத் தரிசிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைக்கக் கூடியதா என்ன?

கோனேரி ராஜபுரத்து உமாமகேசுவரர் சந்நிதிமேற்கு நோக்கி இருந்தால், இந்த வீழிமிழலை நேத்திர அர்ப்பண ஈசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கியிருக்கும். (நேத்திரத்தை அர்ப்பணம் பண்ணியவர் திருமால், ஆனால் நேத்திர அர்ப்பண ஈசுவரர் என்ற பெயர் இத்தலத்தில் உள்ள இறைவனுக்கு நிலைத்திருக்கிறது. அர்ப்பணம் பண்ணியவருக்குப் பெயர், புகழ் ஒன்றும் காணோம். அர்ப்பணம் ஏற்றுக்கொண்டவருக்கே புகழ், பிரபலம் எல்லாம். உலக இயல்பே அப்படித்தானே இருக்கிறது) இங்கும் கோயில் முன் ஒரு குளம் உண்டு. விஷ்ணு தீர்த்தம் என்று பெயர். குளத்தில் இறங்கி, நடந்த அலுப்புத்தீரக் கால், கை சுத்திசெய்து கொண்டு கோயிலுள் நுழையலாம். இத்தலத்தின் பிரதான வாயிலில் உள்ள ராஜ கோபுரத்தைவிட, கர்ப்பக்கிருஹத்தின் மேல் இருக்கும் விமானமே சிறப்பானது. அதற்கு விண்ணிழிவிமானம் என்றே பெயர். சக்கரம் பெற்ற திருமால் பெரியதொரு விமானத்தையே வைகுண்டத்திலிருந்து கொண்டுவந்து இக்கோயிலை அலங்கரித்திருக்கிறார் என்பர்.

தன்தவம் பெரிய சலந்தரன்
உடலம் தடிந்த சக்கரம்
எனக்கு அருள், என்று

அன்று அரி வழிாட்டு
           இழிச்சிய விமானத்து இறைவன்
                      பிறை அணி விமானம்

அது என்பார் சம்பந்தர். இந்த விமானத்திலேதான் சம்பந்தர், சீகாழியில் தன்னை ஆட்கொண்ட தோணியப்பரைத் தரிசித்திருக்கிறார். சீகாழிக்கு வரவேண்டும் என்று அழைத்த அடியவர்களுக்கும் காட்டி இருக்கிறார். “பொன்னியல் மாடம் நெருங்கு செல்வுபுகலி நிலாவிய புண்ணியன், மிழலை விண்ணிழிகோயில்' விரும்பி வந்திருக்கிறார். அடியவன் செல்லும் இடமெல்லாம் ஆண்டவனும் தொடர்ந்தே வருகிறான் என்பதுதான் எவ்வளவு எளிதாக விளங்குகிறது நமக்கு. ஆலயத்தின் முதற் சுற்றிலே இருக்கும் நூற்றுக்கால் மண்டபம் சிற்ப வேலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அங்கு கல்லாலேயே அமைத்துள்ள கொடுங்கைகளும், வளைவுகள் நிரம்பிய கல்தூண்களும், வௌவால் ஒட்டுமண்டபமும் பார்த்துக்கொண்டு நின்று விடுதல் கூடாது. கோயிலுக்குள் சென்று நேத்திரார்ப்பணேசுரரையும் அவர்தம் துணைவி சுந்தர குசாம்பிகையையும் முதலில் வணங்கலாம். அப்படி வணங்கும்போதே மூல லிங்கத்துக்குப் பின் கர்ப்பக்கிருகச் சுவரில் பார்வதி பரமேசுவரருடைய திரு உருவங்கள் இருப்பதையுமே காணலாம். இனி மகா மண்டபத்துக்கு வந்து அங்கு தெற்கு நோக்கிய ஒரு பீடத்தில் எழுந்தருளியுள்ள கல்யாண சுந்தரமூர்த்தியைத் தரிசிக்கலாம். இவரே கார்த்தியாயன முனிவரின் மகளாக அவதரித்த கார்த்தியாயனியை மணந்து கொண்டு, என்றுமே 'மாப்பிள்ளைச்சாமி'யாக நிற்பவர், இவரது திருவடியிலேதான் மால் அருச்சித்ததாமரைக் கண் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதையுமே அர்ச்சகர்களைக் காட்டச் சொல்லிக்கண்டு மகிழலாம். அவர் கையிலே செண்டு என்னும் ஆயுதம் இருப்பதைக் காணலாம். மாப்பிள்ளைக்கோலத்தில் இருப்பவர்க்கு ஏன் இந்தச் செண்டு என்று தெரியவில்லை!

இத்தல வரலாற்றிலே திருமால் கண்ணிடத்து அருச்சித்த செயலுக்கு அடுத்தபடி சிறப்புடையது சம்பந்தருக்கும், அப்பருக்கும் இறைவன் படிக்காசு அருளியது தான்.
வீழிமிழலை நேத்திர அர்ப்பண ஈஸ்வரர்

ஞானசம்பந்தரும், அப்பரும் சேர்ந்தே வருகிறார்கள் இத்தலத்துக்கு, இவர்கள் வரும் போது நாடெல்லாம் பஞ்சம். மக்கள் எல்லாம் உண்ண உணவில்லாது மயங்குகிறார்கள். இந்த நிலையில் இவர்களுடன் வந்த அடியவர்களுக்கு உணவு அளிப்பது என்பதும் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. இரண்டு சமய குரவர்களும் கோயிலுள் சென்று இறைவனை வணங்குகிறார்கள்; திருப்பதிகங்கள் பாடுகிறார்கள். மறுநாள் காலையில் கிழக்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும் இருக்கிறது. ஒருவருக்கும் தெரியாமல் இரவோடு இரவாகவே, இறைவன் கட்டளைப்படி படிக்காசுகளை வைத்தருளிய படிக்காசுப் பிள்ளையாரும் மேற்கு பலிபீடத்தருகிலேயே உட்கார்ந்து கொள்கிறார். விடிந்தபின் பலிபீடங்களில் படிக்காசு இருப்பதை அறிந்து, சம்பந்தரும், அப்பரும் எடுத்து அவற்றைக் கொண்டு அடியவர்களுக்கு அமுதளிக்கிறார்கள்.

இப்படிப் படிக்காசு அருளுவதில் கூட ஒரு சிறு விளயைாட்டுச் செய்கிறார் இறைவன். அப்பர் வாசி இல்லா காசு (கமிஷன் இல்லாது மாற்றக்கூடிய காசு) பெறுகிறார். சம்பந்தர் பெறும் காசோ வாசியுடையது. சம்பந்தர் விடுவாரா?

வாசிதீரவே காசு நல்குவீர்
மாசில் மிழலையீர், ஏசல் இல்லையே!

என்று பாடுகிறார். அதன்பின் அவருக்குமே வாசி இல்லாக் காசே கிடைக்கிறது. சம்பந்தருக்கு வாசியுள்ள காசையும் அப்பருக்கு வாசியில்லாத காசையும் ஏன்கொடுக்கிறார் இறைவன். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறார் சேக்கிழார்.

திருமாமகனார் ஆதலினால்,
           காசு வாசியுடன் பெற்றார்.
                      கைத்தொண்டர் ஆகும்படியினால்
வாசு இல்லாக் காசு படி
           பெற்று உவந்தார் வாகீசர்

என்பார். உண்மைதானே. தொண்டு புரியும் அன்பனுக்கு வாசியுள்ள காசு கொடுத்தால் அவன் கடைத்தேறுவது ஏது? நாட்டில் பஞ்சம் நீங்கும் வரையில் படிக்காசுகள் பெற்றிருக்கிறார்கள் இருவரும். (நமது நாட்டின் நிதி நிலைமையையும் ஐந்தாண்டுத் திட்டச் செலவுகள் பெருகுவதையும் பார்த்தால் இப்படி இரண்டு அடியவரும், இப்படிப் படிக்காசு கொடுக்கும் பெருமானும் இன்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.) இப்படி இறைவன் படிக்காசு கொடுக்கிறான் என்ற உடனேயே, இரு சமய குரவர்களும் அந்தத் தலத்திலேயே இரண்டு மடங்கள் அமைத்துக்கொண்டு நீண்ட காலம் தங்கியிருக்கின்றனர். வடக்கு வீதி கீழைக் கோடியில் சம்பந்தர் மடமும், மேலைக் கோடியில் அப்பர் மடமும் இருக்கின்றன. இன்னும், இவர்களுக்குக் காசு கொடுத்த வரலாற்றையெல்லாம் பின்னால் இத்தலத்துக்கு வந்த சுந்தரர் கேட்டிருக்கிறார். தமிழோடு இசை கேட்கும் ஆசையினால்தானே இறைவன் இவர்களுக்குக் காசு கொடுத்திருக்கிறான் என்பதையும் தெரிந்திருக்கிறார். இவரோ தாம் போகும் இடங்களில் எல்லாம் இறைவனிடம் கூசாமல் கை நீட்டுபவர். இங்கே சும்மா இருப்பாரா? இவருமே நீட்டியிருக்கிறார்.

திருமிழலை இருந்து நீர்தமிழோடு
இசைகேட்கும் இச்சையால்
காசு நித்தம் நல்கினீர்
அருந்தண் வீழி கொண்டீர்
அடியேற்கும் அருளிதிரே

என்றே பாடியிருக்கிறார். ஆசாமிதான் பொல்லாதவர் ஆயிற்றே. காசு பெறாமலா மேலே நடந்திருப்பார்?

இக்கோயிலில் மதுரை கொண்ட கோப்பர கேசரிவர்மன் ராஜராஜன் முதல் மூன்றாம் ராஜேந்திரன் வரையுள்ள சோழ மன்னர்கள், ஜடாவர்மன், சுந்தரபாண்டியன் இன்னும் விஜயநகர மன்னனான வீரப்பண்ண உடையார்கள் காலங்களில் எல்லாம் ஏற்படுத்திய நிபந்தங்களைப்பற்றிய கல்வெட்டுக்கள் நிறைய இருக்கின்றன. கல்வெட்டுக்களில் இறைவனைத் திருவீழிமிழலை உடையான் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்குள்ள திருமேனிகளில் பிரசித்தமானவை நின்றருளிய நாயனார் நெறிவார் குழல் நாச்சியார் என்றும் தெரிகிறது. இன்னும் திருவீழிமிழலை உடைய மகாதேவர் கோயிலைப் பொன்வேய்ந்தவன் விஜயராஜேந்திர தேவர் அணுக்கியார் பல்லவன் பாட்டாளி நங்கை என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. திருமுறைகள் ஓததி திருக்கைகொட்டி மண்டபம் ஒன்றைக் கட்டி அதற்கு நில நிபந்தம் ஏற்படுத்தியிருக்கிறான் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன். இன்னும் எத்தனை எத்தனையோ தகவல்கள். இதையெல்லாம் தெரிந்து வீழிமிழலை விகர்தர்தம் அருளும் பெற்றுவிட்டால் அங்கிருந்து மீண்டு வருவதே அரிதாக இருக்கும். 'அறிவது அறிகிறார், வெறிகொள் மிழலையீர்! பிரிவது அரியதே' என்பதுதானே சம்பந்தர் தேவாரம்.