வேங்கடம் முதல் குமரி வரை 2/புகலூர் மேவிய புண்ணியன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
23

புகலூர் மேவிய புண்ணியன்

றைவன் எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவர் பக்ஷபாதமற்றவர் என்பதை மட்டும் ஒத்துக் கொள்ள மாட்டேன்' என்றார் ஒரு அன்பர். காரணம் கேட்டேன் அவரிடம். அவர் சொன்னார்: 'இந்த உலகிலே அவர் ஒருவனைச் செல்வச் சீமானாகப் படைக்கிறார், மற்றவர்களை ஏழைகளாகப் படைக்கிறார்; ஒருவனை நல்ல அறிவுடையவனாகப் படைக்கிறார், பலரை அறிவிலிகளாகப் படைக்கிறார், ஏன் ஒருவனை நல்ல திடகாத்திரமுடையவனாக நோய் நொடி இல்லாதவனாகப் படைக்கிறார், பலரை நோயாளிகளாகவே படைத்து விடுகிறார்; இது பாரபக்ஷமில்லாமல் என்ன? ஏன் எல்லோரையுமே செல்வந்தர்களாக, அறிவுடையவர்களாக, நோயற்ற வாழ்வு வாழக் கூடியவர்களாகப் படைக்கக் கூடாது?' என்பது நண்பர் கேள்வி. (ஆம், உண்மைதான்! இப்படி கடவுள் செய்யத் தவறியதைத் தானே இன்றைய சர்க்கார் பொது ஜன சமுதாயத்தை உருவாக்குவதன் மூலம் செய்து தீர்த்தே விடலாம் என்று நினைக்கிறார்கள். போகட்டும்! கடவுள் செய்யத் தவறியதில் இவர்களாவது வெற்றி பெற்றால் நல்லதுதானே) நண்பரது கேள்வி என் சிந்தனையைத் தூண்டியது. உலகில் உள்ள மக்கள் எல்லோரும் எப்படியேனும் போகட்டும். அவர் புகழ்பாட, அவரது சமயத்தைப் பரப்புவதற்கென்றே பிறந்தார்களே, அந்தச் சமயகுரவர் நால்வரிடத்தும் கூட ஒரே நிலையில் இந்த இறைவன் அன்பு காட்டவில்லையே. மூன்று வயது நிரம்புவதற்கு முன்னமேயே ஒருவருக்கு அவர் 'அம்மையே அப்பா!' என்று அழைத்த உடனேயே ஓடிவந்து அன்னையை ஞானப்பாலையே ஊட்டச் சொல்லியிருக்கிறார். இன்னும் ஒருவரை, அவர் திருமணம் செய்யமுனைந்தபோது, தடுத்து ஆட்கொண்டு, அவரைத் தம்பிரான் தோழர் என்று அழைத்து, அவர் ஏவிய பணிகளையெல்லாம் செய்து, அவருக்கு ஒன்றுக்கு இரண்டு மனைவியரைச் சேர்த்து வைத்திருக்கிறார். மேலும், பாண்டியன் கொடுத்த பணத்தோடு குதிரை வாங்கவந்தவரை எதிர்கொண்டு, திருப்பெருந்துறையிலே குருந்த மரத்தடியிலே எழுந்தருளி ஞானோபதேசம் செய்து, அவருக்காக நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கி, பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்டு, வாழ்வித்திருக்கிறார்.

இப்படி சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் முதலிய மூவரிடத்தும், அவர்கள் விரும்புவதற்கு முன்னமேயே விழுந்தடித்துக்கொண்டு ஓடி அவர்கள் பால் தம் அருளைக் காட்டியவர், இந்தத் தருமசேனராம் நாவுக்கரசரிடம் மட்டும் பாரபக்ஷம் காட்டுவானேன்? ஏதோ உண்மை காண விரும்பும் ஆர்வத்தால் மதம் மாறினார் என்பதற்காக, அவரை யானையை விட்டு இடறச் செய்வானேன்? நீற்றறையில் போடுவானேன்? விஷம் கொடுப்பானேன்? கல்லில் கட்டிக் கடலில் தள்ளுவானேன்? இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்தால் நண்பரைப் போல நாமும் இறைவனுடைய பக்ஷபாதத்தை எண்ணித் துயரே உறுவோம். இத்தனை துயரைக் கொடுப்பதன் மூலம் இறைவன் நாவுக்கரசரைப் புடம் இட்ட தங்கமாக ஆக்குகிறான் என்று நினைத்தால்தானே நம் எண்ணம் மாறும். நாமும் வாழ்வில் துயருறுகின்றபோது, இறைவனது இணையடியை நினைக்கும் பேறு பெற்றால் நாவுக்காரசரைப் போல, 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை' என்ற உறுதிப்பாடு உள்ளத்தில் தோன்றாதா? அது போதாதா? எங்கெங்கெல்லாமோ சுற்றிவிட்டு, புகலூர் மேவிய புண்ணியன் திருவடி சேர்ந்த நாவுக்கரசரது வாழ்வை நினைத்தால் தளரும் உள்ளத்துக்கே ஒரு தெம்பு பிறக்காதா? அதிலும்,

எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ?
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலேன், மற்றோர் களைகண் இல்லேன்,
கழல் அடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்,
ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்,
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே!

என்று நாவுக்கரசர் பாடிக்கொண்டே இறைவனுடன் இரண்டறக் கலந்து விட்டார் என்ற செய்தியை அறிகின்ற போது நமக்கும் அந்த அருள் கிட்டும் என்ற நம்பிக்கை ஏற்படாதா? இத்தனை எண்ணமும் அப்பர் முத்திபெற்ற தலமாம் திருப்புகலூருக்கு நான் சென்றிருந்தபோது என் உள்ளத்தில் எழுந்தன. அந்தத் திருப்புகலூருக்கே அழைத்துச் செல்கிறேன் உங்களை எல்லாம் இன்று.

திருப்புகலூர் செல்லத் தஞ்சை ஜில்லாவிலே மாயூரம் திருவாரூர் ரயில் பாதையிலே நன்னிலம் ஸ்டேஷனில் இறங்கவேண்டும். அங்கிருந்து நாகூர் செல்லும் பாதையில் நான்கு மைல் வண்டியிலோ, காரிலோ செல்லவேண்டும். அவசரம் ஒன்றும் இல்லையென்றால் காத்து நின்று பஸ்கிடைக்கும்போது போகலாம். சரியாய் நாலு மைல் சென்றதும் வடபக்கத்தில் ஒரு 'ஆர்ச்' அமைத்து அதில் திருப்புகலூர் அக்னீசுவரர் கோயில்-அப்பர் முத்தி பெற்ற தலம் என்று கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருப்பார்கள். அந்த 'ஆர்ச்' வழியாக உள்ளே நுழைந்தால் திருக்கோயில் வாயிலுக்கு வந்து சேருவோம். கோயில் பெரிய கோயில், அதன் பரப்பு எழுபத்து மூவாயிரம் சதுரஅடி. கிழமேல் மதில் 325 அடி நீளம். தென்வடல் மதில் 225 அடி அகலம். இதைச் சுற்றி 130 அடி அகலமுள்ள அகழி. இந்த அகழியைச் சுற்றி விரிந்து பரந்து கிடக்கும் வெளி எல்லாமாகச் சேர்ந்து ஓர் அலாதிப் பிரேமையையே ஊட்டும் நம்மனத்தில். கோயிலின் நான்கு பக்கங்களிலும் அகழி இருந்தாலும் தென்கிழக்குப் பாகத்தில் கொஞ்சம் தூர்த்து, கோயிலுக்கு நல்லவழி ஒன்றை அமைத்திருக்கிறார்கள். இப்படிச் செய்யாவிட்டால் ஒன்று அகழியில் நீந்த வேண்டியிருக்கும் அல்லது தோணி ஒன்றின் உதவியை நாட

அப்பர்

வேண்டியிருக்கும். ஊருக்குத் தென்பக்கத்தில் உள்ள முடிகொண்டான் ஆற்றிலிருந்து பாய்காலும் வடிகாலும் இருப்பதால் அகழியில் எப்போதும் நீர் தெளிவாகவே இருக்கும்.

கோயிலை நெருங்கியதும் நாம் முதல் முதல் காண்பது ஞான விநாயகர் கோயில். இது தென் பக்கத்து அகழியின் தென் கரையில் இருக்கிறது. அப்பர் முத்தி பெற்ற தலத்தில் வழிபடுபவர்களுக்கு ஞானம் பிறக்கக் கேட்பானேன்? அதிலும் ஞான விநாயகரே நம்மை எதிர்கொண்டு ஞானம் அருள நிற்கும்போது, முதலில் இந்த விநாயகரை வணங்கிவிட்டுக் கிழக்கே திரும்பி வடக்கே நோக்கிச் சென்றால் புகலூர் நாதர் சந்நிதி வந்து சேருவோம். வாயிலை தொண்ணூறு அடி உயரமுள்ள வாயிலைக் கடந்து சென்றதும் நாம் காண்பது கருந்தாழ்குழலியின் சந்நிதியே. தெற்கு நோக்கிய தனிக்கோயிலில் அவள் நின்று சேவை சாதிக்கிறாள். 'பெருந்தாழ் சடை முடிமேல் பிறைசூடி கருந்தாழ் குழலியும் தாமும் கலந்து நிற்கும்' கோலத்தில் அம்மையை வழிபடலாம். அம்மையின் அருளை முதல் முதலிலேயே பெற்றுவிட்டோம் என்றால் அதன்பின் இறைவன் அருளைப் பெறுவது அவ்வளவு சிரமமான காரியம் இல்லைதானே. அம்மையின் 'சிபார்சை'ஐயன் தட்டிவிடமுடியுமா, என்ன? இத்தலத்தில் கண்டு பார்க்க வேண்டியவை கேட்டுத் தெரியவேண்டியவை நிறைய இருப்பதனால் விறுவிறு என்று நடந்து கர்ப்பக்கிருஹம் வரை சென்று அங்குள்ள அக்கினீஸ்வரரை கோணப்பிரானை வணங்கிவிடலாம் முதலில். இந்த மூர்த்தியை அக்கினீஸ்வரர் என்றும் கோணப்பிரான் என்றும் அழைப்பதற்குத் தக்க காரணங்கள் உண்டு. அக்கினிபகவான் தவம் செய்து வணங்கிய பெருமான் ஆனதனாலே அக்கினீஸ்வரர் என்று பெயர் பெறுகிறார். அக்கினி தவம் செய்யும்போது, தன்னைச் சுற்றி ஒரு தீர்த்தம் அமைத்துக் கொள்கிறார். அதுவே அகழியாக, அக்கினிதீர்த்தமாக இன்றும் இருக்கிறது. இன்னும் பாணாசுரன் தன் தாயாரின் பூஜைக்காக சுயம்பு லிங்கங்களை எல்லாம் பெயர்த்து எடுத்துச்சென்று கொண்டிருக்கிறான். அக்கினீஸ்வரர் அவனுக்கு அசைந்து கொடாத போது தன்னையே பலியிட முனைந்திருக்கிறான். அதனைத் தடுத்து அவன் தாயாரின் பூஜையை இருந்த இடத்தில் இருந்தே ஏற்றுக்கொண்டதாகக் காட்டத் தலைவளைந்திருக்கிறார் இறைவன். இன்றும் வடபுறமாகக் கோணி, வளைந்தே இருக்கிறது லிங்கத் திருவுருவம். அதனால் கோணப்பிரான் என்றே அழைக்கப்படுகிறார். இவரையே சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் பாடி இருக்கிறார்கள்.

அக்கினீஸ்வரரே இக்கோயிலின் முதல்வர் என்றாலும் இவருடன் தோளுக்குத் தோள் சரி நிற்கிறவர்,

அக்கினி

வடபால் உள்ள வர்த்தமானீச்சுரர். இவர் கோணாமல் நேரே நிமிர்ந்து நிற்கிறார். இவருக்கும் இவர் துணைவி மனோன்மணிக்கும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட இடம் சிறிதே என்றாலும் இந்த சந்நிதியைத் தேடியே, இத்தலத்தில் அவதரித்த முருக நாயனார் வந்து நிற்கிறார். இந்த வர்த்த மானீச் சுவரரையே,

'மூசு வண்டறை கொன்றை
           முருகன் முப்போதும் செய்முடிமேல்
வாசமாமலர் உடையார்
           வர்த்த மானீச்சரத்தாரே

என்று பாராட்டி, ஞானசம்பந்தர் தனியாக ஒரு பதிகமே பாடியிருக்கிறார். கோணப்பிரானையும் வர்த்தமானீச்சுரரையும் வணங்கியபின் வெளியே வந்து உட்பிராகாரத்தைச் சுற்றினால், சந்திரசேகரர், திரிபுராந்தகர் அக்கினி, பிரம்மா முதலியவர்களையெல்லாம் செப்புச் சிலை வடிவில் காணலாம். பிரம்மா அளவில் சிறியவர்தான் என்றாலும் அழகில் சிறந்தவர். இவருக்கு வேண்டாத திருவாசி ஒன்றை இன்று செய்து வைத்திருக்கிறார்கள். அக்கினி பகவான் இல்லாமல் நாம் வாழமுடியாது. என்றாலும் அவர் திரு உருவை இதுவரை அறியோம். இரண்டு முகங்கள், ஏழுசுடர்கள், மூன்று பாதங்கள், ஏழு கைகள் என்றெல்லாம் அமைத்துக்கொண்டு எழுந்தே நிற்கிறார் அவர்.

இக்கோயில் கர்ப்பக் கிருஹங்களைச் சுற்றிய கோஷ்டங்களில் அகஸ்தியர், நடராஜர், கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மாத்திரம் அல்ல, அஷ்டபுஜ துர்க்கை, சதுர்புஜதுர்க்கை, கௌரிலீலா விநோதர் எல்லோருமே இருக்கிறார்கள். ததீசி, பிருகு, புலஸ்தியர், ஜாபாலி முதலியோர் பூசித்த லிங்கங்கள் பல இருக்கின்றன இங்கே. இவர்கள் வரிசையிலேயே வாதாபி கணபதி வேறே வந்து இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். 'ஒரிஜினல்' வாதாபி செங்காட்டாங்குடியில் இருப்பதால், இவர் 'டூப்ளிகேட்' வாதாபியாகவே இருத்தல் வேண்டும். இன்னும் வடக்குத் திருமாளிகைப் பத்தியில் சனி பகவான், நளன், அன்னபூரணி, சரஸ்வதி எல்லோருமே இருக்கிறார்கள். நவக்கிரகங்கள் இங்கு மற்றக் கோயில்களில் இருப்பது போல் இருப்பது இல்லை. 'ட' என்ற அமைப்பிலே இருக்கிறார்கள். வியாழ குரு தான் 'டா'னா உத்தியோகம் பார்ப்பவர் என்று அறிவோம். எல்லாருக்குமே அந்த உத்தியோகத்தில் மோகம் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் என்னவோ? இதே பத்தியில் திரிமுகாசுரன் வேறே நின்று கொண்டிருக்கிறான். நான்முகனுக்குச் சவால் விடுபவன் போல, பன்றி முகத்தால் நீரும், பறவை முகத்தால் மலரும் கொண்டு வந்து மனித முகத்தால் இறைவனை வழிபட்டிருக்கிறான் இந்த அசுரன். இவனே இந்த வழிபாடு காரணமாக, புன்னை மரமாகி, அங்கேயே ஸ்தல விருட்சமாகவும் நிற்கிறான்.

இப்படியே வளர்த்திக் கொண்டு போவானேன்? இது நாவுக்கரசர் முத்தி பெற்ற தலம் என்று முதலிலேயே பிரமாதப்படுத்தினீர்களே, அவருக்கு என்று தனிச்சந்நிதி கிடையாதா என்று ஆதங்கப்படுகிறீர்கள் நீங்கள். அப்பூதி அடிகள் பெயரிட்டது போல இங்கு நாவுக்கரசர் திருமடம், நாவுக்காரசர் நந்தவனம் என்றெல்லாம் இருக்கும்போது நாவுக்கரசர சந்நிதி இல்லாமல் இருக்குமா? மேலைத் திருமாளிகைப் பத்தியில் ஒரு சின்னஞ்சிறு கோயிலில் கல்லிலும் செம்பிலும் நாவுக்கரசர் நிற்கிறார், தனது ‘பேடன்ட்' ஆயுதமான உழவாரப் படையுடன். பழைய செப்புவடிவம் மிகச் சிறியதாக இருக்கிறது என்று கண்டு பெரிய உரு ஒன்றையே சமீபத்தில் செய்து வைத்திருக்கிறார்கள். அளவில் சிறியவர் என்றாலும் சாந்தித்யம் அந்தச் சின்ன நாவுக்கரசருக்கே.

இக்கோயிலின் பெரியவிழா சித்திரைச் சதயத்தை ஒட்டி நடக்கும் அப்பர் திருநாள் தான். பத்து நாள் உற்சவம். அப்பர் சரித்திரம் முழுவதையுமே தெரிந்து கொள்ளலாம் இவ்விழாவுக்குப் போனால். அதிலும் நான்காவது தெப்பத்திருநாளன்று ஒரே கோலாகலம். அன்று மகேந்திரவர்மன் அப்பரைக் கல்லில் கட்டிக் கடலில் எறிந்தான் என்றும் அந்தக் கல்லே அவருக்குத் தெப்பமாகிக் கரையேறினார் என்றும் அறிவோம். ஆனால் இன்றோ அதே அப்பருக்கு மிகப் பெரிய தெப்பம் ஒன்று அமைத்து மின்சார விளக்குகளால் அலங்கரித்து, அக்கினி தீர்த்தத்தில் மிதக்க விடுகிறார்கள். எனக்கு மட்டும் ஒன்று சரியல்ல என்று படுகிறது. 'கந்தை மிகையாம் கருத்துடைய அப்பருக்கு நவரத்தினப் பதக்கங்கள் அணிவித்து அழகு செய்து தெப்பத்தில் ஏற்றுகிறார்கள். அணிசெய்ய வேண்டுமானால், எல்லாம் உருத்திராக்க மாலைகளாகவே இருக்கலாம். பதக்கங்கள் அணிவதை நிறுத்திவிட வேண்டியதுதான். வாய் திறந்து சொல்லக் கூடுமானால் அப்பரே இதைச் சொல்லுவார். அவர் மானசிகமாகக் கட்டளையிட்டதைத் தான் நான் சொல்லுகிறேன். பொன்னையும் மணியையும் கண்டு மயங்காதவர், தெய்வ அரம்பையைக்கூட கண்டு சித்தம் பிறழாதவர், நாம் செய்யும் இந்த அலங்காரங்களிலா மயங்கிவிடப்போகிறார்? மயங்கமாட்டார். சித்திரைச் சதயத்தில்தான் அவர் முத்தி பெற்றவிழா. ஏதோ 'சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன். திருப்புகலூர் மேவிய தேவதேவே' என்று அவர் பாடிவிட்டார் என்பதற்காக அப்பரைச் சிங்கம் விழுங்குவது போல் ஓர் அர்த்தசித்திர வடிவம் அமைத்துக் கீழைச் சுவரில் வைத்திருந்தார்கள். அதை எடுத்துவிட்டு லிங்கத் திருவுருவில் கலந்து நிற்பதாக இப்போது அமைத்திருக்கிறார்கள்.

இத்தலத்தோடு தொடர்பு கொண்டிருந்த தொண்டர்கள் நற்குன்றவாணர், சிந்தாமணி என்று இரண்டு பேரைப்பற்றித் தெரிந்து கொள்ளாமல் திரும்ப முடியாது. பழைய ஜயங் கொண்ட சோழ மண்டலத்தில், நற் குன்றத்தில் பெருநிலக் கிழார் ஒருவர் இருந்தார். நல்ல தமிழ்ப் புலமையும், சிவபக்தியும் நிறைந்தவர் அவர். பஞ்சத்தின் கொடுமையால் அரசனுக்குக் கட்டவேண்டிய வரியைக் கட்ட முடிய வில்லை. அதற்காக ஊரைவிட்டே வெளியேறித் திருப்புகலூர் வந்து சேருகிறார். மன்னனது சேவகர்களுமே பின் தொடர்கின்றனர். திருப்புகலூர் வந்தவர் அங்குள்ள ஞான கணபதியைக் காண்கின்றார்.

உரைசெய் மறைக்கும் தலைதெரியா
ஒருகொம்பை என்றே
பரசும் அவர்க்கும் பெருநிழல் ஆக்கும்,
பழனம் எல்லாம்
திரை செய்கடல் துறைச்
சங்கம் உலாவும், திருப்புகலூர்

அரசின் இடத்து மகிழ் வஞ்சி
ஈன்ற ஓர் அத்தி நின்றே

என்று பாடுகின்றார். இப்பாட்டைக் கேட்ட கணிகை சிந்தாமணி, பாட்டு நன்றாயிருக்கிறதே, இதனை ஒரு அந்தாதிக்குக் காப்புச் செய்யுள் ஆக்கலாமே' என்கிறாள். நெற்குன்றவாணரும், 'ஆக்கலாம். அந்தாதிக்குக் காப்பு ஆக்கினால் அரசு இறைக்குப் பொருளாகுமா?' என்கிறார். விஷயம் அறிந்த சிந்தாமணி, அரசனுக்குக் கொடுக்க வேண்டிய வரிப்பணம் அத்தனையையும் தானே கொடுத்து, நெற்குன்றவாணரை அந்தாதி பாடச் சொல்கிறாள். திருப்புகலூர் அந்தாதி எழுந்த கதை இதுதான். இந்தச் சிந்தாமணி பிரதிஷ்டை செய்த லிங்கத் திருவுருவே, சிந்தாமணீசர் என்ற பெயரோடு கோயிலுள் இருக்கிறார் இன்றும், கணிகையால் வாணர் வாழ்கிறார். வாணரால் இறைவனே வாழ்கிறார் நம்முடைய உள்ளத்தில்.

இக் கோயிலில் அறுபத்தேழு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. ராஜராஜன், ராஜேந்திரன் முதல் குலோத்துங்கன் முதலிய சோழ மன்னர்கள் ஏற்படுத்திய நிபந்தங்கள் அனந்தம். அதனால் இக்கோயில் பெரிய கோயிலாக மட்டும் அல்ல. நல்ல பணக்காரக் கோயிலாகவும் இருக்கிறது. சுமார் 1500 ஏக்கர் நிலம் இக்கோயிலின் சொத்து. ஒரு ஆண்டின் மொத்த வருமானம் ஒன்றே கால் லட்சம், வருமானம் எல்லாம் நல்லமுறையில் செலவு செய்யப் படுகிறது. தஞ்சை மாவட்டத்தின் தலை சிறந்த தேசபக்தர் திரு.M D.தியாகராஜ பிள்ளையவர்கள் இக்கோயில் தருமகர்த்தராக இருந்து மிக்க சிறப்பாகக் கோயிலைப் பரிபாலிக்கிறார்கள். கோணப் பிரான் மட்டுமே இங்கே கோணல், மற்றவைகளில் எல்லாம் கோணலே காண முடியாது.