உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 2/கண்ணபுரத்து அம்மான்

விக்கிமூலம் இலிருந்து
22

கண்ணபுரத்து அம்மான்

காளமேகப் புலவர் என்றால் யார் என்று தமிழர்களுக்கு எல்லாம் தெரியும். ஆனால் அவரது பூர்வாசிரம வரலாறு எல்லோருக்கும் தெரிந்திராது. வைஷ்ணவ மரபிலே பிறந்த இவர் ஸ்ரீரங்கம் பெரிய கோயிலிலே பரிசாரகராக இருந்திருக்கிறார். ஆனால் இவரது ஆசையோ திருவானைக் காவில் உள்ள கணிகை ஒருத்தியிடம். அவளோ நல்ல சிவ பக்தை. வைணவரான இவரை ஏற்க மறுக்கிறாள். இவருக்கோ காதல் பெரிதே ஒழிய, கடவுள் பெரிது இல்லை. ஆதலால் வைஷ்ணவத்தை உதறித்தள்ளிவிட்டுச் சைவனாகவே மாறி விடுகிறார். சைவனாக மாறி, ஆனைக்கா கோயிலில் காதலிக்காகக் காத்துக் கிடந்த காலையில், அன்னை அகிலாண்டேசுவரியின் அருள் கிடைக்கிறது. அந்த அருள் காரணமாகக் கவிமழை பொழியத் துவங்குகிறார். நாற்கவி ராஜ நம்பியாகவே தமிழகத்தில் உலவுகிறார். திருமலைராயன் பட்டினத்தில், யமகண்டம் பாடி அதிமதுர கவிராயரை வென்று வெற்றிக் கொடியே நாட்டுகிறார். மதம் மாறிய புதிய சைவர் ஆனதால் விஷ்ணுவைப் பாடுவதில்லை என்ற வைராக்கியம் உடையவராக வாழ்கிறார்.

ஒரு நாள் இரவு இவர் கண்ணபுரம் வருகிரார். கண்ணபுரம் என்ற உடனேயே தெரியும் அங்கு கோயில் கொண்டிருப்பவர் பெருமாள் என்று. இவர் அந்த ஊர் வந்து சேர்ந்தது அகாலத்தில், அப்போது நல்லமழைவேறே. மழைக்கு ஒதுங்க இடந்தேடி அலைந்து கண்ணபுரத்துக் கண்ணன் கோயிலுக்கே வருகிறார். பெருமாளுக்கோ இவர் பேரில் ஒரே கோபம், தன் பக்தனாக இருந்தவன் ஒரு கணிகையின் காதலுக்காகச் சிவபக்தனாக மாறிவிட்டானே என்று. ஆதலால், இவரைக் கோயிலுக்குள் அனுமதிக்க விரும்ப வில்லை . 'கண்ணபுரம் கோயில் கதவடைத்துத் தாழ் போட்டார் மண்ணையுண்டார், வெண்ணெய் உண்டமாயனார். காளமேகமோ சொட்டச் சொட்ட மழையில் நனைந்து கொண்டே கோயில் வாயிலுக்கு வந்து விடுகிறார். கதவடைத்துத் தாழ் போட்டிருப்பதைப் பார்க்கிறார். பெருமாளின் கோபத்தை அறிகிறார். பெருமாளைத் திருப்திப் படுத்துவார் போல் பாட ஆரம்பிக்கிறார். 'கண்ணபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்' என்று துவங்கினாரோ இல்லையோ, பெருமாளுக்கு உச்சி குளிர்ந்து விட்டது. காளமேகத்துக்கு இரங்கிக் கதவைத் திறந்து விடுகிறார். உள்ளே நுழைந்த காளமேகமோ, தொடர்ந்து பாடுகிறார் பாட்டை, 'உன்னிலுமோ நான் அதிகம்' என்று, ஐயோ! நாம் ஏமாந்து விட்டோமே என்று பெருமாள் எண்ணுவதற்குள், தாம் சொன்னதற்கெல்லாம் காரணத் தையுமே விளக்குகிறார் பாட்டில். முழுப்பாட்டும் இதுதான்.

கண்ணபுர மாலே!
கடவுளிலும் நீ அதிகம்;
உன்னிலுமோ நான் அதிகம்;
ஒன்று கேள்! - முன்னமே
'உன்பிறப்போ பத்து,
உயர் சிவனுக்கு ஒன்றும் இல்லை,
என்பிறப்போ எண்ணத்
தொலையாதே.

உண்மைதானே. பிறவி ஒன்றும் இல்லாததற்கு அவதாரம் பத்து பெரிதுதான். பத்தைவிட எண்ணத் தொலையாத பிறவி எடுக்கும் மனிதன் இன்னும் பெரியவன்தானே. கணக்கும் சரியாக இருக்கிறதே. இப்படிக் கணக்குப் போட்டுக் கண்ணபுரமாலை அறிமுகப்படுத்தி வைக்கிறார் காளமேகம் நமக்கு, அந்தக் கண்ணபுரத்தானைக் காணவே இன்று போகிறோம் நாம் கண்ணபுரத்துக்கு.

இக்கண்ணபுரம் தஞ்சை ஜில்லாவில் நன்னிலம் ரயில்வே ஸ்டேஷனுக்குக் கிழக்கே ஐந்து மைல் தொலைவில் இருக்கிற சிறிய ஊர். முந்திய நாட்களில் நேரே திருமருகல், திருச்செங்காட்டாங்குடி எல்லாம் சென்று சுற்றிவளைத்துக் கொண்டுதான் இத்தலம் வந்து சேரவேணும். இப்போதோ, திருப்புகலூர்வரை நல்லரோட்டில் சென்று முடிகொண்டான் ஆற்றின் மேல் கட்டப்பட்டிருக்கும் பாலத்தைக் கடந்து, மண் ரோட்டில் ஒரு மைல் சென்றால் இத்தலத்துக்கு வந்து சேரலாம். இந்தத் தலத்தின் தேர்வீதி எல்லாம் மிக மிக விசாலமானது. வண்டியில் சென்றால் நம்மை, கோயிலுக்கும் நித்ய புஷ்கரணிக்கும் இடையில் உள்ள பாதையில் இறக்கிவிட்டு விடுவர். அதன்பின் ராஜகோபுரத்தைக் கடந்து, கோயிலினுள் செல்லலாம். கண்ணபுரத்தானுக்கு நம்மிடம் யாதொரு பகையும் இல்லையே. ஆதலால் நாம் செல்லும்போது காள மேகத்துக்கு அடைத்தது போல் கதவடைத்து நிறுத்தி விடமாட்டான். கோயிலில் நுழைவதற்கு முன்பே இத்தலத்தின் மகிமைகளை அர்ச்சகர்களிடம் கொஞ்சம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. இத்தலம் கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம் என்றும், அஷ்டாக்ஷர மகாமந்திர சித்தி க்ஷேத்திரம் என்றும் பெயர் பெற்றது. திருவரங்கச் செல்வனார்க்கு இது கீழை வீடு. முத்திதரும் தலங்கள் எட்டு என்பர். திருவரங்கம், திருவேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், வானமா மலை, சாளக்கிராமம், புஷ்கரம், பதரி ஆச்சிரம், நைமி சாரண்யம் அவை. அஷ்டாக்ஷரமத்திரத்தில் ஒவ்வொரு அக்ஷர சொரூபியாக இந்த எட்டு தலங்களிலும் எழுந்தருளியிருக்கிறான் பரந்தாமன். ஆனால் எல்லாப் புண்ணியங்களும் ஒருங்கே அமைந்து அஷ்டாக்ஷர பூரண சொரூபனாய், எட்டெழுத்தின் முடிவினனாய் அவன் நிற்கும் இடம் இதுவே. அதனால் தான் முத்திதரும் தலங்களில் இது முதன்மையானது. நிரம்பச் சொல்வானேன், இதுவே பூலோகவைகுண்டம். ஆதலால் மற்ற தலங்களில் இருப்பதைப் போல் வைகுண்ட வாசல் இத்தலத்தில் இல்லை. இப்படிக் கண்ணன் எம்பெருமான் மிகமிக மகிழ்ந்து நித்தியவாசம் செய்யத் தேர்ந்தெடுத்த தலம் ஆனதால் இதற்கு கண்ணபுரம் என்றுபெயர். இங்கு கோயில் கொண்டிருக்கும் கண்ணனின் திருநாமம் சௌரிராஜன் என்றெல்லாம் விளக்கம் பெறுவோம்.

இவ்வளவும் தெரிந்து கொண்ட பின்னரே கோயிலுள் நுழையலாம். கோயில் பெரிய கோயில், கிழமேல் 316 அடி நீளமும், தென்வடல் 210 அடி அகலமும், உயர்ந்த மதில்களும் உடையது. இந்த வாயிலைக் கடந்து உள்ளே வந்தால் இடைநிலைக்கோபுரம் ஒன்றிருக்கும். அதுவும் 60 அடி உயரம். இக்கோயிலுக்கு முன்னர் ஏழு மதில்கள் இருந்தன என்றும், ஏழாவது மதில் கிழக்கே பதின்மூன்று மைல் தூரததில் உள்ள கடல்வரை பரவி இருந்தது என்றும், அதனாலேயே 'வேலை மோதும் மதில்சூழ் திருக்கண்ணபுரம்' என்று நம்மாழ்வார் பாடினார் என்றும் சொல்வர். இந்த மதில்களின் தடங்களைக்கூட இன்று காண இயலாது. இந்த மதில்கள் எப்படி அழிந்தன என்பதற்கு ஓர் கர்ண பரம்பரை வரலாறு உண்டு. சிவ பக்தனான சோழன் ஒருவன் இருந்திருக்கிறான். அவனே இம்மதில்களை அழிக்க முற்பட்டிருக்கிறான். மதில் அழிவது கண்டு பொறாத பக்தர் கண்ணபுரத்து அரையர் சௌரிராஜனிடம் முறையிட்டிருக்கிறான். சௌரிராஜன் நின்றநிலையிலேயே மௌனம் சாதிப்பது கண்டு, தன் கைத்தாளத்தை விட்டெறிந்து அவனை உசுப்பியிருக்கிறார். நெற்றியில் வடுப்பட்ட பின்னரும் சௌரிராஜன் சும்மா இருக்கமுடியுமா? தன் சக்கரத்தைப் பிரயோகித்துச் சோழமன்னனது வீரர்களைத் தூரத்தி அடித்திருக்கிறான். இன்னும் இதை ஒட்டியே ஒரு வரலாறு, சோழமன்னன் இப்படி மதிலைத் தகர்க்கும் போது அவனது மகனே, 'தந்தையே! இவ்வுலகில் திருவாய் மொழியும் ராமாயணமும் இருக்கும் வரையில் உம்மால் மாத்திரம் அல்ல உமது பேரனுக்குப் பேரனால்கூடவைஷ்ணவத்தை அழித்து விட முடியாது' என்று கூறித்தடுத்திருக்கிறான் என்றும் கூறுவர். கற்பனையில் எழுந்த மதில்கள் கற்பனையிலே அழிந்திருக்கிறது என்றாலும் அவைகளைச் சுற்றி எழுந்த கற்பனைக் கதைகள் சுவை உடையதாகவே இருக்கின்றன.

இனி நாம் மகா மண்டபத்தைக் கடந்து கர்ப்பக்கிருஹம் வந்து சேர்ந்து கண்ணபுரத்து அம்மானைக் கண்டு தொழவேண்டும். கருவறையில் பரமகம்பீரத்துடன் நிற்பவனே நீலமேகன். தங்கநீள் முடிகவித்த அரிய பொன் மேனியன், ஆஜானுபாகு என்பார்களே அதன் அர்த்தம் இந்தப் பெருமானைத் தரிசிக்கிறபோது தெரியும், சங்கு ஒரு கையும், பிரயோகச் சக்கரம் ஒரு கையுமாக அபயம் அளிக்கும் வரதன் அவன். அவன் அணிந்திருக்கும் அணி பணிகள் எல்லாம் ஒரே தங்கமயம். சஹஸ்ரநாம மாலை ஒன்றே பல்லாயிரம் ரூபாய் விலை பெறும். இரண்டு நாச்சியார்களையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே சேவை சாதித்து அருளுவான். இன்னும் இவனது இருமருங்கிலும் தண்டக மகரிஷியும் கருடாழ்வாரும் கூப்பிய கையுடன் நிற்கின்றனர். எல்லாம் நல்ல சிலாவடிவங்கள், இந்த மூலவராம் நீலமேகனுக்கு முன்னாலேயே 'காமனும் கண்டு காமுறும் கண்ணபுரத்து அமுதனான' உற்சவமூர்த்தி நிற்கிறான். இவனுக்கு சௌரிராஜன் என்று திருநாமம். சூரர் என்னும் வசுதேவரது மகனானதால் இப்பெயர் என்றாலும் மக்கள் சௌரியைச் சவுரியாக்கி, அவரது தலையில் சவுரியையும் அணிவித்து அதற்கு ஒரு கதையையும் கட்டி இருக்கிறார்கள். கோவில் அர்ச்சகர் ஒருவர் தாசிலோலர். அவர் பெருமானுக்கு அணிவிக்கும் மாலைகளையெல்லாம் அன்றைக்கன்று இரவிலேயே அவளிடம் சேர்த்து விடுவார். அப்படி இருக்கும் போது ஒருநாள் அகாலத்தில் அந்த நாட்டு அரசன் சேவைக்கு எழுந்தருள, அர்ச்சகர் தாசியிடம் கொடுத்திருந்த மாலைகளைத் திரும்பப் பெற்றுப் பெருமானுக்கு அணிவித்திருக்கிறார். அந்த மாலையைப் பின்னர் அரசனிடம் கொடுக்க அதில் ஒரு மயிர் இருப்பது கண்டு அரசன் காரணம் வினவ, பெருமானுக்கே சவுரி(குடுமி) உண்டு என்று சாதிக்கிறார் அர்ச்சகர். அர்ச்சகரைக் காப்பாற்ற சௌரிராஜன் தன் தலையில் சவுரியைத் தாங்கி இருக்கிறான். அன்று முதல் இந்தக் கதையையே கொஞ்சம் மாற்றிக் குடுமியான் மலையிலும் சொல்கிறார்கள். பக்திக்கு விளக்கம் கொடுக்க மக்கள் செய்யும் கற்பனை என்று மட்டுந்தான் இக்கதைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். மூலவராம் நீலமேகன் துணைவியர் இருவர் என்றால், இந்தச் சௌரிராஜப் பெருமானுக்கு மனைவியர் நால்வர். பூதேவி, சீதேவி, ஆண்டாள் என்னும் மூன்று பேர் தவிர, பத்மினி என்ற நான்காவது பெண்ணையும் மணந்து கொண்டு பக்கத்துக்கு இருவராக நிறுத்தி நமக்குச் சேவை சாதிக்கிறான். ஆண்டாள் கதை நமக்குத் தெரியும். பத்மினியை மணந்த கதையையுமே கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே.

உபரிசரவசு என்று ஒரு மன்னன் வலையர் குலத்திலே. வேட்டைக்கு வந்த இடத்தில் தினைக் கதிர்களைக் கொய்கின்றான் கிருஷ்ணாரண்யத்தில். தினைக் தொல்லையைக் காத்து நின்ற இளைஞன் தடுக்கிறான். இருவருக்கும் போர் நடக்கிறது. பின்னர் தினைப்புனங்காத்த கண்ணன் தன் திரு உருக்காட்டி மன்னனை ஆட்கொள்கிறான். மன்னனும் கண்ணனுக்குக் கோயில் கட்டி, கோயிலைச் சுற்றி வள நகரம் அமைக்கிறான். இம்மன்னன் மகளாகவே பிராட்டி பிறக்கிறாள். பத்மினி என்ற பெயரோடு வளர்கிறாள். அவளது விருப்பப்படி, கண்ணபுரத்துச் சௌரி ராஜனே அவளை மணந்து கொள்கிறார். இந்தப் பத்மினியையே வலைய நாச்சியார் என்கின்றனர். மாசி மகோத்சவத்தில், சௌரிராஜன் தன் மாமனார் அகமாம், திருமலை ராயன் பட்டினத்துக்கே சம்பிரமாகச் சென்று தீர்த்தம் ஆடிவருகிறான். இப்போது தெரிகிறது கண்ணபுரத்தானுக்கு ஏன் காதலிகள் நால்வர் என்பதற்குக் காரணம். ஆம்! கோகுலத்துக் கண்ணன் ராமனைப்போல் ஏகபத்தினி விரதன் அல்லவே. அவன் அறுபதினாயிரம் கோபியர்களை அல்லவா காதலிகளாகப் பெற்றிருக்கிறான். அறுபதினாயிரம் என்ன, உலகில் உள்ள ஜீவராசிகள் எல்லோருமே 'கண்ணன் எம் காதலன்' என்றுதானே அவனிடத்தில் ஈடுபட்டு நின்றிருக்கின்றனர். எத்தனை காதலியர்கள் இருந்தாலும் பட்டமகிஷி என்று ஒருத்தி இருக்கத்தானே செய்வாள். அவள்தான் இத்தலத்தில் கண்ணபுர நாயகி என்ற பெயரில் தனிக்கோயிலில் இருக்கிறாள். அவளையும் கண்டு தரிசித்துவிட்டுச் சேனை முதலியார், ராமன், விபீஷணாழ்வான் முதலியவர் சந்நிதிகளுக்கும் சென்று வணங்கித் திரும்பலாம். கோயில் திருப்பணி சிறப்பாக நடைபெறுகிறது.

பெருமாள் கோயிலுக்குச் சென்றால் நல்ல பிரசாதம் கிடைக்குமே, இங்கு ஒன்றும் கிடையாதோ? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. உண்டு, ஆனால் இந்தக் கோயிலில் சர்க்கரைப் பொங்கலையோ அக்காரடி சிலையோ எதிர்பாராதீர்கள். ஏதோ சில சமயங்களில் அவை கிடைத்தாலும் சிறப்புடையதாயிராது. இத்தலத்துக்கென்றே விஷேசமான பொங்கல் முனையதரன் பொங்கல் தான். இது 5 நாழி அரிசி, 3 நாழி பருப்பு, 2 நாழி நெய் சேர்த்துப் பக்குவம் செய்யப்படுகிறது. முனையதரன் என்ற பரம பக்தர் தினமும் தம் வீட்டில் பொங்கல் பண்ணிக் கண்ணபுரத்தானுக்கு நிவேதித்து வணங்கியிருக்கிறார். மறுநாள் காலை பார்த்தால் முனையதரன் இல்லத்திலிருந்து நீலமேகன் சந்நிதிவரை இப்பொங்கல் சிதறிக்கிடந் திருக்கிறது. வெண்ணெய் திருடி உண்டது போல முனையதரன் வீடுவரை நடந்து பொங்கல் திருடி அவசரம் அவசரமாக எடுத்து வந்து உண்டிருக்கிறான் இவன்.

இந்தக் கண்ணபுரத்தானைப் பெரியாழ்வார், குலசேகரர், மங்கை மன்னன், நம்மாழ்வார் நால்வரும் மங்களா சாஸனம் செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து பாடிய பாடல்கள் 128 என்றால் அதில் 104 பாடல்கள் திருமங்கை மன்னன் பாடியவை. கலியனான திருமங்கை மன்னனுக்கு இக்கண்ணபுரத்து அம்மானிடம் உள்ள ஈடுபாடு எழுத்தில் அடங்காது. நாயகநாயகி பாவத்தில் திருமங்கை மன்னன் பாடியபாடல்கள் பிரசித்தமானவை.

'பேராயிரம் உடைய பேராளன்
பேராளன்' என்கின்றாளால்;
'ஏரார் கனமகா குண்டலத்தன்.
எண்தோளான்' என்கின்றாளால்;
‘தீரார் மழைமுகிலே நீள்வரையே
ஒக்குமால்' என்கின்றாளால்;
காரார் வயல் அமரும் கண்ண புரத்து
அம்மானைக் கண்டாள் கொல்லோ.

என்ற பாடல் எவ்வளவு சுவையுடையது.

மங்கை மன்னனுக்குச் சளைக்காமல் நம்மாழ்வாரும்

அன்பனாகும், தன்தாள்
அடைந்தார்க்கு எல்லாம்,
செம்பொன் ஆகத்து
அவுணன் உடல் கீண்டவன்
நன்பொன் ஏய்ந்த மதில்சூழ்
திருக்கண்ணபுரத்து
அன்பன், நானும் தன்
மெய்யர்க்கு மெய்யனே

என்றே பாடுகிறார்.