வேங்கடம் முதல் குமரி வரை 2/செங்காட்டாங்குடி உடையான்

விக்கிமூலம் இலிருந்து
21

செங்காட்டாங்குடி உடையான்

திருத்தொண்டர் பெரிய புராணம் எழுதியவர் சேக்கிழார். அறுபத்து மூன்று நாயன்மாரது சரித்திரத்தை வரலாற்று முறையில் எழுதியிருக்கிறார். தெய்வம் மணக்கும் செய்யுள்களில் சிறந்த பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டக் கதைகளைச் சொல்கிறார் அவர். அந்தப் புராணத்தில் வரும் நாயன்மார்கள் எல்லோருமே அவரவர் கடைப்பிடித்த காரியத்தில் எத்தனை இடையூறு வந்தாலும் அத்தனைக்கும் ஈடு கொடுத்து, வெற்றி கண்டவர்கள். செயற்கரிய செயல்கள் பல செய்தவர்கள். இவர்களில் திருத்தொண்டின் உறைப்பிலே தலை நின்றவர் சிறுத்தொண்டர். அவரது வரலாறு ரஸமானது . ஏன்! கொஞ்சம் பயங்கரமானதும் கூட.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் படைவீரர்களில் ஒருவராகச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து சேனாதிபதியாக உத்தி யோகம் ஏற்கிறார் பரஞ்சோதி. மகேந்திரவர்மனது மகனான நரசிம்மன் என்னும் மாமல்லனுக்கு உற்ற துணைவனாகப் பணியாற்றுகிறார். காஞ்சி வட்டாரத்தில் சளுக்க மன்னன் புலிகேசி செய்த அட்டூழியங்களுக்குப் பழிவாங்க, மாமல்லன் சளுக்கர்கள் மீது படையெடுத்துச் சென்றபோது, படையை முன்னின்று நடத்திய வீரர் பரஞ்சோதி, சளுக்கர் தலைநகரமான வாதாபியைத் தீக்கு இரையாக்கி வெற்றி கண்டார்.

மன்னவர்க்குத்தண்டுபோய்,
வடபுலத்து வாதாவித்
தொன்னகரம் துகளாகத்
துணைநெடுங்கை வரை உகைத்து,
பன்மணியும் நிதிக்குவையும்
பகட்டினமும் பரித்தொகையும்
இன்னன எண்ணில கவர்ந்தே
இகலரசன் முன் கொணர்ந்தார்

அவர், என்று சேக்கிழார் பாராட்டுகிறார். இப்படிப் போருக்குச் சென்று வீரர் எல்லாம் பலப் பல பொருள்கள் கொண்டு வர, சேனாதிபதி பரஞ்சோதியார் மட்டும் வாதாபிக் கோட்டை வாயிலில் இருந்த கணபதியைக் கைப்பற்றிக் கொணர்ந்து தம் சொந்த ஊராகிய திருச்செங்காட்டாங்குடியில் ஒரு கோயில் கட்டிப் பிரதிஷ்டை செய்து விடுகிறார். வாதாபிப் போரில் இரு தரத்து மக்களும் மற்ற உயிரினங்களும் பட்ட துயரை யெல்லாம் அறிந்து அன்றே சேனாதிபதிப் பதவியை உதறி விட்டு, துறவு பூண்டு தம் ஊரிலேயே தங்கி விடுகிறார், மனைவி வெண்காட்டு நங்கையுடனும், மைந்தன் சீராளனுடனும். இப்படித்தான் ‘தம் பெருமான் திருத்தொண்டர் சிறுத்தொண்டர்' என்ற பெயரோடு வாழ்ந்து வருகிறார் செங்காட்டாங்குடியில்.

இவரது தொண்டின் சிறப்பை உலகுக்கு உணர்த்த விரும்புகிறான் இறைவன். பைரவ வேடத்துடன் வந்து சேருகிறான். சிறுத்தொண்டரிடம் தன்னை உத்தராபதியான் என்று அறிமுகம் செய்து கொள்கிறான். அமுது செய்தருள வேண்டும் என்று கேட்ட சிறுத்தொண்டரிடம், 'ஒரு தாய்க்கு ஒரு மகனாக, அங்கம் பழுதில்லாத மைந்தன் ஒருவனை, அறுத்துக் கறி சமைத்துத் தந்தால் உண்போம்' என்கிறான். பள்ளி சென்ற பாலனாம் சீராளனையே அழைத்துவந்து, சிறுத் தொண்டரும், வெண் காட்டு நங்கையும் அரிந்து கறி சமைக்கிறார்கள். உத்தராபதியாரை உள்ளே அழைக்கிறார்கள். எழுந்தருளிய அவரோ, உடன் உண்ணப் பிள்ளையை அழைக்க வேண்டுகிறார். 'இப்போது அவன் உதவான்' என்று சொல்லிப் பார்த்தும் கேளாததால், அவர் விரும்பியபடியே வெளியே சென்று ‘மைந்தா! வருவாய்' என்று அழைக்கிறார் சிறுத்தொண்டர். நங்கையும், 'செய்யமணியே சீராளா! வாராய் சிவனார் அடியார் யாம் உய்யும் வகையால், உடன் உண்ண அழைக்கின்றார்' என்றே ஓலமிடுகின்றாள். அப்பொழுதே சீராளன் பள்ளியிலிருந்து ஓடி வருபவன் போல ஓடி வருகிறான். வந்த உத்தராபதியாரும் மறைந்து ரிஷபாரூடராகக் காட்சி அளிக்கிறார். என்னே இவர் தம் திருத் தொண்டின் உறைப்பு? வாளால் தன் மகவையே அரிந்து சிவனடியாருக்கு ஊட்ட முனைகின்ற தொண்டு எவ்வளவு சிறந்தது? இப்படித் தொண்டு செய்தவர்தான் சிறுத் தொண்டர் என்னும் அரிய பெரிய தொண்டர். அவர் பிறந்து வளர்ந்த பதியே திருச் செங்காட்டாங்குடி. அந்தப் பழங் குடிக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருச்செங்காட்டாங்குடி, தஞ்சை ஜில்லாவில் திருவாரூர் - மாயூரம் ரயில்பாதையில் நன்னிலம் ஸ்டேஷனுக்குக் கிழக்கே ஏழு மைல் தொலைவில் இருக்கிறது. ஸ்டேஷனிலிருந்து வண்டி வைத்துக் கொண்டு செல்லலாம். தஞ்சை ஜில்லாவில் மொட்டை மாடுகள் பூட்டிய வில் வண்டிகள்தான் பிரசித்தமானவை ஆயிற்றே. இல்லை, கார் வசதி உடையவர்கள் எல்லாம் அந்த நன்னிலம், நாகப்பட்டினம் சாலையில் திருப்புகலூர் போய் முடிகொண்டான் ஆற்றின்மீது சமீபகாலத்தில் கட்டியிருக்கும் பாலத்தைக் கடந்து கண்ணபுரம் வழியாய்ப் போகலாம். இந்தத் திருப்புகலூர்,கண்ணபுரத்தில் உள்ள கோயில்களுக்குமே நாம் இனிப் போகப் போகிறோம். ஆதலால் நேரே விறுவிறு என்று வண்டியையோ காரையோ நன்னிலம் ஸ்டேஷனுக்கு நேர்கிழக்கே எட்டுமைல் தொலைவில் உள்ள திருமருகலுக்கே தட்டிவிடலாம். அதுதானே செங்காட்டாங்குடிக்குப் பழைய பாதை. செங்காட்டாங்குடி போகுமுன் திருமருகலில் கோயில் கொண்டிருக்கும் மாணிக்க வண்ணரையும், வண்டுவார் குழலியையுமே தரிசித்து விடலாம். இந்த மருகலுக்கு வந்து இறைவனை வணங்கிய அப்பர்,

பெருகலாம் தவம்; பேதமை தீரலாம்;
திருகலாகிய சிந்தை திருத்தலாம்;
மருகலாம் பரம் ஆயதோர் ஆனந்தம்;
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே

என்று பாடியிருக்கிறாரே. தவத்தால் பெறும் பேற்றையும், பேதைமை தீர்வதையும்விட திருகிக்கொண்டே இருக்கும் சிந்தனையையே திருத்திக் கொள்ளலாம் என்றல்லவா கூறுகிறார் அப்பர். திருகு சிந்தையைத் திருத்தத் தெரியாமல் தானே பெரிய அவதிக்கு உள்ளாகிறோம் நாம். ஆதலால் மருகல் சென்று திருகும் சிந்தையைத் திருத்திக்கொண்ட பின்னரே மேல் நடக்கலாம். மருகல் கோயிலில் இறைவன் இருப்பது ஒரு கட்டு மலைமேலே. சோழன் செங்கணான் கட்டிய மாடக் கோயிலில் ஒன்று இது. இங்கிருக்கும் மாணிக்கவண்ணர் சுயம்பு மூர்த்தி. இம்மூர்த்தி நல்ல வரப்பிரசாதி என்பதை விஷம் தீண்டி இறந்த செட்டிப் பிள்ளையை ஞானசம்பந்தர் உயிர்ப்பித்தருளிய கதையிலிருந்து தெரிந்து கொள்கிறோம். கதை இதுதான். செட்டியார் மரபைச் சேர்ந்த இளைஞன் ஒருவன். அவன் மாமன் மகளை வேறு ஒருவனுக்குக் கட்டிக் கொடுக்க அவளது பெற்றோர் முனைகின்றனர். ஆனால் காளையும் கன்னியுமோ நல்ல இளங் காதலர்கள். ஆதலால் அவன் தன் காதலியைக் கூட்டிக் கொண்டு ஊரைவிட்டே புறப்படுகிறான். மருகல் வந்து இரவில் ஒரு திருமடத்தில் தங்குகிறார்கள் இருவரும். இளைஞனை அன்றிரவு பாம்பு தீண்டிவிடுகிறது. அவன் உயிர் துறந்து விடுகிறான். செட்டிப் பெண்ணோ கதறித் துடிக்கிறாள். அப்போது ஞானசம்பந்தர் அந்தத் தலத்துக்கு வந்து சேருகிறார். பெண்ணின் துயரை அறிகிறார், பாடுகிறார்;

கடையனாய் எனுமால், சரன் நீ எனுமால் விடையாய் எனுமால், வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே?

என்று தான் கேட்கிறார் மருகல் உறை மாணிக்கத்தை. விடம் தீண்டிய செட்டி உயிர் பெற்று விடுகிறான். (அன்பர்கள் கேட்கலாம். காதலரின் உடன் போக்குக்கு இறைவனும் அடியாரும் துணை நிற்கிறார்களே, ஆதலால் உடன் போக்கில் ஈடுபடுவர்களை உற்சாகப்படுத்தலாம் போல் இருக்கிறதே என்று. உற்சாகப்படுத்தலாம். ஆனால் ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கவேண்டும். இடையில் துயர் வரும் என்பதும், அத்துயர் துடைக்க இப்போதெல்லாம் ஞான சம்பந்தரைப் போன்ற அடியார்கள் கிடையாது என்பதும்) மருகல் கோயிலில்பார்த்து அனுபவிக்க வேண்டிய சிற்ப வடிவங்கள் இல்லை. ஆனால் தெற்கு வாயிலுக்கு எதிர்புறம் சீராளன் படித்த பள்ளி இருக்கிறது. அந்தப் பள்ளியில் இன்றைய தேவஸ்தானம் ஆபீஸ் இருக்கிறது. அதையும் பார்த்துவிட்டு மேற்கு நோக்கி இரண்டு மைல் சென்றால் செங்காட்டாங்குடி வந்து சேரலாம். (ஒரே ஒரு எச்சரிக்கை. மழை காலத்தில் வண்டியோ, காரோ ஒன்றும் போகாது. நடந்துதான் போகவேண்டும். ஆகையால் நல்ல வேனிற் காலத்திலேயே போய்த்திரும்பலாம். ஆம். சித்தரைப் பரணியில்தானே அங்கு அமுது படையல் விழா. அதற்குப் போனால் போகிறது)

தூரத்தில் வரும்போதே கோபுரம் தெரியும். அதனால் நேரே கோபுரத்தை நோக்கியே நடந்து விடக் கூடாது. கோபுரம் எப்போது கீழே விழுவோம் என்று காத்துக் கொண்டிருப்பதால் வாயிலை நன்றாகச் சுவர் வைத்து அடைத்திருக்கிறார்கள். கோபுர வாயிலுக்கு வட பக்கத்தில் மதிலை வெட்டி ஒரு பாதை அமைத்திருக்கிறார்கள். நாம் அந்தப் பாதையைக் கூட விட்டு விடலாம். தெற்கு வீதிக்கே சென்று அந்தத் தெற்கு வாயில் வழியாகவே கோயிலுக்குள் செல்லலாம். அந்த வாயிலுக்கு எதிரே நம்மை எதிர்நோக்கியே நிற்கிறாள் வாய்த்த திருக்குழலி. அவளைக் கண் குளிரத் தரிசித்து விட்டே அப்பர்.

முருகுவிரி நறுமலர்மேல், மெய்த்தவத்தோர்
துணையை, வாய்த்த
திருகுகுழல் உமை நங்கை பங்கன் தன்னை
செங்காட்டாங் குடியதனில் கண்டேன் யானே

என்று பாடியிருக்கிறார். நாமும் அவருடன் சேர்ந்தே பாடி வாய்த்த திருக்குழலியை வணங்கியபின் உள்ளேசெல்லலாம். இனி மேற்கு நோக்கி நடந்து மகா மண்டபத்தையும் கடந்து அர்த்த மண்டபத்துக்குச் சென்று கோயிலுள் இருக்கும் இறைவனையும் வணங்கலாம். வணங்கும்போதே ஓதுவார் ஒருவர் ஞானசம்பந்தர் பாடிய பதிகத்திலிருந்து,

நுண்ணியான், மிகப்பெரியான்,
நோவுஉளார் வாய்உளான்,
தண்ணியான், வெய்யான்,
தலைமேலான், மனத்துளான்,
திண்ணியான் செங்காட்டாங்
குடியான், செஞ்சடைமதியக்
கண்ணியான், கண்ணுதலான்
கணபதீச்சுரத்தானே,

என்ற பாட்டைப் பாடுவார். இந்தச் செங்காட்டாங் குடியுடையானைக் கணபதீச்சுரத்தான் என்று கூறுவானேன்? என்று கேட்கத் தோன்றும் நமக்கு. கஜமுகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடுக்கண் செய்ய, அவனை ஒழித்துக்கட்ட சிவ குமாரரான விநாயகர் யானை முகத்துடன் அவதரித்து அவனைச் சம்ஹரித்திருக்கிறார். இந்தக் கஜமுகாசுரனை சம்ஹரித்தபோது அவனது இரத்தம் செங்காடாய்ப் பெருகிய காரணத்தால் செங்காட்டாங்குடி என்ற பெயர் நிலைத்திருக்கிறது. இந்தப் பழி நீங்க இத்தலத்தில் இறைவனைக் கணபதி வழிபட்ட காரணத்தால்தானோ என்னவோ, வாதாபி கணபதியும், தமிழ்நாட்டுக்குள் முதல் முதல் இந்தத் தலத்திலேயே புகுந்திருக்கிறார். சேனாபதியார் பரஞ்சோதியார் துணை கொண்டு. இன்னும் இத்தலத்துக்கு எத்தனை எத்தனையோ பெயர்கள். அத்தனையையும் விவரிக்கப் புகுந்தால் அதுவே ஒரு பெரிய 'ராமா யணம்'ஆகும்.

கணபதீச்சுரத்தானை வணங்கிக்கொண்டு நிற்கும் போதே பக்கத்தில் ஒருவர் வந்து நிற்பார். அவர் யாரென்று உற்று நோக்கினால் அவரே சிறுத்தொண்டர் என்று அறிவோம். கூப்பிய கையோடு, தம் மனைவி வெண்காட்டு நங்கை, பையன் சீராளன் எல்லோரையும் கூட்டிக்கொண்டே வந்திருப்பார் அவர்! ஆம். செப்புச்சிலை வடிவத்தில்தான். அவரது முகத்திலோ சாந்திதவழும். பணிவும் லளிதமும் ஒருங்கே தோன்றக்கைகூப்பி நிற்கும் கோலம் அழகு வாய்ந்தது. பிள்ளைக்கறியமுதுக் கதையைப்பற்றிக் கொஞ்சம் நஞ்சம் சந்தேகம் உள்ளவர்களும், இத்தகைய பக்தர் எதையும், அருமைச் சீராளனையுமே இறைவனுக்கு அர்ப்பணிக்கத்தயங்கமாட்டார் என்பதையுமே உணர்வார்கள், சீராளன் திருவுரு அவ்வளவு அழகானதாக இல்லை . அறுத்துக் கறி சமைத்த பிள்ளையைத் திரும்பவும் அவசரத்தில் தானே பிசைந்து உருவாக்கியிருக்கவேண்டும். எப்படியும்பிள்ளை உயிர் ஓவியமாக நிற்கின்றானே. அது போதாதா? இனிமேல் தான் தென் பக்கமுள்ள சந்நிதிக்கு வந்து உத்தராபதி ஈசுவரரைக் காணவேணும். நின்றகோலத்தில் இருக்கும் பைரவமூர்த்தம். இவ்வடிவம் உருவானதைப் பற்றி ஒரு கதை, ஐயடிகள் காடவர் கோன் விருப்பப்படி, சிற்பிகள் உத்திராபதியார் சிற்பவடிவை உருக்கி வார்க்க முயன்று வெற்றி காணவில்லை. அந்தச் சமயத்தில் ஒரு சிவயோகி வந்து குடிக்கத்தண்ணீர் கேட்டு, சிற்பிகள் கொடுத்த கொதிக்கின்ற கருவையே உண்டு செப்புச் சிலையாக நின்றுவிட்டார் என்பார்கள். உண்ண வந்து அமர்ந்தவர் நின்று கொண்டா இருந்திருப்பார் என்று எண்ணிய நிர்வாகிகள் அவரையே இருந்த கோலத்திலும் புதிதாக ஒரு வடிவம் வார்த்து வைத்திருக்கிறார்கள். இந்த உத்தராபதி ஈசுவரர் சந்நிதிக்கு எதிரேதான் அவர் வந்து முதலில் தங்கியிருந்த ஆத்திமரம். மரத்தைப் பார்த்தாலே அது எவ்வளவு பழையமரம் என்று தெரியும். இனி வெளிப் பிராகாரத்துக்கு வந்து மேற்க நோக்கி நடந்தால், வாதாபி கணபதியைத் தரிசிக்கலாம். இத்தலத்திலே நிறைய விநாயகர் வடிவங்கள் உண்டு, இன்னும் சிறப்பாக இங்கு ஒரு அம்சமும் உண்டு. வாதாபி கணபதி, உத்தராபதியார், அம்பிகை எல்லோருக்குமே இரண்டிரண்டு கைகள்தாம். இவை யெல்லாம் கூர்ந்து கவனிக்கத்தக்கவை.

மேலப் பிராகாரத்துக்கு வந்து வடக்கே திரும்பினால் இத்தனை சிரமப்பட்டு இத்தலத்துக்கு வந்து இவ்வளவு நேரம் சுற்றியதும் வீண் அல்ல என்று காண்போம். இங்குதான் நவதாண்டவ மூர்த்திகள் நிற்கிறார்கள், நல்ல கற்சிலை உருவிலே. சிவதாண்டவம் ஏழு என்பர் ஒரு சிலர். அதுவும் தவறு, தாண்டவத்திருவுருவம் நூற்றுஎட்டு என்பர் சிற்ப நூல் வல்லார். ஒரு கணக்கிலும் சேராமல் நவதாண்டவம் என்று எழுதியிருக்கும். அங்கே இருப்பது என்னவோ எட்டுப்பேர்கள்தான். புருங்கலளிதர், கஜசம்ஹாரர், ஊர்த்துவ தாண்டவர், காலசம்ஹாரர், கங்காளர், பிக்ஷாடனர், திரிபுரசம்ஹாரர், பைரவர் என்பவர்களே அவர்கள். இவர்களுடன் உத்தராபதியாரையும் சேர்த்தே ஒன்பது என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இவர்களில் நால்வரே தாண்டவத்திருவுருவினர். மற்றவர் தாண்டவர்கள் அல்ல. போகட்டும்; இந்த விவாதம் எல்லாம் நமக்கு வேண்டாம். இருக்கும் சிலாவடிவங்கள் அத்தனையும் அழகு வாய்ந்தவை. அழகுக்கு அஞ்சலி செய்து அமைதி பெறலாம். இக்கோயிலில் இன்னொரு சிறப்பும் உண்டு. காலையில் தொழுதால் வினை அகலும், உச்சி வேளையில் தொழுதால் இப்பிறப்பின் துயர் அகலும். மாலையில் தொழுதால் ஏழ் பிறப்பின் வெந்துயரம் எல்லாம் விடும் என்பர். ஆதலால் மாலை வேளையே செல்லுங்கள்.

இக்கோயிலில் 32 கல்வெட்டுகள் இருக்கின்றன. சோழ மன்னர்கள் விஜயநகர மன்னர்கள் செய்த திருப்பணிகள், ஏற்படுத்திய நிபந்தங்கள் எல்லாவற்றையும் விரிவாகக் கல்வெட்டுகள் கூறும். இவர்களில் முக்கியமானவன், ராஜராஜசோழன் காரியஸ்தனான தென்னவன் மூவேந்த வேளான் என்பவனே. அவன்தான் கோயிலின் பெரும் பகுதியைத் திருப்பணி செய்திருக்கிறான். இன்று கோயில் கோபுரம் எல்லாம் திரும்பவும் திருப்பணி செய்யவேண்டிய நிலையில் இருக்கின்றன. தென்னவன் மூவேந்த வேளான் திரும்பவும் அவதரிக்க மாட்டான். ஆதலால் திருப்பணி செய்யவேண்டியவர்கள் தமிழ்மக்களே என்பதை மட்டும் ஞாபகமூட்டிவிட்டி நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.