வேங்கடம் முதல் குமரி வரை 2/அம்பர் மாகாளத்தான்

விக்கிமூலம் இலிருந்து
20

அம்பர் மாகாளத்தான்

ஷ்ய நாட்டிலே ஒரு சிறு கிராமம். அங்கு மார்ட்டின் என்று தோல் வேலை செய்பவன் ஒருவன். வயது முதிர்ந்த கிழவன் அவன். மனைவி மக்களை எல்லாம் இழந்து தளர்ந்தவன் என்றாலும், இறை அருளிலே நல்ல அழுத்தமான பக்தி உடையவன். தன்னைத் தேடி வருபவர்களுக்கு எல்லாம் உண்டி, உடை, உறைவிடம் எல்லாம் கொடுத்து ஆதரிக்கத்தவறாதவன். அவனுக்கு ஓர் ஆசை, தன்னைப் படைத்துக் காக்கும் இறைவனை நேரில் காணவேண்டுமென்று. தான் வணங்கும் இறைவனிடம் பல தடவை இந்தப் பிரார்த்தனையைச் செய்து கொள்கிறான். ஒரு நாள் இரவில் கனவில் இறைவன், “மார்ட்டின்! மார்ட்டின்! நாளை உன்னைக் காணவருகிறேன்' என்கிறார். மார்ட்டினுக்கோ ஒரே மகிழ்ச்சி, வரும் இறைவனை வரவேற்கத்தக்க முஸ்தீபுகளோடு இருக்கிறான். பகல் பொழுது கழிகிறது; இரவிலுமே பத்து மணி வரை ஆகிவிடுகிறது. இறைவன் வரக்காணோம். உள்ளம் தளர்கிறது. இறைவன் நம்மை ஏமாற்றி விட்டாரே என்று நினைக்கிறான். இப்படி இவன் குறைபட்டுக் கொண்டிருந்த பொழுது ஒரு அசரீரி கேட்கிறது. 'மார்ட்டின் உன் விருப்பம் பூர்த்தியாயிற்றல்லவா?' என்று. 'என்ன சுவாமி? சொல்லியபடி வராமல் என்னை ஏமாற்றிவிட்டு, இப்படிக் கேட்கிறீரே?' என்று அங்கலாய்க்கிறான் மார்ட்டின். அதற்கு இறைவன் சொன்னபதில் இதுதான்: 'அன்பனே! இன்று காலை ஒரு வயோதிக சிப்பாய் வந்தானே அவனை அன்போடு வரவேற்று அவனுக்கு ரொட்டியும் டீயும் கொடுத்தாயே, அவன் யாரென்று நினைக்கிறாய்? நடுப்பகலில் கைக்குழந்தையுடன் ஏழைப் பெண்ணொருத்தி வந்தாளே அவளுக்கு உணவு அளித்துக் குழந்தைக்குப் பால் கொடுத்து, குளிருக்குப் போர்வையும் கொடுத்தாயே, அந்தப் பெண் யாரென்று நினைக்கிறாய்? மாலையில் கூடையில் பழம் விற்றுக்கொண்டிருந்த கிழவியிடம் பழம் திருடி உதைபட இருந்த சிறுவனுக்குப் பிணைநின்று அவனைத் திருத்தி வீட்டுக்கு அன்போடு அனுப்பி வைத்தாயே, அந்தப் பையன் யாரென்று நினைக்கிறாய்? வயது முதிர்ந்த சிப்பாயாக, ஏழைப்பெண்ணாக, திருந்தாத பையனாக வந்தவன் நானேதான். என்னை நீ கண்டு கொள்ள வில்லையா?' என்கிறார். மார்ட்டின் உணர்கிறான். கருணை நிறைந்த இறைவன் என்ன என்ன வேடங்களில் வந்து தன்னை ஆட்கொண்டிருக்கிறான் என்று நினைந்து நினைந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்து விடுகிறான்.

இப்படி ஒரு கதை. லியோ டால்ஸ்டாய் என்ற அறிஞர் 1885ம் ஆண்டிலே எழுதியிருக்கிறார். (இந்தக் கதையின் விரிவைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் டால்ஸ்டாயின் இருபத்து மூன்று கதைகள் என்ற புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்) இந்தக் கதை எழுதுவதற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்குமுன்னாலே சோமாசிமாற நாயனார் விரும்பியபடி, அவர் நடத்திய சோமயாகத்துக்கு இறைவனே நேரில் எழுந்தருளியிருக்கிறார். ஆனால் வந்த திருக்கோலமோபறையன் உருவில், பக்தர்களை ஆட்கொள்ள இறைவன் எந்த எந்த வடிவத்தில் வருவான் என்பதை யாரால் சொல்லக்கூடும்? எப்படி சோமாசிமார நாயனாரது வேள்விக்கு அவன் எழுந்தருளினான் என்ற முழு விவரமும் தெரிந்து கொள்ள நாம் அம்பர் மாகாளம் என்னும் கோயிலுக்கே போக வேணும். அங்கேயே போகிறோம். இன்று.

அம்பர் பெருந்திருக்கோயில், கோயில் திருமாகாளம் என்று இரண்டு கோயில்கள் அடுத்தடுத்து இருக்கின்றன. தஞ்சை மாவட்டத்திலே மாயூரம், திருவாரூர் ரயில்வே லைனிலே பேரளம் என்னும் ஜங்ஷனில் இறங்கி, தென் கிழக்காக நாலு மைல் நடந்தோ வண்டியிலோ ஏறிச் சென்றால் கோயில் திருமாகாளம் என்னும் அம்பர் மாகாளம் போய்ச்சேரலாம். இன்னும் கொஞ்சம் ஆறு பர்லாங்கு நடந்து சென்றால் அம்பர் பெருந்திருக்கோயிலுக்கும் போகலாம். செல்கிறவர்கள் அவசரப்படாமல், சாவ தானமாக இரண்டு கோயில்களையும் பார்த்து விட்டுத் தான் திரும்ப வேணும். ஒன்றைப் பார்த்து ஒன்றைப் பார்க்கத் தவறி விடுதல் கூடாது. இக்கோயில்களுக்குச் செல்லுமுன் சோமாசிமாற நாயனார் சரிதத்தையும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேணும்.

அம்பர் என்ற திருத்தலத்திலே சோமாசிமாறர் என்ற அந்தணர் பிறந்து வளர்ந்து நல்ல சிவநேசச் செல்வராக வாழ்ந்து வருகிறார். பிரணவ மந்திரம் ஓதி ஓதி உயர்கிறார். அவர் திருவாரூர் சென்று தியாகேசனை வணங்கிய பொழுது, அங்கு வன்தொண்டராம் சுந்தருடன் இறைவன் தோழமை கொண்டு அவர் இட்ட ஏவலைச் செய்கிறார் என்பதையெல்லாம் கேட்டு அறிகிறார். இவருக்கும் ஒரு ஆசை பிறக்கிறது. 'நமக்கு இந்த இறைவன் அப்படி ஒன்றும் பெரிய தொண்டுகள் செய்ய வேண்டாம். நாம் செய்யும் யாகத்துக்கு நேரில் எழுந்தருளி அவிர்ப்பாகம் பெற்றுக் கொண்டால் போதும்' என்று நினைக்கிறார். இந்த ஆசையைச் சுந்தரரிடம் விண்ணப்பித்து, முடித்துக்கொள்ள நினைக்கிறார். அதற்காகப் பரவையாரிடம் 'சிபார்சு' பண்ணச் சொல்கிறார். அந்த அம்மையும் சுந்தரரிடம், சோமாசிமாறரது விருப்பதை நிறைவேற்றி வைக்க வேண்டுகிறாள். ஆம்! உத்தரவு ஹோம் கவர்ன் மென்டிலிருந்தல்லவா பிறந்திருக்கிறது. சுந்தரர் ஒப்புக் கொள்ளாமல் இருப்பாரா? சுந்தரர் ஒப்புக்கொண்டு விட்டார் என்றால் இறைவனும் சரி என்று சொல்வதைத் தவிர வேறு ஏதாவது ஆக்ஷேபணை கிளப்பக் கூடுமா? சுந்தரரிடம், 'சரி வருகிறேன், உன் நண்பனை மிக்க கவனத்துடன் யாகத்தை நடத்தச் சொல்லு' என்று சொல்லி விடுகிறார். யாகம் நடக்கிறது விமரிசையாக.

தியாகேசர் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேள்விக் கூடத்துக்கு வருகிறார். நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக்கிப் பிடித்துக் கொள்கிறார். தம்பட்டம், மதுக்குடம், மாட்டு இறைச்சி எல்லாவற்றையும் சுமந்து கொண்டு வந்து சேர்கிறார். யாகத்தை நடத்திக் கொண்டிருந்த பிராமணர்களோ, 'அடே சண்டாளனான பறையன் இங்கு வரலாமா? போ, ஒதுங்கிப் போ' என்று விரட்டுகிறார்கள், பறையன் வந்ததால் யாகமே கெட்டு விட்டது என்று சொல்லி ஓடிப் போய் விடுகிறார்கள். ஆனால் சோமாசிமாறருக்கு மட்டும் விஷயம் விளங்குகிறது. தம் மனைவியுடன் வந்த பறைத் தம்பதிகளை எதிர் கொண்டழைத்து உபசரித்து அவிர்ப்பாகம் கொடுக்கிறார். உடனே இறைவன் தாம் எடுத்து வந்த பறை உருவைக் களைந்து விட்டு ரிஷபாரூடராய்க் காட்சி கொடுத்து மறைகிறார். தம்மை வெறுத்து ஒதுக்கிய பிராமணர்களைச் சண்டாளர்களாகப் போகும்படி சபிக்கிறார். அவர்கள் இறைவன் அடிவீழ்ந்து சாப விமோசனம் வேண்ட அவர்களையும் அவர்கள் சந்ததிகளையும் தினமும் மத்தியானம் ஒரு மணி நேரம் நீசத்வம் அடையவும், மற்ற வேளைகளில் புனிதர்களாக வாழவும் அனுக்கிரகிக்கிறார். இவ்வளவும் உண்மையாக நடந்ததோ இல்லையோ? கதை என்றாலும் மிக்க சுவையுடைய கதை. இறைவன் தன் பக்தர்களை ஆட்கொள்ள எந்த நேரத்திலும், எந்த உருவத்திலும் வருவான், வரத் தவறான் என்ற உண்மையை அல்லவா உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறது. (எனக்கு ஆச்சரியம் எல்லாம் இந்த உண்மையைத் தெள்ளெனத் தெரிந்து கொண்டல்லவா அந்தப் பெரியார் டால்ஸ்டாய் ஒரு அற்புதமான கதையை இந்தப் பகுத்தறிவு யுகத்திலே கூட மிக எளிதாகச் சொல்லியிருக்கிறார் என்பதுதான்). அம்பர் மாகாளத்துக்கும், அம்பருக்கும் இடையில் சோமாசிமார நாயனார் செய்த யாக குண்டம் இருக்கிறது. பறையனாக வந்தபோது 'ஒதுங்கிப் போ' என்று அந்தணர்கள் சொல்ல இறைவன் ஒதுங்கிய இடத்திலே இன்று ஒலியப்பர் கோயில் ஒன்று எழுந்திருக்கிறது. இந்த உத்சவம் வேறே வருஷந் தோறும் வைகாசி ஆயில்யத்திலே அம்பர் மாகாளத்திலே நடக்கவும் செய்கிறது.

இந்த ஒரு கதையைத் தெரிந்து கொள்ளவே இந்தத் தலத்துக்கு வரலாம். வந்த இடத்திலே இரண்டு கோயில்களில் உள்ள மூர்த்திகளை வணங்கலாம், மற்ற வரலாறுகளையுமே தெரிந்து கொள்ளலாம். முதலில் அம்பர் மாகாளம் சென்று அங்கு கோயில் கொண்டிருக்கும் மாகாளநாதர், பயக்ஷயநாயகி முதலியோரை வணங்கி விடலாம். இந்தத் தலத்துக்கு அம்பர் மாகாளம் என்று பெயர் வருவானேன்? இதைத் தெரிந்து கொள்ள அம்பன் அம்பரசுரன் சரிதையைக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேணும்.

ஒரு நாள் துர்வாசர் சிவபெருமானைக் காண அவசரமாகக் ககன மார்க்கமாய்ப் போய்க்கொண்டிக்கிறார். மதலோலா என்ற தேவகன்னிகை புத்திரப்பேற்றை விரும்பி அவரை அணுகுகின்றாள். எதற்கும் எளிதாகக் கோபப்படும் இந்தத் துர்வாசர் ஏதோ அன்று கருணைகூர்ந்து மதலோலாவுக்கு எவராலும் வெல்ல முடியாத அசுர அம்சம் உடைய இரண்டு புத்திரர்கள் பிறக்கட்டும் என்று ஆசீர்வதிக்கிறார். அம்பரன், அம்பன் என்று இரண்டு புத்திரர்கள் பிறக்கிறார்கள். (அம்பரத்திலே பிறந்தவன் அம்பரன்; அவன் தம்பி அம்பன்) இவர்கள் இருவரும் சிவ வழிபாட்டிலே திளைத்து நிற்பவர்கள் என்றாலும் தேவர்களுக்கும் தேவமாதர்களுக்கும் இடுக்கண் விளைக்கும் அசுர தர்மத்தையும் விட்டு விடவில்லை. தேவர்கள் எல்லோரும் கைலாசம் சென்று முறையிடுகிறார்கள், தமது பக்தர்களைத் தாமே அழிப்பது உசிதமில்லை என நினைந்து, துணைவியாம் மனோன்மணியையும் மைத்துனர் விஷ்ணுவையும் அனுப்பி வைக்கிறார். இறைவி தம் அம்சமும் அழகும் நிறைந்த காளி காதேவியை ஒரு இளங்கன்னியாகச் சிருஷ்டித்து அனுப்புகிறாள். இந்தப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு கிழவேதியர் வடிவில் வந்த விஷ்ணு, அம்பரன் அம்பன் வசிக்கும் அம்பர் என்னும் தலத்தில் ஒரு இடத்தில் வீற்றிருக்கிறார். அழகான கன்னிகையைக் கண்ட அசுரர்கள் இருவரும், பெண்ணைத் தங்களுக்குத் திருமணம் முடித்துக் கொடுக்கக் கேட்கிறார்கள். விஷ்ணுவும் இருவரில் ஒருவருக்குக் கொடுக்கச் சம்மதிக்கிறார். அதனால் அம்பரன் தன் தம்பி அம்பனைக் கொன்றுவிட்டுத் தானே கன்னியை மணந்து கொள்கிறான்.

கன்னிகையான காளியை அவன் தழுவியதும், அவள் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி அம்பரனைத் துரத்தி அவன் உயிரைக் குடித்து விடுகிறாள். அதன் பின் உலகம் காத்தலை மேற்கொண்டு காளி கன்னிகையாக அத்தலத்தில் கோயில் கொள்கிறாள். சிவபூசை செய்து அசுரர்களைக் கொன்ற பாவத்தைப் போக்கிக் கொள்கிறார்கள். அம்பரன் இருந்த ஊர் அம்பர், மகாகாளி கோயில் கொண்ட இடம் மகாகாளிபுரி என்று வழங்கப்படுகிறது, மகாகாள ரிஷி பூசை செய்து முத்தி பெற்ற இடம் ஆனதால் மகாகாளம் என்று பெயர் பெற்றது என்றும் ஒரு வரலாறு உண்டு. அன்று திருமால் வந்து வீற்றிருந்த இடத்தில் வீற்றிருந்த பெருமாள் கோயில் இருக்கிறது. காளியின் வடிவைப் பூசைக்குக்கூட ஒருவரும் இன்று தீண்டுவதில்லை. தூர இருந்து கோல் ஒன்றின் உதவியாலேயே ஆடை முதலியன சாத்தி வழிபடுகிறார்கள். அம்பர் மாகாளம் என்னும் கோயில் திருமாகாளத்தில் உள்ள கோயிலே சோமாசிமார நாயனார், அவர் மனைவி, சுந்தரர், பரவை இவர்களது வடிவங்கள் இருக்கின்றன. இவர்களுக்கு எதிரில் தியாகராஜர் அவரது தேவியின் படிமங்களும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, பறையன் உருவில் வந்த சிவபிரானது வடிவமும் பின்னர் சோமாசிமாரருக்குத் தன் உண்மை உருவைக் காட்டிக் காட்சி கொடுத்த நாயகர் வடிவமும் இருக்கின்றன செப்புச்சிலை வடிவில். இரண்டும் நல்ல அழகு வாய்ந்த திருவுருவங்கள். பறை கொட்டும் பாணியிலே, உமையையும் பறைச்சியாக்கிக் கூட்டிக்கொண்டு வரும் அழகுதான் என்னே !

இக்கோயிலுக்கும் இதனை அடுத்த அம்பர் பெருந்திருக்கோயிலுக்குமே ஞானசம்பந்தர் வந்திருக்கிறார்.

பழக மாமலர் பறித்து, இண்டை கொண்டு
இறைஞ்சுவார் பால் செறிந்த
குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார்,
அவர் பலர் கூட நின்ற
கழகனார், கரி உரித்து ஆடும்
கங்காளர், காளி ஏத்தும்
அழகனார், அரிவையோடு இருப்பிடம்
அம்பர் மாகாளந்தானே

என்பது தேவாரம். ஞானசம்பந்தர் போக மறக்காத அம்பர் பெருந்திருக்கோயிலுக்கு நாமும் போய் வந்து விடுவோம். கோயில் கட்டு மலைமேல் இருக்கிறது. கோச் செங்கட்சோழன், யானை ஏறாப் பெருந்திருக்கோயிலாகக் கட்டிய மாடக் கோயில்களில் ஒன்று இது, கோயில் கிழக்கு நோக்கியிருக்கிறது. நாலு பக்கமும் இலுப்பை மரங்கள் சூழப்பட்ட தோப்பின் மத்தியில் இருக்கிறது. கோவிலுக்கு எதிரில் வடபக்கம் இந்திர தீர்த்தம் இருக்கிறது. மேக ராஜாவின் பெயரில் ஏற்பட்டிருக்கும் இக்குளத்திலோ தண்ணீர் கிடையாது. அத்தனை வறட்சி இப்பக்கத்தில் இந்தக் காவிரி நாட்டிலே என்றால் வியப்புத்தான். கோயில் கிழமேல் 242 அடி, தென்வடல் 169 அடி என்றால் கொஞ்சம் அளவிட்டு அறிந்து கொள்ளலாம் தானே? கோயிலுள் சென்றதும் அக்கினி பாகத்தில் புன்னை மரத்தடியில் ஆதி மூர்த்தியாம் சிவபிரான் எழுந்தருளியிருக்கிறார். புன்னையே இங்கு தல விருக்ஷம். பக்கத்திலேயே 'அன்னமாம் பொய்கை' ஒன்றும் இருக்கிறது. மலை ஏறு முன்னரே படிக்காசு விநாயகரை வணங்கிவிட வேண்டும்.

கடிக்காசு வளர்படப் பூண்
முடிக்காசு மதியொடு அணி
கடவுள் எங்கள்
குடிக்காசு தவிர்த்து அருள்
செய் படிக்காசு மழகளிற்றை
குறித்து வாழ்வாம்

என்று மகாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடிய பாட்டையே பாடிப் பரவலாம். இனி கட்டு மலை மேல் ஏறினால் அங்கு பிரம்மபுரி ஈசுவரர் லிங்கத் திருவுருவில் காட்சி கொடுப்பார். இந்த லிங்கத் திருவுரு இருக்கும் கருவறையின் உட்சுவரிலே கைலாசநாதன், உமை, கந்தன் சகிதம் உப்புச உருவிலே இருப்பான். இங்கு செப்பு விக்ரஹங்கள் நிறைய இருக்கின்றன. அம்பர் நகர்ப் பெருங்கோயில் அமர்ந்த இந்த இறைவனை வணங்கிவிட்டு மலையைவிட்டு இறங்கி, தெற்கு நோக்கியிருக்கும் சுகிர்த குந்தளாம்பிகையின் சந்நிதிக்கு வரவேணும். பூங்குழல் அம்மை என்று அழைக்கப்படும் இந்த அம்பிகை அழகான திருவுரு. இவர்களைத் தரிசித்த பின் சுற்றுக் கோயில்களில் உள்ள பரிவார தெய்வங்களையுமே கண்டு வணங்கலாம். இத்தல புராணத்தைப் புரட்டினால், பிரமன் பூசித்து அருள் பெற்றது, சம்ஹார சீலனை வதம் செய்த விமலன் அருள் பெற்றது, மன்மதன் சாபம் நீங்கப் பெற்றது என்றெல்லாம் வரலாறுகள் விரியும். சங்கார சீலனைக் கொன்ற பைரவரே ஆபத்தோத்தாரணர் என்ற பெயரோடு சட்டைநாதர் திருவுருவில் அக்கினி திக்கில் கோயில் கொண்டிருக்கிறார்.

இத்துனை பெருமையுடைய இந்த அம்பர் இலக்கியப் பிரசித்தியும் உடையது என்று சொல்ல வேண்டும் என்பது ஊரில் உள்ளவர்கள் எண்ணம். அதற்கு ஒரு வரலாறும் கூறுவர். இங்குள்ள சிலம்பி என்னும் தேவதாசியிடம் ஆயிரம் பொன் கேட்டு அவள் கொடுத்த ஐந்நூறு பொன்னுக்கு அரைப்பாட்டு பாடி இருக்கிறான் கம்பன். பின்னர் வந்த ஔவை சிலம்பி கொடுத்த கூழைக் குடித்து விட்டுப் பாட்டைப் பூர்த்தி செய்திருக்கிறாள். முழுப்பாட்டும் இதுதான்.

தண்ணீரும் காவிரியே!
தார்வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழ
மண்டலமே!-பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி
அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு

‘அம்பொற்' சிலம்பியை அம்பர்ச் சிலம்பியாக்கித் தங்கள் ஊருக்குப் புகழ் தேடிக் கொள்கிறார்கள், அம்பர் ஊர்க்காரர்கள். அவர்கள் கெட்டிக்காரர்கள்தான்.