வேங்கடம் முதல் குமரி வரை 2/வழுவூர் கஜசம்ஹாரர்

விக்கிமூலம் இலிருந்து
19

வழுவூர் கஜசம்ஹாரர்

விமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் பாடிய பாடல்களில் பிச்சைக்காரர் கும்மாளம் என்று ஒரு பாட்டு, சத்திரத்திலே சாப்பாட்டுச் சாவடியிலே தூங்கும் பிச்சைக்காரர்கள் வாழ்க்கை எவ்வளவு கவலையற்ற வாழ்க்கை என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார்கள் கவிமணி. உண்டு வயிறு நிறைந்து உள்ளக் கவலை ஒழித்து நிற்கும் அவர்கள் வாழ்வு சிறந்தது என்றே சொல்கிறார்கள். அவர்கள் கற்பனையில் உருவான பிச்சைக்காரர் போடும் கும்மாளத்தைத்தான் பாருங்களேன்.

ஆலமரத்தின் நிழல் இதுவே-நல்ல
ஆயிரங்கால் எழு மண்டபமாம்
சாலவே தங்கும் பறவையெலாம்-அதில்
சங்கீதம் பாடிடும் பாடகராம்.

என்றெல்லாம் பெருமிதத்துடன் பாடும் பிச்சைக்காரர்கள் கடைசியில்,

ஆதிசிவனும் ஓர் ஆண்டியடா-அவர்க்கு
அன்பான பிள்ளைகள் நாமேயடா
ஓது மெய்ஞ்ஞானியார்யாவருமே-நமக்கு
உற்ற உறவினர் ஆவாரடா

என்று இறைவனோடேயே உறவு கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தப் பாட்டைப் படித்த நான் எண்ணுவதுண்டு: உண்மைதானே. பணக்காரரில் பணக்காரனாக இருக்கும் இறைவனே பின்னர் மிக்க எளியவனாகப் பிச்சைக்காரரில் பிச்சைக்காரனாகவும் இருக்கிறானே என்று. கற்பனை கற்பிக்கும் கடவுளாக உருப்பெற்றவர்கள்தான் எத்தனை எத்தனையோ பேர்? நடனராஜனாக, நீல கண்டனாக, சந்திரசேகரனாக, திரிபுராந்தகனாக, கஜ சம்ஹாரனாக, எல்லாம் இறைவனைக் கற்பனை பண்ணியிருக்கிறார்கள். அப்படிக் கற்பனை பண்ணிய கலைஞர்கள் தாம் பின்னர் பிக்ஷாடனாகவும் கற்பித்திருக்கிறார்கள்.

இப்படி இறைவனையே பிச்சைக் காரனாகக் கற்பனை பண்ணுவதற்கு எத்தனை துணிச்சல் இருக்க வேண்டும் இவர்களுக்கு. நாள் தவறாமல் நாம் இறைவனிடம் கேட்கும் பிச்சைகள் அனந்தம். பொன் வேண்டும், பொருள் வேண்டும், மண் வேண்டும், மனை வேண்டும், மக்கள் சுற்றம் எல்லாம் நிறைய வேண்டும் வேண்டும் எனத் தினசரி பிச்சைகேட்டு நிற்கும் மனிதன் அத்தனையும் கொடுக்கும் இறைவனையே பிச்சைக்காரனாகக் கற்பனை பண்ணுவது என்றால் அதை என்ன என்று கூறுவது? அப்படி அவன் நம்மிடம் என்ன பொருளைத்தான் பிச்சையாகக் கேட்கிறான்? நாமோ உள்ளத்தில் உறுதி இல்லாது இறைவனிடமிருந்து அகன்று அகன்றே ஓடுகிறோம். அவனோ அளப்பரிய கருணையோடு நம்மைத் தொடர்ந்தே வருகிறான். நம்மிடம் நமது அன்பைப் பிச்சை கேட்கிறான். அப்படி அன்பையும் ஆணவத்தையும் நம்மிடமிருந்து பெற்றுக் கொண்டு நமது வினைகளையெல்லாம் களைகிறான். சாயுஜ்ஜியத்தையே அருளுகிறான். 'சொல்லாதன எல்லாம் சொல்லி நம்மைத் தொடர்ந்து ஆட்கொண்டு பொல்லா வினை தீர்க்கும் புண்ணியனாக' அல்லவா உருப் பெற்று விடுகிறான் இந்த இறைவன். இப்படி ஒரு கற்பனை. இந்த அதீத கற்பனைக்கு ஒரு உருவம் கொடுத்து விடுகிறார்கள் நம் கலைஞர்கள். அவனே பிக்ஷாடனன். இந்தப் பிக்ஷாடனன் அநேகமாய்ப் பழம் பெருமையுடைய சிவன் கோயில்களில் எல்லாம் இருப்பவன். ஆனால் அவனது சிறந்த திரு உருவைக் காண வேண்டுமென்றால் நாம் போக வேண்டுவது அந்த அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான வழுவூருக்கே. வழி வழுவாது அங்கேயே செல்கிறோம் நாம் இன்று.

மாயூரம் திருவாரூர் ரோட்டில், மாயூரத்திலிருந்து ஆறு மைல் தெற்கே வந்து அதன்பின் ஒரு மைல் மேற்கு நோக்கிக் சென்றால், இந்த வழுவூர் சென்று சேரலாம். ரயிலிலேயே போனால் இலந்தங்குடி ஸ்டேஷனில் இறங்கி ஆறு பர்லாங்கு நடந்து செல்ல வேண்டும். பிரளய காலத்தில் உலகமெல்லாம் அழிந்தபோதும் இவ்வூர் அழியாது வழுவின காரணத்தால் வழுவூர் என்ற பெயர் நிலைத்ததாகத் தலபுராணம் கூறுகிறது. பல தலங்களின் நடுவில் கைலாயம் போல் இருப்பதால் பர கைலாசம் என்றும், தன்னை அடைந்தவர்களுக்கு எல்லாம் சிவஞானத்தை அருள்வதால் ஞானபூமி என்றும் பெயர்கள் வழங்குகின்றன.

வட மொழியிலே சுயுதபுரி என்றும் பிப்பலாரண்யம் என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள கோயில் நல்ல பெரிய கோயில். கோயில் வாயிலை நூற்று ஐம்பதடிவரை உயர்ந்த கோபுரம் அழகு செய்கிறது. கோபுரத்தைக் கடந்து சென்றால், ஈசான தீர்த்தம் என்னும் திருக்குளம் இருக்கிறது. இதனை வலம் வந்தே கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலின் தென் வடல் 342 அடியும் கிழமேல் 380 அடியும் உள்ள மதிலால் சூழப்பட்டிருக்கிறது. கோயிலின் மூன்றாவது வாயிலையும் கடந்துதான் மகா மண்டபம் வந்து சேர வேண்டும். அங்கு வந்து வடக்கே திரும்பினால் இரும்புக் கிராதியிட்ட ஒரு மேடைமீது முன்னர் குறித்த பிக்ஷாடனர் நின்று கொண்டிருப்பார். சோழர் காலத்துச் செப்புப் படிமங்களில் சிறந்த ஒன்று அது. மூன்றடிக்குமேல் உயர்ந்த திருஉரு. அடியில் கொடுத்த பாதுகையைப் பார்த்தால், எங்கோ அவசரமாகச் செல்லும் வேகம் தெரியும். கையிலே பிக்ஷைப் பாத்திரம் ஏந்திய நிலை. அந்த நிலையிலும் மானுக்குப் புல்லளிக்க மறக்கவில்லை இறைவன். ஆம். கல்லினுள் சிறு தேரைக்கும், கருப்பை அண்டத்து உயிர்க்கும் உணவு அளித்துக் காக்கும் கருணையுடையவன் அல்லவா அவன்.

மற்றொரு பக்கத்திலே பூதகணம் ஒன்றும் தலையில் ஏந்திய பாத்திரத்துடன் நிற்கிறது. அரையைச் சுற்றிப் பன்னகம், தலையைச் சுற்றி அழகான கிரீடம், ஆடை. அணிகள் எல்லாம் இல்லாமல் நிர்வாண கோலத்தில் நிற்கிறார் அவர். பிக்ஷாடனரின் தத்துவத்தைத்தான் இவர் உரு

வழுவூர் பிக்ஷாடனர்

எடுப்பதற்குரிய புராண வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாமே. தாருக வனத்திலே உள்ள முனிவர்கள் சகல கலைகளிலும் வல்லவர்கள் . அதனால் தருக்கித் திரிந்தவர்கள் . இவர்கள் ஆணவத்தை அடக்கவே புறப்பட்டிருக்கிறார் சிவ பெருமான். உடன் வந்திருக்கிறார் மகாவிஷ்ணு . இருவருமே தங்கள் உருவத்தை மறைத்துக்கொண்டே வந்திருக்கிறார்கள். ஆடை அணியாத ஆண் அழகனாகப் பிக்ஷைப் பாத்திரம் ஏந்திப் புறப்பட்டிருக்கிறார் சிவபெருமான். இவரது அழகில் மயங்கி நிறை அழிந்து நிற்கின்றனர் ரிஷி பத்தினிகள், மகா. விஷ்ணுவோ காண்பவரை மயக்கும் மோஹினியாக வந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து நடந்திருக்கிறார்கள் முனிபுங்கவர்கள், (ஆம், அன்று மாறுவேடப் போட்டி என்று ஒன்று நடந்திருந்தால் இவர்கள் இருவருமே முதல் பரிசு, இரண்டாம் பரிசு இரண்டையும் தட்டிக் கொண்டு போயிருப்பார்கள் போலிருக்கிறது!) இப்படி இந்த முனிவர்கள், அவர்களது துணைவியர் கர்வத்தை அடக்கி, அவர்கள் அன்பையும் ஆணவத்தையும் பிச்சையாகப் பெற்று அவர்களை உய்வித்திருக்கிறான் இறைவன் என்பது கதை, நல்ல ரஸமான கதைதான். பிக்ஷாடனரைப் பார்த்த கண் கொண்டே மோகினி அவதாரத்தையும் செப்புச் சிலை வடிவில் அந்த மேடையிலேயே பார்த்துவிட்டு நடக்கலாம்.

இந்த மண்டபத்தைக் கடந்து அடுத்த கட்டுக்குச் சென்றால் அங்குள்ள ஞானசபையிலே கம்பீரமாகக் காட்சி கொடுப்பவர் கஜசம்ஹாரர். ஒரு காலத்தில் யானை வடிவு கொண்ட கஜாசுரன் என்பவன் பிரமனை நோக்கித் தவஞ்செய்து அரிய வரங்களைப் பெற்றுத் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தியிருக்கிறான். தேவர்களும் முனிவர்களும் முறையிட இறைவன் கஜாசுரனுடன் போர் ஏற்று, அவன் உடல் கிழித்து, அந்த யானையின் தோலையே போர்வையாகப் போர்த்துக் கொண்டிருக்கிறார். இங்குள்ள கஜசம்ஹாரர் மூன்று நான்கு அடி உயரத்தில் அற்புதமாக உருவாகியிருக்கிறார். மேலைநாட்டுக் கலை உலகிலே பிரசித்தி பெற்ற ஒன்று லாவக்கூன் என்னும் சிலை. ஒரு தந்தையையும் அவன் மக்கள் இருவரையும் இரண்டு மலைப்பாம்புகள் சுற்றிக் கொள்ள அந்தப் பிடியிலிருந்து மீளத்தந்தையும் மக்களும் திருகிக்கொண்டு தவிப்பதை உருவாக்கியிருக்கிறான் சிற்பி. இந்தச் சிற்பி வடிவத்தின் முதுகுக்கு மண்காட்டியிருக்கிறது இந்தக் கஜசம்ஹார செப்புச்சிலைவடிவம். யானையின் உள்ளே புகுந்து திருகிக்கொண்டு வரும் மூர்த்தியின் முன்பாகமும் பின்பாகமும் தெரியும்படி அல்லவா சிற்பி வடித்திருக்கிறான். என்ன அற்புதமான வடிவம்! பக்கத்திலே அஞ்சி ஒடுங்கும் அன்னை. அந்த அன்னையின் கரத்திலே தந்தையின் வெற்றி கண்டு மகிழும் குழந்தை முருகன். எல்லோருமே உருவாகியிருக்கிறார்கள் செப்புச் சிலை வடிவில், இந்தக் கஜசம்ஹார மூர்த்தத்தையே கபில பரணரும், சமய குரவர் மூவரும் பாடியிருக்கிறார்கள்.

பேரானை ஈர்உரிவைப்
போர்த்தானை, ஆயிரத்து எண்
பேரானை ஈர்உருவம்
பெற்றானைப் - பேரா நஞ்சு
உண்டானை, உத்தமனை
உள்காதார்க்கு எஞ்ஞான்றும்
உண்டா நாள் அல்ல உயிர்

என்று சங்கப் புலவர் பாடி மகிழ்ந்தால்,

விரித்தபல் கதிர்கொள் சூலம்
வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோலகால
பயிரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக்கண்டு
ஒண்திரு மணிவாய் விள்ளச்
சிரித்து அருள்செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே

என்று அப்பர் பாடுகிறார். இப்படிக் கவிதை வளர்த்த கலையாக, கஜசம்ஹாரர் நிற்கிறார் இக்கோயில் உள்ளே.

இந்தப் பிக்ஷாடனர், கஜசம்ஹாரரையெல்லாம் பார்த்த பின் இங்கு பார்க்கவேண்டியவை ஒன்றுமே இராது. செப்பு வடிவத்தில் இருக்கும் நடராஜர் அவ்வளவு அழகான சிற்பம் இல்லை, அவரையும் தரிசித்துவிட்டு லிங்க உருவில் இருக்கும் மூலவரைத் தரிசிக்கலாம். இந்த மூலமூர்த்தியே விரட்டேசுவரர். வடமொழியில் கிருத்திவாஸேசுவரர் என்பர். அதற்கு யானையின் தோலைப் போர்த்தி அருளியவர் என்றுதான் அர்த்தம். இங்கு அம்மன் சந்நிதி கோயிலின் வட பக்கத்தில் தனித்திருக்கிறது. இவளையே பாலகுராம்பிகை என்றும் இளங்கிளைநாயகி என்றும் கூறுவார்கள். இளங்கிளை எவ்விதம் அழகு வாய்ந்ததாகவும், வளர்ச்சி உடையதாகவும் காணப்படுகிறதோ அவ்வாறே உலகத்தில் உயிர்களைத் தோன்றச் செய்து அவை வளர்ச்சி அடைய அருளுகிறாள் என்பது பொருள். இவளுக்கே கிருபாவதி என்ற பெயரும் உண்டு. இன்னும் இத்தலம் தீர்த்த விசேஷத்தாலும் சிறப்புற்றது. இறைவனுக்கு ஐந்து முகங்கள் என்பார்கள். ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியயோசாதம் என்பவை அவை என்றும் விளக்குவார்கள். இந்த ஐந்து முகங்களின் பேராலும், ஐந்து தீர்த்தங்கள் இக்கோயிலையொட்டி உருவாகியிருக்கின்றன. போதிய அவகாசத்தோடு கோயிலுக்குப் போகிறவர்கள் இத்தீர்த்தங்களில் நீராடி, புராணங்களில் சொல்லியிருக்கின்ற அத்தனை பலன்களையுமே பெறலாம். மாசி மகத்தன்று இக்கோயிலில் பெரிய விழா நடைபெறுகிறது. அன்று உதயத்தில்தான் கஜசம்ஹார விழா நடனக்காட்சி. மார்கழித் திருவாதிரை அன்றுமே கஜசம்ஹார நடனம் சிறப்பாக நடைபெறும். திருவாதிரைக்கு முந்திய நாள் புனர்பூசத்தில் கஜசம்ஹாரரை வெண்மையாக அலங்காரம் செய்து பக்தர்கள் கண் குளிரக் காண்பார்கள். கோயில் நிரம்ப வருவாயுள்ள பெரிய கோயில் அல்ல; என்றாலும் இந்த இறைவன் ஏழையுமன்று, இந்த வீரட்டானேசுவரருக்கு வருஷத்துக்கு 5000 கலம் நெல் கிடைக்கிறது. ரூ.2000 ரொக்கமாக வேறே வருகிறது. போதாதா, நெல்லுக்கு நல்லவிலை இருக்கும் இக்காலத்தில்?

இதில் பதினைந்து கல்வெட்டுக்கள் உண்டு. கல்வெட்டுக்களில் இவ்வூர் வழுகூர் என்று இருக்கிறது. திருவழுதூர் நாடு என்றும், ஜயங்கொண்ட சோழ மண்டலத்தைச் சேர்ந்ததென்றும் குறிக்கப் பெற்றிருக்கிறது. இத்தலத்து இறைவனை வீரட்டானாம் உடையார், வழுவூர் நாயனார் என்றெல்லாம் கல்வெட்டுகள் கூறுகின்றன. கோயிலில் விளக்கிட, திரும்வெம்பாவை ஓத எல்லாம் நிபந்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மதில், கோபுரம் முதலியவற்றை அழகப் பெருமாள் பிள்ளை கட்டியது என்றும் அறிகிறோம். இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பல நிபந்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் தான் அம்பிகையின் கோயில் கட்டப்பட்டது என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. விஜய நகர மன்னன் வீரபொக்கண்ண உடையார் காலத்தில் 1324ல் காவிரி வெள்ளத்தால் சேதம் அடைந்த நிலங்களுக்குத் தீர்வை வஜா ஆகியிருக்கிறது.

முன்னர் எல்லாம் இக்கோயிலுக்குள் சென்றால் பிக்ஷாடனர், கஜசம்ஹாரர், மோஹினி முதலிய திருவுருவங்களின் வஸ்திரங்களைக் களைந்து மூர்த்திகளின் வண்ணத்தைக் காட்டமாட்டார்கள் அர்ச்சகர்கள். இக்கோயிலில் இருபது வருஷகாலமாக இருந்த ஒரு தருமகர்த்தருக்கு, கஜசம்ஹாரர் பக்கத்தில் உள்ள - அன்னையின் இடையில் முருகன் இருக்கிறான் என்பதே தெரியாதாம். காரணம், அன்னையையும் குமரனையும் சேர்த்தே சேலை கட்டி வைத்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் அத்தனை கெடுபிடி பண்ணுகிறதில்லை அர்ச்சகர்கள். விரும்பினால் கஜசம்ஹாரரின் முழுக் கோலத்தையும் காட்டுவார்கள். அன்னையைக் காட்டுவார்கள், முருகனையுமே காட்டுவார்கள். கண்டு தொழுது கலை அறிவு பெற்றுத் திரும்பலாம் நாம். நடன உலகில் பிரசித்தி பெற்ற ஆசிரியர் வழுவூர்ராமையாபிள்ளை என்பது தெரியும். கஜசம்ஹார நடனம் நடந்த இடத்தில் பிறக்கும் பாக்கியம் பெற்றவர் சிறந்த நடன ஆசிரியராகப் பணியாற்றுவது வியப்பில்லை. வழுவூரால் அவர் பிரசித்தி பெற்றிருக்கிறார். ஏன்? ராமையா பிள்ளையாலுமே வழுவூர் இன்று கலை உலகில் பிரசித்தி பெற்றதாகத்தானே இருக்கிறது.