உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அவர்கள் பழகினபாங்கு அவர் “பெரியார்” என்பதை உறுதிப் படுத்தியது. அதன்பிறகு, தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாள் விழாவைத் திருச்சி பொன்மலைப்பட்டியில் எடுத்தனர். விழாவுக்கு நம்மை அழைத்தனர். நாமும் இசைவு தந்து விழாவுக்குச் சென்றிருந்தோம். தலைவர் பெரியார் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டினோம். அதேபோழ்து நாம் ஆற்றிய உரை சமய நெறிக்கு அரண் செய்வதாகவும் அமைந்திருந்தது. மத எதிர்ப்பாளர்களுக்கும் "ஒரு நல்ல கடவுள் நம்பிக்கையுடையவர்” சொல்லும் பதிலாகவும் உரை அமைந்தது. வழக்கம்போல, தலைவர் பெரியார் அவர்கள் பெருந்தன்மையுடன்-நம்முடைய பேச்சு அவர் கொள்கையை மறுக்கின்ற பேச்சாக இருந்தும், பெரியார் அவர்கள் யாதொன்றும் கூறவில்லை. கூறாமைக்குக் காரணம் பண்பாடு காக்கவேண்டும் என்ற நெறி பற்றியேயாம். ஆயினும், கச்சிதமாகச் “சமுதாயத்தில் நிகழ்கின்ற தீமைக்குக் கடவுள் பொறுப்பில்லையென்றால் அதைத் திருத்தியமைக்க மகா சந்நிதானம் அவர்கள் வழி சொல்ல வேண்டும். மகா சந்நிதானம் அவர்கள் சொல்லும் வழியை மற்ற மதத் தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பதையும் அறிந்து கொள்ள ஆசை” என்று கூறி முடித்தார்கள். நம்முடைய வாழ்க்கையில் ஒருசுற்று முடியப் போகிறது. தலைவர் பெரியாரும் மறைந்து விட்டார். ஆனால் அவருடைய ஆசை இன்னமும் நிறைவேறவில்லை. அதற்கு மாறாகச் சாதி வேற்றுமைகளை- தீண்டாமையைசமுதாயத்தை அமுக்கி வைக்கும் ஊழ்வினைத் தத்துவத்தைமதச் சண்டைகளை நாம் ஒத்துக் கொள்ளாததால் இவற்றையே கொள்கைகளாக உடையவர்கள், நம்மை "ஒத்த கருத்தில்லாதவர்” என்று சொல்லி ஒதுக்குகின்றனர். அவர்களுக்கு மிக்க நன்றி. அவர்கள் நம்மை அங்கீகரிப்பதை நாம் விரும்பவில்லை. சமய அடிப்படையில் மனிதகுல ஒருமைப் பாட்டைக் காண்பதும், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக்