viii
காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் முன்னை முதல்வர் முருகசாமி முனைந்து நின்று இம்மாபெரும் திட்டத்தை வெற்றிபெறச் செய்தனர். சமயநூல்களில் தேர்ச்சியும் அடிகளார் நூல்களில் பயிற்சியும் அடிகளாரிடத்தில் மிகுந்த மதிப்பும் உடைய முருகசாமி முன்னின்று ஆற்றிய பணிகள் பல.
இந்த 16 தொகுதிகளுக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் பெருமக்கள் 15பேர் அரிய ஆய்வு மதிப்புரைகள் வழங்கி யுள்ளனர். அவர்கள் வருமாறு:
தொகுதி 1, 2. சிலம்பொலி செல்லப்பனார்
3.முனைவர் தமிழண்ணல்
4. முனைவர் வா.செ. குழந்தைசாமி
5. முனைவர் ஒளவை நடராசன்
6. முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியன்
7. தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார்
8. முனைவர் வை. இரத்தினசபாபதி
9. தருமபுரம் ஆதீனம் தவத்திரு சண்முக தேசிக ஞானசம்பந்தர்
10. முனைவர் ச.வே. சுப்பிரமணியன்
11. முனைவர் கு. சுந்தரமூர்த்தி
12. தவத்திரு அமுதன் அடிகள்
13. தவத்திரு ஊரன் அடிகள்
14. முனைவர் இ. சுந்தரமூர்த்தி
15. முனைவர் க.ப. அறவாணன்
16. புலவர் இரா. இளங்குமரன்
நூல் நுவலும் பொருள், அடிகளின் எழுத்துக்கொடை, சமய ஞானம், மனிதநேயம், பொதுநல நோக்கம், அறிவியல் அணுகு முறை, சமூகப்பணி பற்றித் திறனாய்வாளர்கள் நுண்ணாய்வு செய்து திறம்பட விளக்கியுள்ளனர். மதிப்புரைகளே ஒரு தனி நூல் அளவுக்கு வளர்ந்துள்ளது.
தவத்திரு ஊரன் அடிகள் தாம் அரிதின் முயன்று உருவாக்கிய ‘சைவத் திருமடங்கள் 18’ என்னும் பெருநூலில் மணிவாசகர் பதிப்பகத்தின் தொகுப்பு மிகப்பெரிய பணி என்றும் அடிகளாருக்கு நிலைத்த நினைவுச் சின்னம் என்றும் நெஞ்சாரப் பாராட்டியுள்ளார். இத்தொகுதிகளின் பன்முக நலன்களைப் பாரித்துரைத்துள்ளார். திருமடத்தின் வரலாறு எழுதும்போது இப்பெருந்திட்டத்தின் பெரும்பயனை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத் தக்கது. அடிகளார் நூலுக்கு இவர் அளித்துள்ள அணிந்துரையில் ஐவகை அமைப்புகளின் கலவை (Synthesis) அடிகளார் என்பதனை ஆராய்ந்து நிறுவி, அவரது பேரறிவையும் பேராற்றலையும் பெருஞ்செயல்களையும் விளக்கியுள்ளார்.