குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/திருவருள்
திருவருள்
சமயச் சார்பற்ற தன்மை
நமது நாடு சமயச் சார்பற்ற நாடு. நமது நாட்டு வாழ்வியல் சமயச் சார்பற்றது. நமது நாட்டு இந்து மதமும் சமயச் சார்பற்ற தன்மையுடையதேயாம். சமயச் சார்பற்ற கொள்கை-கோட்பாடு. இந்தியாவின் தேசீயக் கொள்கை, கோட்பாடு! வழிவழி வளர்ந்து வந்துள்ள கொள்கைகோட்பாடு!
சமயச் சார்பற்ற தன்மை என்பது ஒரு விழுமிய கொள்கை ஏன்? எந்த ஒன்றிலும் சார்பற்ற வாழ்நிலை உயர்ந்தது! மிகமிக உயர்ந்தது! சார்பு என்பது என்ன? சார்பற்ற நிலை என்றால் என்ன? சார்பு என்பது ஒற்றினைச் சார்ந்து வாழ்வது. சார்ந்ததன் வழியில் நெகிழ்ச்சியிலாத இறுக்கமான பிடிப்புக்களுடன் வாழ்வது. அவர்தம் சிந்தனை, செயல், தனிப்பட்ட வாழ்வு சமூக வாழ்வு அனைத்தும் சார்ந்துள்ள சார்பினையே யைமாகக் கொண்டு சுழலும். அந்தச் சார்புக்கு அறிவு, உணர்வு, நீதி எல்லாம் அனுசரணையாக இருந்தால்தான் ஏற்பார். இல்லையானால் ஏற்க மாட்டார். அதுமட்டுமா? சார்ந்துள்ள சமயமே உயர்ந்தது. விழுமியது என்றெல்லாம் எண்ணுவார்; எழுதுவார்; மற்றவைகளைப் பொய் என்றும் பயனற்றவை என்றும் வெறுத்து ஒதுக்குவதுடன் அந்தச் சார்புகளைச் சார்ந்து வாழ்பவர்களிடமும் பகைமை உணர்ச்சியை வளர்ப்பர். இதுதான் சார்பின் இலக்கணம். சமயச் சார்பற்ற தன்மை என்பது ஒருவர் தாம் பிறந்து வளர்ந்த சமயத்தினைப் பின்பற்றல்; ஆர்வத்துடன் பேணல், நின்றொழுகுதல். அதே போழ்து பிறசமய மறைகளை விருப்பத்துடன் கற்றல். பிற சமயங்களை மதித்தல். அந்தச் சமயங்களைச் சார்ந்த மக்களைச் சகோதரர்களாக ஏற்று அன்பு பாராட்டுதல். உறவுகளைச் செழுமைப் படுத்திக் கொள்ளுதல் முதலியன சமயச் சார்பற்றோரின் வாழ்க்கை முறை. ஒரோவழி மதங்களிடையே மாறுபாடுகள் தோன்றினால் மதங்களை-மதக் கோட்பாடுகளைப் பின் தள்ளிவிட்டு ஒரே கடவுள்-ஒரே குலம் ஆகியனவற்றை மையமாகக் கொண்ட கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்தல் சமயச் சார்பற்றோரின் தன்மை.
இந்து சமயம் இயல்பாகவே சமயச் சார்பற்ற தன்மையுடையது. இந்து மதத்தில் எந்த ஒரு கொள்கையும் கோட்பாடும் கட்டாயமாக்கப் பெறவில்லை. அவரவர் விருப்பம் போல மேற்கொண்டொழுகலாம். ஒரே இஸ்லாமியர், இஸ்லாமியத்திலிருந்து மாறாமல் வாழ்ந்து கொண்டே நான் ஒரு இந்து என்றால் யாராலும் இதை மறுக்க முடியாது. கடவுள் ஒருவர்; அவர் அருவம்; உருவம். அவரை எந்தப் பெயர் கொண்டும் அழைக்கலாம். எப்படியும் வழிபடலாம். இந்த நெறிமுறைகள் சார்பற்ற தன்மையைச் சார்ந்தவையல்லவா? இந்தியாவில் முதன் முதலில் சமயச் சார்பற்ற தன்மையை மேற்கொண்டு அறிவித்தவர் மாணிக்கவாசகர்.
“தென்னா டுடைய சிவனே போற்றி!
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி"!
என்ற திருவாசக அடிகள் சமயச் சார்பற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டு. இந்தச் சமயச் சார்பற்ற தன்மை இந்தியா முழுதும் இமயம் முதல் குமரி வரையில் ஒரே குரலில் தலைமுறை தோறும் ஞானிகள் எடுத்துக்கூறி வந்துள்ளனர்.
இப்படி வழிவழி வந்த சமயச் சார்பற்ற தன்மை இன்று நம்முடைய நாட்டுக்கு இன்றியமையாதது. சமயக் கணக்கர் மதிவழி செல்லக்கூடாது. “மதமெனும் பேய்” என்று வள்ளலார் மறுத்தது நமக்கு ஏன்? இந்திய நாட்டின் பல்வேறு சமயங்களும் செழித்து வளர வேண்டும். இந்திய மக்கள் பழகிய நட்பியல் சார்ந்த உணர்வுடன் உறவு கலந்து வாழ்தல் வேண்டும். அப்போதுதான் இந்தியா வலிமையும் வளமும் பொருந்திய நாடாக விளங்கும்:
சமயச் சார்பற்ற தன்மை ஒரு கொள்கையல்ல; ஒரு வாழ்க்கை முறை! இந்திய வாழ்க்கைமுறை ஏற்போம்! நின்றொழுகுவோம்!
ஒரு பகுதி
“சமாதானம் செய்து வைப்பவர்கள் பாக்கியவான்கள்” என்பது ஏசுவின் இனிய செய்தி. வாழ்க்கையின் பேறுகளை உண்மை, அறிவு, ஆனந்தம் என்று முறைப்படுத்துவார்கள் அருளார்கள். இன்றைய மானுடம் ஆனந்தம்-மகிழ்ச்சி, இன்பம், உடலுக்குரிய சுகம், களிப்புக்களை நிறைய பெற்று வளர்ந்துள்ளது. ஆயினும் ஆன்மாவில் அமைதி இல்லை; ஆனந்தம் இல்லை; ஏன்? நாம் முற்றிலும் ஆவேசமானதும் விரைவுணர்வு பொருந்தியதும் அற்புதமானதுமாகிய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது வாழ்க்கையில் ஏராளமான அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளைப் பற்றிய நமது கருத்து, இன்றுள்ள கருத்துடன் முற்றிலும் மாறுபட்டது. அதுமட்டுமல்ல, அன்றைய கருத்து அறியாமையின் காரணமாக அப்படி இருந்தது என்று இன்று உணர்கின்றோம். அன்று பிரச்சினைகளை அணுகும் முறை நம்பிக்கை அடிப்படையிலான முறை; இன்று அப்படியல்ல. இன்று அறிவறிந்த நிலையில் சிந்திக்கின்றோம். நமது யுகம், அறிவியில் யுகம்! நமது பூமியில் உயிரினங்கள் தோன்றி 400 கோடி ஆண்டுகள் ஆகின்றன. மனித இனம் தோன்றி 40 இலட்சம் ஆண்டுகள் ஆகின்றன. நீண்ட இந்தக் காலக்கட்டத்தில் மானுடம் மெள்ள மெள்ள பரிணாம வளர்ச்சியில் மானுடமாயிற்று. மானுடம் தோன்றிய உடனேயே அறிவியல் விழிப்பும் மெள்ள மெள்ளவே வளர்ந்து வந்தது. இந்தத் தலைமுறையுகம், அறிவியலை முழுமையாக உணர்ந்த யுகம்! அறிவியலின் பலன்களை முழுமையாக அனுபவிக்கும் பேறு இந்தத் தலைமுறைக்குத்தான் கிடைத்துள்ளது. இந்தப் பேறு நீடிக்குமா? நீடித்து வளருமா? இருபத்தோராம் நூற்றாண்டின் நுழைவாயிலில் நிற்கும் நாம் நம்மையே அழித்துக் கொள்ளாவிட்டால் இந்தப் பேறு நிலைக்கும். ஆனால் நம்முடைய எதிர்பார்ப்பு. பிழையெனத் தெரிகிறது; வளைகுடாவில் போர் தொடங்கி விட்டது! இந்த மானுடத்தின் தலைவிதியை யார் நிர்ணயிப்பது. நல்லவண்ணம் அமைய வேண்டும் என்று பிரார்த்திப்போமாக!
சமாதானம் என்றால் என்ன? போர் இல்லாத நிலைமட்டுமல்ல. சமாதானம் என்பது போர் இல்லாத நிலை என்றால் “மயான அமைதி” என்று பொருள் கொள்ளல் கூடாது! சுரண்டும் அதிகார வர்க்கத்திற்குப் பணிந்து வாழ்தலுமல்ல. நாம் ஏதாவது நல்லது செய்தால் அதனால், மற்றவர்களுக்கு நோதல் ஏற்படும் என்று எண்ணி, யாதொன்றும் செய்யாதிருத்தலும் அல்ல. சமுதாயம் உயிர்ப்புடையது வாழ்வது. மானுடத்தின் வாழ்வுக்குத் தேவைகள் பலப்பல உள்ளன. வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தி செய்யப் பெறும் நிலையில்தான் அமைதி தோன்றும்; சமாதானம் தோன்றும்? மக்கள் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் சுதந்திரம் தேவை. எந்தக் காரணத்தை முன்னிட்டும் மக்களிடத்தில் பயம் இருத்தல் கூடாது. பயமில்லாமல் சுதந்திரமாக உழைப்பைப் பயன்படுத்திப் பணியாற்ற வேண்டும். உழைப்பின் பயனை மக்கள் அடைய வேண்டும்; “வாழ்க்கையின் தேவைகளை அடையத்தக்க சுதந்திரமான உழைப்போர் தேவையே” என்றார் போப் பால்.
மானுடத்தின் சென்ற கால வரலாறுகள் ஊக்க மளிப்பனவாயில்லை. போர்கள் நிறைந்த ஆண்டுகளே மிகுதி. மானுடத்தின் நீண்டகால வரலாற்றில் போர் இல்லாத காலம் 292 ஆண்டுகள்தான் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். கடந்த காலத்தில் இந்த உலகம் பதினையாயிரத் துக்கும் அதிகமான போர்களைச் சந்தித்துள்ளது. 140 இலட்சம் உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன.
இன்றைய நிலை என்ன? இன்று வாழும் பலர் இன்றைய எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களாக, சென்று போன காலங்களின் கருத்துக்களிலேயே, பழைமையின் பிடிப்புக்களிலேயே வாழ்கின்றனர். இவர்கள் பானையில் தலையை விட்டுக் கொண்டு தலையை எடுக்க முடியாமல் தவிப்பதைப் போல வாழ்கின்றனர். பைத்தியக்காரர்களே போரினை, விரும்புகிறவர்கள்! எந்த வகையான தருக்கவியலும் போரினை வரவேற்கவில்லை. மாறாக, போரை மறுதலித்தே வந்துள்ளன.
இந்த உலகில் பல மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர்; பல மதங்கள் நிலவுகின்றன! இந்தப் பரந்துபட்ட மக்களிடையே நட்புறவும் நல்லிணக்கமும் தேவை. மதங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கே உரியன. மதங்கள் அரசியல், பொருளாதார வாழ்க்கையில் ஊடுருவ அனுமதிப்பது விரும்பத் தக்கதுமல்ல அனுமதிப்பதற்கும் இல்லை. மானுடத்தின் வரலாற்றில் நடந்த பல போர்கள் மதங்கள் அரசியலில் ஊடுருவியதனாலேயே ஏற்பட்டவை என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
மதம் மக்களின் நல்வாழ்க்கை அமைப்புக்கே! என்று, இவர் தேவர்-அவர் தேவர் என்ற விவாதங்கள் தலையெடுக் இன்றனவோ அன்று மதச்சண்டைகள் தோன்றுவது இயல்பாகிவிடும். ஆதலால், “கடவுள் ஒருவரே! அந்த ஒருவரையன்றிப் பிறிதொருவர் இல்லை! மானுட சாதி ஒன்றே! சமுதாய நீதியில் ஒரே நீதி!” என்ற கோட்பாட்டினை முன் வைத்து, சமாதான சகவாழ்வுக்குப் போராட வேண்டும்.
சமாதான வழியில் வாழும் சமுதாயம் அமைத்தாலே எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கக் கூடிய புதிய சமூக அமைப்பைக் காண முடியும். நாடுகள் இராணுவச் செலவுகளைத் தவிர்த்து மூல வளங்களை மக்களின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தினால் அற்புதமான சமுதாயம் தோன்றும். மானுட சாதியின் போர்க்குணம், ஆக்க வழிகளில் மடை மாற்றம் செய்யப் பெற வேண்டும். மானுடத்தை அறியாமை, வறுமை, பிணி ஆகியவற்றிலிருந்து மீட்கும் ஆக்க வழியிலான போர் உடனடியாகத் தொடங்கப்படுதல் வேண்டும்.
எல்லாவித்த்திலும் சமாதானச் சூழ்நிலையில் வாழும் சமுதாயமே வளரும்; வாழும்; உத்தமானதும் கூட! சமாதானம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
இன்றுள்ள தேவை சமாதானம்! சமாதானம்! வேறொன்றும் இல்லை! சமாதானம் இன்றைய மானுட வாழ்வில் நிபந்தனையாகி விட்டது. சமாதானத்தைப் பேணுவோம்! பாதுகாப்போம்!
இந்தியா ஒரு நாடு, இன்றல்ல பல்லாயிரம் ஆண்டுகளாகவே இந்தியா ஒரு நாடாக விளங்கி வந்துள்ளமையை இந்திய இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. இந்தியா பலமொழிகள் பேசும் நாடு; பல மதங்கள் உள்ள நாடு, பல சாதிகள் உள்ள நாடு என்பது, உண்மையே. ஆயினும் மொழி, மதம், சாதி காரணமாக மக்கள் அந்நியராகிக் கொண்டு சண்டை போட்டதில்லை. நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையில் சிறந்து விளங்கினார்கள். எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்தாளும் பண்பு ஓர் ஒழுக்கமாகவே ஏற்று ஒழுகப் பெற்றது.
அண்மைக் காலமாக இந்தியாவில் சாதி மதங்களைப் பின்பற்றுகிறவர்கள் அவற்றை மையப்படுத்திச் சிறு சிறு எல்லைகளை உண்டாக்கிக் கொண்டு இறுக்கமான உணர்வைப் பெற்றுவரும் தீமை பரவலாக வளர்கிறது. இந்தத் தீயமனப் போக்கை அரசுகளின் அணுகுமுறைகள் வலுப்படுத்துவனவாகவே அமைந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில், இந்திய மக்களிடத்தில் பரஸ்பர நல்லெண்ணத்தையும் நட்புறவையும் வளர்ப்பது நமது கடமை. நமது எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் உத்தரவாதத் தன்மையுடைய நல்வாழ்க்கையையும் பாதுகாப்பான சூழ்நிலையையும் உருவாக்கி வைப்பது என்பது நமது தலைமுறையினருக்குக் காலம் தந்துள்ள கடமை. இந்தத் தலைமுறையினருக்கு வாய்த்துள்ள அறிவியல் சார்ந்த கடமை. இந்திய மக்களிடத்தில் சமயச் சார்பற்ற் தன்மையையும் இந்திய ஒருமைப்பாட்டையும் காப்பதுமேயாகும்.
காலம் தந்த இந்தக் கடமையை ஏற்க முன் வந்துள்ளது தமிழ்நாடு திருவருட்பேரவை. தமிழகம் தழுவிய திருவருட்பேரவை உறுப்பினர்கள் தஞ்சையில் சென்ற மாதம் 26, 27ஆம் தேதிகளில் கூடினர். இந்திய ஒருமைப்பாட்டுக்கு இந்தக் காலத்தில் வாய்த்துள்ள அறைகூவலை ஏற்றுப் பணிசெய்ய உறுதி கொண்டனர். இதற்கு மனித நேயமிக்க பணியினை மேற்கொண்டு புனிதப்பயணம் தொடங்கியுள்ள திருவருட் பேரவை அணியினருக்குத் தலைமை ஏற்று அழைத்துச் செல்ல மக்கள் பேராயர் மதுரை ஆர்ச்பிஷப் மேதகு டாக்டர். எம். ஆரோக்கியசாமி தலைமை ஏற்றுள்ளார். இன்றைய வரலாறு தந்துள்ள பணியினைச் செய்து முடிப்பார் என்று நம்புகிறோம்; வாழ்த்துகின்றோம்.
விஞ்ஞானம் வளர்கிறது இல்லை, வளர்க்கப்படுகிறது! காலம், எல்லைகளைக் கடந்து மனிதகுலம் உறவு கொண்டு இந்தப் பூமியில் ஒரு சேர உண்டு களித்து மகிழ்வதற்காகத் தானே வாழ்கிறது! ஆனால் என்ன நடக்கிறது? அருள் நெறியா வளர்கிறது? சன்மார்க்கமா ஆட்சி செய்கிறது? சைத்தான் மருள் நெறியில் அழைத்துச் செல்கின்றானே! போர்க் கருவிகள் செய்தல் தொழிலாக அல்லவா அமைந்து விட்டது. இரும்பைப் பிடித்த துருவும் சும்மா இருக்காது. ஆயுதம் தொட்டவனும் சும்மா இருக்க மாட்டான். நாளுக்கு நாள் கொலைக் கருவிகள் உற்பத்தி-அதுவும் அணு இராசாயன ஆயுதங்கள் செய்யப்படுகின்றன. இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பூமியின் காற்று மண்டலம், தண்ணீர் மாசுபடுகின்றன. இந்த மாசு பல தலைமுறைகளுக்குப் பாதிப்புச் செய்யும் என்று அறிவியல் உலகம் எச்சரித்திருக்கிறது. எச்சரித்துக் கொண்டிருக்கிறது! பணப்பேயும் அதிகாரப் பிசாசும். பிடித்தாட்டுப்பவர் களுடைய காதில் இந்த அபயக் குரல் விழவில்லையா? அல்லது விழுந்தும் விழாதது போல நடிக்கிறார்களா?
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உலக மெங்கிலுமுள்ள அனைத்துச் சமய நெறிகளைச் சார்ந்தவர்களும் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும். உலக நாடுகள் பேரவை - ஐக்கிய நாடுகள் சபை ஆற்றல் மிக்குடையதாக அமைய வேண்டும். அது போலவே உலக சமயங்களின் மையம்-சபை ஒன்று தொடங்கப் பெறுதல் வேண்டும். இந்த உலக சமய சபை உலகத்தில் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் சமாதானத்தையும் வளர்க்கப் பாடுபட வேண்டும்; உழைக்க வேண்டும். மானுடம் வென்று விளங்க வேண்டும். கணியன் பூங்குன்றன் அருளிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்ற வாக்கு மெய்யாகவே உருப் பெறுதல் வேண்டும். இதுவே அமைதிக்கு வழி!’
யாதொரு நிபந்தனையும் இன்றி மானுடம் வளர, வாழ உத்தரவாதம் அளிப்பதே அறிவியலின் நோக்கம்! அருளியலின் கடமை! இந்த நோக்கம் நிறைவேற இப்புவியிலுள்ளோர் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வியாபார லாப நோக்கமின்றி நுகர்வுப் பொருள்கள் மட்டுமே உற்பத்திசெய்ய வேண்டும். உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் தனி ஒருவன் கூடப் பட்டினியால் சாக அனுமதித்தல் கூடாது. அறியாமை, முற்றாக அகற்றப்படுதல் வேண்டும். விரைவில் உலகம் தனக்கு ஒரு மொழியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த உலக மொழியை உலக மாந்தர் அனைவரும் கற்றுப் பேச வேண்டும். விரைவில் கடவுள்-மானுடம் தழுவிய உலகப் பொதுச் சமயமும் ஒன்று கண்டாக வேண்டும். இதற்கு வழி வகுப்பதற்கு வாய்ப்பாகப் போற்றுதலுக்குரிய போப்பாண்டவர், திருச்சபைகளுக்குப் பல சமயங்களுடன் விவாதித்தல், கலந்துரையாடல், தெளிவுகாணல் நெறியை அறிமுகப்படுத்தியுள்ளார். இது வரலாற்றின் திருப்பு மையம்! போதும். போதும் பிரசாரங்கள்! மாந்தர்களிடையே அடிக்கடி கூடுதல், கலந்துரையாடல் முதலியன நிகழட்டும்! அமைதி கனிய வழி இதுவே! அமைதியை வளர்ப்போம்! காப்போம்!
இன்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் பாஞ்சாலத்தில் ஒரு சமயப் புரட்சி தோன்றியது. ஞானப் பெருந்தகை குருநானக் தோன்றிய காலம். வட இந்தியாவில் இந்து, முஸ்லீம் புகைச்சல்கள் இருந்த காலம். இந்து சமயத்தில் சாதிவெறியும் புரோகிதர்களின் ஆதீக்கமும் பொருளற்ற சடங்குகளும் ஆதிக்கம் செய்த காலம். இந்தக் காலக் கட்டத்தில் இந்திய சமூகத்தைப் பிடித்திருந்த நோயை அகற்றத் தக்க மருத்துவராக ஞானப் பெருந்தகை குருநானக் தோன்றினார். ஞானக்கதிரவன் குருநானக் பிறப்பில் இந்து. அவர் பிறந்த குலம் கூடித்திரியகுலம். அவர் இந்து-முஸ்லீம் சமயங்களை இணைத்து ஒரு புதிய மதத்தையே உருவாக்கினார். குருநானக் அவர்கள் உபதேசம் ஒருவன் இந்துவுமல்லன், முஸ்லிமும் அல்லன் என்பது மக்களைச் சமய அடிப்படையில் இந்து என்றும் முஸ்லீம் என்றும் பிரிப்பது தவறு; மக்கள் தாமே என்பது உபதேசத்தின் விழுமிய பொருள்.
குருநானக்கின் சீக்கிய சமயம் மக்களை மக்களுக்குத் தொண்டு செய்வதை மையமாகக் கொண்டது. சீக்கியசமயம் சகோதர்த்துவத்தையும் வற்புறுத்தியது; வற்புறுத்துகிறது. சீக்கிய சமயக் குருத்துவாரங்கள் சமத்துவம், அன்பு, தோழமை என்பனவற்றை நடைமுறைப்படுத்தும் அறப்பணி மனைகளாக இன்றும் விளங்குகின்றன.
ஞானப் பெருந்தகை குருநானக் இந்து இஸ்லாமிய மதங்களை ஆராய்ந்து இவ்விரண்டு மதங்களிலிருந்த நலன் தரும் கொள்கைகளை, கோட்பாடுகளை இணைத்தார். சீக்கிய சமயத்திற்கு மறுபிறப்புண்மை. மாயைக் கொள்கை உண்டு. இவை இந்துமதக் கொள்கை. ஒரே கடவுள். உருவம் அற்றவர் என்பது முக்கிய மதக் கொள்கை. இந்தக் கொள்கைகள் இஸ்லாமிய மதத்திலிருந்து எடுத்துக் கொண்டவை யாகும். “ஹிந்து சமயமும் இஸ்லாம் மதமும் மணந்தன” என்று சீக்கிய எழுத்தாளர்கள் இதனைப் புகழ்ந்தனர். எந்த ஒரு சூழ்நிலையிலும் குருநானக் அறிவுக்கு ஒவ்வாத கொள்கைகளை, கோட்பாடுகளை எடுத்துக் கொள்வதில்லை. சீக்கிய மத சித்தாந்தப்படி இறைவன் எங்கும் நிறைந்தவன். இஸ்லாம் மதத்தின் சமத்துவக் கொள்கைகளை அப்படியே குருநானக் ஏற்றுப் போற்றினார். குருத்துவாராவில் வழிபாடு செய்யும் பொழுதும் சரி குருத்துவாராவில் உண்ணும் பொழுது சரி, பணம், பதவி என்ற ஏற்றத்தாழ்வின்றிச் சமநிலையில் அவரவர் வந்த வரிசைப்படிதான் வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும்; உணவருந்த வேண்டும் என்ற நடைமுறையை குருத்துவார் நடையாக்கினார். ‘சத்சங்’ என்ற இந்த நடைமுறை இஸ்லாத்தைச் சார்ந்தது.
மதங்கள் காலத்திற்குக் காலம் பல்வேறு மதங்களின் ஏற்புடைய கொள்கைகளை ஏற்று வலிமையும் புதுமையும் பொறுமையும் பெற்று வளர்த்தால் பல மதங்கள் தோன்று வதைத் தவிர்த்து விடலாம். மதங்களுக்கிடையில் சண்டைகள் தோன்றுவதையும் தவிர்க்க இயலும். தொன்மைக் காலத்தில் மதங்கள் நெகிழ்ந்து கொடுத்தன. காலப்போக்கில்தான் பழக்கங்களால் கெட்டி தட்டிப் போன மதபீடங்கள் நெகிழ்ந்து கொடுக்க மறுத்தன.
குருநானக் புதிய மதத்தை உருவாக்க விரும்பினார். ஏன்? இரண்டை ஒன்றாக்க நினைத்தார். இந்து மதத்தையும் இஸ்லாம் மதத்தையும் இணைத்து ஒரே மதமாக்க முயன்றார். இணைப்பிற்கு உரிய இரண்டு மதங்களிலும் அற்புதமான வாழ்வியற் கொள்கைகள் இருந்தன. குருநானக் வெற்றியும் பெற்றார்! இந்து-இஸ்லாமிய இணைப்பாகச் சீக்கியமதம் தோன்றியது. அனுபூதிச் செல்வர் குருநானக் வெற்றி பெற்றார். இந்து, முஸ்லீம் மக்கள் இணைந்தனர். சக்கரவர்த்தி அக்பர் ஏற்றார். ஏன், இன்றும் ஞானச் செல்வர் குருநானக் வழியில் இந்திய மக்கள் நடைபயிலக் கூடாது?