மணி பல்லவம் 4/13. நீலநாகரின் நினைவுகள்
நீலநாகருடைய வாழ்க்கையில் சந்திப்புக்கும், பிரிவுக்கும், அதிகமான வாய்ப்புக்கள் ஏற்பட்டதில்லை. யாரையாவது சந்திக்க வேண்டும் என்று தவித்துத் தவித்து அவர் வருந்தியதுமில்லை. அப்படித் தன்னைத் தவிக்கச் செய்தவரை எதிரே சந்தித்து அதனால் மகிழ்ந்ததுமில்லை. பிரிந்து துக்கப்பட்டதும் இல்லை. ஊசியின் நுனிபோல் வீரனுடைய வாழ்க்கை, குறி வைப்பதில் தைத்துப் பாய்கிற தன்மை ஒன்றே ஆற்றல். எஃகுபோல் இறுகிய உடலும் உள்ளமும் கொண்டு நெடுங்காலமாகச் சிறந்து விளங்கி வரும் ஆலமுற்றத்து மரம்போல் படர்ந்து நிமிர்ந்து தனி நின்ற பெரு வீரராகிய அவர் இப்போது முதன் முதலாக ஒரு பிரிவை உணர்ந்தார். இன்னதென்று கூற முடியாத ஏதோ ஒரு உணர்வுதம் மனத்தில் கலங்குவதையும் கலக்குவதையும் அறிந்தபோது அதுதான் பிரிவாயிருக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. யாருடைய பயணத்தினால் இப்போது அவருடைய மனம் பிரிவை உணர்கிறதோ அவனுடைய வாழ்வின் தொடக்க நாளிலிருந்தே அவனைச் சில நாட்கள், பல நாட்கள், திங்கள்கள் காணவும் பேசவும் நேராமல் பிரிந்திருக்கிறார் அவர். அப்போதெல்லாம் அதைப் பிரிவென்று உணரவோ அதற்காகக் கலங்கவோ தோன்றியதில்லை அவருக்கு. படைக்கலப் பயிற்சியை எல்லாம் முடித்துக் கொண்டு இளங்குமரன் ஆல முற்றத்திலிருந்து அருட்செல்வருடைய தவச் சாலையிலேயே போய் வசிக்கத் தொடங்கியபோதோ அவன் திருநாங்கூரில் தங்கியிருந்த போதோ காவிரிப்பூம்பட்டினத்தில் அவன் இல்லை என்பதை மட்டும் அவர் உணர்ந்திருந்தாரே ஒழிய அதற்காகச் சிறிதும் வருந்தியதில்லை. இன்று அவனை மணிபல்லவத்துக்குக் கப்பலேற்றிய பின்போ அதற்காக வருந்தவும், அந்தப் பிரிவை உணரவும் வேண்டும்போல அவர் தவித்தார். திருநாங்கூரில் பெற்ற கல்வியோடு. அந்தக் கல்வியால் அழகு பெற்று, அகமும் முகமும் ஒளிர வந்து நின்று பூம்புகாரில் பேரறிஞர்களையெல்லாம் வென்று வாகை சூடிய வெற்றியோடு அவன் மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுச் சென்றபோது தன் பக்கத்திலேயே தன்னோடு இருக்க வேண்டிய அரும் பொருள் ஒன்று தன்னிடமிருந்து பிரிந்து செல்லுவது போல எண்ணி ஏங்கினார் அவர். ‘வாளையும் வேலையும் எடுத்து ஆள்வதுதான் ஆண்மை என்று எண்ணிக் கொண்டிராதே. மனதை நன்றாக ஆளவேண்டும் அதுதான் ஆண்மை’ என்று எப்போதோ இளங்குமரனுக்கு அறிவுரை சொல்லியிருந்தார் அவர். ஆனால் தன்னுடைய மனத்தையே ஆள முடியாமல் அவர் இப்போது தவித்தார். மூப்புக் காலத்தில் தன் ஒரே புதல்வனைப் பிரிய நேர்ந்த தந்தையின் தளர்ந்த மனநிலையோடு இருந்தார் அவர்.
இந்த இளங்குமரனுக்கும், தனக்கும் முன் பிறவி தொடர்பு ஏதேனும் விட்டகுறை தொட்ட குறையாக இருக்க வேண்டுமென்று தோன்றியது அவருக்கு. ஆல முற்றத்துப் படைக்கலச் சாலையில் அந்த விநாடியிலும் அவரைச் சுற்றி அவருடைய மாணவர்களாக நூற்றுக் கணக்கான இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் தன்னைத் தெய்வமாக மதித்து வணங்குகிறவர்கள் என்றும் அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் மனம் இளங்குமரன் ஒருவன் மேல்தான் பாசம் கொண்டது. தான் கற்பித்த படைக்கலப் பயிற்சியையும் விட அதிகமாக மனத்துக்கு வளந்தர முடிந்த பயிற்சியை அவன் திருநாங்கூரில் பெற்றுக் கொண்டு வந்திருப்பதாகவும் அவருக்குத் தோன்றியது. அவன் மனத்தினாலும் சிந்தனைகளாலும் முதிராதவனாக உடலினால் மட்டும் வலிமை முதிர்ந்து நின்றபோது இதே ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் தான் அவனுக்கு அறிவுரை கூற நேர்ந்த சந்தர்ப்பங்களையும் திருநாங்கூரிலிருந்து திரும்பியபின் மனத்தினாலும் சிந்தனைகளாலும் முதிர்ந்து அவனே பலருக்கு அறிவுரை கூற நேர்ந்த சந்தர்ப்பங்களையும் இணைத்து நினைத்துப் பார்த்தபோது நீலநாகருடைய விழிகளில் ஆனந்தக் கண்ணீர் அரும்பிற்று. ஒரு காலத்தில் தனக்குக் கற்பித்தவற்றைக் காட்டிலும் அதிகமானவற்றைத் திருநாங்கூர் அடிகள் இளங்குமரனுக்குக் கற்பித்திருப்பதாகத் தெரிந்தும் தன்னுடைய ஆசிரியரிடம் அவருக்குக் கோபமோ, பொறாமையோ வரவில்லை.
“அவருடைய தத்துவங்கள் நிலைத்து வாழ்வதற்குத் தகுந்த உரமான மனநிலம் எது என்று தேடி உணர்ந்து அதில் அவர் அவற்றைப் பயிர் செய்திருக்கிறார்” என்று திருப்தி கொண்டாரே தவிரச், சிறிதும் பொறாமைப்படவில்லை. மாறாகப் பலமுறை அதற்காகப் பெருமைப்பட்டிருக்கிறார் அவர்.
“நீலநாகர்! நான் இவ்வளவு காலம் தவம் செய்து கொண்டிருந்ததன் பலனே இப்போது இந்த மாணவனாக விளைந்து என்னிடம் வந்திருப்பதாக எண்ணுகிறேன். பெண்களுக்கு நல்ல நாயகர்கள் கிடைப்பது போல் கலைகளுக்கும் அவற்றை ஆள்பவர்கள் தகுதி நிறைந்தவர்களாகக் கிடைக்க வேண்டும். இந்த இளைஞனுடைய மனம் எதையும் ஆள்வதற்கு உரிய பக்குவம் பெற்றிருக்கிறது. ‘நான் குருவாகக் கிடைத்ததற்கு முற்பிறவியில் தாங்கள் தவம் செய்திருக்க வேண்டும்’ என்று எத்தனையோ இளைஞர்கள் என்னிடமே என்னை வியந்திருக்கிறார்கள். நானோ இளங்குமரன் என்னும் ஒரு சிறந்த மாணவன் என்னிடம் வந்து சேர்வதற்காக இத்தனை நாள் எனக்குள்ளே தவம் செய்து கொண்டிருந்ததாக உணர்கிறேன்-” என்று முன்பு எப்போதோ திருநாங்கூரடிகள் தன்னிடம் மனம் நெகிழ்ந்து கூறியிருந்ததை நினைத்துக் கொண்டார் நீலநாகர். திருநாங்கூர் அடிகள் யாரைப் பற்றியும் எதற்காகவும் மிகைப்படப் புகழ்ந்து பேசாதவர். பிறருடைய தகுதிகளைக்கூடப் புரிந்து மனத்தில் நினைத்துக் கொள்வதுதான் அவருடைய வழக்கம். அப்படிப் பட்டவருடைய சொற்களாலேயே இளங்குமரன் புகழப் பட்டதை நினைத்தபோது மெய்சிலிர்த்தார் நீலநாக மறவர். தன்னைப் புகழ்வதாலும் கூட அப்படிப் புகழ்கிறவர்களை இன்பமடையச் செய்யும் பவித்திரமான பிறவியாக அவன் தோன்றியிருப்பதை இந்தச் சம்பவத்தின்போது நீலநாகர் புரிந்துகொண்டார்.
இளங்குமரன் காவிரிப்பூம்பட்டினத்துச் சம்பாபதி வனத்தில் விடலைப் பருவத்து இளைஞனாகத் திரிந்து முரட்டுச் செயல்களைப் புரிந்தபோதுகூட அப்படியும் ஒரு காட்டாற்று வாழ்க்கையைச் சிறிது காலம் வாழ்ந்து பார்த்துவிட்டுப் பின்பு அதில் ஒன்றுமில்லை என்று கைவிட்டு விடுவதற்காகவே அவன் அப்படி வாழ்ந்தது போலத் தோன்றியது நீலநாகருக்கு. அவனுடைய இளமைப் பருவத்து வாழ்வை எண்ணியபோது ‘பயனில்லாத காரியத்தைச் செய்வதிலும் இன்னதிலே இன்ன காரணத்தினால் பயனில்லை என்று பயனின்மையைப் புரிந்து கொள்வதாகிய ஒரு பயன் உண்டு’ என்று மணி பல்லவத்துக்குக் கப்பலேறிப் புறப்படுவதற்கு முந்திய நாள் அவனே வளநாடுடையாரிடம் கூறிக்கொண்டிருந்த சொற்களைத்தான் இப்போது நினைத்துக்கொண்டார் நீலநாகர். அப்படிப் பயனின்மையைப் புரிந்துகொள்வதற்கு வாழ்ந்த வாழ்க்கைதானோ அந்தப் பருவத்தில் அவன் வாழ்ந்தவை என்று நினைந்து வியக்க முடிவது தவிர அதைப் பற்றிப் பிழையாக எண்ணுவதற்கு வரவில்லை அவருக்கு. ‘இந்த உடம்பின் வலிமையை எதிர்ப்பதற்குத் துணிவுள்ளவர்கள் யாராவது இருக்கிறார்களா?” என்று எதிரே வருகிறவர்களையெல்லாம் கேள்வி கேட்பது போன்ற உடம்போடு அப்போது மதர்த்துத் திரிந்த அதே இளங்குமரன்தான் இப்போது நாளங்காடியில் அந்தப் பட்டினப்பாக்கத்துப் பெண்னின் மேல் இந்திர விழாக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடுஞ் சீற்றமடைந்து கல்லெறிய முற்பட்டபோது அந்தக் கல்லெறியை எல்லாம் தன் உடலில் தாங்கிக்கொள்ள முன்வந்து அருள்நகை பூத்தவன் என்பதை நினைத்துக் கொண்டார் நீலநாகர்.
அதே நாளங்காடியில் இளங்குமரன் பசி மயக்கத்தினால் சோர்ந்து தன் மார்பில் சாய்ந்தபோது அவனுடைய அந்தப் பொன்னுடல் தன்மேல் கற்பூர மணம் கமழச் செய்ததையும் முகுந்தபட்டரை வாதத்தில் வென்று அந்த வெற்றியாலும் அகங்காரம் அடையாமல் தன்னடக்கமாக அவருக்கு மறுமொழி கூறியதையும், வார்த்தைகளை அளவாகவும் ஆற்றலுள்ளவையாகவும் பயன்படுத்தி எதிரியை விநாடி நேரத்தில் வீழ்த்தி விடவல்ல சமதண்டத்து ஆசீவகர்களைக் கூட்டமாக வென்றதையும் எண்ணி எண்ணிப் பூரித்தார் நீலநாக மறவர்.
இளங்குமரனுடைய வாழ்க்கையில் வீரம் இருந்தது. அழகு இருந்தது; காதல் இருந்தது; அறிவு இருந்தது; அருள் இருந்தது. இன்னும் மகாகவிகள் எவ்வெவ்வற்றை யெல்லாம் காவிய குணங்கள் என்று தேர்ந்தெடுத்துத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டாடிப் போற்றிக் கவிதையாகவும், காவியமாகவும் எழுதி வைத்திருக்கிறார்களோ அவையெல்லாம் அவனுடைய வாழ்வில் இருப்பதாகப் புரிந்து கொண்டார் நீலநாகர். பெண்ணின் செவிகளில் போய்ப் பொருந்திய பின்பு குண்டலங்களுக்கு அப்படிப் பொருந்திய இடத்தால் அழகு வருவதாகப் பொற்கொல்லர்கள் கூறுவதை நீலநாகர் வன்மையாக மறுத்திருக்கிறார். ‘குண்டலத்தால் பெண்ணுக்கு அழகு வளர்வதாக வேண்டுமானால் சொல்லலாம். பெண்ணால் குண்டலத்துக்கு அழகில்லை’ என்று முரட்டுத்தனமாக ஆலமுற்றத்துப் பொற்கொல்லர்களிடம் பலமுறை வாதிட்டிருக்கிறார் அவர். அவரே இப்போது அந்த உவமையை வேறு விதமாக மாற்றி இளங்குமரனோடு பொருத்தி நினைக்கத் தொடங்கியிருந்தார். இளங்குமரன் காவிய குணங்களைப் பெற்றதனால் அழகு கொண்டான் என்பதற்குப் பதிலாகக் காவிய குணங்கள் தமக்கு நாயகனாக அவனைப் பெற்றதனால் அழகு கொண்டிருக்க முடியும் என்று மாற்றி நினைத்தார் அவர். ‘நான் நினைத்துக் கொண்டிருக்கிற எண்ணங்களை விதைப்பதற்கு எனக்கு காவிய நாயகன் வேண்டும் என்று முதன் முதலாக இளங்குமரனைத் திருநாங்கூருக்கு அழைத்துக் கொண்டு போனபோது தம்மிடம் அடிகள் கூறியது இப்போது மீண்டும் நினைவு வந்தது அவருக்கு. மலை பொங்குவது போல் அவருடைய உடம்பு பெருகி நெட்டுயிர்த்தது. ஆலமுற்றத்துக் கடற்பரப்பும், அதன் கோடியில் தொடு வானமும் கடலும் இணைவதுபோலத் தெரிந்த பொய் யழகும் அவருடைய கண்களில் தெரியாமல் மறைந்து அந்த இடமெல்லாம் இளங்குமரனே தெரிந்தான்.
‘உலகத்தில் ஏதாவது ஒரு பொருளின்மேல் மட்டும் அதிகமாக ஆசைப்படுகிறவன் வீரனாக இருக்க முடியாது... நிறைந்த வீரன் என்பவன் ஒருவகையில் துறவியாகவும் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் வென்று கைப்பற்றி நிமிர்ந்து நிற்கும் ஆற்றலைப் போல் எல்லாவற்றையும் விட்டுவிடுகிற தைரியமும் வீரனுக்கு இருக்க வேண்டும். ஆசைப்பட்டுச் சேர்ப்பதற்கு ஒரு பங்கு ஆற்றல் போதுமென்றால், ஆசைப்பட்டுச் சேர்த்த பொருளையும் அதைச் சேர்க்கக் காரணமாயிருந்த ஆசையையும் விடுவதற்கு இரண்டு பங்கு ஆற்றல் வேண்டும். உயர்ந்த தரத்து வீரம் என்று இதைத்தான் நீலநாகர் எண்ணிக் கொண்டிருந்தார். அவருடைய அந்தரங்கமான வாழ்க்கை நோக்கமும் இதுதான். அடித்துப் பிடித்துச் சேர்த்து வைக்கும் வீரத்தைவிட ‘இதை இழக்கக் கூடாது’ என்கிற வகையைச் சேர்ந்த சிறந்த செல்வத்தையும் மனம் ஒப்பி இழக்கத் துணிகிற வீரன்தான் தேர்ந்தவன் என்ற குறிக்கோள் அவருடையது. ஆனால் அவராலேயே இப்போது இளங்குமரனைப் பற்றிய நினைவை இழப்பதற்குத் துணிய முடியவில்லை. அந்நினைவுகளை எல்லாம் ஒவ்வொன்றாக மனத்தில் எண்ணி எண்ணித் திரும்பத் திரும்பச் சேர்த்து வைக்க முயலுகிற பேராசைக்காரராக மாறிக் கொண்டிருந்தார் அவர்.