கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி/குலோத்துங்கன்

விக்கிமூலம் இலிருந்து

குலோத்துங்கன்



குலோத்துங்கன் சளுக்கியர் மரபில் வந்தவன்; சோழர் குலத்தை விளங்கவைத்துப் பெருவீரனாய்த் திகழ்ந்த பேரரசன். இவன் தந்தை சளுக்கிய குலத்து இராசராசன்; தாய் கங்கைகொண்ட சோழனின் மகளான அம்மங்கை. இராசராசனும் கங்கைகொண்டானின் உடன் பிறந்தாள் மகனேயாவன்[1]. மூன்று தலைமுறையாக சோழர்களும் சளுக்கியர்களும் ’கொள்வினை கொடுப்பினை’யுடன் உறவு கொண்டிருந்தனர். சோழர்-சளுக்கியர் உறவினை அடியிற் குறிப்பிட்ட மரபு வழிப்படம் ஓரளவு விளக்கும்.

  (சோழர்)                 (கீழைச்சளுக்கியர்)
இராசராசன்-I
         │
    ┌────┴──────────────────┐
    │                       │
இராசேந்திரன் I         குந்தவை X விமலாதித்தன்
    │                       │
┌───┴─────────────┐         │
விசயராசேந்திரன் அம்மங்கை X இராசராச நரேந்திரன்
   │                  │
மதுராந்தகி X குலோத்துங்கன்-I

இந்த உறவு முதன் முதலில் எவ்வாறு தொடங்கிற்று என்பதை விளக்குவோம். முதலாம் இராசராசன் காலத்தில்தான் (கி. பி. 985-1014) இடைக்காலத்துச் சோழர்களின் புகழ் பல்வகையானும் சிறப்புற்றோங்கியது. நாட்டின் பரப்பும் விரிந்தது. இராசராசன் கி. பி. 985-ல் அரியணை ஏறனான். கி. பி. 972 முதல் 989 வரை கீழைச் சளுக்கியரது ஆட்சிக்குட்பட்டிருந்த வேங்கி நாடு உள்நாட்டுக் கலகங்களால் அல்லலுற்றிருந்தது.[2] அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு முதலாம் இராசராசன் தன் மகனாகிய முதலாம் இராசேந்திரனை ஒரு பெரும் படையுடன் வேங்கி நாட்டிற்கு அனுப்பினான். அவன் அந்நாட்டை வென்று அந்நாட்டைத் தனக்குரிமையாக்கிக் கொண்டதுடன் அந்நாட்டு மன்னனாகிய விமலாதித்தனையும் சிறை பிடித்துக் கொண்டு தஞ்சைக்குத் திரும்பினான். விமலாதித்தனும் தஞ்சையில் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தான்.

இராசராசன் விமலாதித்தனைச் சிறைவீடு செய்து தன் மகள் குந்தவையை அம்மன்னனுக்கு மணமியற்றித் தந்தான். அஃதுடன் அமையாமல் அவன் நாட்டையும் அவனுக்கு வழங்கி, அதனை ஆட்சி புரியும் உரிமையையும் அளித்தான். விமலாதித்தன் கி. பி. 1015 முதல் கி. பி. 1022 வரை ஆட்சி புரிந்து வந்தான். விமலாதித்தனுக்கு இராசராச நரேந்திரன், விசயாதித்தன் என்ற இரு மக்கள் இருந்தனர். விமலாதித்தன் இறந்த பிறகு இராசராச நரேந்திரனே மணிமுடி கவிக்கப் பெற்று நாட்டை ஆளத் தொடங்கினான். அந்தக் காலத்தில் சோழநாட்டை முதலாம் இராசேந்திரன் (கி. பி. 1012-1944) ஆண்டு வந்தான் ; தஞ்சையை விட்டு கங்கை கொண்ட சோழபுரம்[3] என்ற புதியதோர் தலைநகரை ஏற்படுத்தினான். அவன் தன் மகள் அம்மங்கையை தன் உடன்பிறந்தாளது மகனான இராசராச நரேந்திரனுக்குக் கடிமணம் இயற்றினான் மனமக்கள் இருவரும் வேங்கி நாட்டில் வாழ்ந்து வந்தனர்.

சில ஆண்டுகள் கழித்த பின்னர் அம்மங்கை தேவி கருவுற்றனள். கருவுயிர்ப்பதற்காக தன் தாய் வீட்டிற்குச் சென்று அங்கு ஒர் ஆண் மகனை ஈன்றாள். அந்தப் பிள்ளைதான் பிற்காலத்திய முதலாம் குலோத்துங்கன். பிள்ளை பிறந்த சமயத்தில் பல நன்னிமித்தங்கள் தோன்றின. மக்கள் பெருமகிழ்வுற்றனர். குழந்தையின் பாட்டியார், முதல் இராசேந்திரனின் பட்டத்தரசி, தன் காதற் பேரனைக் கையில் ஏந்திப் பாராட்டிய பொழுது, காலஞ்சென்ற தன் கணவனது அடையாளங்கள் பல அக் குழந்தையின் பால் இருத்தல் கண்டாள். கண்டதும் களிபேரின்பத்துடன்,

இவன் எமக்கு மகனாகி இரவிகுலம்
பாரிக்கத் தகுவன் என்றே[4]

என்று வாழ்த்தினாள் ; அக் குழந்தைக்கு இராசேந்திரன் என்றும் பெயரிட்டாள்.[5] சந்திரகுலத்தைச் சார்ந்த சளுக்கிய அரசர்களும் சூரிய குலத்தைச் சார்ந்த சோழ அரசர்களும் இக் குழந்தையின் பிறப்பால் பெருமகிழ்ச்சி கொண்டிருந்தனர். இராசேந்திரன் கல்வி பயின்று பல கலைகளிலும் தேர்ச்சியுற்றான்; படைக்கலப் பயிற்சி போன்ற துறைகளிலும் தேர்ந்து தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தான். முதல் இராசேந்திரனுக்கு இாாசாதி ராசன், விசயராசேந்திரன், வீரராசேந்திரன் என்ற மூன்று மக்கள் இருந்தனர். மூவரும் தம்மருகன் இராசேந்திரனிடத்துப் பெரிதும் அன்பு காட்டினர். இராசேந்திரனின் ஆற்றலையுணர்ந்த சான்றோர்கள் தாயின் குலத்தையும் தந்தையின் குலத்தையும் ஒருங்கே பெருமையுறச் செய்யப் பிறந்தவன் என்று கருதி, இவனை 'உபய குலோத்தமன்' என்று பாராட்டிப் பேசினர்.

இராசேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்த நாளில், வேங்கி நாட்டில் தன் தந்தையாகிய இராசராச நரேந்திரன் நோய்வாய்ப்பட்டிருப்பதாக ஒரு திருமுகம் வரப்பெற்றனன். அதைக் கண்டதும் மிகவும் கவன்று தன் அம்மான்மார்களிடம் விடை பெற்றுக் கொண்டு வேங்கி நாட்டிற்கு விரைந்தான். வேங்கி நாட்டையடைந்ததும் பிணியுற்றுக் கிடந்த தன் தந்தையின் நிலைமை அவன் மனமுடையச் செய்தது. அருகில் அமர்ந்து அணுக்கத் தொண்டனாய்த் தந்தையை நன்கு கவனித்து வந்தான். கி. பி. 1062-ல் அவன் தந்தை இறந்தனன். இராசேந்திரன் தன் தந்தையின் பெரும்பிரிவிற் காற்றாது மிகவும் வருந்தினன். தந்தைக்கு ஆற்ற வேண்டிய இறுதிக் கடன்களை யெல்லாம் குறைவின்றிச் செய்தான். அம்மான்மார்களும் ஆன்றோரும் கூறிய ஆறுதல்களால் ஒருவாறு அவன் துன்பம் நீங்கியது. அமைச்சரும் உறவினரும் முடிசூட்டுவிழாவிற்கு ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர்.

தென்னாட்டில் சோழர்கள் பல அரசர்களையும் தம்மடிப்படுத்தி முடி வேந்தர்களாய் மேன்மையுற்றுத் திகழ்ந்ததைப் போலவே, தக்கணத்தின் வட பாகத்தில் மேலைச் சளுக்கியர் பெரும் புகழுடன் விளங்கினர். இவ்விரு குலத்தரசர்களும் ஒருவரையொருவர் வென்று கீழ்ப்படுத்த வேண்டுமென்ற எண்ணங் கொண்டவரா யிருந்தனர். முதலாம் இராசராசன் காலத்திலிருந்தே சோழர்கள் கீழைச் சளுக்கிய மன்னர்கட்குத் தம் பெண்களை மணம் புரிவித்து அன்னாரைத் தமது நெருங்கிய உறவினராகச் செய்து கொண்டிருந்தனர். இதனால் கீழைச் சளுக்கியர் உறவு மேலைச் சளுக்கியருக்குக் கிடைக்கச் சந்தர்ப்பமே இல்லாது போய் விட்டது. ஆனல், சோழர்களின் வலியும் பெருமையும் வளர்ந்தோங்கின. அக்காலத்தில் மேலைச் சளுக்கியரின் அரசனாகத் திகழ்ந்தவன் ஆறாம் விக்கிரமாதித்தன்; ஒப்பற்ற பெருவீரன். அவன் கீழைச் சளுக்கியரைச் சோழர்களிடமிருந்து பிரித்துத் தன்பால் சேர்த்துக் கொள்ளும் காலத்தை எதிர்நோக்கியிருந்தான். வேங்கி நாட்டதிபன் இராசராச நரேந்திரன் இறந்ததையறிந்து அதுவே தக்க காலம் என்று கருதி வனவாசியில் தன் பிரதிநிதியாகவிருந்த மாதண்ட நாயனான சாமுண்டராயன் தலைமையில் வேங்கி நாட்டிற்கு ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான்.

அக்காலத்தில் சோழநாட்டு அரசனாகத் திகழ்ந்தவன் வீரராசேந்திரன்.[6] மேலைச் சளுக்கியர் படை வேங்கி நாட்டை நோக்கி வரும் செய்தி அவனுக்குக் கிடைத்தது. தன் முன்னோர் காலம் முதல் நெருங்கிய உறவினால் பிணைக்கப் பெற்றிருந்த வேங்கி மன்னரையும், தங்கள் ஆட்சிக்குட்பட்டிருந்த வேங்கி நாட்டையும் இழப்பது தன் ஆண்மைக்கும் வீரத்திற்கும் மாசு தரும் என்று எண்ணினான்; உடனே ஒரு பெரும் படையுடன் வேங்கி நாட்டிற்கு விரைந்தான். மேலைச் சளுக்கியர்கட்கும் சோழர்கட்கும் ஒரு கடும் போர் நிகழ்ந்தது. போரில் சாமுகாட்டராயன் கொல்லப்பட்டான் ; அவன் கீழ் வந்த படைகள் யாவும் சிதறியோடின.

குலோத்துங்கன் தன் தந்தை இறந்த பிறகு வேங்கி நாட்டை ஆட்சி புரிந்தமைக்குத் தக்க சான்றுகள் இல்லை. அவன் சிறிய தந்தையான விசயாதித்தன் நாட்டையாள பெருவிருப்பங் கொண்டிருந்ததாலும், அவனும் இளைஞனாக இருந்தமையாலும், இளவரசுப் பட்டம் பெற்றிருந்தும்[7] நாட்டின் ஆட்சியைப் பெறமுடியவில்லை. அவன் மாமனான வீரராசேந்திரன் மேலைச்சளுக்கியருடன் போர் நிகழ்த்துவதில் பெரிதும் ஈடுபட்டிருந்தமையால், வேங்கி நாட்டின் நிலையை உணர்ந்து தன் மருமகன் விஷயத்தில் தலையிடுவது இயலாததாயிற்று. [8] நாட்டை விசயாதித்தனே ஆட்சி புரிந்து வந்தான். இதுபற்றி குலோத்துங்கனுக்கும் அவன் சிற்றப்பனுக்கும் பகைமை ஏற்பட்டிருந்தது என்பது விசாயாதித்தன் செப்பேடுகளாலும் அவன் மகன் சக்திவர்மன் செப்பேடுகளாலும் அறியக்கிடக்கின்றது.[9] ஆனால் அப்பகைமை முற்றாமல் நாட் செல்லச்செல்ல குறைந்து கொண்டே போய் யில் நீங்கியது. சத்த்சவர்மன் கி. பி. 1063-ல் இறந்த பின்னர் விசயாதித்தன் தன் தமையன் மகனாகிய குலோத்துங்கமீது அன்பு காட்டினான். குலோத்துங்கனும் தன் சிறிய தந்தை உயிர்வாழுமளவும் வேங்கி நாட்டை ஆளட்டும் என்று அமைதியுடன் இருந்துவிட்டான். சிறிய தந்தை இறந்த பின்னர் வேங்கி நாட்டை ஆளலாம் என்ற எண்ணம் மட்டிலும் அவனிடம் இருந்தது என்பது ஒருதலை.

விசயாதித்தன் வேங்கி நாட்டை ஆண்டு கொண்டிருந்தபொழுதுகுலோத்துங்கன் சோழநாட்டில் தன் மாமன் வீட்டில் வாழ்ந்து வந்தான். அப்பொழுது சோழநாட்டை ஆண்டவன் வீரராசேந்திரன், வீரராசேந்திரன் மேலைச் சளுக்கியர்களுடன் நடத்தியபோர்களில் குலோத்துங்கன் கலந்து கொண்டு தன் அம்மானுக்கு உதவி புரிந்தான் என்பது சில நிகழ்ச்சிகளால் அறியக்கிடக்கின்றது. வீரராசேந்திரன் வேங்கி நாட்டிலுள்ள விசயவாடையில் மேலைச் சளுக்கியருடன் போரிட்டு வெற்றி பெற்று, தன்னிடம் அடைக்கலம் புகுந்த விசயாதித்தனுக்கு அந்நாட்டை அளித்த காலத்தில் குலோத்துங்கனும் அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருத்தல் வேண்டும்.[10] அன்றியும், வீரராசேந்திரன் கடாரத்தரசனுக்கு உதவி புரிவான் வேண்டி பெரும் படை ஒன்று அனுப்பியபொழுது கடாரத்திற்குச் சென்ற தலைவர்களுள் குலோத்துங்கனும் ஒருவன்.[11] எனவே, இவன் வீரராசேந்திரன் காலத்துப் போர் நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கு கொண்டு இளமையிலேயே போரில் சிறந்த பயிற்சி பெற்று ஒப்பற்ற வீரனாகத் திகழ்ந்தான் என்று கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.

வீர ராசேந்திரன் தான் இறப்பதற்கு மூன்று ஆண்டுகட்கு முன்னர், கி. பி. 1007ல், தன் புதல்வர்களுள் ஒருவனுக்கு அதிராசேந்திரசோழன் என்ற அபிடேகப் பெயருடன் இளவரசுப் பட்டம் கட்டியிருந்தான் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படும் செய்தி. கி. பி. 1070 ன் தொடக்கத்தில் வீரராசேந்திரன் இறந்தவுடன் அதிராசேந்திரசோழன் முடிசூடப் பெற்றான். ஆனால், முடிசூடிய சில மாதங்களில் அதிராசேந்திரசோழன் நோய்வாய்ப்பட்டு இறந்தான். இச்செய்தி தஞ்சை மாவட்டத்திலுள்ள கூகூரில் காணப்படும் கல்வெட்டொன்றால் அறியக் கிடக்கின்றது.[12] இவன் உள்நாட்டுக் கலகத்தில் கொல்லப்பட்டான் என்று வழங்கும் செய்தியை திரு. பண்டாரத்தார் அவர்கள் பல ஆதாரங்காட்டி மறுத்திருக்கிருர்கள்.[13] அங்ஙனமே முதற் குலோத்துங்கன் தான் சோழநாட்டைக் கவர்ந்து கொள்ளும் பொருட்டு உள்நாட்டில் கலகம் திகழுமாறு செய்து அதில் அதிராசேந்திரனைக் கொன்றிருத்தல் வேண்டும் என்று சில ஆராய்ச்சியாளர்[14] கருதுவதையும் மறுத்து குலோத்துங்கனுக்கும் அதிராசேந்திரனுக்கும் எத்தகைய பகைமையும் இல்லை என்பதும் அவனால் இவ்வதிராசேந்திரன் கொல்லப்படவில்லை என்பதும நன்கு நிலைநிறுத்தப் பெற்றிருக்கின்றன.[15] அதிராசேந்திரனேப்பற்றியே கலிங்கத்துப்பரணி குறிப்பிடாததற்கும், வீரராசேந்திரன் மெய்க்கீர்த்தியின் இரண்டடிகளும் 'புகழ் மாது விளங்கச் செயமாது விரும்ப' என்று தொடங்கும் இவ்வேந்தனுடைய மெய்க்கீர்த்தியும் கலந்து வரையப் பெற்றிருப்பதற்கும் காரணம் வீரராசேந்திரனுக்குப் பிறகு உரிமைப்படி சோழராஜ்யத்திற்கு அரசனாக்கப் பெற்றவன் குலோத்துங்கனே என்று உணர்த்துவதற்கேயாம் என்று திரு K. A. நீலகண்ட சாஸ்திரியார் கருதுகிறார்கள்.[16] சோழ ராஜ்யத்தின் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய சமயத்தில் குலோத்துங்கன் தலைநகரிலில்லாது திக்விஜயம் புறப்பட்டதும், குலோத்துங்கன் ஆட்சிக்கு வந்ததும் அவனை வீழ்த்துவதற்கு ஆறாம் விக்கிரமாதித்தன் முயற்சி செய்ததும், அதிராசேந்திரனைப்பற்றிக் கலிங்கத்துப் பரணி குறிப்பிடாததும் அதிராசேந்திரன் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப் பெறும் உள்நாட்டுக் கலகத்தில் குலோத்துங்கனும் பங்கு கொண்டிருத்தல் கூடும் என்று யூகிக்க இடமுண்டு என்று திரு.சாஸ்திரியார் கருதுகிறார்கள்.[17] திரு.பண்டாரத்தார் அதிராசேந்திரன் காலத்தில் நாடு அமைதியாக இருந்தது என்று கல்வெட்டு ஆதாரத்தால் நிறுவியதும், வீரராசேந்திரனும் குலோத்துங்கனும் இராசகேசரி என்ற பட்டம் புனைந்து கொண்டவர்களாதலால், குலோத்துங்கனுக்கு முன்னதாக பரகேசரி என்ற பட்டம் புனைந்த வேந்தன் ஒருவன் இருந்தமையையும் அவன் உரிமையையும் ஒப்புக் கொண்டவன் என்று காட்டியதும் எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய காரணங்களாகும். விக்கிரமாங்கதேவ சரிதமும் விக்கிரம சோழன் உலாவும், அதிராசேந்திரன் ஆட்சியைக் குறிப்பிடுகின்றன. கலிங்கத்துப் பரணி அவன் ஆட்சியைக் குறிப்பிடாததற்கு யாது காரணமாக இருத்தல் கூடும் என்று யூகிக்க முடியவில்லை. அதுகிடக்க.

வீர ராசேந்திரனுக்குப் பிறகு சில திங்கள் வரை அரசாண்ட அதிராசேந்திரன் கி.பி.1070-ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்டு இறந்தனன். சோழர் மரபில் அரசகுமாரன் ஒருவனும் இல்லாமையால், குறுநில மன்னரது கலகமும் உள்நாட்டுக் குழப்பமும் எழுந்தன. இவற்றைத்தான் சயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் குறிப்பிடுகிறார்.[18] இச்செய்தி குலோத்துங்கன் மெய்க்கீர்த்திகளாலும் கின்றது. [19] இங்ஙனம் சோழநாடு நிலை குலைந்திருந்த செய்தியை வடபுலத்தில் போர் புரிந்து கொண்டிருந்த குலோத்துங்கன் அறிந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு விரைந்தான். அங்கிருந்த அமைச்சர், படைத் தலைவர் முதலியோர் சோழனுடைய மகள் வயிற்றுப் பேரன் என்ற உரிமை பற்றி இவனை அரசனாக ஏற்றுக் கொண்டு முடிசூட்டினர். அந்த நாளிலிருந்துதான் குலோத்துங்கன் என்ற அபிடேகப் பெயரைப் பெற்றான்; அதற்கு முன் அவனுக்கு வழங்கி வந்த பெயர் இராசேந்திரன் என்பது. அவன் அடைந்த வெற்றிகள், அவனுடைய ஆட்சி முறை முதலிய செய்திகளை வரலாற்று நூல்களில் விரிவாகக் கண்டு கொள்க. அவன் மேற்கொண்ட போர்களைப் பற்றி கலிங்கத்துப் பரணி குறித்திருப்பது முன்னரே சுட்டப் பெற்றது.[20] அவன் கருணாகரனைக் கொண்டு கி. பி. 1112-ல் நடத்திய வட கலிங்கப் போர்தான் கலிங்கத்துப் பரணியின் நூற் பொருளாக அமைந்தது. கலிங்கத்துப் பரணியில் குறிப்பிடப் பெறும் நிகழ்ச்சிகள் யாவும் செப்பேடுகளிலும் கல்வெட்டுக்களிலும் காணப் பெறும் செய்திகளோடு ஒத்திருப்பதாக அறிஞர்கள் ஆராய்ந்து கூறி யுள்ளனர்.[21]



  1. S. I. I. vol 1. No. 39. A grant of Vira choda, verses 6-8.
  2. வேங்கி நாடு என்பது கிருஷ்ணா, கோதாவரி என்ற இரு பேராறுகளுக்கும் இடையில் கீழ்க்கடலைச் சார்ந்துள்ள ஒருநாடு. அந்நாட்டை ஆண்டுவந்தவர்கள் கீழைச் சளுக்கியர்கள்.
  3. இது திருச்சி மாவட்டம்-உடையார் பாளையம் வட்டத்தில் உள்ளது.
  4. தாழிசை-237
  5. S.MI.I. Vol 7 No.765 (செல்லூர்ச் செப்பேடு)
  6. முதலாம் இராசேந்திரனுக்குப் பிறகு சோனாட்டை ஆண்ட இராசாதிராசன் சளுக்கிய மன்னனான ஆகவ மல்லளனோடு புரிந்த கொப்பத்துப் போரில் கி பி. 1058-ல் உயிர் துறந்தான்; உடனே அவன் தம்பி விசயராசேந்திரன் பொருகளத்தில் முடி கவித்துக் கொண்டு போரை நடத்தி வெற்றி பெற்றான். (தாழி-204: S. i. 1. vol.-V. No. 64.) இவன் தன் மகள் மதுராந்தகியைத் தன் மருமகன் இராசேந்திரனுக்கு மணம் புரிவித்துக் கொடுத்தான். இவனும் சளுக்கியருடன் நிகழ்த்திய போரொன்றில் இறந்தான். இவனுக்குப் பிறகு இவன் தம்பி வீரராசேந்திரன் கி-பி 1663-ல் கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு கட்டில் ஏறினான். இவன் பேராற்றல் வாய்ந்த பெரு வீரன். இவன் காலத்தில்தான் கூடல் சங்கமப் போர் நடைபெற்றது.
  7. தந்தையிருந்த பொழுதே இளவரசுப் பட்டம் பெற்று 'எழாம் விஷ்னுவர்த்தனன்' என்ற பெயருடன் விளங்கினான். Ins 396 & 400 of 1933
  8. 9 Ep. Ind. Vol 25 p 248
  9. 20 Ryali piates of Vijayaditya VII and the Telugu Academy piates of Sakthivarmaan II
  10. K. A. Nilakanta Sastri: The Colas (Second Edition) pp. 261-2
  11. தாழிசை-151. ஆனால் இவனது மெய்க்கீர்த்திகளில் அச்செயல் குறிக்கப் பெறவில்லை. எனவே, இவனது ஆட்சிக் காலத்தில் அது நிகழவில்லை என்பது ஒருதலை. ஆகவே, இவனது இளமைப் பருவத்தில் வீரராசேந்திரன் ஆட்சியில் நிகழ்ந்த கடாரப் படையெடுப்பில் இவனும் கலந்து கொண்டு அங்குச் சென்று போர் புரிந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். (T. V. சதாசிவ பண்டாரத்தார். பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி II பக். 5 அடிக் குறிப்பு)
  12. inscription 280 of 1917,
  13. பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி II பக்-252-237,
  14. Annual Report on Epigraphy for 1904, page 11
  15. பிற்காலச் சோழர் சரித்திரம். பகுதி. பக். 259-60; பகுதி-II பக். 11-12.
  16. The Colas (Second Edition) p. 294.
  17. ibid p. 294 & 295.
  18. தாழிசை,258, 259, 260, 261
  19. "அருக்கனுதயத் தாசையி லிருக்கும்
    கமலமனைய நிலமக டன்னை
    முந்நீர்க் குளித்த வந்நாள் திருமால்
    ஆதிக் கேழலாகி யெடுத்தன்ன
    யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத்
    தன்குடை நிழலி லின்புற விருத்தித்
    திகிரியும் புலியுந் திசைதொறும் நடாத்திப்
    புகழும் தருமமும் புவிதொறும் நிறுத்தி”
                         (S. I. I. Vol 3. No. 66)
    "தென்றிசைத்
    தேமரு கமலப் பூமகள் பொதுமையும்
    பொன்னி யாடை நன்னிலப் பாவை
    தனிமையும் தவிர வந்து புனிதத்
    திருமணி மகுடம் உரிமையிற் சூடித்
    தன்னடி யிரண்டுந் தடமுடி யாகத்
    தொன்னில வேந்தர் சூட முன்னை
    மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச்
    செங்கோல் திசைதொறுஞ் செல்ல
                          (S. I, I, Vol II No. 701)

  20. இந்நூல் பக்கம்--60
  21. T. V. சதாசிவ பண்டாரத்தார் ; பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி-II. பக்கம்-29,