உள்ளடக்கத்துக்குச் செல்

முதற் குலோத்துங்க சோழன்/சோழமண்டலத்திற்கு வருதல்

விக்கிமூலம் இலிருந்து
நான்காம் அதிகாரம்
குலோத்துங்கன் சோழமண்டலத்திற்கு வருதல்

சோழநாட்டில் முதலாம் இராசராசசோழன் கி. பி. 1014-ல் விண்ணுலகெய்திய பின்னர் அவனது புதல்வனாகிய முதலாம் இராசேந்திரசோழன் அரியணை ஏறினான். இவனைக் கங்கைகொண்டசோழனென்றும் வழங்குவர். இவனது ஆளுகையில் சோழமண்டலம் ஈடும் எடுப்புமற்ற நிலையை யடைந்தது. மற்றைச் சோழமன்னர்களது ஆட்சிக்காலங்களில் இச்சோழமண்டல இத்தகையதொரு சிறப்பும் பெருமையும் எய்தவில்லையென்றே கூறலாம். இவ்வேந்தன் மண்ணைக்கடக்கம், ஈழம், இரட்டபாடி, கோசலநாடு, உத்தரலாடம், தக்கணலாடம், வங்காளம், கடாரம், பப்பாளம், இலாமுரி தேசம் முதலான நாடுகளையும், கங்கையாற்றைச் சார்ந்த சில பகுதிகளையும் வென்று பெரும் புகழுடன் விளங்கினான். இவனைப் 'பூர்வதேசமுங் கங்கையுங் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரிவர்மன்' என்று கல்வெட்டுக்கள் கூறும். இவன் வடநாட்டு வேந்தர்களை வென்று கங்கைநீர் நிரம்பிய குடங்களை அவர்களுடைய தலைகளில் ஏற்றிச் சோழமண்டலத்திற்குக் கொண்டுவரச்செய்து, திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் பெரியதோர் ஏரி வெட்டு வித்து[1] அக்கங்கை நீரை அதில் ஊற்றி அதற்குச் 'சோழ கங்கம்' எனப் பெயரிட்டான். இந்த ஏரியின் பக்கத்துள்ளோர் இதனைப் பொன்னேரி என்று இப்போது வழங்குகின்றனர். இதனருகில் இவ்வேந்தன் தான் வட நாட்டில் அடைந்த வெற்றிக்கு அடையாளமாக ஒரு நகர் அமைத்து அதற்குக் கங்கைகொண்டசோழபுரம் என்று பெயரிட்டனன். இவன்காலமுதல் இப் புதியநகரமே சோழர்களுக்குத் தலைநகரமாயிற்று. இங்கு இம்மன்னனால் எடுப்பிக்கப்பெற்ற கங்கைகொண்ட சோழேச்சுரம் என்ற சிவன் கோயில் ஒன்றுளது. இஃது ஒன்பதாம் திருமுறையாசிரியருள் ஒருவராகிய கருவூர்த்தேவரால் பாடப்பெற்றது. பழையாறை என்று தற்காலத்து வழங்கும் முடிகொண்டசோழபுரத்தும் [2] இவ்வேந்தனுக்குப் பெரியதோர் அரண்மனை இருந்தது. முடிகொண்டான் என்ற பெயருடன் தஞ்சாவூர் ஜில்லாவில் இப்போதுள்ள முடிகொண்டசோழப் பேராற்றை வெட்டுவித்தவனும் இவ்வரசனே யாவன். இவ்வேந்தன் கி. பி. 10-14-ஆம் ஆண்டில் இறந்தான்.

பிறகு இவனுடைய மக்களுள் முதல்வனாகிய முதலாம் இராசாதிராசசோழன் பட்டத்திற்கு வந்தான். இவன் தன் தந்தையைப் போன்ற பெருவீரன். இவன் மேலைச் சளுக்கியரோடு அடிக்கடி போர்புரிந்து இறுதியில் சளுக்கியமன்னனான ஆகவமல்லனோடு புரிந்த கொப்பத்துப்போரில் கி. பி. 1054-ல் உயிர் துறந்தான். இவனைக் 'கலியாணபுரமும் கொல்லாபுரமும் கொண்டருளி ஆனை மேல் துஞ்சியருளிய பெருமாள் விசயராசேந்திரதேவன்' என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. பின்னர், இவனது தம்பியாகிய இரண்டாம் ராசேந்திரசோழன் பொருகளத்தில் முடிகவித்து, அப்போரை நடாத்தி வெற்றி பெற்றான். இவன் தன் தந்தையையும் தமையனையும் போலவே சிறப்புடன் அரசாண்டுவந்தான். இவனும் மேலைச்சளுக்கியரோடு தொடர்ந்து போர்செய்துவந்தான். இவன் சளுக்கியரோடு நிகழ்த்திய போரொன்றில் உயிரிழந்தனன் போலும்.

பின்னர், இவனது இளவலாகிய மும்முடிச்சோழன் என்பான் இராசமகேந்திரன் என்ற பெயருடன் பட்டம் பெற்று அரசாளத் தொடங்கினான். இவன் சோழ மண்டலத்தின் ஆட்சியை அடைவதற்குமுன் தன் தந்தையாகிய கங்கைகொண்டசோழனது ஆணையின்படி சேரமண்டலத்திற்கும் பாண்டிமண்டலத்திற்கும் அரசப் பிரதிநிதியாயிருந்து சோழபாண்டியன் என்ற பட்டத்துடன் அவ்விரண்டையும் ஒருங்கே ஆண்டவன். இவன் தன் காலத்தில் சோழமண்டலத்திலுள்ள மக்கள் எல்லோரும் அமைதியாக வாழ்ந்துவருமாறு நன்னெறி வழாது செங்கோல் செலுத்தினான். இத்தகைய பெருங்குண வேந்தனும் சில ஆண்டுகளில் துஞ்சினான்.

பிறகு, இவனது தம்பியாகிய வீரராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில் கி.பி. 1063-ஆம் ஆண்டில் அரசு கட்டிலேறினான். இவ் வேந்தன் பேராற்றலும் பெருவீரமும் படைத்தவன். இவன் முடிமன்னர்களான தன் தமையன்மார்களுக்கும், அன்னோரது மக்களுக்கும் மேலைச்சளுக்கியர்களால் நேர்ந்த ஆற்றொணா இன்னல்களை மனத்திற்கொண்டு, பெருஞ் செற்றமுடையவனாய் அவர்களைப் பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்ற எண்ணத்தோடு பெரும்படையைத் திரட்டிக்கொண்டு அவர்களது இரட்டபாடி நாட்டின் மேற் சென்றான். இவன், இங்ஙனம் ஐந்து முறை படையெடுத்துச்சென்று மேலைச்சளுக்கியரது நாட்டைப் பல விடங்களிற் கொள்ளையிட்டும் சிலவிடங்களில் அழித்தும் பாழ்படுத்தினான். இம்மானக்கேட்டைப் பொறாத மேலைச் சளுக்கியர் தம் படையைத் திரட்டிக்கொண்டு இவனோடு பலவிடங்களில் போர்புரிந்தனர். இறுதியில் கிருஷ்ணையும் துங்கபத்திரையும் கூடும் இடமாகிய கூடல்சங்கமத்தில் கி. பி. 1064-ல் இருப்படைகளும் கைகலந்து பெரும் போர்செய்தன. அப்போரில் மேலைச்சளுக்கிய மன்னர்களாகிய ஆகவமல்லன், விக்கிரமாதித்தன் முதலானோர் தோல்வியுற்றுப் புறங்காட்டி ஓடி ஒளிந்தனர். சளுக்கிய சாமந்தர்களுட் பல்லோர் போர்க்களத்தில் உயிர் துறந்து புகழ் கொண்டனர். வீரராசேந்திரசோழனும் தன்னுடன் பிறந்த முன்னவர் எண்ணம் முடித்து வெற்றித் திருவை மணந்து, தனது தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மகிழ்வுடன் சென்று இனிது செங்கோல் ஓச்சுவானாயினன்.

இங்ஙனம் சோழருக்கும் மேலைச்சளுக்கியருக்கும் நிகழ்ந்துவந்த போர்களில் சோழகுலத்துதித்த முடி வேந்தர் சிலரும் அரசிளங்குமரர் பலரும் இறந்தொழிந்தனர். இறுதியில் எஞ்சியவர் வீரராசேந்திர சோழனும் இவனது மைந்தனான அதிராசேந்திர சோழனுமேயாவர். வீரராசேந்திர சோழனது ஆட்சியில் கி. பி. 1067-ல் இளவரசுப் பட்டங் கட்டப்பெற்ற அவன் புதல்வன் அதிராசேந்திரனுடைய கல்வெட்டுக்களில் வீரராசேந்திரனது ஆட்சியின் எட்டாம் ஆண்டு வரை ஆண்டு குறிப்பிடப்பட்டிருத்தலால் வீரராசேந்திரன் கி. பி. 1070-ஆம் ஆண்டின் முற்பகுதிவரை உயிர் வாழ்ந்திருந்தனன் எனத் தெரிகிறது. பிறகு அவன் மகன் அதிராசேந்திர சோழன் முடிசூட்டப் பெற்றுச் சில திங்கள் அரசுபுரிந்தான். தஞ்சாவூர் சில்லா கூகூரில் காணப்படும் கல்வெட்டொன்று அதிராசேந்திரன் தன் ஆட்சியின் மூன்றாமாண்டில் கொடிய நோய்வாய்ப்பட்டுத் துன்புற்றானென்றும் அவன் நோய் நீங்கி நலம் பெறுதற் பொருட்டுக் கூகூர்க்கோயிலில் இறைவன் திருமுன்னர் நாள் தோறும் இருமுறை தேவாரப் பதிகங்கள் ஓதப்பெற்று வந்தன வென்றும் கூறுகின்றது. இவனது ஆட்சியின் மூன்றாமாண்டு இருநூறாம் நாளுக்குப் பின் இவன் கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்படவில்லை. எனவே நோய்வாய்ப்பட்டிருந்த அதிராசேந்திரன் அந்நாட்களில் உயிர் துறந்தனனாதல் வேண்டும். அதிராசேந்திரனுக்குப் புதல்வன் இல்லாமையாலும் சோழநாட்டில் முடி சூட்டப்பெறுவதற்குரிய வேறு சோழ அரச குமாரனொருவனும் அத்தொல் பெருங்குடியில் இல்லாமையாலும் புகழும் பெருமையும் வாய்ந்த விசயாலய சோழன் காலமுதல் சோழநாட்டில் தொடர்ந்து ஆட்சிபுரிந்து வந்த பண்டைச் சோழமன்னர் மரபு அதிராசேந்திர சோழனோடு முடிவெய்துவதாயிற்று.

இந்நிலையில் கங்கைகொண்ட சோழனது மகள் வயிற்றுப் பேரனும் வீரராசேந்திரசோழனது தங்கையின் மகனும் கீழைச்சளுக்கிய வேந்தனுமாகிய இராசேந்திர னென்பான் வடபுலத்துப் போரில் ஈடுபட்டிருந்தனன். இவன் மத்திய மாகாணத்திலுள்ள வயிராகரம் என்ற ஊரில் எண்ணிறந்த யானைகளைக் கைப்பற்றிக்கொண்டு அவ்வூரையும் எரியூட்டினான்;[3] பின்னர், அம்மாகாணத்திலுள்ள சக்கரக்கோட்டமண்டலத்தை ஆண்டுவந்த தாராவர்ஷன் என்னும் வேந்தனோடு போர்புரிந்து அவனைத் தனக்குத் திறை செலுத்தும்படி செய்தான்.[4] இங்ஙனம் இராசேந்திரன் வடபுலத்தில் பெருவீரத்துடன் போர் செய்துகொண்டிருக்கும் நாட்களில் தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்தில் அதிராசேந்திரசோழன் விண்ணுலகெய்தியதை யறிந்து சோழநாட்டிற்கு விரைந்து வந்தனன்.



  1. 1. S. I. I. Vol. III. No. 205 ; Kanyakumari Inscription of Virarajendra Deva-Epi. Ind. Vol. XVIII. No. 4.
  2. 2. Inscription No. 271 of 1927.
  3. 3. S. I. I. Vol. III. No. 418 ; க. பரணி தா. 239. வயிராகரத்தில் யானைகளும் வைரச்சுரங்கங்களும் முற்காலத்தில் மிகுதியாக இருந்தன என்று 'அயினி அக்பரி' கூறுகின்றது. இது சக்கரக்கோட்டத்திற்கு அண்மையிலுள்ளது. (Epi. Ind. Vol. X. No. 4.)
  4. 4. S. I. I. Vol. III. No. 68 ; க. பரணி - தா. 241. சக்கரக்கோட்டம் என்பது மத்திய மாகாணத்திலுள்ள வத்ஸ ராச்சியத்தில் உள்ளது. (Baster State) இஃது இது போது இந்திராவதி ஆற்றின் தென்கரையில் இருக்கிறது; சித்திரக் கூடம் (Chitrakut) என்று வழங்கப்படுகின்றது; தற்காலத் தலைநகராகிய ஜகதல்பூருக்கு மேற்கே 25 மைல் தூரத்தில் உள்ளது. (Epi, Ind. Vol. IX. page 178.) இதனைத் தலைநகராகக்கொண்டது சக்கரக் கோட்ட மண்டலம் ஆகும். குருஸ்பால் என்ற விடத்திலுள்ள ஒரு கல்வெட்டு "சக்கரக்கூடாதீஸ்வரனாம்.........தாராவர்ஷநாமோ நரேஸ்வரா" என்று கூறுகின்றது. இதனால், சக்கரக்கோட்ட மண்டலத்தை ஆட்சிபுரிந்தவன் தாராவர்ஷன் என்பது உறுதி எய்துகின்றது. (Do-pages 161 & 179)