முதற் குலோத்துங்க சோழன்/சோழமண்டலத்தில் முடிசூடுதல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
ஐந்தாம் அதிகாரம்
குலோத்துங்கன் சோழமண்டலத்தில் முடிசூடுதல்

திராசேந்திரசோழன் இறந்தபிறகு சோழநாடு அரசனின்றி அல்லலுற்றது. குறுநிலமன்னரது கலகம் ஒருபுறமும் உண்ணாட்டுக்குழப்பம் மற்றொருபுறமும் மிக்கெழவே, சோழநாட்டு மக்கள் எல்லோரும் அமைதியான வாழ்வின்றி ஆற்றொணாப் பெருந்துன்பத்துள் ஆழ்ந்தனர். கலிங்கத்துப்பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டார்,

"மறையவர் வேள்வி குன்றி மனுநெறி யனைத்து மாறித்
துறைகளோ ராறு மாறிச் சுருதியு முழக்க மோய்ந்தே

சாதிக ளொன்றோ டொன்று தலைதடு மாறி யாரும்
ஓதிய நெறியி னில்லா தொழுக்கமு மறந்து போயே

ஒருவரை யொருவர் கைமிக் கும்பர் தங் கோயில் சாம்பி
அரிவையர் கற்புச் சோம்பி யரண்களு மழியவாங்கே[1] கலியிருள்பரந்தது"

என்று இக்குழப்பத்தை அந்நூலிற் கூறியுள்ளார். அன்றியும் சோழநாடு அக்காலத்தில் அரசனின்றி அல்லலுற்றிருந்த செய்தியை,

 
“அருக்க னுதயத் தரசையி லிருக்கும்
கமல மனைய நிலமகள் தன்னை
முந்நீர்க் குளித்த அந்நாள் திருமால்

“ஆதிக் கேழ லாகி யெடுத்தன்ன
யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத்
தன்குடை நிழற்கீ ழின்புற விருத்தி"

எனவும்,

"தென்றிசைத்
தேமரு கமலப் பூமகள் பொதுமையும்
பொன்னி யாடை நன்னிலப் பாவை
தனிமையுந் தவிரவந்து புனிதத்
திருமணி மகுடம் உரிமையிற் சூடி"


எனவும் வரும் முதலாங்குலோத்துங்க சோழன் மெய்க் கீர்த்திகளாலும் உணரலாம்.

சோழநாடு அரசனின்றி நிலைகுலைந்திருந்த செய்தியையறிந்து வடபுலத்திலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு விரைந்துவந்த இராசேந்திரனைக் கண்ட அமைச்சர் படைத்தலைவர் முதலான அரசியலதிகாரிகள் எல்லோரும் இவ்வரசகுமாரன் தக்க சமயத்தில் வந்தமைக்குப் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்கள். சோழர் மரபில் முடி சூடுதற்குரிய அரசகுமாரர் எவருமில்லாமையாலும் கங்கைகொண்ட சோழனுடைய மகள் வயிற்றுப் பேரனாம் உரிமை இவனுக்கிருத்தலாலும் இவ்விராசேந்திரனே சோழநாட்டின் அரசனாக முடிசூடும் உரிமையுடையோன் எனவும் உறுதிசெய்தனர். அங்ஙனமே இவனுக்கு முடிசூட்டுதற்குத்தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன, கி. பி. 1070-ஆம் ஆண்டு சூன் திங்கள் 9-ஆம் நாளில் கங்கைகொண்டசோழபுரத்தில் இவன் முறைப்படி முடிசூட்டப்பெற்றான். அந்நன்னாளில் இவன் குலோத்துங்க சோழன் என்னும் அபிடேகப் பெயரும் எய்தினான். உடனே உண்ணாட்டுக் குழப்பமும் கலகமும் ஒழியவே, சோழமண்டலமெங்கும் அமைதி நிலவிற்று. அப்பொழுது சிற்றரசர்கள் இவன் அடிமிசை அறுகெடுத்திட்டு வணங்கினர் ; அந்தணர் 'அரசர் பெருமான் நீடு வாழ்க' என்று வாழ்த்தினர் ; மனுநெறி எங்கும் தலையெடுக்கவே இவன் புகழ் யாண்டும் பரவுவதாயிற்று. இவனது பேராற்றலையும் இவனால் சோணாடு அடைந்த நலங்களையும்,

          நிழலிலடைந்தன திசைகள்
               நெறியிலடைந்தன மறைகள்
          கழலிலடைந்தனர் உதியர்
               கடலிலடைந்தனர் செழியர்.

          பரிசில்சுமத்தனர் கவிஞர்
               பகடுசுமந்தன திறைகள் அரசு
          அசுமந்தன இறைகள்
               அவனிசுமந்தன புயமும்.

எனவரும் கலிங்கத்துப்பரணி தாழிசைகளால் உணரலாம்.

குலோத்துங்கன் சோழநாட்டு ஆட்சியைப் பெற்றமை பற்றி வரலாற்றாராய்ச்சியாளர்க்குள் கருத்து வேறுபாடு உண்டு. அதிராசேந்திரசோழனைக் கொன்றோ அல்லது கொல்வித்தோ இவன் சோழநாட்டாட்சியைக் கைப்பற்றினன் என்பர் சிலர். வைணவர்களை அதிராசேந்திரன் துன்புறுத்தினமையால் அன்னோர் நிகழ்த்திய கலகத்தால் அவன் கொல்லப்பட்டானென்றும் அச் சமயத்தில் குலோத்துங்கன் சோழநாட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டானென்றும் கூறுவர் வேறு சிலர். கங்கைகொண்ட சோழன் மனைவி, தன்பேரனாகிய இவனைச் சுவீகாரம் எடுத்துக்கொண்டாள் என்பர் மற்றுஞ் சிலர். அதிராசேந்திரசோழன் நோய்வாய்ப்பட்டிறந்தமைக்குக் கல்வெட்டில் ஆதாரமிருத்தலாலும் நம் குலோத்துங்கன் சோழநாட்டை யடைந்தபோது அந்நாடு அரசனின்றி அல்லலுற்ற நிலையில் இருந்ததென்று கல்வெட்டுக்களும் கலிங்கத்துப்பரணியும் ஒருங்கே கூறுவதாலும் அதிராசேந்திரன் ஆட்சியில் திருமால் கோயில் கற்றளியாக ஆக்கப்பட்டிருத்தலை நோக்குங்கால் அவன் வைணவசமயத்தில் வெறுப்புடையனல்ல னென்பது நன்கு புலனாதலாலும் அவன் ஆளுகையில் சோழநாடு கலகமின்றி அமைதியாகவே இருந்தமைக்கு அவன் காலத்துக் கல்வெட்டுக்களில் போதிய ஆதாரங்கள் கிடைத்தலாலும் அவர்கள் கூறுவனவெல்லாம் சிறிதும் பொருந்தாமை காணலாம். கங்கைகொண்டசோழனுக்குப் புதல்வர் ஐவர் இருந்தனரென்பது கல்வெட்டுக்களால் தெளியக்கிடத்தலால் அவன் மனைவி தன் பேரனாகிய குலோத்துங்கனைச் சுவீகாரப் புதல்வனாகக் கொண்டன ளென்பதற்கும் இடமில்லை.  1. க. பரணி - தா. 245, 246, 247.