முதற் குலோத்துங்க சோழன்/அரசாட்சி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆறாம் அதிகாரம்
குலோத்துங்கனது அரசாட்சி

ம் இராசேந்திரன் சோழமண்டலத்தின் ஆட்சியைக் கி. பி. 1070-ஆம் ஆண்டில் எய்திய பின்னர், ஐந்தாண்டுகள் வரை இவனுக்கு இப்பெயரே பெரும்பாலும் வழங்கிவந்தது. அதற்கு முன்னர் இவன் வேங்கி நாட்டையாண்டுவந்த போது அந்நாட்டின் ஒழுகலாற்றின்படி, இவனுக்கு 'விஷ்ணுவர்த்தனன்' என்ற பெயரும் வழங்கிற்றென்பதை முன்னரே கூறியுள்ளோம். ஆயினும் சோணாட்டரசுரிமையை அடைந்த பிறகு கி. பி. 107-) முதல் குலோத்துங்கன் என்ற பெயரே இவனுக்கு வாணாள் முழுமையும் நிலைபெற்று வழங்கலாயிற்று. குலோத்துங்கன் என்ற பெயருடைய சோழமன்னருள் இவனே முதல்வனாதலின், இவனை முதலாங் குலோத்துங்கன் என்று வழங்குதலே அமைவுடைத்து. இனி, நாமும் இவனைக் குலோத்துங்கன் என்றே எழுதுவோம். இப்பெயரேயன்றி இவனுக்கு வழங்கிய வேறுபெயர்களும் சில உள. அவை, அபயன், விசயதரன், சயதுங்கன், விருதராச பயங்கரன், கரிகாலன், இராச நாராயணன், உலகுய்ய வந்தான் என்பன. இப்பெயர்கள் இவனைக் குறித்தலைக் கல்வெட்டுக்களிலும் கலிங்கத்துப்பரணியலும் தெளிவாகக் காணலாம். சோழ அரசர்கள் தத்தம் ஆட்சியின் தொடக்கத்தில் ஒருவர்பின் ஒருவராகப் புனைந்து கொண்டுவந்த இராசகேசரி, பரகேசரி என்ற பட்டங்களுள்,[1] நம் குலோத்துங்கன் இராசகேசரி என்ற பட்டம் பெற்றவன் ஆவான்.

இவ்வேந்தன் காலத்து நிகழ்ந்த போர்களுள்ளே ஒன்றிரண்டொழிய எஞ்சியன வெல்லாம் இவனது ஆட்சியின் பதினான்காம் ஆண்டிற்கு முன்னரே முடிவெய்தின. போர்களெல்லாம் ஒருவாறு முடிவுற்ற பின்னர், கி. பி. 1084-ஆம் ஆண்டில் இவன் சக்கரவர்த்தி என்ற பட்டமும்' 1090-ல் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டமும்[2] புனைந்துகொண்டு பல்வகையாலும் பெருமையும் புகழும் எய்தி இனிது வாழ்ந்துவந்தான். திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டம் புனைந்து ஆட்சி புரிந்த சோழமன்னருள் இவனே முதல்வன் ஆவான். இவனுக்குப் பின்னர் ஆட்சிபுரிந்த இவனது வழித்தோன்றல்களுள் ஒவ்வொருவரும் இப்பட்டம் புனைந்தே அரசாண்டுவந்தனர். 'திரிபுவன சக்கரவர்த்தி' என்ற தொடர்மொழி சேரமண்டலம், சோழமண்டலம், பாண்டி மண்டலம் ஆகிய மூன்றுக்கும் சக்கரவர்த்தி என்ற பொருளை யுணர்த்துவதாகும்.

இங்ஙனம் பெருமையுடன் வாழ்ந்துவந்த குலோத்துங்கன் நாட்டிற்கு நலம்புரியக் கருதி முதலில் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் அரசர்க்கு நெடுங்காலமாகச் செலுத்திவந்த சுங்கத்தை நீக்கினான். ஓர் அரசன் தன் நாட்டிலுள்ள எல்லா மக்கட்கும் இனிமை பயப்பனவாகப் பொதுவாகச் செய்யக்கூடிய நலங்களுள் இதனினும் சிறந்தது வேறு யாதுளது? இதனால் மக்கள் எல்லோரும் இவனை வாயாரவாழ்த்திச் 'சுங்கந்தவிர்த்த சோழன்' என்று வழங்குவாராயினர். 'தவிராத சுங்கந்தவிர்த்தோன்'[3] என்று புலவர் பெருமக்களும் இவனைப்புகழ்ந்து பாராட்டினர். தஞ்சாவூரைச் சார்ந்த கருந்திட்டைக்குடி இவனது ஆட்சிக்காலத்தில் சுங்கந் தவிர்த்த சோழனல்லூர் என்ற பெயரும் எய்திற்று. பின்னர், சோழமண்டலம் முழுவதையும் அளந்து நிலங்களின் பரப்பை உள்ளவாறு அறிந்தாலன்றி நிலவரியை ஒழுங்குபடுத்தல் இயலாது என்று கருதி, அதனை முற்றிலும் அளக்குமாறு ஆணையிட்டான். அவ்வேலையும் இவன் பட்டமெய்திய பதினாறாம் ஆண்டாகிய கி. பி. 1086-ல் தொடங்கப்பெற்று, இரண்டு ஆண்டுகளில் முடிவுற்றது.[4] பிறகு, இவன், குடிகள் எல்லோரும் ஆறிலொரு கடமை நிலவரி செலுத்திவருமாறு ஏற்பாடு செய்தான். இங்ஙனமே இவனது பாட்டனுக்குத் தந்தையாகிய முதலாம் இராசராசசோழன் காலத்தும் சோழமண்டலம் ஒருமுறை அளக்கப்பெற்றதோடு ஆறிலொருகடமை வரியும் விதிக்கப்பெற்றது. குலோத்துங்கனது ஆளுகையில் வரி விதிக்கப்படாமல் ஒதுக்கப்பெற்ற நிலங்களும் உள. அவை, ஊர்நத்தம், குளம், கம்மாளச்சேரி, வெள்ளான் சுடுகாடு, பறைச்சுடுகாடு, ஊர்நிலத்தூடறுத்துப்போன வாய்க்கால், சீகோயில், ஐயன்கோயில், பிடாரிகோயில், கழனிக்குளங்கள், பறைச்சேரிநத்தம், நந்தவனம், குடியிருக்கை, ஊரிருக்கை, ஓடை, ஈழச்சேரி, வண்ணாரச்சேரி, பெருவழி, திருமுற்றம், ஊருணி, கொட்டகாரம், களம், தேவர் திருமஞ்சனக்குளம், கன்றுமேய்பாழ், சுடுகாட்டுக்குப் போகும் வழி, மனை, மனைப்படப்பை, கடை, கடைத் தெரு, மன்று, கிடங்கு, புற்று, காடு, உவர், ஆறு, ஆறிடு படுகை, உடைப்பு, மீன்பயில்பள்ளம், தேன்பயில் பொதும்பு என்பனவாம். வரி விதிக்கப்பெறாத மேலே குறித்துள்ள இடங்களை ஆராயுங்கால், அந்நாளில் விளை நிலங்களுக்கு மாத்திரம் நிலவரி வாங்கப்பெற்று வந்ததேயன்றி மற்றை நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை என்பது நன்கு அறியக்கிடக்கின்றது.

நம் குலோத்துங்கன் தன் நாட்டிலுள்ள குடிகளது உழவுத்தொழில் வளர்ச்சியுறுமாறு ஆங்காங்குப் பல ஏரிகளையும் குளங்களையும் வெட்டுவித்தான் ; காடுகளை யழிப்பித்து மக்கள் வாழ்தற்கேற்ற பல ஊர்களும் நகரங்களும் அமைத்தான்; மக்களது தெய்வபக்தி ஓங்குமாறு ஊர்கள் தோறும் சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் பல புதிய கோயில்கள் எடுப்பித்ததோடு அவற்றின் பூசை, திருவிழா முதலியவற்றிற்கு நிபந்தங்களும் விட்டான் ; அன்றியும் நகரங்களிலுள்ள பழைய செங்கற் கோயில்களை இடித்து அவற்றைக் கற்றளிகளாக எடுப்பித்தான். இங்ஙனம் இவனது ஆட்சிக்காலத்தில் மக்கட்குண்டான நன்மைகள் பலவாகும்; விரிப்பிற் பெருகும்.

இக்குலோத்துங்கனது ஆட்சியின் 50-ஆம் ஆண்டில் வரையப்பெற்ற கல்வெட்டுக்கள், திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையந் தாலூகாவிலுள்ள காமரச வல்லியிலும், தஞ்சாவூர் ஜில்லா மன்னார்குடித் தாலுக்காவிலுள்ள கோட்டூரிலும் காணப்படுகின்றன. ஆதலால் இவன் சோழமண்டலத்தை ஐம்பது ஆண்டுகளுக்குமேல் ஆண்டிருத்தல் வேண்டும். இவன் தன் பாட்டனாகிய கங்கைகொண்ட சோழனாலும், மாமன்மார்களாகிய இராசாதிராசன், இரண்டாம் ராசேந்திரன், வீரராசேந்திரன் முதலானோராலும் அரும்பாடுபட்டு உயரிய நிலைக்குக் கொண்டுவரப்பட்ட சோழமண்டலத்தை, அதன் பெருமையுஞ் சிறப்பும் ஒரு சிறிதுங் குறையாதவாறு, யாண்டும் அமைதி நிலைபெறச் செங்கோல் செலுத்திய பெருந்தகை ஆவன். இவனுக்கு முன்னர் அரசாண்ட சோழன் கரிகாற்பெருவளத்தான், முதலாம் இராசராச சோழன், கங்கைகொண்டசோழன் முதலான பேரரசர்களை இவனுக்கு ஒப்பாகக் கூறலாமேயன்றி ஏனையோரைக் கூறுதல் சிறிதும் பொருந்தாது. இவன் காலத்திற்குப் பின்னர் இவனுக்கு ஒப்பாகக் கூறத்தக்க சோழமன்னன் ஒருவனும் இலன் என்றே கூறிவிடலாம். எனவே, நம் தமிழகம் தன்னைப் புகழுக்கும் பெருமைக்கும் நிலைக்களமாக்கிக் கோடற்குச் சிற்சில காலங்களில் அரிதிற்பெறும் பெருந் தவப்புதல்வர்களுள் ஒருவனாகவே இவனைக் கருதல் வேண்டும். இவனது ஆட்சிக்காலத்தில் சோழநாடு வடக்கேயுள்ள மகாநதி முதல் தெற்கேயுள்ள குமரிமுனை வரையிற் பரவியிருந்தது. அந்நாளில் சோழநாட்டிற்கு வடவெல்லையாகவும் மேலைச்சளுக்கிய நாட்டிற்குத்தென் னெல்லையாகவும் அமைந்திருந்தது இடையிலுள்ள துங்கபத்திரையாறே ஆகும். இப்பெருநில வரைப்பில் நம் குலோத்துங்கன் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து ஐம்பது யாண்டுகள் அமைதியாக ஆட்சிபுரிந்தது மக்களாகப்பிறந்தோர் பெறுதற்குரியனவும் அரியனவுமாகிய பெரும்பேறுகளுள் ஒன்றேயாம் என்று கூறுதலில் தடை யாதுளது?  1. 1. சோழவமிச சரித்திரம் பக். 7.
  2. 2. S. I. I. Vol. III. page 131.
  3. 3. குலோத்துங்க சோழனுலா - வரி 52.
  4. The Historical Sketches of Ancient Dekhan page (358)