முதற் குலோத்துங்க சோழன்/போர்ச்செயல்கள்

விக்கிமூலம் இலிருந்து
ஏழாம் அதிகாரம்
குலோத்துங்கனுடைய போர்ச்செயல்கள்

நம் குலோத்துங்கன் நடத்திய போர்களுள் ஒன்றிரண்டொழிய ஏனையவெல்லாம் இவனது ஆட்சியின் முற்பகுதியிலேயே நிகழ்ந்துள்ளன என்று முன்னரே கூறியுள்ளோம். அப்போர் நிகழ்ச்சிகளைத் தற்காலத்தே வெளிவந்துள்ள கல்வெட்டுக்களைக்கொண்டு ஒருவாறு ஆராய்ந்து அறிந்துகொள்ளலாம். அவை :-

1. மேலைச்சளுக்கியருடன் நடத்திய முதற்போர்
2. நுளம்ப பாண்டியருடன் நடத்திய போர்
3. மேலைச்சளுக்கியருடன் நடத்திய இரண்டாம்போர்
4. பாண்டியருடன் நடத்தியபோர்
5. சேரருடன் நடத்திய போர்
6. தென்கலிங்கப்போர்

7. வடகலிங்கப்போர்

என்பன. இப்போர் நிகழ்ச்சிகளின் காரணத்தையும். இவற்றின் முடிவையும் கல்வெட்டுக்களும் முன்னூல்களும் உணர்த்தும் குறிப்புக்களைக் கொண்டு சிறிது விளக்குவாம்.

1. மேலைச்சளுக்கியருடன் நடத்திய முதற்போர்:- இது குலோத்துங்கன் மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிரமாதித்தனோடு கி. பி. 1076-ஆம் ஆண்டில் நடத்திய போர் ஆகும். தன் மைத்துனனாகிய அதிராசேந்திரசோழன் நோய்வாய்ப்பட்டு இறந்தபின்னர், சோழவளநாட்டில் குலோத்துங்க சோழன் முடிசூடியதையுணர்ந்த சளுக்கிய விக்கிரமாதித்தன் வேங்கிநாடும் சோணாடும் ஒருங்கே ஓர் அரசனது ஆட்சிக்குட்பட்டிருப்பது தன் ஆளுகைக்குப் பெரியதோர் இடுக்கண் விளைவதற்கு ஏதுவாகும் என்று கருதிக் குலோத்துங்கனது படை வலிமையையும் வீரத்தையும் குலைத்தற்குப் பெரிதும் முயன்றான். அவன், அம் முயற்சியில் வெற்றியுறும்வண்ணம் ஐந்து ஆண்டுகளாகப் படைசேர்த்தும் வந்தான். இந்நிலைமையில் விக்கிரமாதித்தனுக்கும் அவனது தமையனாகிய இரண்டாம் சோமேச்சுரனுக்கும் ஒற்றுமை குலைந்து மனவேறுபாடு உண்டாயிற்று. உண்டாகவே. விக்கிரமாதித்தன் தன் தம்பியாகிய சயசிங்கனை அழைத்துக்கொண்டு மேலைச்சளுக்கியரது தலைநகராகிய கல்யாணபுரத்தை விட்டுச்சென்றான்.[1] பிறகு மேலைச்சளுக்கியரது இரட்டமண்டலம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுச் சோமேச்சுரனாலும் விக்கிரமாதித்தனாலும் தனித்தனியாக ஆளப்படும் நிலையை அடைந்தது. இதனையுணர்ந்த குலோத்துங்கன் சோமேச்சுரனைத் தன்பாற் சேர்த்துக்கொண்டான். பின்னர், விக்கிரமாதித்தன் தான் சேர்த்துவைத்திருந்த படைகளைத் திரட்டிக்கொண்டு குலோத்துங்கனோடு போர்புரியப் புறப்பட்டான். திரிபுவனமல்ல பாண்டியன், கதம்பகுலத்துச் சயகேசி முதலானோர் விக்கிரமாதித்தனுக்குப் பேருதவி புரிந்தனர். அவனது தம்பி சயசிங்கனும் அவன் பக்கல் நின்று வேண்டியாங்கு உதவினான். சோமேச்சுரன் குலோத்துங்கன் பக்கத்திருந்து போர் புரிந்து உதவுவதாக உறுதியளித்திருந்தான். இறுதியில் குலோத்துங்கனது படையும் விக்கிரமாதித்தனது படையும் துங்கபத்திரை யாற்றங்கரையில் எதிர்த்துப் போர் செய்தன. விக்கிரமாதித்தன் தன் தமையனாகிய சோமேச்சுரன் குலோத்துங்கனோடு சேர்ந்து தன்னுடன் போர்செய்ய இயலாதவாறு ஓர் சூழ்ச்சிசெய்து இடைநின்று தடுத்தான். இப்போரிற் குலோத்துங்கன் வெற்றியாதல் தோல்வியாதல் எய்தினான் என்று கூறுதற்கிடமில்லை. ஆயினும் நம் குலோத்துங்கனுக்கு உதவி புரிதற்குத் துணைப்படை கொணர்ந்த சோமேச்சுரன் தோல்வியுற்றுத் தன் தம்பியாகிய விக்கிரமாதித்தனாற் சிறைபிடிக்கப்பட்டு நாட்டையும் இழந்தான்.[2] குலோத்துங்கனைச் சோழநாட்டினின்று துரத்துவதற்கு விக்கிரமாதித்தன் ஐந்து ஆண்டுகளாகச் சேர்த்துவந்த பெரும் படையானது அவன் தன் தமையனைத் துங்கபத்திரைப் போரில் இங்ஙனம் தோல்வியுறச்செய்து இரட்டமண்டலத்துள் தன் தமையன்பாலிருந்த நாட்டைக் கைப்பற்றிக்கொள்வதற்குப் பெரிதும் பயன்பட்டது. விக்கிரமாதித்தனும் மேலைச்சளுக்கிய நாடாகிய இரட்டபாடி ஏழரையிலக்கம் முழுமைக்கும் முடி மன்னன் ஆயினான். முதலாம் மேலைச்சளுக்கியப்போர் இவ்வாறு முடிவெய்தியது. இதனை முதலாம் துங்கபத்திரைப்போர் என்றும் கூறலாம்.

2. நுளம்ப பாண்டியருடன் நடத்தியபோர் :- இது நம் குலோத்துங்கனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் நிகழ்ந்த மற்றொரு போராகும். இப்போரைப்பற்றிய செய்திகள் இப்போது நன்கு புலப்படவில்லை. குலோத்துங்கனது மெய்க்கீர்த்தியும் இதனை விளக்கிற்றில்லை. ஆயினும், இது, விக்கிரமாதித்தனுக்குத் துணையாக நின்று போர்புரிந்த நுளம்ப பாண்டியனாகிய திரிபுவன மல்ல பாண்டியனுடன் குலோத்துங்கன் நடத்திய போராய் இருத்தல் வேண்டுமென்பது ஊகிக்கப்படுகிறது. இப்போர் நிகழ்ச்சியில் நம் குலோத்துங்கன் வெற்றிபெற்றான். இவனது பகைவனாகிய பாண்டியன் கொல்லப்பட்டான். இது குலோத்துங்கன் நுளம்ப பாண்டியரோடு நடத்திய போராதலின், இதனை நுளம்ப பாண்டியப் போர் என்று கூறுதல் பொருத்தமுடையது.

3. மேலைச்சளுக்கியருடன் நடத்திய இரண்டாம் போர் :- இது, குலோத்துங்கனது ஆட்சியின் 11-ஆம் ஆண்டாகிய கி. பி. 1081-ல் நிகழ்ந்தது ; விக்கிரமாதித்தன் அவன் தம்பி சயசிங்கன் ஆகிய இருவரோடும் நம் குலோத்துங்கன் நடத்தியதாகும். இச்சண்டைக்குரிய காரணம் நன்கு புலப்படவில்லை. குலோத்துங்கன் பெரும்படையைத் திரட்டிக்கொண்டு வடக்கு நோக்கிச்சென்று விக்கிரமாதித்தனது தம்பியாகிய சயசிங்கன் என்பான் அரசப்பிரதிநிதியாகவிருந்து ஆண்டுகொண்டிருந்த வனவாசியைக் கைப்பற்றிக்கொண்டு, தன்னை வந்தெதிர்த்த விக்கிரமாதித்தனோடு கோலார் ஜில்லாவிலுள்ள நங்கிலி என்னுமிடத்தில் பெரும்போர் புரிந்தனன்.[3] இப்போரில், குலோத்துங்கன் வெற்றி எய்தியதோடு விக்கிரமாதித்தனைத் துங்கபத்திரை யாற்றிற்கப்பால் துரத்தியுஞ் சென்றான். அங்ஙனந் துரத்திச் சென்றவன் இடையிலுள்ள மணலூர், அளத்தி முதலான இடங்களில் மீண்டும் அவனைப் போரிற் புறங்கண்டான்.[4] அளத்தியில் நிகழ்ந்த போரில், இவன் மேலைச் சளுக்கியர்களுடைய களிறுகளைக் கவர்ந்து கொண்டான். அன்றியும், இவன் மைசூர் நாட்டிலுள்ள நவிலையில் சளுக்கிய தண்டநாயகர்களால் காக்கப்பெற்ற ஆயிரம் யானைகளையும் கைப்பற்றிக்கொண்டனன் என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது.[5] இறுதியில் துங்கபத்திரைக் கரையில்[6] இரண்டாம்முறை நடைபெற்ற போரில் விக்கிரமாதித்தனும் சயசிங்கனும் தோல்வியுற்று ஓடி ஒளிந்தனர். கங்கமண்டலமும் கொண்கானமும் நம் குலோத்துங்கன் வசமாயின. இங்ஙனம் போரில் வாகை சூடிய குலோத்துங்கன் எண்ணிறந்த யானைகளையும் பொருட்குவியலையும் பெண்டிர்களையும் கவர்ந்துகொண்டு சோணாட்டையடைந்தான்; அவற்றுள், யானைகளையும் பொருட்குவியலையும் தான் போரில் வெற்றிபெறுவதற்குக் காரணமாயிருந்த போர் வீரர்களுக்குப் படைத் தலைவர்களுக்கும் பகுத்துக் கொடுத்து அவர்களுக்கு மகிழ்ச்சியை யுண்டுபண்ணினான்; சிறை பிடிக்கப்பட்ட மகளிரைத் தன் அரண்மனையிலுள்ள தேவிமார்களுக்கு வேலை செய்துவருமாறு வேளம் புகுவித்தான். நம் குலோத்துங்கன் மேலைச்சளுக்கியரோடு நடத்திய இரண்டாம் போரும் இவ்வாறு வெற்றியுடன் முடிவுற்றது.

4. பாண்டியருடன் நடத்திய போர்:- குலோத்துங்கன் நடத்தியதாக அறியப்படும் இந்தப் பாண்டியப் போரும் இவனது ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டாகிய கி. பி. 1081-ன் தொடக்கத்தில் நடைபெற்றது. வடக்கேயுள்ள நுளம்பபாடிப் பாண்டியனோடு கி. பி. 1076-ல் இவ்வேந்தன் புரிந்த போரும் தெற்கேயுள்ள செந்தமிழ்ப்பாண்டி நாட்டின் அரசர்களுடன், கி. பி. 1081-ல் இவன் நிகழ்த்திய இப்போரும் வெல்வேறு போர்களாம்.

முதலாம் பராந்தக சோழன், முதலாம் இராசராச சோழன் ஆகிய இரு வேந்தர்களின் காலங்களில், பாண்டியர் தம் நிலைகுலைந்து சோழர்களுக்குத் திறைசெலுத்தும் சிற்றரசர் ஆயினர். ஆனால் அவர்கள் சிறிது படை வலிமை எய்தியவுடன் அடிக்கடி சோழர்களுடன் முரண்பட்டுத் தாம் முடிமன்னராதற்கு முயன்றுவந்தனர். அவர்கள், அங்ஙனம் முரண்பட நேர்ந்தமையின் சோழ மன்னர்களுள் ஒவ்வொருவரும் தம் தம் ஆட்சிக்காலங்களில் பாண்டி நாட்டின் மீது படையெடுத்துச் செல்லல் இன்றியமையாததாயிற்று. இதனால் நேரும் துன்பங்களையுணர்ந்த கங்கைகொண்ட சோழன் எனப்படும் முதலாம் இராசேந்திரசோழன் பாண்டியரை அரியணையினின்று இறக்கித் தன் மக்களுள் ஒருவனுக்குச் சோழபாண்டியன் என்னும் பட்டம் அளித்துப் பாண்டிநாட்டின் தலைநகராகிய மதுரையில் அரசப்பிரதிநிதியாயிருந்து அந்நாட்டை யாண்டுவருமாறு ஏற்பாடு செய்தான். அங்ஙனமே அவன் மக்களுள் இருவரும் பேரன் ஒருவனும் சோழபாண்டியன் என்னும் பட்டத்துடன் அம் மதுரைமா நகரிலிருந்து ஆட்சி புரிந்தனர்.

வீரராசேந்திரன் காலத்திற்குப் பின்னர் அதிராசேந்திரன் சோழவளநாட்டை ஆண்டுவந்தபோது பாண்டியர் தாம் முடிமன்னராதற்கு அதுவே தக்க காலமெனக் கருதித் தம் நாட்டை ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஐந்து அரசர்களாகவிருந்து அவற்றை ஆளத் தொடங்கினர். அவர்களது ஆளுகையும் கி. பி. 1081வரை நடைபெற்றுவந்தது. குலோத்துங்கன் வடக்கே நடத்திய போர்கள் எல்லாம் ஒருவாறு முடிவெய்திய பின்னர், தெற்கேயுள்ள பாண்டி நாட்டையும் தன்னடிப்படுத்த எண்ணி, இப்பாண்டியர் ஐவர்மீதும் தும்பை சூடிப் போர்க்கெழுந்தனன்.[7] இதனையுணர்ந்த பாண்டியர் ஐவரும் ஒருங்கு சேர்ந்து பெரும்படையோடு வந்து இவனை எதிர்த்துப் போர் புரிந்தனர். இப்போரில் பெருவீரனாகிய நம் குலோத்துங்கனே வெற்றியடைந்தான். பாண்டியர் ஐவரும் புறங்காட்டி ஓடி ஒளிந்தனர்.[8] குலோத்துங்கன் பாண்டி நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றியதோடு அவ்விடங்களிலெல்லாம் வெற்றித் தூண்களும் நிறுவினான். இப்போரில் குலோத்துங்கன் கைப்பற்றிய நாடுகளுள் முத்துச்சலாபத்திற்குரிய மன்னார்குடாக்கடலைச் சார்ந்த நாடும் பொதியிற் கூற்றமும் கன்னியாகுமரிப் பகுதியும் சிறந்தவைகளாகும்.

5. சேரருடன் நடத்திய போர் :- இது நம் குலோத்துங்கன் குடமலைநாட்டில் சேரரோடு நடத்திய போராகும். இதுவும் குலோத்துங்கனது ஆட்சியின் 11-ஆம் ஆண்டில் நடைபெற்றது. இப்போரும் சேரரைத் தனக்குத் திறைசெலுத்தும் சிற்றரசர்களாகச் செய்யும் வண்ணம் குலோத்துங்கனால் தொடங்கப்பெற்றது. திருவனந்தபுரத்திற்குத் தெற்கே பத்துமைல் தூரத்தில் மேலைக்கடற்கோடியிலுள்ள விழிஞத்திலும், திருவனந்தபுரத்தைச் சார்ந்த காந்தளூர்ச்சாலையிலும் குமரி முனைக்கு வடக்கிலுள்ள கோட்டாறு என்ற ஊரிலும் சேர நாட்டு வேந்தனுக்கும் நம்குலோத்துங்கனுக்கும் பெரும் போர்கள் நடந்தன.[9] சிறிதும் அஞ்சாது எதிர்த்துப் போர்புரிந்த மலைநாட்டாருள் பலர் போர்க் களத்தில் உயிர் துறந்தனர். குலோத்துங்கன் காந்தளூர்ச் சாலையிலுள்ள சேரமன்னனது கப்பற்படையினை இருமுறையழித்துப் பெருமை எய்தினான். [10]கோட்டாறும் எரிகொளுத்தப்பெற்று அழிக்கப்பட்டது. சேரமன்னனும் குலோத்துங்கனுக்குத் திறைசெலுத்தும் சிற்றரசர்களுள் ஒருவனாயினன். சேரரும் பாண்டியரும் தம் நிலைமை சிறிது உயர்ந்தவுடன் தன்னுடன் முரண்பட்டுத் தீங்கிழைக்காதவாறு கோட்டாறு முதலான இடங்களில் சிறந்த தலைவர்களின் கீழ் நிலைப்படைகள் குலோத்துங்கனால் அமைக்கப்பெற்றன ; அவ்வாறு கோட்டாற்றில் நிறுவப்பட்ட படைக்குக் கோட்டாற்று நிலைப்படை' என்று பெயர் வழங்கிற்று.[11]

6. தென்கலிங்கப்போர் :- இது குலோத்துங்கனது ஆட்சியின் 26-ஆம் ஆண்டாகிய கி. பி. 1096-ல் நிகழ்ந்தது. இப்போர் வேங்கிநாட்டில் அரசப்பிரதிநிதியாயிருந்த அரசிளங்குமரன் விக்கிரமசோழன் என்பான் தன் இளமைப்பருவத்தில் தென்கலிங்கநாட்டின் மன்னனாகிய தெலுங்கவீமன்மேற் படையெடுத்துச் சென்று அவனை வென்றதையே குறிக்கின்றது. இதனை விக்கிரமசோழனது: மெய்க்கீர்த்தி,

தெலுங்க வீமன் விலங்கல்மிசை யேறவும்
கலிங்க பூமியைக் கனலெரி பருகவும்
ஐம்படைப் பருவத்து வெம்படை தாங்கி
வேங்கை மண்டலத் தாங்கினி திருந்து
வடதிசை யடிப்படுத்தருளி’

என்று தெளிவாக விளக்குதல் காண்க.

இப்போர் குலோத்துங்கனது மகனாகிய விக்கிரமனால் நிகழ்த்தப்பெற்றதாயினும் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்திலே நடைபெற்றதாதலின் மகனது வென்றிச் சிறப்பு தந்தைக்கேற்றியுரைக்கப்பட்டதென்றுணர்க.

7. வடகலிங்கப்போர் :- இது குலோத்துங்கனது ஆட்சியின் 42-ஆம் ஆண்டாகிய கி. பி. 1112-ஆம் ஆண்டிற்கு முன்னர் நடைபெற்ற போராகும் [12];" வடகலிங்க வேந்தனாகிய அனந்தவன்மன் என்பானோடு குலோத்துங்கன் நடாத்தியது." [13]வடகலிங்கத்திற்கு நேரிற்சென்று இப்போரை வெற்றியுற நடாத்தித் திரும்பியவன் குலோத்துங்கனது படைத்தலைவர்களுள் முதல்வனாகிய கருணாகரத் தொண்டைமானே யாவன். இவனோடு வாணகோவரையன், முடிகொண்ட சோழன் என்ற இரண்டு படைத்தலைவர்களும் அங்குச் சென்றிருந்தனர்.[14] குலோத்துங்கனது ஆட்சியில் நடந்த போர்களுள் இதுவே இறுதியில் நடந்தது. வடகலிங்கத்தில் நடந்த இப்போர் நிகழ்ச்சியை விரித்துக்கூறும் நூல் கலிங்கத்துப் பரணி என்பது. அந்நூல் இப்போரைப்பற்றியுணர்த்தும் செய்திகளை அடியிற் காண்க.

ஒருநாள் நம் குலோத்துங்கன் காஞ்சிமாநகரிலுள்ள அரண்மனையில் ஓவியமண்டபத்து வீற்றிருந்தபோது, வாயில்காப்போரில் ஒருவன் ஓடிவந்து அரசனது அடிகளை முடியுறவணங்கி, ' எம்பெருமானே, வேந்தர் பல்லோர் திறைப்பொருள் கொணர்ந்து கடைவாயிலின் கண் காத்துக்கொண்டிருக்கின்றனர்' என்றனன். அதனைக் கேட்ட அரசன் 'அன்னாரை விடுக' என,

'தென்னவர் வில்லவர் கூவகர் சாவகர் சேதிபர் யாதவரே கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே கங்கர் கடாரர் கவிந்தர் துமிந்தர் கடம்பர் நுளும்பர்களே வங்கர் இலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவர் ஐயணரே கொங்கணர் கொங்கர் குலிங்கர் அவந்தியர் குச்சரர் கச்சியரே வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர் மிலேச்சர்களே குத்தர் திகத்நர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே.'

என்ற மன்னர்கள் அம்மன்னனை யணுகிப் பணிந் தெழுந்து மன்னர் மன்ன ! அடியேம் நினக்கு இறுக்கக்கடவதாய இறைப்பொருள் கொணர்ந்துளேம்' என்றுரைத்துத் தாம் கொண்டுவந்துள்ள பொற்கலம் மணித் திரள் முதலான பொருள்கள் அனைத்தையும் அரசன் திருமுன்னர்க் காட்டிக் கைகுவித்து ஒருபுடை நின்றனர்.

அப்போது அரசன் 'இவர்களொழியத் திறை கொடாதார் இன்னும் உளரோ' என்று வினவினான். அச்சமயத்துக் கடகர் முன்றோன்றி, 'பெருமானே, எங்கள் திறையும் கொண்டுவந்துவிட்டோம்' என்றுரைத்து அவன் கழல் வணங்கினர். அப்போது, 'வட கலிங்கத்தரசன் இருமுறை திறை கொணர்கிலன்' என்று அமைச்சன் கூற, அதனைக்கேட்ட அரசன் பெரிதும் வெகுண்டு ' அங்ஙனமாயின் அவனது வலிய குன்றரணம் இடிய வென்று அவனையும் அவனது களிற்றினங்களையும் பற்றி ஈண்டுக்கொணர்மின்' என்றனன். அரசன் அங்ஙனம் கூறலும், ஆண்டு அருகிருந்த பல்லவர்கோனாகிய கருணாகரத்தொண்டைமான் 'அடியேன் கலிங்கமெறிந்து வருவல் ; அடியேற்கு விடைகொடுக்க' வென, அரசனும் 'அங்ஙனமே செய்க' என்றனன்.

குலோத்துங்கனிடத்து விடைபெற்ற கருணாகரன் கால்வகைத்தானையோடும் போர்க்கெழுந்தனன் ; எங்கும் முரசங்கள் முழங்கின : வளைகள் கலித்தன ; நாற்படையும் சூழ்ந்து நெருங்கி வெள்ளத்தைப்போல் திரண்டெழுந்தன. அவற்றைக் கண்டோர் பலரும் வியப்பெய்தி, இவை கடலைக் கலக்குங்கொலோ ? மலையை இடிக்குங்கொலோ ? ஒன்றும் அறிகிலம் ; இவற்றின் எண்ணம் யாதோ?' என்று ஐயுற்று நடுக்கமுற்றனர். நாற்றிசைகளும் அதிர்ந்தன. தூளிப்படலம் பிறந்தது. பல்லவர் கோனாகிய கருணாகரன் வளவர் பெருமானோடு களிற்றின் மீது இவர்ந்து இரைவேட்ட பெரும்புலிபோற் பகைமேற் சென்றனன். பாலாறு, பொன்முகரி, பழவாறு, கொல்லியெனும் நாலாறுந் தாண்டிப் பெண்ணையாற்றையும் கடந்து தொண்டைமான் படைகள் சென்றன ; அதன் பின்னர், வயலாறு, மண்ணாறு, குன்றியென்னும் ஆறுகளையுங் கடந்து கிருட்டினை நதியும் பிற்படுமாறு போயின; பிறகு, கோதாவரி, பம்பாநதி, கோதமை நதியென்னும் இவற்றையுங்கடந்து கலிங்கநாட்டையடைந்து, சில நகரங்களில் எரிகொளுவிச் சில ஊர்களைச் சூறையாடின.

இத்திறம் நிகழ்வனவற்றைக் கண்ட குடிகளெல்லோரும், 'ஐயோ, மதில்கள் இடிகின்றனவே ; வீடுகள் எரிகின்றனவே ; புகைப்படலங்கள் சுருண்டு சுருண்டு எழுகின்றனவே ; அரண் எங்குளது?. நமக்குப் புகலிடம் யாண்டுளது? இங்குத் தலைவர் யாவர் ? படைகள் வருகின்றன ; அந்தோ ! நாம் கெடுகின் றனம்! மடிகின்றனம் !!' என்று ஓலமிட்டுக்கொண்டு நாற்புறமும் ஓடி அலைந்தனர். அவ்வாறு ஏங்கித் துணுக்குற்ற குடிகளெல்லாம் 'ஐயோ ! நம் மன்னன், குலோத்துங்க சோழற்கு இறுக்கக் கடவதாகிய திறை கொடாது உரைதப்பினான்; ஆதலின் எதிரே தோன்றியுள்ளது அட்மன்னனது படையே போலும் ; அந்தோ! இனி என் செய்வது!' என்றலறிக்கொண்டு உரைகுழறவும் உடல் பதறவும் ஒருவருக்கொருவர் முன்னாக அரையிற் கட்டிய துகில் அவிழ ஓடித் தம் அரசனது அடிமிசை வீழ்ந்தனர். அங்ஙனங் குடிகள் தன்னடியில் வீழ்ந்து அலறி ஓலமிடுதலைக் கண்ட கலிங்கர் கோமானாகிய அனந்தவன் மன் வெகுளி யினால் வெய்துயிர்த்து, கைபுடைத்து வியர்த்து, அன் னாரை நோக்கி ' யான் அபயனுக்கே யன்றி அவன் தண்டினுக்கு பொளியனோ?' என்றுரைத்துத் தடம்புயங் குலுங்குற நகைத்தனன். பின்னர், ' நமது நாடு கான ரண், மலையரண், கடலரண், இவற்றாற் சூழப்பெற்றுக் கிடத்தலை அறியாது, அவன் படை வருகின்றது: போலும் ; நல்லது, சென்று காண்போம்' என்று கூறினன்.

அம்மன்னன் கூறியவற்றைக் கேட்ட எங்கராயன் என்னும் அமைச்சர் தலைவன், அரசர் சீறுவரேனும் அமைச்சனாகிய தான் உறுதியை யுரையாதொழியின் அது தன் கடமையினின்று தவறியதாகுமென்பதை நன்குணர்ந்தவனாய், அரசனை நோக்கி, ' மன்னர் பெருமானே, அடியேன் கூறுவனவற்றை யிகழாது சிறிது செவிசாய்த்துக் கேட்டருளல் வேண்டும். வேற்றரசர் களைப் புறங்கண்டு வெற்றி கோடற்குச் சயதரன் படை போதாதோ ! அவனே நேரில் வருதல் வேண்டுமோ ? அவனுடைய படையினாற் பஞ்சவர் ஐவருங் கெட்ட கேட்டினை நீ கேட்டிலை போலும் ; முன்னொருநாள் அவனது படையுடன் பொருவானெழுந்த சேரர் செய்தி நின் செவிப்பட்டதில்லையோ ? அவன் விழிஞமழித்ததும், காந்தளூர்ச்சாலை கொண்டதும் தன் படையினைக் கொண்டன்றோ? தண்டநாயகராற் காக்கப்பெற்ற நவிலையின் கண் ஆயிரம் யானைகளை அவன் கைப்பற்றிக்கொண்டதை நீ யறியாயோ ? அபயன் படையினால் ஆரஞருற்-றுத் தம் மண்டலங்களை இழந்தவேந்தர் இத்துணைய ரென்றுரைத்தல் சாலுமோ ? ஆதலால் அத்தண்டின் முன்னர் நின் புயவலி எத்தன்மைத்தாகுமென்பதை எண்ணித் துணிவாயாக ; இன்று என்னைச் சீறினும், நாளை அச்சேனைமுன் நின்ற போழ்தினில் யான் கூறிய துண்மை யென்பதை நன்குணர்வாய் ' என்று நன்மதி நவின்றனன்.

அமைச்சர் தலைவன் கூறியவற்றைக் கேட்ட கலிங்க மன்னன் அவனை நோக்கி, ' யாம் கூறியவற்றை மறுத்துரைப்பதெனின் இமையோரும் எம் முன்னர்ப் போதரற்குப் பெரிதும் அஞ்சுவர். பன்னாட்களாகச் செருத் தொழில் பெறாது எம்தோட்கள் தினவுற்றிருத்தலை நீ அறியாய்போலும். முழைக்கண்ணுளதாய அரியேற்றின் முன்னர் யானையொன்று எளிதென்றெண்ணிப் பொருதற்குக் கிட்டிவருதல் உண்மையாயினன்றோ அபயனது படை எம்முடன் பொருதற்கெழும்! எமது தோள்வலியும், வாள்வலியும் பிறவலியும் இத்தன்மையன வென்றுணராது பிறரைப்போல் ஈண்டுக் கூறலுற்றாய். இது நின் பேதமையன்றோ ? நன்று ! நமது நாற்படையு மெழுந்து அபயன் ஆணையாற் போதரும் படையுடன் போர்தொடங்குக' என்றுரைத்தனன். அப்பொழுதே

பண்ணுக வயக்களிறு பண்ணுக வயப்புரவி
பண்ணுக கணிப்பில் பலதேர்
நண்ணுக படைச்செரு நர் நண்ணுக செருக்களம்
நமக்கிகல் கிடைத்த தெனவே'

என்று எழுகலிங்கத்தினும் முரசறையப்பட்டது. உடனே, கலிங்கர் கோமானது படைகள் போர்க்குப் புறப்பட்டன; வரைகள் துகள்பட்டன; கடலொலிபோல் முரசங்கள் மொகுமொகென்றொலித்தன ; இடைவெளி யரிதென ஒருவருடலினில் ஒருவர் தம் உடல்புக நெருங்கிச் சென்று, கலிங்கப்படைகள் கருணாகரன் படைகளின் முன்னுற்றன.

பின்னர் இருதிறத்தார்க்கும் போர் தொடங்கலாயிற்று ; ‘படை எடும் எடும்' என்ற ஓசையும், 'விடும் விடும்' என்ற ஓசையும், கடலொலி போன்றிருந்தன ; சிலை நாண்தெறிக்கும் ஓசை திசைமுகம் வெடிப்பதொக்கும். இருதிறப்படைகளும் எதிர்நிற்றல், இருபெருங் கடல்கள் எதிர்நின்றாற்போன்றிருந்தது. பரியொடுபரி மலைவது கடற்றிரைகள் தம்முள் இகலி மலைந்தாற் போன்றிருந்தது. யானையொடு யானை பொருவது வரையொடு வரை பொருதாற்போன்றிருந்தது ; முகிலொடு முகில் எதிர்த்ததுபோல் இரதமும் இரதமும் எதிர்த்தன. புலியொடு புலி யெதிர்த்தாற்போல் வீரரொடு வீரரும் அரி யொடு அரி எதிர்த்தாற்போல் அரசரொடு அரசரும் எதிர்த்துப் பொருவாராயினர் ; வீரர்களின் விழிகளிலே சினக்கனல் தோன்றிற்று. அக்கனல் மின்னொளி வீசின ; அன்னார் கையிற் கொண்ட சிலைகள் உருமென இடித்துக் கணைமழை பொழிந்தன ; அதனாற் குருதியாறு பெருகலாயிற்று. அவ்வாற்றில் அரசர்களது நித்திலக்குடைகள் நுரையென மிதக்கலுற்றன ; போரில் துணி பட்ட களிற்றினங்களின் உடல்கள் அவ்யாற்றின் இருகரையென இருமருங்குங்கிடந்தன.

குருதிவெள்ளத்திற் பிளிற்றிவீழுங் களிற்றினங்கள் வேலைநீருண்ணப்படிந்த மேகங்கள் போன்றிருந்தன ; அவ்யானைகளின் கரங்களை வாளாற்றுணித்துத் தம் புயத் திட்ட வீரர்கள் தோற்பைகளைத் தோளின் கண்ணே கொண்டு நீர்விடுந் துருத்தியாளரைப் போன்றிருந்தனர் ;

அம்புகள் தைக்கப்பெற்றுச் சுருண்டு விழும் யானைகளின் கைகள் வளையங்கள் போன்றிருந்தன. இருதொடையும் துணிபட்டுக்கிடந்த மறவர் தம் முன்னர்ப் பொருவானெழுந்த வாரணத்தின் வலிகெட ஒரு தொடையைச் சுழற்றி அதன்மீதெறிவர் ; மற்றொன்றை இனி எறியுமாறு எடுத்துவைப்பர் ; சில வீரர் தம் உரத்தின்மீது பாய்வான் எழுந்த இவுளியை ஈட்டியாற்குத்தி எடுத்துத் திரிவது வெற்றிமங்கைக்கு எடுக்கப்பெறும் வெற்றிக் கொடி போன்றிருந்தது. அன்னார் யானைகளின் மத்த கங்களைப் பிளக்குங்கால் வீழும் முத்துக்கள் அவ்வெற்றி மங்கைக்குக் சொரியப்பெறும் மங்கலப் பொரிகளை யொப்பனவாகும்; மாற்றார் சிலையில் அம்பைத்தொடுக்கு மளவில் தம்மிடத்து அம்பில்லாத வீரர்கள் தங்கள் மார்பினிற் குளித்த பகழியைப் பற்றியிழுத்துச் சிலையிற் றொடுத்துவிடுவர். குறையுடலங் கூத்தாட, அவற்றின் பின்னர்க் களிப்போடாடும் பேயினங்கள் ஆடல் ஆட்டு விக்கும் ஆடலாசிரியன்மாரை யொக்கும். சடசடவெனும் பேரொலியாற் செருக்களம், தீவாய் மடுக்கும் கழைவனம் போன்றிருந்தது.

இவ்வாறு போர் நிகழுங்கால் களப்போரினை விரை வில் முடித்து வாகை சூடுமாறு வண்டையர் அரசனாம் கருணாகரத் தொண்டைமான் தன் வேழ முந்துறச் சென்றனன், அவனது படையும் முன்னர்ச் செல்லலுற்றது. அங்ஙனஞ் செல்லவே கலிங்கப்படையின் மத யானைகள் துணிபட்டன ; துரக நிரையொடு தேர்கள் முறிபட்டன. குடர்கள் குருதியின் மேல் மிதந்தன; அவற்றைக் கழுகுகளும் காகங்களும் உண்டுகளித்தன ; ஆயிரம் யானைகளைக்கொண்டு ' பொருவம்' எனவந்த கலிங்கவீரர்கள், தங்கள் அரசன் உரைசெய்த ஆண்மையுங்கெட அமரில் எதிர் நிற்கமாட்டாது ஒதுங்கினர்; இப்படை மாயையோ மறலியோ வென்றலறிக்கொண்டு நிலை குலைந்து விழுந்து ஓடினர்; 'அபயம்' 'அபயம்' என்றலறிக் கொண்டு ஒருவர் முன்னர் ஒருவர் ஓடினர்; அங்ஙனம் ஓடிய கலிங்க வீரர் பதுங்கியது கன்முழையின் கண்ணோ ! மறைந்தது அரிய பிலத்தினுள்ளோ ! கரந்தது செறிந்த அடவியிலேயோ! இவற்றை முழுதுந் தெரிந்துகோடல் அரிதாகும். அவ்வாறு கலிங்கரோடப் பலப்பல யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், தேர்கள், மணிக்குவியல்கள், மகளிர்கள் ஆகிய எல்லாவற்றையும் கருணாகரனது படை வீரர்கள் கைப்பற்றினர். கைக்கொண்ட அன்னோரே அவற்றின் அளவைக் கணித்துரைப்பது அருமையெனின், மற்றையோர் அவற்றைக் கணித்துரைத்தல் எங்ஙனம் கூடும்!

இவற்றைக் கவர்ந்தபின் ' இனி கலிங்க மன்னனையும் கைக்கொண்டு பெயர்குதும் ; அவனிருக்கின்ற இடத்தையறிக' என்றனன் கருணாகரன். அவன் சொற்கள் பிற்படுமாறு சில வீரர்கள் விரைந்து சென்று வரைகளிலும் வனங்களிலும் தேடிக் காணப்பெறாது, முடிவில் ஒரு மலைக்குவட்டிற் கரந்திருந்த கலிங்கர் கோனைக் குறுகி ' நமது அடற்படையைக் கொணர்க ' வென்றனர். எனலும் அவனைக்கொணருமாறு கருணாகரன் தன் படைஞரை ஏவினன். அவர்கள் சென்று வெய்யோன் அத்தகிரியை அடையுமளவில் கலிங்க மன்னன் கரந்திருந்த வெற்பினையெய்தி வேலாலும் வில்லாலும் வேலிகோலி விடியளவுங்காத்து நின்றனர். பின்னர், செங்கதிரோன் உதயகிரியையடையுமுன்னர் அம்மன்னனைக் கைப்பற்றித் திரும்பினர்.

அன்னாரது வழியில் எதிர்ப்பட்ட சில கலிங்கர்கள் தங்கள் உடல்முழுவதும் மாசேற்றித் தலைமயிரைப் பறித்தெடுத்து அரையிலுள்ள கலிங்கத்தைக்களைந் தெறிந்துவிட்டு, ' ஐயா யாங்கள் சமணர்கள் ; கலிங்கரல்லேம்' எனக் கூறிப் பிழைத்துச் சென்றனர். சிலர் சிலையின் நாணை மடித்து முப்புரி நூலாக அணிந்து கொண்டு ' ஐயா, யாங்கள் கங்கை நீராடப் போந்தேம். விதிவலியால் இங்கு அகப்பட்டுக்கொண்டேம் ; கரந்தவ ரல்லேம்' எனச் சொல்லி உயிர் பிழைத்தனர். குருதி தோய்ந்த கொடித்துணிகளைக் காவியுடையாக வுடுத்துக் கொண்டு தலையினை முண்டிதஞ் செய்துகொண்டு “ஐயா, எங்கள் உடையைக் கண்டவளவில் எங்களைச் சாக்கிய ரென்று அறிகிலிரோ?" என்றியம்பி யுய்ந்தனர் சிலர். சிலர் யானைகளின் மணிகளை அவிழ்த்துத் தாளமாகக் கையிற் பிடித்துக்கொண்டு கும்பிட்டு, "ஐயா, யாங்கள் தெலுங்கப்பாணர்கள் ; சேனைகள் மடிகின்ற செருக்களங்கண்டு திகைத்து நின்றேம்; இத்தேயத்தினரல்லேம்" என்றுரைத்துப் பிழைத்துப்போயினர். இவ்வாறு பிழைத்துச் சென்றவர்கள் தவிர, கலிங்க நாட்டில் உயிர் பிழைத்தவர்கள் வேறு ஒருவருமிலர்.

கலிங்கமெறிந்து வாகைமாலைசூடிய கருணாகரத் தொண்டைமான் களிற்றினங்களோடு நிதிக்குவியல்களையும் பிறவற்றையுங் கவர்ந்துகொண்டுவந்து குலோத் துங்க சோழன் திருமுன்னர் வைத்து வணங்கினான். நேரியர்கோன் பெரிதும் மகிழ்ச்சியுற்றுத் தொன்டைமானது போர்வீரத்தைப் பலபடப் பாராட்டி அவற்தத் தக்க வரிசைகள் செய்தனன்.



  1. 1. சளுக்கிய விக்கிரமாதித்தன் சரித்திரம்-பக். 30.
  2. 2. சளுக்கிய விக்கிரமாதித்தன் சரித்திரம் பக் - 34.
  3. 3. சோழவமிச சரித்திரச் சுருக்கம் - பக். 31.
  4. 4 (1) தளத்தொடும்பொரு தண்டெழப் பண்டொர்நாள் அளத்தி பட்ட தறிந்திலை யையநீ.' - க. பரணி- தா. 372 (b) - வில்லது கோடா வேள் குலத் தரசர் அளத்தியி லிட்ட களிற்றின தீட்டமும் ' - முதற்குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தி.
  5. 5. 'தண்ட நாயகர் காக்கு நவிலையிற் கொண்ட வாயிரங் குஞ்சர மல்லவோ' - க. பரணி-தா. 373
  6. 6. க. பரணி - தா. 89.
  7.     'வடகடல் தென்கடல் படர்வது போலத்
           தன்பெருஞ் சேனையை யேவிப் பஞ்சவர்
          ஐவரும் பொருத போர்க்களத் தஞ்சி
          வெரிநளித் தோடி அரணெனப் புக்க
          காடறத் துடைத்து நாட்டிப் படுத்து '
                              - முதற்குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தி.

  8.    'விட்ட தண்டெழ மீனவர் ஐவருங்
         கெட்ட கேட்டினைக் கேட்டிலை போலுநீ'
                                                 - க. பரணி--தா. 363

  9. 'வேலை கொண்டு விழிஞ மழித்ததுஞ் சாலை கொண்டதுந் தண்டு கொண் டேயன்றோ' - பரணி - தா. 370
  10. விக்கிரமசோழனுலா-ண்ணி 24
  11. S. I. I. Vol. III. No. 73. Do.page 144 Foot-note.
  12. S. I. I. Vol. IV, page 136
  13. Epi. Ind, Vol. III. page 337.Indin Antiquary Vol. 18. Pages 162 & 166.
  14. க. பரணி--தா. 352,மு. கு. 4