பாண்டியன் நெடுஞ்செழியன்/மருதனார் படைத்த பாட்டு
அரசன் தன்னுடைய சிந்தையையும் செயலையும் நாட்டுநலத்திலே திருப்பத் தொடங்கினான். எங்கெங்கே பழைய ஏரிகளும் குளங்களும் இருக்கின்றன என்று கணக்கெடுத்தான். அவற்றின் நிலையைப்பற்றி விசாரித்தறிந்தான். கரையைச் செப்பம் செய்ய வேண்டிய இடங்களில் அவ்வாறே செய்யச் செய்தான். புதிய கரை எடுக்கவேண்டிய இடங்களில் எடுக்கப்பணித்தான். அவற்றோடு நில்லாமல் குடபுலவியனார் சொன்னபடி பள்ளமான இடங்களில் அகழ்ந்தும், கரை போட்டுத் தடுத்தும் புதிய நீர்நிலைகளை உண்டு பண்ணினான். அரசன் எதை நினைத்தாலும் நன்றாகச் செய்கிறான் என்று குடிமக்கள் பாராட்டினார்கள். ‘போர்க்களத்துக்குச் சென்று பொருது வெற்றி பெறுவதில் மாத்திரம் அரசன் வல்லவனாக இருக்கிறானே!’ என்று கவலையடைந்த பெருமக்கள், ‘இவன் எதை மேற்கொண்டாலும் திருத்தமாகச் செய்கிறான்’ என்று உணர்ந்து மகிழ்ந்தனர்.
அங்கங்கே நீர்நிலைகள் புதிய மணமகளைப்போலப் புதிய கோலத்தைப் பூண்டு விளங்கின. இனித் தம்முடைய ஆற்றலால் பயிர் விளைத்து உணவுப் பொருளைக் குவிக்கலாம் என்று வேளாளர்கள் உள்ளம் பூரித்தனர். நாட்டில் வேளாளர்கள் நல்ல நிலையில் இருந்து தம்முடைய தொழிலைச் செவ்வனே செய்து வந்தால்தான் அரசனுடைய பெயரும் பொருளும் நிற்கும் என்பதை முன்பே உணர்ந்தவன்தான் நெடுஞ்செழியன். அதனை இதுகாறும் மறந்திருந்தான். இப்போது நினைவு வரப்பெற்று ஆவனவற்றைச் செய்தான்.
புலவர்கள் அரசனுடைய மனமாற்றத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். அவர்கள் தமக்குள்ளே அந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார்கள். சிலருக்கு ஒரு வகையான அச்சம் எழுந்தது.
“நீர்நிலைகளைச் செப்பம் செய்த பிறகு, தனக்கு வேறு வேலை ஒன்றும் இல்லாமையால் மீட்டும் போரிலே அரசன் உள்ளத்தைச் செலுத்தினால் என் செய்வது?” என்றார் ஒரு புலவர்.
“அரசனுக்கா வேலை இல்லை? ஒரு குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்புடையவனுக்கே அல்லும் பகலும் அறுபது நாழிகையும் வேலை இருக்கும்போது, ஒரு நாட்டை ஆளுகிற மன்னனுக்கு, அதுவும் பரந்து விரிந்த இப்பாண்டிப் பெருநாட்டை ஆளுகிற சக்கரவர்த்திக்கு, வேலையா இல்லை? வேளாண்மை, வியாபாரம், தொழில்கள், கலைகள் ஆகியவை வளர்ச்சியடைய வழி துறைகளை வகுக்கலாம். ஊர்தோறும் உள்ள ஆலயங்களைச் செப்பஞ் செய்யலாம். பழுது பட்ட அறச்சாலைகளைத் திருத்தியமைக்கலாம். அறங்கள் பல செய்யலாம். குடிமக்களுக்கு என்ன குறை உண்டென்று விசாரித்துப் போக்க முற்படலாம். நீதித் துறையைக் கவனிக்கலாம். அறங்கூறவையத்தில் உள்ள சான்றோர்களோடு பழகி அவர்கள் கூறும் அறிவுரையைக் கேட்டுச் செய்யவேண்டியவற்றைச் செய்யலாம். மறுமைக்குரிய புண்ணியச் செயல்களைச் செய்யலாம்” என்று வேறு ஒரு புலவர் வரிசையாக அடுக்கினார்.
“அரசன் மனம் கடமையை உணர ஓரளவு தலைப்பட்டிருக்கிறது. இந்தச் சமயம் பார்த்து அவனுக்குப் போரின் தீமையையும் செய்ய வேண்டிய செயல்களின் இன்றியமையாமையையும் வற்புறுத்திக்கொண்டே வர வேண்டும். அவன் உள்ளம் இந்தத் துறையில் நன்கு ஈடுபட்டுவிட்டால் மீண்டும் மாறாது. அதற்கு ஏற்ற வகையில், அவன் உள்ளம் கொள்ள, சொல்லும் ஆற்றல் உள்ளவர்கள் சொல்ல வேண்டும்” என்று மற்றொரு புலவர் சொன்னார்.
“இப்போது இங்கே உள்ள புலவர்களுக்குள் அறிவாலும் ஆண்டாலும் முதிர்ந்தவர் மாங்குடி மருதனாரே. அரசனுக்கும் அவரிடத்தில் நன்மதிப்பு இருக்கிறது. எப்படி வளைத்தால் வளையும் என்பதை அவர் நன்கு அறிவார். திசை திரும்பிய மன்னனுடைய சிந்தனையை அப்படியே இடையீடின்றிச் சிந்திக்கவும் செயலாற்றவும் செய்துவிட வேண்டும்” என்று ஒருவர் இயம்பினார். மற்றப் புலவர்களும் மருதனாரை, ஏதேனும் செய்ய வேண்டுமென்று வேண்டிக்கொண்டனர். “அரசன் ஆக்க வேலைகளில் முனைந்தால் நாடு முன்னேறும். அறமும், வீட்டு நெறியும் அவன் உள்ளத்தில் இடம் பெற்றால் பாண்டி நாடு இந்திர லோகமாகிவிடும்” என்றார்கள்.
மாங்குடி மருதனாரும் இந்த வகையில் சிந்தனை செய்தவரே. அவர்கள் ஒருமுகமாகத் தம் தலையில் ஏற்றிய பொறுப்பை உதறுவதற்கு அவருக்கு விருப்பம் இல்லை. அவ்வாறு செய்யும் ஆற்றல் இல்லாதவராக இருந்தால் அல்லவா அஞ்ச வேண்டும்? அவர் சொல்லை வேற்று நாட்டு மன்னர்களே ஏற்றுப் போற்றி நடப்பார்களென்றால், பாண்டியன் கேட்பதற்குத் தடை என்ன?
நல்ல வகையில் பயன் உண்டாகும் வண்ணம் தாம் அறிவுரை கூற வேண்டும் என்பதை உணர்ந்த அப்பெரும் புலவர் ஏதேனும் ஒரு நெடும் பாட்டின் வாயிலாக அதனைச் செய்ய முடிவு செய்தார். அரசர்களுக்கு உண்மையைக் கவியின் மூலம் எடுத்துரைப்பது பழம் புலவர் மரபு.
அரசனுக்குப் போரில் உள்ள மோகத்தைப் போக்க வேண்டும் என்பதே புலவரின் கருத்து. ஆனால் அதனை நேரே சொல்வது முறையன்று. வீரம் செறிந்த மன்னர்களின் குலத்தே உதித்தவர்கள் மிடுக்கான பண்புடையவர்கள். அவர்களுக்குச் சாந்தமான இயல்பு உண்டாக வேண்டுமானால், பொருளும் வெற்றியும் நெடுநாள் நில்லாதன என்று சொல்ல வேண்டும். தமிழில், காதல் அல்லாத மற்றவற்றைச் சொல்லும் பாடல்கள் புறத்திணையைச் சார்ந்தவை. அது போர்ச் செயலிலுள்ள பல பகுதிகள், அவரவர்கள் ஆற்றும் கடமைகளைப்பற்றிக் கூறும் பகுதிகள் முதலியவற்றை உடையது. காஞ்சி என்பது ஒரு பகுதி. அது நிலையாமையை எடுத்துக் கூறுவது. இம்மை வாழ்க்கையில் அறம் புரிந்து பொருள் ஈட்டி இன்பம் துய்ப்பவனுக்கு மறுமை இன்பமாகிய வீட்டிலும் விருப்பம் உண்டாக வேண்டும். இவ்வுலக வாழ்வையே முடிந்த முடிபாகக் கொள்ளாமல் இதன் நிலையாமையை உணர்ந்தால் அந்த விருப்பம் எழும். அப்படி உணர்ந்தவனுக்கே வாழ்க்கையில் உலகியற் செயல்களே நிலையான பயன் அளிப்பன என்ற எண்ணம் நீங்கும். பலருக்கு நலம் செய்து தன்னலத்தை மாற்றுவதற்கும் அந்த உணர்வு துணை செய்யும். அதனால் புலவர்கள், செல்வம் நிலையாது என்பதையும், வாழ்க்கை நிலையாது என்பதையும், உலகத்துப் பொருள்கள் நிலையா என்பதையும் செல்வர்களுக்கு எடுத்துக் காட்டுவார்கள். அவ்வாறு கூறிய அறிவுரைப் பாடல்கள் காஞ்சி என்னும் புறத்திணையில் அடங்கும்.
மாங்குடி மருதனாருக்கு இப்போது அந்தத் திணை நினைவுக்கு வந்தது. பாண்டியன் நெடுஞ்செழியன் இப்போது பெற்ற வெற்றிகள் போதுமானவை. அவன் பெற்றிருக்கும் நாட்டின் விரிவும் இனி நாடாசை கொள்ளாத வகையில் அமைந்திருக்கிறது. மேலும் மேலும் போரில் தாவும் அவனது மனத்தைத் தடுத்து நிறுத்த உலகியற் பொருளின் நிலையாமையை எடுத்து உணர்த்தலாம்.
யாருக்கு எதைச் சொல்ல வேண்டும் என்று ஆராய்ந்து சொல்பவர்களே அறிவுடையவர்கள். இங்கே, வீரமே பெரிதென்று கருதி வாழும் அரசனுக்குச் செல்வ நிலையாமை முதலியவற்றை எடுத்துரைக்க வேண்டும். அதை அப்படியே, “எல்லாரும் செத்துப் போவார்கள்; எல்லாம் அழிந்து போய்விடும்” என்று சொல்வது முறையன்று. அரசனிடம் இப்போதுள்ள இயல்புகளைப் புகழ வேண்டும். முன்னோர்களைப் புகழ வேண்டும். அவன் நாட்டையும் நகரத்தையும் புகழ வேண்டும். அவற்றுக்கு நடுவிலே நிலையாமை குறிப்பாகப் புலப்படும்படி செய்ய வேண்டும். இவ்வாறு சிந்தித்து முடிவு கட்டினார் புலவர். நீண்ட பாட்டாக மதுரைக் காஞ்சி என்ற பெயரோடு ஒரு நூலை இயற்றத் தொடங்கினார்.
சொல்லுக்குப் பஞ்சமில்லா வாக்கு வளமும், கருத்துக்குப் பஞ்சமில்லா அறிவு வளமும், அழகாகச் சுவை நிரம்பப் பாடும் கவி வளமும் படைத்த மருதனாருக்குக் கவி பாடுவது ஒரு விளையாட்டு. அது அவருக்கு இன்பம் தருவதோடு மக்கள் அனைவருக்கும் இன்பம் வழங்கும் தகைமையது. நெடும் பாட்டாக அவர் பாடப் போகிறார் என்ற செய்தியை அறிந்து புலவர் களித்தனர். தமிழ்ச் சுவை தேரும் தகைமையினர் கவியின் உதயத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தனர்.
புலவர் மதுரைக் காஞ்சியைப் பாடி முடித்தார். 782 அடிகளையுடைய அந்தப் பாட்டு, பாண்டிய மன்னரின் மரபைப் பாராட்டியது. நெடுஞ்செழியனது வீரத்தையும், கொடையையும், பிற நல் இயல்புகளையும் விளக்கியது. பாண்டி நாட்டின் நில வளப்பத்தையும் ஐந்திணை இயல்பையும் விரித்துரைத்தது. மதுரைமாநகரின் அமைப்பையும் அங்குள்ள அங்காடிச் சிறப்பையும் செல்வ நிலையையும் மக்கள் பொழுது போக்கும் முறையையும் தனித் தனியே எடுத்துக் காட்டியது. புலவர்கள் அதனைக் கேட்டுக் கூத்தாடினர். ‘நெடுஞ்செழியன் இதைக் கேட்டுத் திருந்தினாலும் திருந்தாவிட்டாலும் தமிழ்த் தாய்க்கு ஒரு புதிய அணிகலன் கிடைத்துவிட்டது’ என்ற உவகையில் பலர் ஆழ்ந்தனர்.
எந்த நூலானலும் தக்கார் கூடிய அவையில் அரங்கேற்றுவது அக்காலத்து வழக்கம். ஆகவே, மதுரைக் காஞ்சியின் அரங்கேற்றத்தையும் பெருவிழாவாக நடத்த அமைச்சரும் பிறரும் முயன்றனர். அரசனுக்கு அறிவுரை வழங்கும் நூலானாலும் அதிற் பெரும்பகுதி மதுரையின் சிறப்பைச் சொல்வது. ஆதலின், நூல் எப்போதும் யாவருக்கும் இனிமை தருவதாக அமைந்தது.
அரங்கேற்றம் நடைபெற்றது. அரசன் நூல் முழுவதையும் கேட்டான். தன் முன்னோர்களின் பெருமையைக் கூறும் பகுதியைக் கேட்டு அவன் தோள்கள் பூரித்தன. நல்ல மன்னருடைய நாட்டில் தீங்கின்றிக் கோள்கள் வழங்கும் என்றுள்ள பகுதியைக் கேட்டு அவன் மகிழ்ந்தான். தன்னுடைய வீரத்தையும் வண்மையையும் விரிக்கும் இடத்தில் நாணினான். பாண்டி நாட்டில் ஐவகை நிலங்களும் இருத்தலை விரிவாக எடுத்துக் காட்டும் பகுதிகள் அவனுக்குப் பெருமிதத்தை உண்டாக்கின. மதுரையைத்தான் எவ்வளவு நன்றாக ஓவியத்திலே வரைந்து காட்டுவதைப் போலக் காட்டினார் புலவர்! அந்தப் பகுதிகளைக் கேட்கக் கேட்க அவன் உடம்பு பூரித்தது; உள்ளம் துள்ளியது.
“ஒரு செய்தியைச் சொல்கிறேன். நீ கேட்டருள வேண்டும்” என்று பாட்டில் வருகிறது. அதைக் கேட்டுப் பின்னும் ஆர்வத்தோடு கேட்கலானான். “முன்னே உலகை ஆண்டு செல்வம் ஈட்டி வாழ்ந்த மன்னர்கள் கணக்கில்லாதவர்கள். கடல் மணலை எண்ணினாலும் எண்ணலாம்; அவர்களை எண்ண இயலாது. அவ்வளவு பேரும் வாழ்ந்தார்கள்; பிறகு மாண்டுபோனார்கள்” என்று வாழ்க்கை நிலையாமையை இடையிலே எடுத்துக் காட்டினார் மருதனார். அது மன்னனுடைய கருத்திலே பதிந்தது. வாயார மன்னனை வாழ்த்திப் பாட்டை முடித்திருந்தார் புலவர். அதைக் கேட்டு ஆறுதலாகப் பெருமூச்சு விட்டான் பாண்டியன்.
மதுரைக் காஞ்சி என்ற பெயரே, புலவர் பலவற்றைச் சொன்னாலும் அவர் நோக்கம் நிலையாமையை எடுத்துரைப்பதுதான் என்பதைப் புலப்படுத்தியது. அரசன் அந்தக் குறிப்பை உணர்ந்தான்.
மதுரையைப் பாராதவர்களும் பாட்டைக் கேட்டால் நேரிலே மதுரையைக் காண்பதுபோல இருந்தன வருணனைகள். அவையில் உள்ளவர்கள் யாவரும் பாட்டின் அற்புதமான அமைப்பிலே ஈடுபட்டு மகிழ்ந்தார்கள். அரசனும் பாட்டின் சுவையில் உள்ளத்தைப் பறிகொடுத்தான்; அதன் கருத்திலே கருத்தைப் பதித்தான்.
அரங்கேற்ற முடிவிலே அரசன் மருதனாருக்குப் பலவகையான பரிசுகளை வழங்கினான். “உங்கள் பாட்டினால் தமிழுலகம் பயனை அடையும்; என் வாழ்க்கையும் பயனுடையதாக மாறும் என்று நம்புகிறேன்” என்று அவன் சொல்லி மருதனாரைப் பாராட்டிய போது, அவன் தாம் விரும்பியபடி மனமாற்றத்தை அடைவான் என்று புலவர்கள் எண்ணினார்கள்.
மதுரைக் காஞ்சி தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அதைப் பாடிய புலவருக்குப் பின்னும் புகழ் ஓங்கியது. மாங்குடி மருதனார் என்று, அவருடன் பழகியவர்கள் அவரைச் சுட்டிக் கூறுவார்கள். மற்றவர்கள், பெயரைக் கூறுவது மரியாதையன்று என்று மாங்குடி கிழார் என்று சொல்வார்கள். மதுரைக் காஞ்சி என்ற பாட்டை அவர் இயற்றி அரங்கேற்றிய பிறகு அவரை யாவரும் மதுரைக் காஞ்சிப் புலவனார் என்று வழங்கத் தலைப் பட்டனர்.
இனி, அந்த மதுரைக் காஞ்சியாகிய சொல்லோவியத்தில் உள்ள பொருள்களை ஓரளவு பார்க்கலாம்.