பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

53


“பணியிய ரத்தைநின் குடையே! முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே!” (புறம்-5)

என்று காரிகிழார் என்னும் நல்லிசைப் புலவர் இதனைக் கூறுவர். இத்தகைய திருக்கோயில்கள் சமுதாயத்தின் மையமாக அமைந்து மக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்யத் தக்கவகையில் இயங்கியும் வந்தன.

தமிழகத்தின் திருக்கோயில்கள் கடவுள் மங்கலமிக்க அருள் நலத்துடன் பொருள் நிறைந்த கலைகளையும் பெற்று விளங்குகின்றன. விண்ணளந்து காட்டி வினை மறைக்கும் திருக்கோயில்கள் ஆயிரம் ஆயிரம், தமிழகத்தை அணி செய்கின்றன! கல்லெல்லாம் கலை! பேசும் பொற் சித்திரம்! கடவுள் திருவுரு !

மானுட வாழ்க்கை, வென்று விளங்கவேண்டும். மானுடத்தின் வெற்றியே மண்ணுக்குப் புகழ் சேர்ப்பது! விண்ணுக்கும் சிறப்பாவது! மானுடம் வென்று வீரம் நிகழ்த்துவது வாழ்க்கையின் குறிக்கோளாகும்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.”

என்று திருக்குறள் கூறும். நெறிப்பட நின்று வாழ்தல் ஒரு கலை, வாழ்க்கையென்பது கட்டி முடிக்கப் பெற்ற ஒரு மாளிகையன்று, நாழிகைதோறும் உரியோரால் கட்டப் பெற்று வருவது. வாழ்க்கை ஒரு சுமையன்று; துன்பமும் அன்று; வாழ்க்கை குறிக்கோளுடையது. வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வதற்குரியது. அதனால், கால உணர்வோடு கலந்து வளர்ந்த வாழ்வியற் கலைகள் நமது திருக்கோயில் வளர்த்த கலைகள்.

வாழ்க்கைக்குச் சோறு மட்டும் போதாது. வாழ்க்கைக்குக் களிப்பும் மகிழ்ச்சியும் தேவை. உயிர் தழைத்து வளர்வதற்கு இன்பம் துணை செய்கிறது. ஒருவர் நெறிப்பட