மாய வினோதப் பரதேசி 1/1-வது அதிகாரம்

விக்கிமூலம் இலிருந்து
மாயா விநோதப் பரதேசி


1-வது அதிகாரம்
வஸந்த ருதுவின் வைபவம்


திருவல்லிக்கேணிக் கடற்கரையில் மேரி மகாராணியார் பெயர் வழங்கும் பெண்கள் கலாசாலைக்கு எதிரில் விஸ்தாரமாகப் பரவியும் வெண்மணல் தரையில் இரண்டு யௌவனப் புருஷர்கள் அலையின் ஒரமாக இருந்து சம்பாவித்துக் கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவனுக்கு இருபது, அல்லது, இருபத்தொரு வயது இருக்கலாம். அவன் தெற்குத் திக்கில் கால்களை நீட்டிக் குப்புறப் படுத்து, தலைவரையில் மணலில் படியச்செய்து, இரண்டு முழங் கால்களையும் கீழே ஊன்றி, மார்பையும் முகத்தையும் உயர்த்தி கிழக்கு, வடக்கு, மேற்கு, ஆகிய மூன்று திக்குகளிலும் தனது பார்வையைச் செலுத்தத் தகுந்தபடி உல்லாசமாகச் சயனித்திருந்தான். மற்றவனது வயது சுமார் இருபத்தைந்துக்குக் குறையாது என்றே சொல்ல வேண்டும். அவன், கீழே சயனித்து இருந்தவனுக்கு எதிரில் சுமார் ஒன்றரை கஜ துரத்தில் தெற்கு முகமாக உட்கார்ந்திருந்தான்.

கீழே சயனித்திருந்த விடபுருஷனது வடிவம் அபரஞ்சித தங்கத்தை உருக்கி ஓடவிட்டது போல அழகான சென்னிறமும், இயற்கையான மினுமினுப்பும், யெளவன காலத்தில் புதுத் தன்மையும் வாய்ந்ததாய் இருந்தது. அவனது உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உள்ள ஒவ்வோர் அங்கத்திலும் மிருதுத் தன்மையும், செழுமையும், அழகும் சம்பூர்ணமாக நிறைந்து தோன்றின. அவன் பேசியபோது வாய் மழலை மாறாத குழந்தைகளின் வாய் அழகாகக் கோணுவது போலத் தோன்றியஇருந்ததே இருபுறங்களிலும் அவனது உருண்டைக் கன்னங்களில் தண்ணீர்ச் சுழல்கள் போன்ற வசீகரமான குழிவுகளை உண்டாக்கியது. உயர்ந்த தலையும், விசாலமான நெற்றியும், பரந்த உருண்டை முகமும், கருத்தடர்ந்த புருவவிற்களும், புத்திக் கூர்மையையும் தீவிர விவேகத்தையும் மின்னலைப் போலப் பளிச்பளிச் என்று வீசி வெளிப்படுத்தும் கருங் கண்களும், முத்துக்கள் போன்ற நிர்மலமான அழகிய பற்களும், பக்குவகால மடந்தையரின் அதரங்கள் போலக் கனிந்து சிவந்து மிருதுவாக இருந்த இதழ்களும், அவனது செவிகளில் நட்சத்திரச் சுடர்கள் போல ஒளி வீசிய வைரக் கடுக்கன்களும் ஒன்றன் அழகை ஒன்று பதினாயிரம் மடங்கு பெருக்கிக் காட்டி, அவனது முகத்திற்கு ஒருவித அபூர்வ வசீகர சக்தியைக் கொடுத்துக் கொண்டிருந்தன. அந்த மன்மதபுருஷன் ஏதாகிலும் பேச வேண்டும் என்று மனதில் நினைக்கும் போதே, அவனது சுந்தரவதனத்தில் ஒருவித மந்தஹாலமும், மலர்ச்சியும் முன்னாகத் தோன்றி நின்று, அவனது மனத்தில் எப்போதும் நற்குணமும் அந்தமும் இயற்கையிலேயே பரிபூரணமாக நிறைந்திருக்கின்றன என்பதைத் தெள்ளிதில் காட்டின. அவனது பார்வை கம்பீரப் பார்வை யாகவும், அவனது வார்த்தைகள் அற்பமான விஷயங்களில் கலக்காமல், பெரும் போக்காகவும், கண்ணியமாகவும், மிருதுத் தன்மை நிறைந்ததாகவும், அயலார் விஷயத்தில் ஜீவ காருண்யம், வாத்தியம் முதலிய அருங்குணங்கள் த்வனிப்பனவாகவும் இருந்தன. அவனது சிரத்தில் கரும்பட்டுப் போலத் தோன்றிக் கருத்தடர்ந்து நீண்டு நெளிந்திருந்த வசீகரமான தலை மயிரை அவன் ஒரு சிறிய தேங்காய் அளவு முடிந்து பின் கழுத்தில் விட்டிருந்தது, ஒரு பக்கமாகச் சாய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவன் அன்றைய தினமே கூடிவரம் செய்து கொண்டிருந்தவன் ஆகையில், அவனது நடுத்தலையில் குறுக்காகவும் வளைவாகவும் வெட்டிவிடப்பட்டிருந்த கன்றுக்குடுமி தோட்டங்களில் காணப்படும் ஒழுங்கான மருதாணி வேலியைப் போலக் காணப்பட்டது. நெற்றியின் நடுவிற்குச் சிறிது இறக்கமாக, ஒரு தேத்தாங்கொட்டை அகலத்தில் சந்தனப்பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அவன் தனது இடுப்பில் தகதகவென மின்னிய அகன்ற ஜரிகையுள்ள தும்பைப் பூவைப் போல வெளுத்திருந்த பட்டுக்கலந்த ஜரிகை வஸ்திரம் ஒன்றையும், உடம்பில் உயர்ந்த பட்டு ஷர்ட்டையும், அதற்கு மேல் முற்றிலும் ஜரிகையினாலும் சிவப்புப் பட்டினாலும் நெய்யப்பெற்ற உருமாலை ஒன்றையும் அணிந்திருந்தான். நவரத்தினங்கள் இழைத்த சுமார் ஆயிரம் ரூபாய் விலையுள்ள சிறிய கைக் கடிகாரம், வயிரம் இழைத்த தங்கச் சங்கிலியால் அவனது இடதுகை மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்தது. இவனது இரண்டு கைகளிலும், வைரம், வைடூரியம் முதலிய உயர்தரக் கற்கள் குயிற்றிய மோதிரங்கள் பல விரல்களிலும் கானப்பட்டன. அவனது இயற்கைக் கட்டழகும் காந்தியும், செயற்கை அலங்காரமும் ஒன்று சேர்ந்து அவனைக் காணும் ஆண் பெண்பாலார் அனைவரும் மேன்மேலும் அவனை ஆசையோடு கூர்ந்து நோக்கும்படியான ஒருவித அற்புதக் கவர்ச்சியை உண்டாக்கின அன்றி, அவன் ஒரு மகாராஜனது குமாரனோ, அல்லது, யாதாமொரு சமஸ்தானாதிபதியின் பட்டக் குழந்தையோ என்ற எண்ணத்தை உண்டாக்கின.

இத்தகைய சிலாக்கியமான விடபுருஷனுக்கு எதிர்ல் உட்கார்ந்திருந்த மற்றவன் மாநிறமாகவும், அதிக அழகில்லாத சாதாரண வடிவம் உடையவனாகவும், விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணியாதவனாகவும் இருந்தான். ஆனாலும், தீவிர புத்தியும், திடசித்தமும், எதைக் குறித்தும் மளமளவென்று விரைவில் பேசும் திறமையும் வாய்ந்தவனாக இருந்தான். அன்றைய பகல் முழுதும் தகத்தகாயமாய்க் காய்ந்து அண்டாண்ட பிரம்மாண்டங்களில் எல்லாம் நிறைந்து புழுக்கள், பூச்சிகள், சிசுக்கள், நோயாளிகள் முதலிய எந்த ஜெந்துவினிடத்திலும் தயை தாட்சணியம் இன்றி எல்லோரையும் சமமாகச் சுட்டெரித்துக் கொடுங்கோல் அரசு புரிந்த கதிரவன், இரவு வருவதைக் கருதி, தனது பிரியபத்தியான குளிர்ந்த சந்திரனுக்கு முன் தான் தன்து கோர வடிவத்தைக் காட்டக் கூடாதென்று நினைத்து தனது கொடிய கிரணங்களை எல்லாம் மறைத்து கனிந்த இனிமையான மாம்பழம் போல உருமாறி, பரம சாதுவாய் விளங்கி, தனது மனைவி இருக்கும் வரையில் தான் தனது கொடுமைகளையே காட்டுவதில்லை என்று மஞ்சள் வெயிலான ரீமுகத்தின் மூலமாக உலகுக் கெல்லாம் நற்செய்தி சொல்லி அனுப்பிவிட்டு, மேற்றிசைக் கடலான தனது சப்பிரமஞ்சத்திற்கருகில் நின்று தனது துணைவி வருகிறாளோ என்று பார்ப்பவன் போலத் தோன்றினான். இராக் காலத்தின் சக்கரவர்த்தினி பவனி புறப்படப் போகிறாள் என்று பிரஜைகளுக்குப் பறையறைவிப்பது போல அலைகள் எல்லாம் கொந்தளித்து எழுந்து ஆனந்த வெறிகொண்டு ஓடி வந்து கரையில் மோதி மோதித் திரும்பி எதிர்கொண்டு சென்றன. ராஜாத்தியின் பணிப்பெண் இளந்தென்றல் வடிவமாகத் தோன்றி இனிமையையும் குளிர்ச்சியையும் அள்ளி நாலா பக்கங்களிலும் வீசி எல்லோர்க்கும் அபயஸ்தம் அளிப்பவர் போல வெளிப்பட்டு எங்கும் நிறைந்து போயினர். அன்றைய தினம் பெளர்ணமி திதியாதலால், சம்பூர்ணபிம்ப வடிவமாகத் தாரகைகளின் சக்கரவர்த்தினி, அப்போதே நீராடி சுத்தமாக அலங்கரித்துக் கொண்டு எழுபவள் போல, அமிர்தத்துளிகளை ஜிலிர் ஜிலிரென்று அள்ளி இறைத்துக் கொண்டு எல்லா ஜீவராசிகளையும் நோக்கி சந்தோஷமாக நகைத்த வண்ணம் அதியுல்லாசமாகப் பவனி புறப்படவே, பகல் முழுதும் சூரியனது உக்கிரத்தால் கருகி வெதுப்பப்பட்டுக் கிடந்த ஜீவ ஜெந்துக்களின் மனதில் குதூகலமும், பூரிப்பும், பேரானந்த வெள்ளமும் பொங்கி எழுந்து கரைபுரண்டோட ஆரம்பித்தன.

மேலே விவரிக்கப்பட்ட மணலில் சயனித்திருந்த சுந்தர ரூபன் மேற்குத் திக்கில் சூரியன் அஸ்தமித்ததையே வியப்போடும் மகிழ்ச்சியோடும் பார்த்துக் கொண்டிருந்து சிறிது நேரங்கழித்துக் கிழக்கில் திரும்ப, அந்தத் திசையில் இன்பமயமாக எழுந்து நின்ற சந்திரன் அவனது திருஷ்டியில் பட்டது. அவன் மட்டற்ற குதூகலமும் பூரிப்பும் அடைந்து, “அடே கோபால்சாமீ! அதோ கிழக்குப் பக்கம் பாரடா? இப்போது மேற்குத் திக்கில் மறைந்த சூரியனே திரும்பவும் கிழக்குத் திக்கில் வந்துவிட்டது போல இருக்கிறது பார்த்தாயா? இன்று சந்திரபிம்பம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது பார்?" என்றான்.

அதைக் கேட்ட கோபாலசாமி, “இன்று பெளர்ணமி அல்லவா. அதனால் தான் சந்திரன் பூர்ணவடிவத்தோடு இருக்கிறது. நாமும் இத்தனை வருஷமாக இந்தச் சென்னப் பட்டனத்திலிருந்து படித்துக் கொண்டிருக்கிறோம். இதுவரையில் நாம் இந்த இடத்துக்கு வராமல் இருந்தது நம்முடைய துரதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். இந்த இடம் மோகினி தேவியின் சிங்கார வனம் போல் அல்லவா தோன்றுகிறது. ஆகா! எந்தப் பக்கம் பார்த்தாலும் நேத்திராநந்தமாக இருக்கிறதே! சுவர்க்கலோகம் என்று ஒர் இடம் எங்கேயோ இருக்கிறதென்று சொல்லுகிறார்களே, அது இந்த இடந்தான் என்று நினைக்கிறேன். அதோ பார் மேற்குத் திக்கில் செளக்கு மரங்களே நிறைந்த தோப்புகளும், தெய்வத் தச்சனாகிய மயனால் நிர்மாணிக்கப் பட்டவையோ எனக் காண்போர் பிரமிக்கத்தக்க அற்புதமான மாடமாளிகைகளும் நிறைந்திருப்பதும், கிழக்குத் திக்கில் கண்ணுக் கெட்டிய தூரம் வரையில் கடல் சுத்தமாகப் பரவி இருப்பதும், அப்சர ஸ்திரீகளைப் பழித்த அபூர்வ வனப்புடைய யெளவன மங்கையர் பலவித உடைகளிலும் அலங்காரங்களிலும் மேரி மகாராணியார் கலாசாலை மாளிகையில் ஆங்காங்கு புஸ்தகமும் கையுமாக நின்று படித்தும், ஒருவரோடு ஒருவர் உல்லாசமாகப் பேசியும், விளையாடியும் மயில்களைப் போலவும், மான்களைப் போலவும், மாடப்புறாக்களைப் போலவும் காணப்படுவதும் ஒன்று கூடிய இந்த மகா அருமையான காட்சியைப் போல, இந்த லோகத்திலும், வேறே எந்த லோகத்திலும் நாம் காணமுடியாது என்றே நினைக்கிறேன். இந்த இடத்துக்கு வருவோர் மந்திர சக்தியினால் தடைக்கட்டப் பட்டு ஒய்ந்து நிற்கும் பாம்பு போல, இந்த இடத்தின் காந்த சக்தியில் லயித்து அப்படியே பிரம்மாநந்த நிலையில் உட்கார்ந்து விடுவார்கள் என்றே நினைக்கிறேன். அதோ அந்தப் பக்கம் திரும்பிப் பார் அனாதைகளான கைம்பெண்கள் வசிப்பதற்கும், கல்வி பயில்வதற்கும் உபயோகப்படுத்தப்படும் மாளிகை எப்படி இருக்கிறது பார்த்தாயா? அது பழைய காலத்தில் இருந்த நம் தேசத்து அரசர்களுடைய கோட்டைகள் போல் அல்லவா மகா புதுமையாக இருக்கிறது. கந்தசாமி நான் எத்தனையோ தடவை உன்னைக் கூப்பிட்டும், நீ வரமாட்டேன் என்று சொல்லி, வேண்டா வெறுப்பாக இன்று வந்தாயே! இந்த இடம் எப்படி இருக்கிறது பார்த்தாயா? என்றான்.

அதைக் கேட்ட கந்தசாமி என்ற கட்டழகன் மந்தஹாலம் தவழ்ந்த முகத்தோடு சந்தோஷமாகப் பேசத் தொடங்கி, “ஆம்: வாஸ்தவம் தான். இதுவரையில் இந்த இடத்தை நாம் பார்க்காமல் போனோமே என்ற விசனம் எனக்கும் உண்டாகிறது. ஆனால் என் மனசில் ஒரு சந்தேகமும் பிறக்கிறது. நம்முடைய பெண் மக்கள் இருந்து படிப்பதற்கு இவ்வளவு பெரிய பட்டனத்தில் ஊருக்குள்ளாகவே இந்தத் துரைத்தனத்தாருக்கு ஒரு நல்ல இடம் அகப்படவில்லையா? இப்படிப்பட்ட தனிக்காட்டில், இரண்டு பெரிய ஸ்மசானங்களுக்கு நடுவில்தானா கொண்டுவந்து இவ்வளவு முக்கியமான கலாசாலையை ஸ்தாபிக்க வேண்டும்? இன்று பெளர்ணமி ஆதலால், நிலவு பால் போல இருக்கிறது. எல்லாம் பார்ப்பதற்கு அற்புதமாகவும் மனசை மோகிக்கச் செய்வதாகவும் இருக்கிறது. இருளே மயமாக இருக்கும் அமாவாசை காலமாக இருந்தால், இந்த மாளிகைகளுக்குள்ளிருக்கும் நமது பெண்மணிகள் இராக்காலங்களில் வெளியில் தலையை நீட்டவும் துணிவார்களா? அதுவுமன்றி, இரண்டு திக்குகளில் ஸ்மசானங்கள் இருப்பது நம் குழந்தைகளுக்குத் தெரியாமல் இருக்காது. அப்படி இருக்க, எப்படிப்பட்ட துணிகரமான நெஞ்சுடையவர்களும் இருளில் இந்த இடத்தில் இருக்க அஞ்சுவார்கள் என்றே நினைக்கிறேன். வெள்ளைக்கார துரைத்தனத்தார் முட்டாள்கள் அல்ல. நான் சொன்ன இந்த ஆட்சேபம் அவர்களுடைய மனசில் பட்டிருக்காதென்று நாம் நினைப்பதற்கில்லை. வேறே ஏதாவது முக்கியமான நோக்கத்தோடு தான் அவர்கள் இந்த இரண்டு ஸ்தாபனங்களையும் இவ்விடத்தில் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் அவர்கள் இன்னொரு காரியம் செய்திருந்தால், அது ஒருவிதத்தில் நலமாக இருந்திருக்கும். இந்தக் கலாசாலைக் கட்டிடத்தின் முன் பக்கத்திலும் அதைச்சுற்றி நாற்புறங்களிலும், இப்போது பொட்டல் வெளியாயிருக்கும் இடத்தில் ஏராளமான மரங்களையும் பூச்செடிகளையும் அமைத்து அபிவிருத்தி செய்து, அதை ஒரு பெருத்த பூஞ்சோலையாகச் செய்து இடையிடையில் விளக்கு ஸ்தம்பங்களை நட்டு இருள் காலங்களில் விளக்குகளைக் கொளுத்திவிட்டால், அந்த இடத்தின் தனிமையும் பயங்கரத் தன்மையும் குறைந்து போகும் என்று நினைக்கிறேன்” என்றான்.

கோபாலசாமி:- ஆம். நீ சொல்வது வாஸ்தவம்தான். ஏன் இதோ பிரசிடென்சி காலேஜ் இருக்கிறதே. அதற்கு முன்பக்கம் எப்போதும் பொட்டல் வெளியாகத்தானே இருக்கிறது. அங்கே பூச்செடிகளையும் மரங்களையும் வைத்து அதை அழகான ஒரு பூங்காவாக மாற்ற, துரைத்தனத்தாருக்கு எவ்வளவு செலவு பிடிக்கப் போகிறது. லட்சக்கணக்கில் ரூபாய் பலவிதமாக அழிந்து போகின்றன. இந்த முக்கியமான சின்ன விஷயத்தில் துரைத் தனத்தார் சிக்கனம் பாராட்டுகிறார்கள். ஆனாலும், இதற்கு முன் நிர்மாநுஷ்யமாக இருந்த இடத்தில் இப்படிப்பட்ட கட்டிடங்களை உண்டாக்கி, இந்த இடத்தை இவ்வளவு வசீகரமாகச் செய்திருப்பது ஆச்சரியமான விஷயம் அல்லவா. அதைப்பற்றி நாம் வெள்ளைக்காரரை நிரம்பவும் மெச்ச வேண்டியது அவசியந்தானே. அவர்கள் அபாரமான புத்திவாய்ந்தவர்கள் என்பதைப்பற்றி கொஞ்சமும் சந்தேகமே இல்லை. அப்படி இல்லாமலா, இரண்டாயிரம் மையில் துரத்திற்கு அப்பால் உள்ள ஒரு சிறிய தீவிலிருந்து கொண்டே இவர்கள் நாமெல்லோரும் கிடுகிடென்று நடுங்கும்படி குரங்குகளைப் போல நம்மை ஆட்டி வைக்கிறார்கள். நாமும் மனிதர்கள் அவர்களும் மனிதர்கள் என்று சொல்ல முடியாது. நம்முடைய முன்னோர் புராணங்களில் கந்தருவர்கள் என்றும், சூரர்கள் என்றும் குறித்திருப்பது இவர்களைத்தான் என்ற எண்ணமே என் மனசில் உதிக்கிறது. நம்மால் செய்ய முடியாத எவ்வளவு அற்புதமான அரிய காரியங்களை இவர்கள் செய்கிறார்கள் பார்த்தாயா. உதாரணமாக, இந்த மின்சார சக்தியை வைத்துக் கொண்டு அவர்கள் எவ்வளவு அரிய பெரிய காரியங்களைச் சாதித்துக் கொள்ளுகிறார்கள் பார்த்தாயா? ஒரு பட்டணம் முழுதிலும் உள்ள விளக்குகள் எல்லாம் எண்ணெய் இல்லாமல் இந்த மின்சார சக்தியினால் எரிகின்றன. ஆஹா! மின்சார சக்தியொன்று இருக்கிறதென்று நம்முடைய முன்னோர்கள் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். ஒரு வேளை நம்முடைய முன்னோர்கள் மின்சார சக்தியைத்தான், யட்சணி தேவதை என்றும், மந்திர சக்தியென்றும் சொல்லி இருப்பார்களோ என்னவோ தெரியவில்லை. இதற்கு முன் கம்பிகள் மூலமாகத் தந்திகள் அனுப்பினார்கள். இப்போது கம்பி இல்லாமல், ஆகாயவெளியில் இரண்டாயிரம் மையிலுக்கப்பால் உள்ள அவர்களுடைய தேசத்தில் இருந்து செய்திகள் உடனுக்குடன் வருகின்றன. அதுவுமின்றி, இப்போது இன்னொரு புதுமையான ஏற்பாடும் செய்திருக்கிறார்கள். ஒருவர் ரூ.600 கொடுத்தால், அவருடைய வீட்டில், ஒரு கம்பத்தை நட்டு வேறு சில இயந்திரங்களை அவ்விடத்தில் வைக்கிறார்கள். அவைகளுக்குப் பக்கத்தில் மனிதர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தால், லண்டன், கல்கத்தா, பம்பாய் முதலிய இடங்களில் நடத்தப்படும் பாட்டுக் கச்சேரிகளில் பாடப்படும் பாட்டுகள் எல்லாம் இவ்விடத்தில் மனிதர் இருந்து பாடுவது போல உடனுக்குடன் அத்தனை ஜனங்களுக்கும் நன்றாகக் கேட்கின்றன. இது எப்படிப்பட்ட புதுமை பார்த்தாயா? அதற்கு இப்போது ரூ.600 தான் செலவு பிடிக்கிறது. காலக்கிரமத்தில் அது நிரம்பவும் குறைந்து நூறு, அல்லது, ஐம்பதுக்கு வந்து விடும். அந்த இயந்திரங்களை அநேகமாய் எல்லா வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம். அயலூர்களில் உள்ள மனிதர்களோடு உடனுக்குடன் பேசலாம். அங்கே நடக்கும் பாட்டுக் கச்சேரிகளை எல்லாம் எல்லோரும் கேட்கலாம். இன்னம் சொற்ப காலம் போனால், மனிதருடைய வடிவத்தை யந்திரத்தின் மூலமாய் நாம் உடனுக்குடன் பார்க்கும்படி செய்து, அவர்களோடு நேருக்கு நேர் பேசும்படி செய்வார்கள் என்பதைப்பற்றி சந்தேகமே இல்லை. அப்போது ஒருவருக்கொருவர் கடிதம் எழுத வேண்டிய அவசியமும் இல்லை, நேரில் ஊருக்குப் போய்ப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விடும் என்று நினைக்கிறேன். அப்போது தபால் இலாகாவிலும், ரயில் இலாகாவிலும் வருமானம் அடியோடு குறைந்து போகும் என்பது நிச்சயம்.

கந்தசாமி:- ஆம். வாஸ்தவந்தான். இயந்திர வித்தைகள் அதிகமாய் உபயோகத்துக்கு வர வர, மனிதர்களுக்கு வேலையே இல்லாமல் போய்விடுவது சகஜந்தானே. வெள்ளைக்காரர்கள், செத்தவரைப் பிழைக்க வைக்கிற ரகசியம் ஒன்றைத் தவிர மற்ற எல்லா ரகசியங்களையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.

கோபாலசாமி:- அதை மாத்திரம் அவர்கள் விட்டுவிட்டார்களோ, அன்றைய தினம் பத்திரிகையில் நாம் படிக்கவில்லையா? ஜெர்மனியில் யாரோ ஒரு சாஸ்திர நிபுணர் மனிதரை என்றும் சிரஞ்சீவியாக்கக்கூடிய ரகசியத்தைக் கண்டுபிடித்திருக்கிறாராம். குரங்கின் தொண்டையில் உமிழ்நீர் ஊறும் ஸ்தானங்களை எடுத்து மனிதருடைய தொண்டையில் அதே ஸ்தானத்தில் வைத்து ஒட்டு வேலை செய்துவிட்டால், மனிதர் எப்போதும் பாலியப்பருவத்தினராகவே இருந்து விடுகிறார்களாம். அந்த நிபுணர் அப்படி இரண்டொருவருக்குச் செய்து, அதை நிரூபித்துக் காட்டி இருக்கிறாராம். ஆனால், அதற்கு ஏராளமான குரங்குகள் தேவையாம். சீமையில் அத்தனை குரங்குகள் அகப்படவில்லையாம். நம்முடைய இந்தியாவில் உள்ள குரங்குகளைப் பிடித்து, கப்பல் கப்பலாக பம்பாயில் இருந்து அனுப்புவதாக அன்றைய தினம் நான் படித்துச் சொன்னதை நீ கவனிக்கவில்லை போல் இருக்கிறது.

கந்தசாமி:- ஒ! அப்படியா சங்கதி! நீ படித்ததை நான் அவ்வளவு நன்றாகக் கவனித்துக் கேட்கவில்லை. எல்லா ரகசியங்களையும் ஜெர்மனிக்காரர்கள் தான் கண்டுபிடிக்கிறார்கள். மற்றவர்கள் உடனே அதை எடுத்துக் கொள்ளுகிறார்கள். இப்போது நடந்த ஜெர்மனி சண்டையில் எதிரிகள் எப்பேர்ப்பட்ட புதிய புதிய இயந்திரங்களையும், தண்ணிருக்குள் மறைந்திருந்து அடிக்கும் கப்பல்களையும், நூறுமையில் தூரம் போய் வெடிக்கக்கூடிய குண்டுகளையும், கண்ணுக்குத் தெரியாத ஆகாய விமானங்களையும் கொண்டு வந்து காட்டி இந்த உலகத்தையே பிரமிக்கச் செய்தார்கள். நம்முடைய இங்கிலீஷ்காரர்கள் அவைகளைப் பார்த்த பிறகு தான் எல்லாவற்றையும் செய்தார்கள் என்று நாம் பத்திரிகைகளில் படிக்க வில்லையா? ஜெர்மனியார் அநாகரிகமான காட்டு மனிதர்கள் என்று இங்கிலீஷ்காரர்கள் அவர்களை இகழ்ந்து ஏளனமாகப் பேசினாலும், அவர்களுடைய தேசத்தில் இருந்துதான் அதிமானுஷத்தன்மை வாய்ந்த தெய்வீகச் செய்கைகள் எல்லாம் வெளியாகின்றன. அவர்கள் மனிதர்களை என்றும் சிரஞ்சீவியாக்கக் கூடிய முறையை இப்போது கண்டு பிடிக்காவிட்டாலும், இன்னும் நாலைந்து தலைமுறைகளுக்குப் பிறகாவது கண்டுபிடித்து விடுவார்கள் என்பது நிச்சயம். இப்போது அவர்கள் மனிதர் 150, 200 வயது வரையில் ஜீவித்திருக்கும் வழியை ஒரு வேளை கண்டுபிடித்தாலும் பிடிக்கலாம். அவ்வளவு தான் இப்போது சாத்தியமாகும் என்று நினைக்கிறேன். ஏன், நம்முடைய முன்னோர்களும், ரிஷிகளும், பல நூற்றாண்டுகள் உயிரோடு இருந்ததாக நாம் படித்திருக்கிறோம் அல்லவா. இப்போது நம்முடைய அனுபவத்திலேயே எத்தனையோ பேர், நூறு வயசு, தொண்ணுறு வயசு இருந்து இறக்கிறதைக் கண்டிருக்கிறோம் அல்லவா.

கோபாலசாமி:- மெய்தான். மனிதர்கள் நீண்ட ஆயிசு உடையவர்களாகவும் சிரஞ்சீவிகளாகவும் ஆகிவிட்டால், பிரம்மதேவன் எமன் முதலிய தெய்வங்களுக்கெல்லாம் உத்தியோகம் போய் விடுமே.

கந்தசாமி:- ஆம், அப்படித்தான் முடியும். இயந்திரங்களும் தந்திரங்களும் அதிகரிக்க அதிகரிக்க, மனிதருக்கு எப்படி வேலை இல்லாமல் போகிறதோ, அதுபோல, தெய்வங்களுக்கும் வேலையில்லாமல் போவது சகஜந்தானே! நாம் நன்றாக யோசனை செய்து பார்க்கப் போனால், நம்மைப்போன்ற ஜீவஜெந்துக்கள் எல்லாம் நேரம் காட்டும் கடிகாரங்களுக்குச் சமம் என்று தான் நினைக்க வேண்டி வரும் போல் இருக்கிறது. கடிகாரத்திற்குள் கெட்டியான சக்கரங்கள் முதலிய யந்திரங்களை வைத்து விட்டால், அது என்றும் சிரஞ்சீவியாக ஒடிக் கொண்டிருக்க வில்லையா. அதுபோல நம்முடைய உடம்பில் உள்ள கருவிகளையும் பலப்படுத்துவதால், நம்முடைய ஆயிசு காலம் அதிகரிக்குமானால், இன்னும் அதிக சூட்சுமமான தந்திரங்களால் நாம் நம்மை சிரஞ்சீவியாக்கிக் கொள்வது ஏன் முடியாது? அப்போது நம்முடைய உடம்பிற்குள் ஜீவாத்மா என்று ஒன்று இருக்கிறதென்றும், அது அதன் பூர்வ கர்மபலத்தின்படி ஜென்மம் எடுக்கிறதென்றும், ஒவ்வொரு ஜெந்துவிற்கும் பிரமனால் ஏற்படுத்தப்பட்ட காலவரம்புக்குமேல் ஒரு நொடி நேரங்கூட உயிரோடிருக்க முடியாது என்றும், நம்முடைய பெரியோர்கள் கண்டுபிடித்திருக்கும் தத்துவங்களை எல்லாம் இனி நாம் குப்பையில் போட வேண்டியதாகத்தானே முடியும். தேகக்கருவிகளின் வலுவினால் மனிதன் சிரஞ்சீவியாகி விடுவான் ஆனால், மனிதனுக்குள் ஜீவாத்மா என்று ஒன்று இருக்கிறது என்பது பொய்யாகி விடுகிறதல்லவா.

கோபாலசாமி:- ஏன் பொய்யாகிறது? நம்முடைய முன்னோர் அப்படி ஒன்றும் முடிவாகச் சொல்லக் காணோமே. பொதுவாக ஜீவராசிகள் தங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள காலவரம்பிற்கு அதிகமாக இருக்க முடியாதென்றால், அது பல விஷயங்களை அடக்கியதாக இருக்கிறது. ஒரு குழந்தை பிறக்கிறது. ஆரம்பத்தில் அதற்கு ஏற்படும் தேகவலு, அதன் தாய் தகப்பன்மாருடைய தேக மனோ பலங்களையும், அவர்களுடைய சுக செளகரியங்களையும் பொருத்ததாக இருக்கிறது. அதன் பிறகு அது வளரும் போது அதற்குக் கிடைக்கும் தேக போஷணை, செல்வாக்கு, அதன் தேக உழைப்பு, பழக்கவழக்கங்கள் முதலியவற்றால் அதன் ஆரோக்கியம், பலாபலம், ஆயிசு முதலியவை அமைகின்றன. மனிதருடைய பிறப்பு, செல்வம், சுகம் முதலிய அம்சங்கள் எல்லாம், பூர்வஜென்ம சுகிருதத்தால் உண்டாகின்றன. ஆகையால், அவற்றர்ல் நிர்ணயிக்கப்படும் தேக ஆரோக்கியம், ஆயிசு முதலியவைகளையும் பூர்வ ஜென்ம கர்ம பலன் என்று சொல்லி விடுகிறார்கள். நம்முடைய ரிஷிகள் யோகாப் பியாசம் செய்து தங்களுடைய ஆயிசை நூற்றுக் கணக்காக வளர்த்திக் கொண்டதாகக் கேள்வியுறுகிறோம். நம்முடைய சாஸ்திரங்களில் ஆயிசு விருத்திக்காக ஹோமங்கள், பிராயச்சித்தங்கள், தாதுபுஷ்டி மருந்துகள் முதலியவைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதுவுமன்றி தேவாமிருதமென்று ஒரு வஸ்து இருப்பதாகவும், அதை உண்போர் மூப்பு, பிணியின்றி என்றும் சிரஞ்சீவியாக இருப்பதாகவும் படித்திருக்கிறோம் அல்லவா ஜீவாத்மா, பூர்வ ஜென்ம கர்மா முதலிய விஷயங்கள் சொல்லப் பட்டிருக்கும் அதே சாஸ்திரங்கள் தானே இந்த விஷயங்களையும் சொல்லி இருக்கின்றன. ஆகையால் நாம் இரண்டையும் நிஜமாகவே நம்ப வேண்டியது தான். இவை ஒன்றுக் கொன்று முரண்படுவதாக நினைப்பது சரியல்ல.

கந்தசாமி:- (சந்தோஷமாகப் புன்னகை செய்து) நான் இன்னொரு மாதிரியாக எண்ணுகிறேன். ஆதிகாலத்தில் நம்முடைய முன்னோர்கள் வடக்கில் உள்ள ஹிமாலயப் பர்வதத்தில் ஏறியே அப்பால் உள்ள தேசங்களுக்கு எல்லாம் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆகையால், அதற்கு அப்பால் இருந்தவர்களை எல்லாம், கந்தர்வர்கள் என்றும், அவுனர்கள் என்றும் (அயோனியர்), அசுரர்கள் என்றும், தேவர்கள் என்றும் சொல்லி இருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். ஹிமாலயப் பர்வதம் ஆகாயத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதால் அதன் மேல் ஏறிப் போவதை ஆகாய லோகத்துக்கு ஏறிப்போவதாக மதித்திருக்கலாம். அந்தத் தேவர்களிடத்தில் மனிதருடைய மூப்பு பிணிகளை எல்லாம் நீக்கி சிரஞ்சீவியாக்கும் தேவாமிருதம் இருந்ததாகச் சொல்லி இருக்கிறார்கள் அல்லவா. ஒருவேளை இந்த ஜெர்மனி தேசத்தாரே அந்தத் தேவர்களாக இருந்திருக்கலாம். அவர்களிடம் ஆகாய விமானங்கள் தேவாமிருதம் முதலியவை இருந்திருக்கலாம். தேவாமிருதம் முதலில் அவ்விடத்தில் இருந்து நடுவில் இல்லாமல் போய் இப்போது மறுபடியும் அங்கே உண்டாகலாம் அல்லவா. அந்தத் தேசத்திற்குப் போகும் வழியில் உள்ள பாரசீக தேசத்திலும், காக்கேசியாவிலும் உள்ள ஸ்திரீகள் எல்லோரும் அழகில் நிகரற்றவர்கள் என்று நம்முடைய பூகோள சாஸ்திரம் சொல்லுகிறது அல்லவா இந்தத் தேசத்தவர்கள் தான் நம்முடைய புராணத்து அப்ஸர ஸ்திரீகளாகவும் கந்தர்வ ஸ்திரீகளாகவும் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம்முடைய அருச்சுனன், சந்தனு முதலியோர் தெய்வ லோகத்துக்குப் போய், தேவேந்திரனுக்குச் சண்டையில் உதவி செய்திருப்பதாகப் புராணங்கள் சொல்லுகின்றன. ஐரோப்பாவில் உள்ள ரோமாபுரிச் சரித்திரத்தில் அந்தத் தேசத்தை ஆண்ட சில சக்கரவர்த்திகளிடம் இந்திய மன்னர்கள் விருந்தினராகப் போய் வந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் ஒத்திட்டுப் பார்த்தால், நம்முடைய முன்னோர்கள் ஐரோப்பா கண்டத்தில் உள்ள வெள்ளையரையே தேவர்கள் என்றும், அசுரர்கள் என்றும் பலவாறாக மதித்து வந்தனர் என்பது தெரிகிறது. தவிர, தேவபாஷை என்று சொல்லப்படும் நம்முடைய சமஸ்கிருதத்துக்கும் ஜெர்மன் பாஷைக்கும் நெருங்கிய ஒற்றுமை இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆகையால் அவ்விடத்தில் இருந்து மனிதரை சிரஞ்சீவி ஆக்கும் அமிர்தம் உண்டாவது விந்தையுமல்ல, நம்முடைய முன்னோர்களின் கொள்கைக்கு விரோதமானதும் அல்ல என்று நாம் நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

கோபாலசாமி:- ஆம். தடையென்ன அப்படித்தான் நாம் அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். இப்போது நீ சொன்னதில் இருந்து எனக்கு இன்னம் ஒரே ஒரு சந்தேகம் உண்டாகிறது. அது தான் தெளிவுபடவில்லை. நம்முடைய முன்னோர்கள், பாவிகள் இறந்த பிறகு அவர்களுடைய ஜீவாத்மாக்கள் தெற்குத் திசையில் உள்ள எமபட்டணத்திற்குப் போய், அவ்விடத்தில் கோரமான தண்டனை அடைவதாகச் சொல்லி இருக்கிறார்களே. அதை நம்மவர்கள் எப்படிக் கண்டு பிடித்தார்கள்? அந்த ஊர் தெற்குத் திசையில் தான் இருக்கிறது என்று ஏன் சொன்னார்கள்?

கந்தசாமி:- இது தெரியவில்லையா? நம்முடைய தேசத்தைக் காட்டிலும் இன்னம் தெற்கில் எந்தத் தேசம் இருக்கிறது என்று யோசித்துப் பார். ஆப்பிரிக்காக் கண்டம் நம்முடைய தேசத்தை விட அதிக தெற்கில் இருக்கிறதல்லவா. அங்கேயுள்ள நீக்ரோ ஜாதியார் கன்னங்கரேல் என்று விகார ரூபத்தோடு பயங்கரமாக இருக்கிறார்கள் அல்லவா. அவர்களைத்தான் எமன் என்றும் எமகிங்கரர்கள் என்றும் நம்மவர்கள் மதித்தார்கள். அவர்களுள் சிலர் மனிதரையே தின்கிறதாக இந்தக் காலத்திலும் நிச்சயமாகத் தெரிகிறது; மனிதர் அங்கே போவது பெருத்த பயங்கரமான தண்டனை என்று நம்மவர்கள் மதித்தார்கள். ஆகையால், பாவிகளின் ஜீவன் அங்கே போகிறதென்று சொல்லி இருக்கிறார்கள். அதைக் கேட்டாவது ஜனங்கள் சன்மார்க்கத்தில் ஒழுகட்டும் என்ற நல்ல கருத்தோடு அப்படிச் சொல்லுகிறார்கள் என்றே நாம் கொள்ள வேண்டும்.

கோபாலசாமி:- (சிரித்துக் கொண்டு) அப்படியானால், ஆப்பிரிக்காக் கண்டத்தில் எல்லாம் மகா கொடுமையான பயங்கர பிரதேசமாகிய சூதான் சஹாரா பாலைவனத்தைத் தான் நம்மவர்கள் எமனுடைய பட்டணமாகிய வைவசுத பட்டணம் என்று மதித்தார்கள் என்று நீ சொல்லுவாய் போல் இருக்கிறதே.

கந்தசாமி:- (புன்னகையோடு) ஆம்; அதை நான் சொல்ல வாயெடுக்கும் முன் அது உன் மனசிலும் பட்டுவிட்டது. அப்படி நினைப்பதற்கு இன்னொரு விஷயங்கூடப் பொருத்தமாக இருக்கிறதை நீ கவனித்தாயா? அந்த சூதான் சஹாரா பாலைவனத்துக்குப் போகும் வழியில், முதலைகளே நிறைந்ததும், இப்போது நீலநதி என்று சொல்லப்படுவதுமான பயங்கரமான பெரிய ஆற்றைத்தான், எமலோகத்துக்குப் போகும் வழியில் உள்ள வைதரணிநதி என்று சொல்லி இருக்கலாம்.

கோபாலசாமி:- (சிரித்துக் கொண்டு) பேஷ்! பேஷ்! நீ சொல்லும் வியாக்கியானம் எல்லாம் நன்றாகவே இருக்கிறது. நம்முடைய நாட்டு வைதிகர்களிடம் போய் நீ இப்படி எல்லாம் சொல்வாயானால், அவர்கள் உன்னை உடனே பைத்தியக்கார வைத்திய சாலைக்கு அனுப்பினாலும் அனுப்பிவிடுவார்கள். ஆனால், நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று சொல்லுகிறபடி அவர்கள் கோபித்தாலும், நீ சொல்லும் விஷயம் என்னவோ பொருத்தமாகத்தான் இருக்கிறது. அது போகட்டும்; நாம் புராண விஷயங்களைப் பற்றிப்பேச எடுத்துக் கொண்டால், நம்முடைய சந்தேகங்கள் அதிகரிக்கும் அன்றி தெளிவுபடப் போகிறதில்லை. நாம் முதலில் பேச ஆரம்பித்த விஷயத்தை விட்டு, வெகுதூரம் போய் இமாலயம், ஜெர்மனி, ஆப்பிரிக்கா, எமலோகம் முதலிய துரப்பிரதேசங்களுக்கு எல்லாம் போய் அலைந்து கொண்டிருக்கிறோம். வீட்டைவிட்டு வெளியில் வர அஞ்சும் மிருதுவான சுபாவமுடைய நம்முடைய பெண் மக்களை எல்லாம் இப்படிப்பட்ட பயங்கரமான தனித்த இடத்தில் கொண்டு வந்து வைத்துக்கொண்டுதானா இவர்கள் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற விஷயத்தை அல்லவா நாம் பேசினோம். வெள்ளைக்காரர்கள் நம்முடைய தேவர்கள் ஆகையால், அவர்கள் சர்வக்ஞர் என்றும், ஏதோ ஆழ்ந்த கருத்தோடு தான் இந்த ஏற்பாட்டைச் செய்திருப்பார்கள் என்றும் நீ சொன்னாய். நானும் யோசித்துப் பார்க்கிறேன். அது இன்னதென்பது விளங்கவில்லை.

கந்தசாமி:- ஒருவேளை இப்படி இருக்கலாம். வயதுவராத சிறு குழந்தைகளான பெண்களுக்கெல்லாம் பட்டனத்துக்குள்ளேயே பல பாட சாலைகள் இருக்கின்றன. இங்கே ஏற்படுத்தி இருப்பது உயர்தரப் படிப்பு மாத்திரம் அல்லவா, அந்த வகுப்புகளில் வயசு வந்த யெளவனப் பெண்களே படிப்பார்கள். ஊருக்குள் இத்தனை ஸ்திரிகளையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்தால், . துன்மார்க்கத் தனமும் துஷ்டத்தனமும் வாய்ந்த விடபுருஷர்கள் அநந்தமானவர்கள் இருக்கிறார்கள் ஆகையால், அவர்களால் இவர்களுக்கு ஏதாவது கெடுதல் நேரும் என்ற எண்ணத்தோடு அப்படிப்பட்டவர்களுடைய கண்களில் இவர்கள் படும் சந்தர்ப்பம் இல்லாமல் போகும்படி இப்படி ஒதுப்புரமான ஒரிடத்தில் இவர்களுடைய கலாசாலையை ஏற்படுத்தி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

கோபாலசாமி:- இப்போது மாத்திரம் அந்த உபத்திரவம் இல்லாமல் போய்விட்டதா என்ன? இந்தப் பட்டனத்தில் உள்ள பெரிய மனிதர்களுள் பெரும்பாலோர் அஸ்தமன வேளைகளில் இந்தக் கலாசாலைக்கு எதிரில் வந்து மோட்டார்களையும், ஸாரட்டுகளையும் வரிசையாக நிறுத்திவிட்டு நின்று காற்று வாங்குவதாகவும், இந்த சென்னைப் பட்டனத்தின் கடற்கரை முழுதிலும், இந்த இடமே சுத்தமாகவும், ரமணியமாகவும் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு ஒரு நாளைப் போல இவ்விடத்திற்கு எல்லோரும் வருவதாகவும் பலர் சொல்ல நாம் கேள்வியுற்றது இல்லையா? வயசு முதிர்ந்த கிழவர்களான எத்தனையோ வக்கீல்களும், ஜட்ஜிகளும் இந்தக் கலாசாலையில் உள்ள பெண் மணிகளின் திருமேனியழகைக் கண்டு ஆநந்திக்கும் பொருட்டு வருகிறார்கள் என்று பலர் நம்மிடம் வந்து புரளியாகப் பேசியதை எல்லாம் நாம் கேட்டதில்லையா? கொஞ்ச காலத்துக்கு முன், ஹிந்துப் பத்திரிகையில் இன்னொரு சங்கதி வெளியாயிற்றே; அது உனக்கு ஞாபகம் இல்லையா?

கந்தசாமி:- என்ன சங்கதி? கோபாலசாமி:- கைம்பெண்கள் வசிக்கும் அந்தப் பெரிய கட்டிடத்திற்கு முன்னால் ஒரு குறித்த இடத்தில், வெள்ளை நிறமுள்ள ஒரு பீடன் வண்டியில் யாரோ ஒரு பெரிய மனிதர் வந்து எப்போதும் நின்று, அந்தக் கட்டிடத்தின் இரண்டாவது உப்பரிகையைப் பார்த்துக் கொண்டே இருந்ததாக நாரதர் என்பவர் கதை எழுதியிருந்தது உனக்கு நினைவில்லையா?

கந்தசாமி:- பெரிய மனிதர் வந்து நின்றால், அவர் கெட்ட எண்ணத்தோடுதான் நிற்கிறார் என்று நாம் சொல்லிவிட முடியுமா? ஒரு வேளை அந்த இடத்தில் இனிமையான காற்று உண்டாகலாம்? அல்லது, அவர் அருமையாக மதித்துள்ள யாராவது கைம்பெண் அவ்விடத்தில் இருக்கலாம். அவர் ஒவ்வொரு நாளும் தமது வண்டியில் கடற்கரைக்கு வந்து போகும் போது, ஏன் அந்தப் பெண்ணையும் பார்த்து விட்டுப்போகக் கூடாது? அவர் எவ்வித துர்நினைவும் இல்லாமல், தினந்தினம் வந்து அங்கே நின்று தமது மனிதரைப் பார்த்துவிட்டுப் போவதில், என்ன குற்றம் இருக்கிறது? இதை எல்லாம் நாம் காதிலேயே வாங்குவது சரியல்ல. உலகம் பலவிதம், வெளிப்பார்வைக்கு ஒரு விதமாகத் தோன்றும் விஷயம் உண்மையில் முற்றிலும் வேறுவிதமாக இருக்கும். எப்போதும் நாம் வெளித் தோற்றத்தைக் கொண்டே எதையும் நிச்சயிப்பது அநேகமாய்த் தவறாகத்தான் முடியும்.

கோபாலசாமி:- (வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டு) நூற்றில் ஒரு பேச்சு. ஏது நீ அந்தப் பெரிய மனிதருக்கு இவ்வளவு தூரம் பரிந்து பேசுகிறது? அவர் உன்னைத் தன் கட்சிக்கு வக்கீலாக நியமித்து இருக்கிறாரா? நாம் இப்போது அந்தக் கட்டிடத்தின் பக்கத்தில் வந்து முடியும் ஐஸ்ஹவுஸ் ரோட் வழியாகத்தானே வந்தோம். பாலத்துக்கு அப்பால் இருந்து வரும் காற்று எப்படி இருக்கிறதென்று பார்த்து அனுபவித்தோம் அல்லவா. அது தான் நரகலோகம் என்று நீயே சொன்னாய். நம்முடைய பெண் குழந்தைகளை இப்படிப்பட்ட துர்நாற்றமுள்ள இடத்தில் வசிக்கச் செய்திருக்கிறார்களே என்று நீ தானே சொன்னாய். இப்போது பெரிய மனிதர் அவ்விடத்தில் வரும் நல்ல காற்றைக் கருதி அங்கே நின்று கொண்டிருக்கலாம் என்று நீ சொல்வது சரியாக இருக்கிறதா? யோசித்துப் பார். அது நிஜமாக இருக்காது. நீ சொல்லும் இன்னொரு யூகம் சரியானதாக இருக்கலாம். அவர் தமக்கு அருமையான மனிதர் அதற்குள் இருப்பதைக் கருதியோ, அல்லது, இருப்பதாக எண்ணி மனக்கோட்டை கட்டியோ அப்படி நின்றிருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை அவருடைய சம்சாரம் கைம்பெண்ணாய் அதற்குள் இருக்கிறாளோ என்னவோ - என்று கூறிக் கலகலவென்று நகைத்தான்.

அதைக் கேட்ட கந்தசாமியும் தன்னைமீறி களிகொண்டு கைகொட்டி “பலே! பலே!” என்று கூறிச் சிரித்தான்.

அவ்வாறு அவர்கள் இருவரும் சம்பாவித்துக் கொண்டிருந்த சமயத்தில், சந்திரன் மேலே உயர்ந்து கொண்டே இருந்தது. நிலவின் பிரகாசமும் இனிமையும் அதிகரித்துத் தோன்றின. பால் போன்ற வெண்ணிறமான நிலவு உலகில் உள்ள சகலமான பொருட்களின் மீதும் ஆநந்தமாகத் தவழ்ந்து கொஞ்சி விளையாடி அமிர்த ஊற்றால் அபிஷேகம் செய்தது. சந்திரனைக் கண்டு முன்னிலும் கோடிமடங்கு அதிகரித்த களிவெறியும் மூர்க்கமும் அடைந்த அலைகள் தலைகுப்புறக் கரணமடித்து உருண்டு புரண்டு ஒடித்திரும்பி ஒன்றன்மேல் ஒன்று மோதி பலின் விளையாட்டு நடத்தின. ஆகாய வட்டமும், அதில் மலர்ந்து தோன்றிய நட்சத்திரச் சுடர்களும், வைரங்கள் இழைத்த ஊதா வெல்வெட்டுக் குடை விரிக்கப்பட்டது போல மகா வசீகரமாகத் தோன்றின. கடற்கரையை அடுத்த சாலையில் அடுத்தடுத்து வெகுதூரம் மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த காட்சி கடலாகிய பூமாதேவியின் கேசத்தைச் சுற்றிலும் அணியப்பெற்ற முத்துமாலை போல இருந்தது. தென்றல் காற்று முன்னிலும் அதிக இனிமை உடையதாகக் கனிந்து வீசி சகல ஜீவராசிகளுக்கும் ஆநந்தத் தாலாட்டுப் பாடிப் பரவசப்படுத்திக் கொண்டிருந்தது.

அத்தகைய நிகரற்ற ரமணியக் காட்சியில் லயித்துப் போய் மெய்ம்மறந்து பூரித்துப் படுத்திருந்த கந்தசாமி பலமுறை நெடுமூச் செறிந்து, “ஆகா! இந்த இடம் எவ்வளவு பிரம்மாநந்தமாக

மா.வி.ப. I-3 இருக்கிறதப்பா இதே இடத்துக்கு நாம் பகல் பன்னிரண்டு மணி வேளைக்கு வந்திருந்தால், இந்த மணலில் நாம் காலை வைத்து உயிர் பிழைத்துத் திரும்பிப் போக முடியுமா? நெருப்பில் விழுந்த சருகு போல, கால் அப்படியே கருகிப்போய் நரகவேதனை உண்டாகிவிடுமே. அந்தச் சமயத்தில் மனிதர்கள் எவ்வளவு தான் பிரயாசைப்பட்டாலும், அந்தக் கொடுமையைக் கொஞ்சமாவது மாற்ற முடியமா? இப்போது நாம் அனுபவிக்கும் பிரம்மாநந்த சுகத்தில் ஓர் அணுவிலும் பரம அனுப்பிரமாணம் நம்மால் உண்டாக்கிக் கொள்ள முடியுமா? கடவுளுடைய மகிமையை என்னவென்று புகழுகிறது ஓர் இமைகொட்டும் நேரத்தில், கடவுள் தமது மந்திரக்கோலை ஆட்டினால் அண்டாண்ட பிரம்மாண்டங்கள் எல்லாம் தலை தடுமாறிப் போகின்றன பார்த்தாயா? ஒரு நொடியில் உலகம் முழுதையும் சுட்டெரித்து விடுகிறார். அடுத்த கூடிணத்தில் ஒரு மழை பெய்ததானால் எங்கு பார்த்தாலும் ஒரே ஜலப்பிரவாகமாகி விடுகிறது. இப்போது பார். கொஞ்ச நேரத்துக்கு முன் நெருப்புப் பொறி பறந்த இந்த உலகம் முழுதும் இப்போது அமிர்தசாகரத்தில் ஆழ்ந்து மிதந்து கொண்டிருக்கிறது. இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, தங்கள் ஆயிசு காலம் முழுதும் உழைத்துத் தண்ணீரை எடுத்துக் கொட்டினால்கூட, இப்படிப்பட்ட அற்புதமான மாறுபாட்டைச் செய்ய முடியுமா? அபாரசக்தி வாய்ந்த அகண்டாதிதனான பரமாத்மாவின் ஆக்ஞாசக்கரம் எப்படி நடைபெற்று வருகிறது பார்த்தாயா! உயிரில்லாத ஜடவஸ்துக்கள் என்று நாம் கருதும் பூமி, சந்திரன், சூரியன், கடல், மேகம், தண்ணி, பர்வதங்கள் முதலியவை அதனதன் ஒழுங்கில் நின்று, கட்டுப்பாட்டுக்கு அடங்கி, எப்படி நடக்கின்றன பார்த்தாயா? கடல் இவ்வளவு பெரியதாக இருக்கிறதே. இதற்கு ஏதாவது கரை இருக்கிறதா? இந்தக் கடல் பக்கம் கொஞ்சம் உயர்ந்தால் உலகில் உள்ள ஜீவராசிகளின் கதி எல்லாம் என்னவாகும் பார்த்தாயா? ஈசுவரனுடைய மகிமையையும், அவனுடைய சிருஷ்டியின் லீலாவிநோதத்தையும் எண்ணிப் பார்க்கப் பார்க்க, எல்லாவற்றிலும் மேலான பதவி என்று நாம் பாராட்டிப் புகழும் இந்த மனித ஜென்மம் கடவுளின் சிருஷ்டியில் ஓர் அற்பமான தூசிக்குக்கூட உவமை சொல்ல முடியாது. அப்படிப்பட்ட பரம அற்பர்களான மனிதருக்கு தாம் என்ற ஆணவமும், ஆசாபாசங்களும் எவ்வளவு அபாரமாக இருக்கின்றன பார்த்தாயா? இவ்வளவு பிரம்மாண்டமான சிருஷ்டியை நடத்தி சகல ஜீவராசிகளையும் காத்து அழித்து மறுபடி மறுபடி நிர்மானம் செய்து, திரை மறைவில் நின்று நடர்களை ஆட்டி வைக்கும் சூத்திரதாரி போல தோன்றியும் தோன்றாமலும் நிற்கும் சர்வேசுவரன் ஒருவன் இருக்கிறான் என்பதையும், அவன் நமது செயல்களை எல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதையும், அவனுடைய கண் திருஷ்டிக்கு எதுவும் மறைவானதில்லை என்பதையும் கொஞ்சமும் நினையாமல் மனிதரில் படித்தவரும் படிக்காதவருமான பெரும்பாலோர் அக்ஞான இருளில் மூழ்கி, ஏராளமான பணத்தைத் தேடுவதிலேயே தமது ஆயுள்காலம் முழுதையும் போக்கி, அந்த வேலையைச் செய்வதற்காகவே தாம் ஜென்மம் எடுத்திருப்பதாக எண்ணிக் கொண்டு புரட்டிலும், மோசத்திலும் இறங்கிக் கெட்டலைந்து உழன்று கடைசிவரையில் உண்மை ஞானம் பெறாமல் இருந்தே வீணர்களாய் மடிகிறார்களே! இது என்ன அநியாயக் கொள்ளை பார்த்தாயா? செல்வம் என்பது கடவுளுடைய அகண்ட சிருஷ்டியில் மகா அற்பமானது. அது இன்றைக்கு ஒருவனிடத்தில் இருக்கிறது; நாளைக்கு இன்னொருவன் இடத்திற்குப் போகிறது. ஒருவன் தனது ஆயிசுகாலம் முடியத் தனது மனத்தையும் உடம்பையும் வதைத்துப் பலரிடம் உள்ள பொருள்களை எல்லாம் தேடி ஒரிடத்தில் சேர்த்து வைக்கிறான். அதற்குள் அவனது ஆயிசு முடிகிறது. அவன் இறந்து போகிறான். அதன் பிறகு அவனுடைய பிள்ளை வருகிறான். அதைத் தேடிச் சேர்த்ததில் எவ்வளவு உழைப்பு ஏற்பட்டதென்பது அவனுக்குத் தெரியாது ஆகையால், அவன் அவ்வளவு பொருளையும் வெகு சீக்கிரமாகச் செலவு செய்து, அது மறுபடி பிரிந்து பலரிடத்துக்குப் போகும்படி செய்துவிடுகிறான். இப்படி ஒரிடத்தில் இருக்கும் வெள்ளியையும் பொன்னையும் இன்னோரிடத்திற்கு மாற்றிக் கொண்டே இருப்பதற்காகவா, கடவுள் இந்த மனித ஜென்மத்தைப் படைத்து, இவ்வளவு நுட்பமான அறிவையும், எந்தக் காரியத்தையும் நிறைவேற்றும் அபார சக்தியையும் மனிதருக்கு அமைத்திருக்கிறார். இந்தப் பொன்னும் வெள்ளியும் கடவுளுக்கு ஒரு துரும்புக்குச் சமம். ஆதலால், அது எங்கே இருந்தால், அவருக்கு அதைப் பற்றி என்ன சிந்தை? கோடாது கோடியாக நிறைந்திருக்கும் மனிதர்களை இந்த வீண் வேலைக்காகவா படைத்திருக்கிறார்? என்னுடைய வீட்டில் உள்ள ஒரு பண்டம் கூடத்தில் இருந்தாலும், என்னுடையதுதான், அறைக்குள் இருந்தாலும் என்னுடையது தான். அதுபோல என் வீட்டில் இருக்கும் தங்கமும் கடவுளுடைய சிருஷ்டிக்குள் தான் இருக்கிறது. இன்னாருடைய வீட்டிற்குள் இருக்கும் தங்கமும் கடவுளுடைய சிருஷ்டிக்குள் தான் இருக்கிறது. அதைப்பற்றி கடவுளுக்கு ஏதாவது கவலையுண்டா, அல்லது, நினைவு தான் இருக்குமா? ஒன்றும் இராதென்றே நினைக்கிறேன். அப்படி இருக்க, மனிதர் தம்முடைய ஆயிசு காலத்தை எல்லாம் பூர்த்தியாக இதிலேயே விரயம் செய்து அழிந்து போகிறார்களே என்ற நினைவு தான் கொஞ்சகாலமாக என் மனசில் வந்து வந்து வருத்திக் கொண்டிருக்கிறது.

கோபாலசாமி:- (மகிழ்ச்சியாகப் புன்னகை செய்து) ஏதப்பா! நீ எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய் பெருத்த வேதாந்த விசாரணையில் இறங்கிவிட்டாய். நீ பெரிய கோடீசுவரன். உனக்கும் பசி என்பது கிடையாது. போதாக்குறைக்கு உனக்கு ஜில்லா கலெக்டருடைய ஏகபுத்திரி எஜமானியாக வரப் போகிறாள். அவளும் உன்னுடைய கோடிக்குத் துணையாக இன்னொரு கோடி ரூபாயாவது கொண்டு வருவாள். நீ வெள்ளியையும் தங்கத்தையும் எவ்வளவு தான் இழிவுபடுத்திப் பேசினாலும், அவை உன்னிடம் மேன்மேலும் வந்து சேர்ந்து கொண்டே தான் இருக்கும். நீ எவ்வளவு வேண்டுமானாலும் வேதாந்தம் பேசலாம். எங்களைப் போன்ற ஏழைகள் எல்லாம் என்ன செய்கிறது. கடவுள் எங்களுடைய வயிற்றில் பசியென்ற ஒர் அடங்காப்பிசாசை வைத்திருக்கிறார். இந்த உலகத்தில் அமபாரம் அம்பாரமாக தானியங்களும், தின்பண்டங்களும், பழவகைகளும் உண்டாகும்படி கடவுள் செய்திருக்கிறார் ஆனாலும், இந்த உலகம் எத்தனையோ யுகம் யுகமாய் இருந்து வந்திருக்கிறது. நாமோ இப்போது பிறந்திருக்கிறோம். நமக்கு முன் பிறந்து இறந்தவர்கள் எல்லாம் நிலங்களையும் வீடுகளையும் அபகரித்துத் தம் தமக்குச் சொந்தமென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் போல ஏழைகளெல்லாம் பிறந்து கொண்டே போகிறார்கள். எங்களுக்குப் பசி என்பது மாத்திரம் இல்லாதிருந்தால், நாங்களும் உன்னைப் போல வேதாந்தம் பேசத்தான் பேசுவோம்; வெள்ளியையும் பொன்னையும் உதைத்துத் தள்ளுவோம். ஓயாமல் வயிறு பசித்துக் கொண்டு, எதையாவது உள்ளே போடு போடு என்று உள்ளே இருந்து கிள்ளிக்கொண்டே இருக்கிறது. உங்களுடைய வீட்டில் இந்த வருஷத்தில் விளைந்து வந்த ஐயாயிரக்கல நெல்லைக் களஞ்சியங்களில் போட்டு வைத்திருக்கிறீர்களே. அதில் நான் ஒருபடி நெல் எடுத்து என் பசியை ஆற்றிக் கொள்ள எனக்கு அதிகாரம் உண்டா? அப்படி நான் செய்தால், என்னை நீங்கள் சும்மா விடுவீர்களா? இவ்வளவு தூரம் வேதாந்தம் பேசும் நீ “கடவுளுடைய சிருஷ்டியாகிய இவனுடைய வயிறு பசியாகிய அவஸ்தையினால் வருந்துகிறது. கடவுளுடைய சிருஷ்டியாகிய நெல் எங்கிருந்தால் என்ன? இந்த வயிறு அதை எடுத்துச் சாப்பிட்டுத் தனது பாதையைத் தீர்த்துக் கொள்ளட்டும்” என்று நீ சொல்லிவிட்டுப் பேசாமல் இருப்பாயா? இருக்கவே மாட்டாய். ஏதோ சிநேகிதனாயிற்றே என்று நீ ஒருதரம் பொறுப்பாய்; பல தடவைகள் பொறுப்பாய். நான் ஓயாமல் அப்படியே செய்து கொண்டு போனால், நீ என்ன செய்வாய் தெரியுமா? “ஏதடா இவன் பெரிய திருடனாய் இருக்கிறான். இப்படிப்பட்ட அயோக்கியனோடு நாம் சிநேகம் வைத்துக் கொண்டிருப்பது சரியல்ல” என்று நினைத்து, நீ அதன் பிறகு என்னோடு பேசமாட்டாய்; என்னுடைய சிநேகிதத்தையும் விட்டுவிடுவாய். நீ மாத்திரமல்ல; உலகத்தில் உள்ள சகலமான மனிதரும் இப்படித் தான் செய்வார்கள். உலகத்தை எல்லாம் துறந்த ஒரு சந்நியாசியை எடுத்துக் கொள்வோம். அவருடைய கையில் ஒரு திருவோடும், இடுப்பில் ஒரு கோவணமும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் படுத்துக் கொண்டிருக்கும் போது, பசியினால் அவஸ்தைப்படும் கறையான்கள் அவருடைய கோவணத்தை அறித்துத் தின்கிறதாக வைத்துக் கொள்வோம். அல்லது, திருவோடில்லாமல் அவஸ்தைப்படும் வேறொரு பரதேசி அவருடைய திருவோட்டை எடுத்துக் கொண்டு போவதாக வைத்துக் கொள்வோம். அப்போது என்ன நடக்கும்? படுத்துக் கொண்டிருக்கும் துறவி அந்தக் கறையான்களை அடித்து நசுக்கிக் கொல்லாவிட்டாலும், அப்புறமாவது ஒட்டிவிடுவார். அல்லது, தாமாவது எழுநது அபபால் போய்விடுவாரே அன்றி கறையானுடைய பசி தீரட்டும் என்று கோவணத்தை விட்டிருக்க மாட்டார். அவர் உண்மையில் உலகைத் துறந்தவராகவே இருக்கலாம். அவருக்கு ஒருவிதப் பற்றும் இல்லாமல் இருக்கலாம். இந்த உலகத்தில் மற்ற மனிதரோடு இருந்து பழக வேண்டுமானால், மனிதர் தம்முடைய மானத்தை மறைத்துக் கொள்வது அவசியம் என்று ஜனங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லாமல் அந்தத் துறவி நிர்வானத்தோடு ஊருக்குள் வந்தால் எல்லோரும் அவரைக் கல்லால் அடிப்பார்கள். அதுபோல உலகத்தார் நிலம் முதலிய சகலமான பொருள்களையும் தம் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருப்பதோடு, அதைப் பிறர் எடுத்துக் கொள்வது திருட்டுக் குற்றமென்று அதற்குத் தண்டனையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஜனங்களுடைய உரிமைகளையும் உடைமை களையும் காப்பாற்ற அரசன் என்றும், நீதிபதி என்றும், போலீஸ் என்றும், சிறைச்சாலை என்றும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இத்தனை நிர்ப்பந்தங்களுக்குள் ஏழை மனிதன் இருந்து கொண்டு தனது மானத்தை மூடி, வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. வயிற்றுப் பசிக்கு ஆகாரம் போட்டால், உடம்பு பெருக்கிறது. ஐம்புலன்களின் ஆசையும் பெருகுகிறது, அவனுக்கு மனைவி ஒருத்தி வேண்டியிருக்கிறது. அவளை அடைந்தால், பிள்ளை குட்டிகள் தாராளமாகப் பெருகுகிறார்கள். அவர்களோடு அவனுடைய துன்பங்களும் இல்லாமையும் அமோகமாக வளருகின்றன. அவனும் அவனுடைய குடும்பத் தாரும் சேர்ந்து இரவு பகலாய் உழைத்துப் பொருள் தேடினால் கூட அவர்களுடைய அன்றாடப் பசி திருவதுகூட அரிதாக இருக்கிறது. அவர்கள் எல்லோரும் ஒரு நாள் செய்தது போலத் தங்களுடைய ஆயிசு காலம் முடிய உழைத்துத்தான் தங்களுடைய பசியை ஆற்றிக் கொள்ள நேருகிறது. இப்படி அவர்கள் தங்களுடைய ஆயிசு காலம் முழுதையும் தங்கள் வயிற்றை நிரப்புவதற்காகவே வீணாக்க நேருகிறதே. இது யாருடைய குற்றம்? அவர்களுடைய குற்றமா? அவர்களுடைய முன்னோர் ஏழ்மை நிலைமையில் இருந்தது குற்றமா? அல்லது, உலகத்தில் எல்லோரும் சொத்துகளைத் தம் தமது என்று பங்கு போட்டுக் கொண்டதனால் ஏற்பட்ட உரிமைச் சட்டங்களின் குற்றமா? அல்லது, கடவுள் எல்லாவற்றையும் சிருஷ்டித்து, எல்லோரையும் சமமான செல்வம் உடையவராக் அமைக்காமல் வலியோர் எளியோருக்கில்லாமல் எல்லாவற்றையும் அபகரித்துக் கொள்ளும்படி விட்டு ஏற்றத் தாழ்வுகளை வைத்திருக்கிறார் என்று அவர் மேல் குற்றம் சுமத்துகிறதா? இதெல்லாம் பெரிய விஷயம். கந்தசாமி:- ஏழை மனிதர்களுடைய ஆயிசுகாலம் எல்லாம் வயிற்றுப் பிணியைத் தீர்ப்பதற்காக அழிகிறதைப் பற்றி நான் அவர்கள் பேரில் குறைகூறவில்லை. ஏராளமான செல்வத்தை வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் மேன்மேலும் பணத்தாசையாகிய பேய் பிடித்து ஏன் உழன்று தங்களுடைய ஆயிசு காலத்தை வீணாக்க வேண்டும் என்ற கருத்தோடல்லவா நான் பேசுகிறேன்.

கோபாலசாமி:- அது ஒருவிதத்தில் உண்மைதான். ஆனால் இந்த உலகத்தில் கொஞ்சமாகப் பணம் வைத்திருக்கிறவனை விட அதிகமாகப் பணம் வைத்திருக்கிறவனுக்கே ஜனங்கள் அதிகமான மரியாதையும், கெளரதையும் கொடுக்கிறார்கள். இப்போது உன்னுடைய உதாரணத்தையே எடுத்துக்கொள். உன்னுடைய சொந்த ஊராகிய மன்னார்குடியில் இன்னம் எத்தனையோ மிராசு தார்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சாப்பாட்டுக்குக் குறை வில்லை. இந்த ஊர் கலெக்டர் உங்கள் ஊரில் டிப்டி கலெக்டராக இருந்த காலத்தில் மற்ற மிராசுதார்கள் எல்லோரும் அவரிடம் வந்து பழகித்தான் இருப்பார்கள். அப்படி இருந்தும், அவர் அந்த ஊரை விட்டுப் பல ஊர்களுக்கு மாற்றலாகி கடைசியில் பெரிய கலெக்டர் உத்தியோகம் பெற்று இந்த ஊருக்கு வந்திருக்கிறார். வந்தவர் உங்கள் ஊரில் உள்ள மற்ற எல்லோரையும் மறந்து, உங்கள், குடும்பத்தை மாத்திரம் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்து, அவருடைய ஒரே பெண்ணை உனக்குக் கொடுப்பதாக உன் தகப்பனாருக்குக் கடிதம் எழுத வேண்டிய காரணம் என்ன? அந்த ஊரில் உள்ள எல்லோரையும்விட நீ அதிகப் பணக்காரனாயும், அதிக நிலம் உள்ளவனாகவும் இருப்பதனால் அல்லவா? ஆகையால், பணம் அதிகப்பட அதிகப்பட கெளரதையும் மரியாதையும் பெரிய மனிதர்களுடைய சம்பந்தமும் அதிகரிக்கின்றன. இதை அறிந்து தான், நம்முடைய திருவள்ளுவர் அருளிலார்க்கு அவ்வுலகமில்லை என்றும், பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை என்றும் சொன்னார். இப்படியெல்லாம் நான் சொல்லுவதில் இருந்து, நான் உன்னுடைய செல்வத்தைக் கண்டு பொறாமை கொண்டு இப்படிப் பேசுகிறேன் என்று நினைக்காதே. நான் சொன்னது உன்னைப் பற்றியதல்ல; உலக நியாயம் அப்படி இருக்கிறது என்று உன்னை ஒர் உதாரணமாக வைத்துச் சொன்னேன். அது போகட்டும். உலகத்துக் கோணலை அதைப் படைத்த சர்வ வல்லமையுள்ள கடவுளே திருத்த முடியவில்லை. நாம் அதைத் திருத்துவது ஒருநாளும் சாத்தியப்படாது. இத்தனை பெரிய சூரிய சந்திர மண்டலங்களை எல்லாம் படைத்த எல்லாம் வல்ல கடவுள் அற்பர்களான இந்த மனிதர்களுடைய மனக்குணக்கையும், அகங்காரத்தையும், காமம், குரோதம் முதலிய கெடுதல்களையும் இல்லாமல் சிருஷ்டிக்க முடியாமல் போய் விட்டதைப் பற்றித்தான் நான் ஆச்சரியமடைகிறேன். ஆனாலும் ஒரு விஷயம் என் மனசில் நிரம்பவும் திருப்தியையும் சந்தோஷத்தையும் உண்டாக்குகிறது. கோடீசுவரனாகிய நீ எங்களைப் போன்ற ஏழைகளிடத்தில் எல்லாம் மனசில் அடங்காத அவ்வளவு அதிகமான ஜீவகாருண்யமும், உண்மையான இரக்கமும் வைத்திருக்கிறாய் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. யானையின் ஒரு கவளமாகிய அரிசி கீழே சிந்தினால் ஒரு கோடி எறும்புகள் அதைத் தின்று ஜீவிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறபடி, உன்னால் எத்தனையோ பிரஜைகள் தங்களுடைய ஏழ்மைப் பிணி நீங்கி க்ஷேமப்படுவார்கள் என்பது நிச்சயம். உன்னைப் போல் உள்ள எல்லாப் பணக்காரர்களும் இப்படி இருக்க வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் - என்றான்.

அவ்வாறு அவன் கூறி முடித்தபோது, அதை ஆமோதித்தது போல எட்டுமணி குண்டு போடப்பட்ட ஒசை கேட்டது.

அதைக் கேட்ட கந்தசாமி சடக்கென்று எழுந்து உட்கார்ந்து, தனது உடைகளில் படிந்திருந்த மணலைத் தட்டிய வண்ணம் “சரி, பணக்காரருடைய பேச்சு போதும். நேரமாகிறது. நாம் நம்முடைய ஜாகைக்குப் போவோம்; வா. இப்போதுதான் வந்த மாதிரி இருக்கிறது. மணி எட்டு ஆகிவிட்டதே. இந்த இடம் மனசைக் கவர்ந்து பரவசப் படுத்திவிட்டதப்பா. இதை விட்டு வரவே மனம் வரவில்லையே” என்று கூறிய வண்ணம் எழுந்தான். அப்போது அவனது பார்வை அவனை மிஞ்சி மேரிமகாராணியார் கலாசாலைக் கட்டிடத்தைப் பார்த்தது. கோபாலசாமியும் சிரித்துக் கொண்டு எழுந்தவனாய், “இருக்குமல்லவா. இது எப்பேர்ப்பட்ட இடம். இரண்டு விதத்தில் இந்த இடம் உன் மனசை மோகிக்கச் செய்கிறது. இந்த இடம் இயற்கையிலேயே வசீகரமாக இருக்கிறதோடு இன்னொரு விதத்திலும் இது உன் மனசைக் கவருகிறது” என்று வேடிக்கை யாகவும் குத்தலாகவும் கூறினான்.

கந்தசாமி “இன்னொரு விதமா? அது என்ன?” என்று மகிழ்ச்சியோடு கேட்க, கோபாலசாமி புன்னகை செய்த வண்ணம் “வேறு என்ன ம-ள-ள-ஸ்ரீ கந்தசாமி பிள்ளை அவர்களுடைய எஜமானியம்மாள் படிக்கும் இடம் இதுவல்லவா. அதைப் பார்க்கும் போதெல்லாம் மனசு பூரித்துப் பொங்குவது இயற்கை தானே? உன்னுடைய எஜமானியம்மாள் இப்போது இந்தக் கட்டிடத்திற்குள் இல்லாமல் இருக்கையிலேயே உனக்கு இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறதே. பகல் பொழுதில் அவர்கள் இங்கே படிக்கும் பொழுது பகல் வேளையில் இங்கே வந்திருந்தால், நீ கொஞ்ச நேரத்துக்கு முன் சொன்னபடி இங்கே காயும் சூரியனுடைய வெயிலைக்கூட நீ உணர மாட்டாய் என்று நினைக்கிறேன்” என்றான். அதைக் கேட்ட கந்தசாமி ஆனந்த மயமாக மாறிப்போய், “ஆமடா! வாஸ்தவந்தான். புதிய பெண்ஜாதி என்றால், யாருக்குத் தான் சந்தோஷமிருக்காது உனக்குக் கலியாணம் என்றால் நீ மாத்திரம் சந்தோஷப்படாமல், விசனித்து மூலையில் உட்கார்ந்து அழுவாயோ? புது மோகத்துக்கு முன் வெயிலாய் இருந்தாலும் நெருப்பாய் இருந்தாலும் உறைக்காது தான். நீ கூடத் தெரியாதவன் பேசுகிற மாதிரி பேசுகிறாயே! அவளை நான் இப்போது மனசால் கூட நினைக்கவில்லை. அவள் தன்னுடைய பங்களாவில் இந்நேரம் ஆனந்தமாக் வீணை வாசித்துக் கொண்டு இருக்கிறாளோ, அல்லது, புஸ்தகம் படித்துக் கொண்டு இருக்கிறாளோ, அல்லது, போஜனம் செய்து கொண்டு இருக்கிறாளோ, அவளை ஏன் நீ இங்கே இழுக்கிறாய்?” என்றான்.

கோபாலசாமி:- அதிருக்கட்டும். காரியம் இவ்வளவு தூரம் முடிவுக்கு வந்திருக்கிறது. உனக்குத் தெரியாமலேயே இவர்கள் இந்தக் கலியானப் பேச்சை முடித்து விட்டார்கள். உன் தாய் தகப்பனார் முதலியோர் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று நிச்சயதாம்பூலம் மாற்றுவதற்காகப் புறப்பட்டு வரப்போவதாக உனக்கு உன் தகப்பனாரும் கடிதம் எழுதிவிட்டார். அதையும் நீ ஒப்புக்கொண்டு விட்டாயே. அந்தப் பெண்ணை நீ ஒரு தடவையாவது பார்க்க வேண்டாமா? உன் தகப்பனார் முதலிய எவரும் இங்கே வந்து பெண்ணைப் பார்க்கவில்லையே. பெண் கருப்பாக இருக்கிறதா, சிவப்பாக இருக்கிறதா, உடம்பில் எவ்வித ஊனமும் இல்லையா என்ற முக்கியமான விஷயங்களையாவது நீங்கள் பார்த்து அறிந்து கொள்ள வேண்டாமா? இந்த விஷயம் சாதாரணமான விஷயமா? மனிதன் ஆயிசுகாலம் வரையில் துக்கப்படுவதும், சுகப்படுவதும் பணத்தினால் அல்ல. அவனுக்குக் கிடைக்கும் பெண்ஜாதியின் குணாதிசயங்களினால்! ஒரு பரம ஏழைக்கு ஏற்படும் சுகம், கெடுதலான மனைவியைப் படைத்த ஒரு கோடீசுவரனுக்கும் கிடைக்காதென்ற விஷயத்தை நீ அறியாதவனா? மனிதன் தன்னுடைய ஆயிசுகால பரியந்தம் க்ஷேமமாகவும் பாக்கியவானாகவும் இருப்பதற்கு உத்தமியான சம்சாரம் அவனுக்கு வாய்ப்பது வீட்டுக்கு அஸ்திவாரம் கோலுவது போன்றதல்லவா? பெண் பெரிய கலெக்டருடைய மகள் என்ற காரணத்தினாலேயே அவளிடம் எல்லா நலன்களும் அவசியம் இருக்கும் என்று நிச்சயித்துக் கொள்ளலாமா? நீ பார்க்கா விட்டாலும், உன் தகப்பனார், தமயனார் முதலிய யாராவது ஒருவர் பார்க்க வேண்டாமா? நான் இப்படிப் பேசுவதைப் பற்றி, நீ என்மேல் ஆயாசப்பட்டாலும், பாதகமில்லை. நான் உன்னுடைய கூேடிமத்தைக் கருதியே பேசுகிறேன். அதுவுமன்றி, பெண்ணுக்குத் தாய்கூட இல்லை என்று கடிதத்தில் எழுதி இருக்கிறார்களே. தாயில்லா பெண்ணைக் கட்டினால், நீ அவர்களுடைய வீட்டுக்குப் போனால் அன்பாக உன்னை உபசரிப்பதற்கு வேறே யார் இருக்கிறார்கள்? இந்த எண்ணமெல்லாம் உன் மனசில் உண்டாகவில்லையா? ஏதடா இவன் அபசகுனம் போலக் குறுக்கிட்டு இப்படிப் பேசுகிறானே என்று நீ நினைத்தாலும் நினைக்கலாம். அல்லது, பெண்ணின் பெருமையை நான் குறைவு படுத்திப் பேசுகிறதாகவும் நீ எண்ணலாம். இருந்தாலும், பாதகமில்லை” என்றான்.

அதைக் கேட்டவுடனே கந்தசாமி சிறிது யோசனை செய்தபின் மறுபடி பேசத்தொடங்கி, “என்னடா, கோபாலசாமி! நீ கூட யோசனை இல்லாமல் பேசுகிறாயே! இந்தக் காலத்தில், அதுவும் வெள்ளைக்காரருடைய நடையுடை பாவனைகளை அனுசரித்து நடக்கும் நம்முடைய தேசத்துப் பெரிய மனிதர் வீட்டில், சாதாரண மனிதர்களுடைய வீட்டில் நடப்பது போல மாமியார் முதலியோர் வந்து மாப்பிள்ளைக்கு உபசாரம் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறாயா? இவர்கள் வீட்டில் சமையலுக்கு எட்டுப் பரிசாரகர்கள் இருப்பார்கள். மற்ற குற்றேவல்களைச் செய்வதற்குப் பத்து வேலைக்காரர்கள் இருப்பார்கள். நமக்கு வேண்டிய விருந்து முதலிய காரியங்களை எல்லாம் அவர்களே செய்து விடுவார்கள். மாமியார் இருப்பதும் ஒன்று தான்; இல்லாமல் போவதும் ஒன்று தான். இந்தக் காலத்தில் பணம் அதிகமாக இருந்தால் எல்லா விஷயங்களும் இயந்திர சக்தி போல சொந்த மனிதருடைய உதவி இல்லாமல் தானாகவே நடைபெறுகின்றன. சாதாரண ஜனங் களுடைய வீட்டில் மருமகப்பிள்ளை வந்து விட்டால், மாமியார் முதலிய பிரபலஸ்தர்கள் பிரியமாகிய பெரிய சக்தியினால் தூண்டப்பட்டு அரும்பாடுபட்டு விருந்து சிற்றுண்டி முதலியவற்றைத் தயாரித்துத் தாங்களே சுதாவில் பரிமாறி அன்பாகிய அமிர்தத்தை மழை போலப் பொழிவார்கள். அந்த இடத்தில் இருப்பது சுவர்க்கலோகத்தில் இருப்பது போல இருக்கும். அதனால் ஒருவரிடத்தில் ஒருவருக்கு வேரூன்றிய வாஞ்சையும் பாசமும் சுரந்து நிலைநிற்கும். எல்லா உபசரணைகளையும் வேலைக்காரர்களே செய்து விடுவார்களானால், மாமியார் முதலிய நெருங்கின பந்துக்களுடைய நற்குணங்களும், அந்தரங்க அபிமானமும் வெளிப்பட அவகாசம் இல்லாமல் போய் விடுகிறது. மனிதர் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகச் செய்து கொள்ளும் சிறிய சிறிய காரியங்களினாலே தான், பாந்தவ்வியத்தையும் அன்பையும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். பெரிய மனிதருடைய வீட்டில், அந்த முக்கியமான அம்சம் தான் முழுப் பூஜ்ஜியமாக இருக்கிறது. அப்படி இருக்க, மாமியார் இருப்பதும் ஒன்று தான்; இல்லாததும் ஒன்று தான். பெண் தாய் இல்லாதவள் ஆயிற்றே என்ற கவலையையே நாம் கொள்ள வேண்டுவதில்லை.

கோபாலசாமி:- வாஸ்தவமான பேச்சு. நீ சொல்வது மாமியாரை மாத்திரம் பொருத்த வார்த்தையல்ல. புது நாகரிகப் பிரபுக்கள் வீட்டிற்கு நன்றாகப் படித்து பி.ஏ., எம்.ஏ. பட்டம் பெற்ற பெண்களும் சரி, அவ்விடத்திலும், எல்லா வேலைகளையும், சமையலையும் செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள வேலைக்காரிகளும், வேலைக்காரர்களும் சகலமான பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்வதால், நாட்டுப் பெண்களுக்கு ஒரு வேலையும் இல்லாமல் போகிறது. அவர்கள் நன்றாக உண்டு உடுத்து, நவராத்திரிக் கொலுப் பொம்மைகள் போல, சோம்பேறிகளாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மனசுக்கும் உடம்புக்கும் எவ்வித வேலையும் இல்லாமல் மலினம் ஏற்படுகிறது. புருஷன் பெண்ஜாதி என்றால், நீ மாமியார் விஷயத்தில் சொன்னது போல, பத்தி புருஷனுடைய சுக செளகரியங்களைத் தானே நேரில் கவனித்து, அவனுக்குரிய ஆகாராதி தேவைகளை எல்லாம் அன்புடன் கலந்து அளித்து, அவனுக்குரிய பணிவிடைகளை எல்லாம் நிறைவேற்றி, இரண்டு உடலும் ஒருயிரும் போல ஒன்றுபட்டுப் போக வேண்டும். அப்படிச் செய்யாமல், எல்லா வேலைகளையும் பணிமக்களுக்கே விட்டு, பெயருக்கு மாத்திரம் சம்சாரங்கள் என்று வெளிப் பார்வைக்குப் பகட்டாக புருஷருடன் கூடவே இருப்பதனால் மாத்திரம் அவர்களுக்குள் பற்றும் பாசமும் ஏற்படுமோ என்பது சந்தேகந்தான். முதலில், பெண்கள் தேகத்துக்கு உழைப்புக் கொடுத்து வேலைகள் செய்வதே அகெளரவதை என்று பெரிய மனிதர் வீட்டுப் பெண்கள் எண்ணிக்கொண்டு சும்மா இருக்கிறார்கள். ஆண்களைப் போல பெண்களும், நன்றாக உழைத்து வேலை செய்யாவிட்டால், தேக செளக்கியம் வெகு சீக்கிரத்தில் கெட்டுப் போகிறது. பெரிய மனிதர் வீட்டுப் பெண்கள் வெளிப் பார்வைக்குக் குதிர்போலப் பெருத்துத் தளதளப்பாக இருந்தாலும், அத்தனையும் வியாதி நிறைந்த பாண்டமே அன்றி வேறல்ல. சாதாரணமாக உழைத்துத் தமது புருஷருக்கும் தமக்கும் தேவையான ஆகாரங்களைத் தயாரிக்கும் பெண்கள் பிரசவிக்கும் போது, அது வெகு சுலபமாக நிறைவேறுகிறது. அதற்கு எட்டனா செலவுள்ள சுக்குத் திப்பிலி மருந்தோடு வைத்தியச் செலவு தீர்ந்து போகிறது. பெரிய மனிதர் வீட்டில் உள்ள பெண்கள் பிரசவிக்கிற தென்றால், அவர்களுடைய உயிர் எமலோகத்துக்கு ஒருதரம் போய்விட்டு வருகிறது. அநேகர் மாண்டும் போகின்றனர். அப்படிப்பட்டவர் ஒரு குழந்தை பெறுவதற்குக் குறைந்தது ஐந்நூறு ரூபாயாவது செலவு பிடிக்கிறது. பல இடங்களில் வெள்ளைக்கார மருத்துவச்சிகள் வந்து அறுத்து ரணசிகிச்சை செய்தும் குழந்தைகளை வெளிப்படுத்த வேண்டி இருக்கிறது. இப்படி அவர்களுடைய உடம்பு மலினமடைந்து, வியாதிக்கு இருப்பிடமாய்க் கெட்டுப் போகிறது முதலாவது பலன். இரண்டாவது பலன் அவரவர்களுக்குத் தேவையான காரியங்களை வேலைக்காரர்கள் நிறைவேற்றி விடுவதால், புருஷரும், பெண்ஜாதியும் ஒருவருக் கொருவர் அத்தியாவசியம் என்பதே இல்லாமல் போகிறது. ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யும் சந்தர்ப்பம் இல்லாமல் போனால், அதனால் ஏற்படும் வாத்சல்யமும் கனிகரமும் உண்டா கிறதில்லை. இருவருக்கும் பாலியப்பருவம் இருக்கும் வரையில் சிற்றின்ப நோக்கம் ஒன்றே அவர்கள் இருவரையும் ஒன்றாகச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும். வயசு முதிர முதிர, ஒருவருக் கொருவர் எவ்விதச் சம்பந்தமும் இல்லாமல், ஒருவருக்கொருவர் பெரும் பாரமாக ஆகிவிடுவார்கள் என்பது நிச்சயம். வெள்ளைக்காரர்கள் ஸ்திரிகளைச் சம அந்தஸ்து உடையவர்களாக ஆக்குவதாகச் சொல்லி, அவர்கள் படும்பாடு யாரும் படமாட்டார்கள். மற்ற எல்லா விஷயங்களிலும் அவர்கள் நம்மைவிட அதிக புத்திசாலிகளாக இருக்கலாம். ஸ்திரி புருஷ சம்பந்தத்தில் மாத்திரம், நம்முடைய ஏற்பாட்டுக்கு இணையான சிறந்த ஏற்பாடு இந்த உலகத்தில் எங்குமில்லை என்பது நிச்சயம். பணிவு, அடக்கம், சுத்தமான நடத்தை, உழைப்புக் குணம் முதலியவற்றைக் கண்டால் எவருக்கும் சந்தோஷமும், வாத்சல்யமும் உண்டாகாமல் இருக்காது. வெள்ளைக்காரர்கள் பெண்களுக்குச் சமத்துவம் கொடுத்திருப்பதாக காகிதத்திலும், வெளிவேஷத்திலும் எவ்வளவு தான் சொல்லிக் கொண்டு திரிந்தாலும், அவர்களும், பணிவு, அடக்கம், உழைப்புக் குணம், கற்பு முதலிய குணங்கள் வாய்ந்த மனைவிகளைத் தங்கள் குல தெய்வம் போல வைத்துக் கண்மணிகளை இமைகள் காப்பது போலப் பாதுகாத்துத் தமது உயிரையே அவர் மீது வைக்கிறார்கள். அப்படிப்பட்ட குணம் இல்லா விட்டால், அவர்களுக்குள்ளும் ஒயாப் போராட்டமாகத் தான் இருக்கிறது. அடிக்கடி நியாயஸ்தலங்களில் கலியான விடுதலைக்காக எத்தனையோ விபரீதமான வழக்குகள் ஆயிரக்கணக்கில் வருவதை நாம் பார்க்கவில்லையா. சாதாரணமாக நாம் நம் தேசத்துக்கு வந்துள்ள வெள்ளைக்காரரை எடுத்துக் கொள்வோம். ஊரில் உள்ள மற்ற ஜனங்களுக் கெல்லாம் அவர்கள் தங்கள் நாய்க்குக் கொடுக்கிற மரியாதைகூடக் கொடுக்கிறதில்லை. தங்களிடம் பணிவாக வேலை செய்யும் பறையர்களான பொட்லர் முதலியவர்களுடைய உழைப்புக் குணம், பணிவு முதலியவற்றைக் கண்டு அவர்களிடம் அளவற்ற பிரியம் வைத்து அவர்களுக்குக் கனகாபிஷேகம் செய்கிறார்கள், எத்தனையோ துரைமார்கள் தங்களிடம் பணிவாக இருப்பவர்களுக்குப் பெருத்த உத்தியோகங்கள் கொடுப்பதையும், சிலர் தங்களுடைய கம்பெனிகளையோ, காப்பித் தோட்டங்களையோ அப்படியே கொடுத்து விட்டுச் சீமைக்குப் போனதாகவும் நாம் கேள்வியுறுகிறோம். வேலைக்காரர்களின் நிலைமையே இப்படி இருக்குமானால், உயிருக்குயிரான மனைவிமார்கள் அடக்கம், பணிவு, உழைப்புக் குணம், பதிவிரதைத்தனம் முதலியவற்றோடு ஒழுகினால், அவர்களிடம், அந்த வெள்ளைக்காரர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நாம் எளிதில் யூகித்துக் கொள்ளலாம் அல்லவா. ஆகையால் எந்த நாட்டிலும், மேலே சொன்ன குணங்களைக் கண்டு மனிதர் வசியமாவது சகஜமே. இந்த உலகத்தில் மனசில் மாத்திரம் பிரியம் இருக்கிற தென்பது போதாது. ஏனெனில் ஒருவர் மனசில் உள்ளதை மற்றவர் அறிந்து கொள்ளும் சக்தி கடவுள் மனிதருக்கு வைக்கவில்லை அல்லவா. ஆகையால், ஒருவருடைய மனசில் பிரியம் இருக்கிறதென்பதை அவர் பற்பல சிறிய செய்கைகளால் காட்டி பரஸ்பர வாஞ்சையைப் பெருக்குவது அத்தியாவசியம்; எல்லாவற்றையும் படைத்துக் காத்தழிக்கும் கடவுளையே நாம் எடுத்துக் கொள்ளுவோம். நாம் மனசிற்குள்ளாகவே அவருடைய விஷயத்தில் பக்தியை வைத்து அதை அபிவிருத்தி செய்து கனிய வைப்பது என்றால், அது முடியாத காரியம். ஆகையால் நாம், ராமா கிருஷ்ணா என்று அடிக்கடி வாயால் ஜெபித்து அந்த நினைவை மனசில் பதிய வைக்கிறோம். கோவிலுக்குப் போய் தேங்காய் பழம் முதலியவற்றை நிவேதனம் செய்கிறோம். இந்த உலகத்தில் உள்ள தேங்காய் பழங்களை எல்லாம் சிருஷ்டிக்கும் கடவுளுக்கு நாம் ஒரு தேங்காயையும் இரண்டு பழங்களையும் வைத்து நிவேதனம் செய்வது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றினாலும், நாம் அப்படிப்பட்ட சிறிய சிறிய விஷயங்களைச் செய்து நமது கவனத்தில் ஒரு பாகத்தை அவர் விஷயத்தில் செலவு செய்து, நமது சம்பாத்தியத்திலும் ஒரு பாகத்தைக் கடவுள் விஷயத்தில் சந்தோஷமாகச் செலவழித்து வந்தால், கடவுளின் நினைவும், அவரது விஷயத்தில் ஒருவித பக்தியும் நம்முடைய மனசில் பதிந்து நாளடைவில் விருத்தி யடைந்து வயசு முதிர முதிர தாயைப் பிரிந்த கன்று, தாயைக் காண எவ்வளவு ஆவல் கொள்ளுமோ அதுபோல, கடவுளை அடைய வேண்டும் என்ற ஒரு பேராவல், பெருத்த அக்கினி போல எழுந்து நம் மனசில் தகித்துக் கொண்டிருக்கும். கடவுளுக்கு ஆராதனம், அபிஷேகம் முதலியவற்றை நம் பெரியோர்கள் நடத்தும் போது, அது ஒரு சிறிய கல் என்பதை மறந்து, அதை அகண்டாகாரமான பரமாத்மா என்று மனதில் பாவித்து அவருக்கு நாம் பணிவிடைகள் செய்வதாக எண்ணிக்கொள்ள வேண்டும் என ஆராதனக் கிரமங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, மனிதருடைய மனசில் உள்ள அன்பைப் பெருக்கவும் மற்றவரின் பிரியத்தைக் கவரவும் வேண்டுமானால், ஒவ்வொருவரும் அன்பான வார்த்தைகளாலும், வெளிப்படையான உபசரணைகளாலும், அதைச் சாதித்துக் கொள்ள வேண்டும். கடவுளிடத்தில் மனிதர் எப்படி நடந்து கொள்ளுகிறார்களோ, அதுபோல பதி பத்திமார் ஒருவரிடத் தொருவர் நடந்து கொள்ள வேண்டும். புருஷர்கள் திடசாலிகளாகவும், பலவீனர்களான தம்முடைய மனைவியரைச் சகல விதத்திலும் காப்பாற்றக் கூடியவர்களாகவும் இருப்பதாலும், அவர்களின்றி, ஸ்திரிகளுக்கு வேறே புகலிடம் இல்லை ஆகையாலும், முக்கியமாக ஸ்திரீகள் தாம் படித்தவர்கள் என்பதையும், பணக்காரர் வீட்டுப் பெண்கள் என்பதையும் அடியோடு மறந்து, புருஷனுக்குரிய பணிவிடைகளை எல்லாம் தாமே ஏற்றுக்கொண்டு தமது அன்பை வெளிப்படுத்தியும் பெருக்கியும், அதனால் புருஷருடைய அந்தரங்கமான காதலை வளர்த்தும் இல்லறம் நடத்துவதே இருவர்க்கும் சுகிர்தமான விஷயம். அது தேகத்துக்கு ஆரோக்கியத்தையும், மனசுக்கு ஆநந்தத்தையும் உண்டாக்கும். அதைவிட்டு, சுகமாக உண்டு உடுத்து ஓய்ந்து உட்கார்ந்திருப்பதே சுகம் என்று நினைப்பது போலி இன்பமே. வெகு சீக்கிரத்தில் அது கணக்கில்லாத பல அநர்த்தங்களை விளைவிப்பது திண்ணம்.

கந்தசாமி:- (சிறிது ஆழ்ந்து யோசனை செய்து) வாஸ்தவமான சங்கதி. ஆனால், நியும் நானும் சொல்வதை யார் கேட்கப்போகிறார்கள். இந்த உத்தியோகங்கள் ஏற்படுவதற்கு முன் பெண்கள் இவ்வளவு மோசமாக இருக்கவில்லை. அப்போதும் சரி, இப்போதும் சரி, வெளி ஊர்களில் லட்சப் பிரபுக்களும், பெருத்த மிராசுதார்களும் இல்லாமலா போய்விட்டார்கள். அவர்கள் வீட்டிலெல்லாம் பெண்கள் இவ்வளவு மோசமாக இல்லை. பிழையெல்லாம் புருஷர் மேல் தான் இருக்கிறதென்று நான் துணிந்து சொல்வேன். உன்னை யார் வேலைக்காரர்களை நியமிக்கச் சொல்லுகிறார்கள்? நீயே வேலைக் காரர்களை நியமிக்கிறாய். பிறகு பெண்ஜாதி வேலை செய்ய வில்லை என்றும், உபசாரம் செய்யவில்லை என்றும், நீ சொல்வதில் என்ன உபயோகம்? பெண்களைச் சோம்பேறியாக்கி உட்காரவைத்துக் கெடுப்பதற்கு நீயே உத்தரவாதி. புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொள்வது போல, நீ வெள்ளைக் காரரைப் பார்த்து, அவர்கள் ஆயாக்களை வைக்கிறார்கள் என்று நீயும் வைக்கிறாய். அப்படிச் செய்தால்தான் பெரிய கெளரதை ஏற்படும் என்று எண்ணுகிறாய். இது போலிப் பெருமையே அன்றி வேறல்ல. அல்லது, உன் மனைவி, உழைத்து வேலை செய்தால், அவளுடைய உடம்பு வெண்ணெய் போல உருகிப் போய் விடும் என்று நீ உன்னுடைய புதிய மோகத்தில் நினைத்து, அவளைக் கீழே விடாமல் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அலைகிறாய். அவள் குனிவதற்கும் நிமிர்வதற்கும் வேலைக் காரிகளை வைக்கிறாய். அப்படிச் செய்துவிட்டு நீ அவர்கள் மேல் குறை கூறுவது நியாயமாகுமா? கிராமங்களில் உள்ள பெரிய மனிதர்களுடைய வீட்டில், மாமியார் பாட்டிமார் முதலிய பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லா விஷயங்களிலும் நல்ல வழிகாட்டி. சரியான பழக்க வழக்கங்களில் பயிற்றி பெண் உழைக்கவும் புருஷருக்குப் பணிவிடை செய்யவும் துண்டி காலக்கிரமத்தில் அவர்களை உத்தமமான ஸ்திரீகளாகச் செய்து விடுவார்கள். இப்போது உத்தியோகக் கொள்ளையில் ஒருவன் பரிட்சையில் தேறியவுடனே காஷ்மீரத்தில் அவனுக்கு ஒரு பெருத்த உத்தியோகமானால், அவன் உலக அதுபோகமில்லாத தன் பெண்ஜாதியை அழைத்துக் கொண்டு போய் தன்னரசு நாடாய் விட்டு, அவளிடம் குருட்டுப் பிரேமை வைத்து ஏராளமான வேலைக்காரர்களை நியமித்து, அவளை முற்றிலும் உபயோக மற்றவளாக்கி விடுகிறான். குழந்தைக்கு அஜிர்ணம் உண்டானால் கொஞ்சம் ஓமம் அரைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுகூட மா.வி.ப.i-4 அவளுக்குத் தெரிகிறதில்லை. அதற்காக நூறு, இருநூறு செலவு செய்து அடிக்கடி இங்கிலீஷ் டாக்டர்களை வரவழைக்க நேருகிறது. இப்படிப்பட்ட அநந்தமான விபரீதங்கள் எல்லாம் நேருவதற்கு ஆண் பிள்ளைகளே முக்கியமாக உத்தரவாதிகள் அன்றி பெண்பிள்ளைகள் என்ன செய்வார்கள்?

கோபாலசாமி:- (சிரித்துக் கொண்டு) அப்படியானால், இப் போது கலெக்டருடைய மகளை நீ கட்டிக் கொள்ளப் போகிறாயே, அவர்களுடைய வீட்டில், ஒரு துரும்பை எடுத்துப் போடு வதற்குக் கூட ஒரு வேலைக்காரி இருப்பாளே; அந்தப் பெண் உன்னுடைய வீட்டுக்கு வந்தவுடனே நீ கொஞ்சமும் தாட்சணியம் பாராமல், அவளை விட்டே சமையல் முதலிய எல்லா வேலைகளையும் செய்து கொள்வாய் போல் இருக்கிறதே. அவள் இப்போது பி.ஏ. வகுப்பில் படிக்கிறதாகக் கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறதே. நீயும் பி.ஏ. பரிட்சையில் தானே தேறி இருக்கிறாய். அவள் உனக்குச் சமமாக இருக்க வேண்டும் என்று நினைப்பாளா, அல்லது, உன்னிடம் பணிவாக நடந்து, உனக்கு வேலைக்காரி போல சமையல் செய்து போடுவாளா?

கந்தசாமி:- அது தான் எனக்கும் பெருத்த கவலையாக இருக்கிறது. இந்த வெள்ளைக்காரர்கள் உயர்தரக் கல்வி கற்றுக் கொடுப்பதாக நம்முடைய பெண்களுக்கெல்லாம் பெருத்த தீங்கிழைக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். முதலில் இல்லறம் நடத்தும் ஸ்திரீகள் எம்.ஏ., பி.ஏ. முதலிய பட்டங்களை வகிப்பதே அசம்பாவிதமும், அநாவசியமுமான காரியம். இந்தப் பட்டங்கள் எல்லாம் உத்தியோகம் பெற ஆசைப்படுவோர் களுக்குத் தான் அவசியமானவை. ஏனென்றால், ஒருவன் இன்ன பரிட்சையில் தேறியிருக்கிறான் என்பது, எப்படி இருக்கிற தென்றால், கடையில் சாமான்களை பலவித நிறையில் பொட்டலம் கட்டி, இது அரை விசை, இது முக்கால் வீசை, இது ஒரு வீசை என்று மேலே விலாசம் எழுதி இருப்பது போல, ஒரு மனிதனுடைய அறிவு இவ்வளவு பெறுமானம் உள்ளது என்று சீட்டு ஒட்டுவது போன்றதாகிறது. அப்படிப் பட்டம் பெறுவது, அதை உபயோகப்படுத்தி உத்தியோகம் பெறுவதற்கே அவசியம்; சாதாரணமாக இல்லறம் நடத்தி புருஷருக்கு உகந்த பதிவிரதா சிரோன்மணிகளாக விளங்கி கூேடிமமாக இருக்கப் பிரியப்படும் பெண்களுக்கு இந்தப் பட்டங்கள் கெடுதலாகவே முடிகின்றன. இப்படிப்பட்ட பட்டம் பெறும் ஸ்திரீகள் ஒரு புருஷனையும் மணக்காமல் சுய அதிகாரியாக இருந்து உத்தியோகங்கள் பார்ப்பதே சிலாக்கியமானது. சாதாரணமாக இல்லறம் நடத்தப் பிரியப்படும் பெண்கள் பெரிய மனிதருடைய பெண்ணாக இருந்தாலும் சரி, ஏழைகளுடைய பெண்ணாக இருந்தாலும் சரி, தாங்கள் அவசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை மாத்திரம் தெரிந்து கொண்டு குடும்ப விவகாரங்களை நடத்தும் திறமையோடு மாத்திரம் இருந்தால், அதுவே எதேஷ்டமானது. இந்த விஷயத்தில் நம்முடைய துரைத் தனத்தார் சரியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஸ்திரீகளின் படிப்பை அவர்கள் இரண்டு வகையாகப் பிரிக்க வேண்டும். ஆண் பிள்ளைகளைப் போல பட்டங்கள் பெற்று உத்தியோகம் வகிக்க ஆசைப்படுவோருக்குத் தகுந்த படிப்பை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்டவர் சொற்பமாகத் தான் இருப்பார்கள். மற்ற பெண்களுக்குக் கற்பிக்கும் கல்விக்கு பி.ஏ., எம்.ஏ., முதலிய பட்டங்கள் ஏற்படுத்தக் கூடாது. சாதாரணமாக ஒரு குடும்பத்தை நடத்தும் விஷயத்தில் ஸ்திரீகள் சமையல் செய்வது, சிக்கனமாகச் செலவு செய்வது, புருஷன் குழந்தைகள் தாங்கள் முதலிய எல்லோருடைய தேகத்தையும் வீட்டையும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும் முறை, மருத்துவம், முதலிய இன்றியமையாத விஷயங்களை அவர்களுக்கும் போதிக்க வேண்டும். அதுவுமன்றி, அவர்கள் நன்றாக உழைத்துப் பாடுபட்டு வேலை செய்ய வேண்டும் என்றும், புருஷரிடமும், மாமனார் மாமியாரிடமும், அன்னியரிடமும், குழந்தைகளிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒழுக்க முறைகளையும் நன்றாகப் போதிக்க வேண்டும். முக்கியமாக அடக்கம், கற்பு, உழைப்புடைமை முதலிய குணங்கள் பெண்களுக்கு அவசியம் ஏற்படும்படியான முறைகளை அனுசரிக்க வேண்டும். இப்படிப்பட்ட கல்வி பயிற்றினால் தான், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒற்றுமை, அன்பு, க்ஷேமம், சுபிட்சம் முதலியவை பெருக, நாடு மேன்மை அடையும். நம்முடைய பண்டைகாலப் பெருமையும் கெடாது. மற்ற தேசத்துப் பெண்களுக்குக் கெல்லாம் நம் தேசத்துப் பெண்கள். உதாரணமாக விளங்குவார்கள். ஆண் பெண்பாலர் ஆகிய இருவகுப்பாருக்கும் சுகிர்தம். இதோ என்னுடைய அண்ணி இருக்கிறாளே. அவளை எடுத்துக் கொள்ளுவோம். அவள் எந்தப் பரிட்சையில் தேறிப் பட்டம் பெற்றிருக்கிறாள்? அவள் எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிக்கவே இல்லை. தமிழ் மாத்திரம் படிப்பதற்குத் தானாகவே தெரிந்து கொண்டாளாம். அவளுக்கு இணை சொல்லக் கூடிய ஸ்திரீகள் இந்த உலகத்தில் வேறே யாரும் இருக்க மாட்டாள் என்பதே என்னுடைய அபிப்பிராயம். அவளுடைய புத்திக் கூர்மையும், வியவகார ஞானமும், அடக்கமும், பணிவுக் குணமும், உழைப்பும், குடும்பத்தை நடத்தும் திறமையும் இவ்வளவு அவ்வளவு என்று சொல்லி முடியாது. அவள் மற்றவரிடம் நடந்து கொள்ளும் அன்பிலும், பணிவிலும், மற்ற எல்லோருடைய மனசையும், பிரியத்தையும் அவள் காந்தம் போலக் கவர்ந்து எல்லோரும் அவளுக்கு அடிமையாகும் படி நடந்து கொள்ளுகிறாள். இன்னாரிடம் இன்னவிதம் நடந்து கொள்ள வேண்டும் என்ற விதரணையை மற்றவர் என் அண்ணி இடத்தில்தான் கற்றுக் கொள்ள வேண்டும். மாமன் மாமிமார்களிடத்தில் அவள் எவ்வளவு பயபக்தி விநயத்தோடு நடந்து அவர்கள் எள் என்பதற்குள் எண்ணெயாக நிற்கிறாள். புருஷனிடத்தில் அவள் நடந்து கொள்ளும் மாதிரி இருக்கிறதே, அதை மகாலக்ஷுமி விஷ்ணுவிடத்தில் நடந்து கொள்ளும் மாதிரி என்றே சொல்ல வேண்டும். அன்றி, சாதாரண மனிதருடைய செய்கைக்கு உவமானமாகச் சொல்ல முடியாது. அவள் ஏழையா? அவளுடைய தாய் தகப்பன்மாருக்கு அவள் ஒருத்தியே செல்வக் குழந்தை. அவர்களுக்கு இருக்கும் செல்வம் அளவிட முடியாத அபாரமான செல்வம். அப்படி இருந்தும், அவளுக்குக் கொஞ்சமாவது செருக்காவது, வீண் கெளரதை பாராட்டுவதாவது இல்லவே இல்லை. அப்படிப்பட்ட உத்தம பத்திகளே நம் தேசத்தில் பெருக வேண்டும் அன்றி, வெறும் பட்டம் பெற்று, ஒன்றுக்கும் உபயோகமற்றவர்களாய் அழகாய் உட்கார்ந்திருக்கும் சித்திரப் பதுமைகள் நமக்குத் தேவையில்லை. நான் எனக்கு அப்படிப்பட்ட பெண் தான் வேண்டும் என்று ஆதியில் இருந்து எங்கள் அம்மாளிடத்தில் சொல்லி வந்திருக்கிறேன். அப்படி இருந்தும் அவர்கள் எனக்கு இந்தக் கலெக்டருடைய பெண்ணை நிச்சயித்திருக்கிறார்கள். அந்தப் பெண் பி.ஏ. வகுப்பில் படிக்கிறாள் என்பதைக் கேட்கும்போதே, எனக்கு அவள் மேல் ஒருவித வெறுப்பு உண்டாகிறது. அந்தப் பட்டம் அவளுடைய யோக்கியதையைக் குறைப்பதாக என் மனசில் ஒருவித உணர்ச்சி தோன்றுகிறது. அவளை நானும் பார்க்கவில்லை; என் தாய் தகப்பனாரும் பார்க்கவில்லை என்றே நினைக்கிறேன். உத்தியோக பிரமையினால், அவர்கள் மதிமயங்கி, இதற்கு இணங்கி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். அவளுக்குத் தாயும் இல்லை. அவளும், படித்த மேதாவி ஆகையால், இது உண்மையான பற்றும் பாசமும் இல்லாத கலியாணமாக முடியும் என்று நினைக்கிறேன். எங்களிடம் உள்ள செல்வத்தைக் கருதி அவர் பெண்ணைக் கொடுக்கிறார். என் தாய் தகப்பனார் அவர் பெரிய கலெக்டர் என்பதைக் கருதி அந்தப் பெண்ணைக் கொள்கிறார்கள். ஆகையால் இது ஐசுவரியம், பெரும் பதவியைக் கலியாணம் செய்கிறதேயன்றி, கந்தசாமியும் மனோன்மணியும் பொருத்தமான சதிபதிகள் தானா என்பதை அறிந்து செய்யும் கலியாணமாகத் தோன்றவில்லை. ஆனால், எந்த விஷயத்தையும் என் தாய் தகப்பனார் நன்றாக ஆழ்ந்து யோசனை செய்து எப்போதும் செய்கிறது வழக்கம். அதுவுமன்றி என் அண்ணனும் அண்ணியும் என்மேல் அந்தரங்கமான பிரியம் வைத்தவர்கள். இப்போது முக்கியமான எல்லாக் காரியங்களையும் அவர்கள் தான் பார்த்துச் செய்கிறார்கள். என்னுடைய அண்ணி தன்னைப் போலவே சகலமான குணங்களும் வாய்ந்த நல்ல பெண்ணாகப் பார்த்து எனக்குக் கட்ட வேண்டும் என்று பல தடவைகளில் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் எல்லோரும் கலந்து யோசனை செய்து முடித்திருக்கும் இந்த ஏற்பாட்டில் அதிக கெடுதல் இருக்கா தென்றே நினைத்து நான் என் மனசை ஒருவிதமாகச் சமாதானப் படுத்திக் கொண்டிருக்கிறேன். எப்போதும் நான் மூத்தோர் சொல்லை மீறி ஆட்சேபித்தே வழக்கமில்லை. எப்படிப்பட்ட தலைப் போகிற விஷயமாக இருந்தாலும், அவர்கள் சொல்லுகிறபடிதான் நான் நடக்க வேண்டும்.

கோபாலசாமி:- ஒகோ! அப்படியானால் சரிதான். உன்னுடைய எஜமானியம்மாளுடைய பெயர் மனோன்மணி அம்மாளா? பெயர் அழகாகத் தான் இருக்கிறது. குணமும் நல்லதாக இருக்கலாம்.

கந்தசாமி:- பெயரிலிருந்து மனிதருடைய குணாகுணங்களை நாம் எப்படி நிச்சயிக்கிறது; அது முடியாத காரியம். விலை மாதரான தாசிகள் ஜானகி என்றும், சாவித்திரி என்றும் கற்பிற்கரசிகளின் பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அமங்கலிகள் கலியாணியம்மாள் மங்களத்தம்மாள் என்ற பெயர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கூலி வேலை செய்யும் ஒட்டச்சி தொம்பச்சிகள் எல்லாம், பாப்பாத்தி என்றும், துரைஸானி என்றும், ராஜாத்தி என்றும் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னங் கரேலென்று கருப்பாய் இருப்பவள் சுவரணம்மாள் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறாள். புருஷனோடும், மற்றவரோடும் ஓயாமல் சண்டையிடும் ராக்ஷஸ குணம் வாய்ந்த ஸ்திரீகள் புஷ்பவல்லி என்ற மிருதுவான பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெயரிலிருந்து தாம் எதையும் கண்டுபிடிக்க முடியாது.

கோபாலசாமி:- அது வாஸ்தவந்தான். எப்படியாவது இந்த சம்பந்தம் நல்லதாக முடியவேண்டும். எல்லா விஷயங்களிலும் ஈசுவரன் ஒரு குறைவுமில்லாமல் உன்னை மகோன்னத் ஸ்திதியில் வைத்திருக்கிறார். இந்த விஷயத்திலும் குறைவு வைக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

கந்தசாமி:- நான் அப்படி நினைக்கவில்லை. எப்பேர்ப்பட்ட மனிதருக்கும் ஒருவிதமான குறை இருந்தே திரும். இந்த உலகத்தில் சகலமான பாக்கியங்களும் சம்பூர்ணமாக வாய்ந்து கவலை விசனம் முதலிய துன்பமே இல்லாத நிஷ்களங்கமான சந்தோஷம் அனுபவித்து இறந்த மனிதரே இருந்ததில்லை அல்லவா. ஆகையால், எனக்கு மற்ற எல்லா விஷயங்களிலும், கடவுள் குறைவில்லாமல் வைத்திருப்பதால், இந்த விஷயத்தில் மாத்திரம் குறை வைத்து விடுவாரோ என்ற அச்சமும் கவலையும் என் மனசில் தோன்றுகின்றன.

கோபாலசாமி:- அநேகமாய் அப்படி நடக்காது. அல்லது கடவுளின் திருவுள்ளம் அப்படி இருக்குமானால், அதை நாம் தடுக்க முடியாது. அதனால் தான், எந்த விஷயத்திலும் உன்னுடைய நன்மையே கோரும் உன் தாய் தகப்பனார் முதலியோரும் இந்த விஷயத்தில் ஏமாறிப்போய் இருக்கலாம். எப்படி இருந்தாலும் பாதகமில்லை; கடவுளாகப் பார்த்து அவரவருடைய யோக்கியதையை மதித்து, அவரவருக்கு எது தக்கதென்று ஏற்படுத்துகின்றாரோ அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதே நல்லது. நமக்கு ஒரு கெடுதல் நேர்ந்து விட்டால், அதைக் கெடுதல் என்று பாராட்டி அதைப்பற்றி விசனப்படாமல், அதுவும் ஒரு நன்மைதான் என்ற திடசித்தத்தோடும், சந்தோஷத் தோடும், அதை ஏற்றுக் கொண்டால், அந்தக் கெடுதலின் உபத்திரவத்திலும் சுமையிலும் முக்கால் பாகத்துக்கு மேல் குறைந்து தோன்றும் என்பது கைகண்ட விஷயம். அம்மாதிரி தான் விவேகிகள் நடந்து கொள்வார்கள். இருக்கட்டும்; இப்போதும் ஒன்றும் முழுகிப் போகவில்லை. உனக்கு எவ்விதக் கெடுதலும் உண்டாகி விடவில்லை. கெடுதல் நேர்ந்து விடுமோ என்று நினைத்து நல்ல மனசை நீ ஏன் இப்போதிருந்தே வருத்திக் கொள்ள வேண்டும். கடவுள் நமக்கு எப்போதும் நன்மையையே செய்வார் என்று தியானம் செய்து கொண்டேயிரு. எல்லாம் நன்மையாகவே முடியும்; எல்லாவற்றிற்கும் உங்கள் மனிதராவது அந்தப் பெண்ணை ஒரு தடவை நேரில் பார்ப்பது உசிதம் என்று நினைக்கிறேன்.

கந்தசாமி:- நிச்சயதார்த்தத் தன்று தான் எல்லோரும் வரப் போகிறார்களே; அப்போது பார்த்துக் கொள்ளட்டுமே.

கோபாலசாமி:- அது தான் தவறு. இந்த விஷயங்களை எல்லாம் முன்னால் முடித்துக் கொள்ள வேண்டும். நிச்சயதார்த்தத்திற்கு இவர்கள் சகல முஸ்தீபுகளுடனும் இருப்பார்கள். இரு திறத்தாருடைய ஜனங்களும் வந்திருப்பார்கள். பெண்ணினிடம் ஏதாவது கெடுதல் இருந்தாலும், அதை நாம் அந்தச் சமயத்தில் கண்டுபிடிக்க முடியாது. அப்படி நாம் கண்டு பிடித்தாலும், தாட்சணியம் வந்து போராடும். இவ்வளவு தூரம் ஏற்பாடுகள் நடந்த பிறகு, நாம் தடங்கல் செய்வதா என்று ஓர் அச்சமும், தயக்கமும் உண்டாகிவிடும். இது தான் நமக்குப் பிராப்தம் என்ற வேதாந்தத்தினால், நாம் நம்மை ஆறுதல் செய்து கொண்டு காரியத்தை நிறைவேற்றி விடுவோம். நிச்சயதார்த்தத்துக்கு நாம் போவதென்றால், நாம் இந்தக் கலியாணத்துக்கு இசைந்து போகிறோம் என்பதைக் காட்டும். ஆதலால், அதன் பிறகு நாம் ஆட்சேபனை சொல்வது ஒழுங்காகாது.

கந்தகாமி:- அது நியாயந்தான். இப்போது நாம் போய்ப் பார்த்துத்தான் என்ன தெரிந்து கொள்ளப் போகிறோம்? பெண் பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கலாம். இயற்கையான அழகு அவளுக்கு இல்லாதிருந்தாலும், அவள் நல்ல பெரிய மனிதருடைய பெண் ஆகையால், நல்ல போஷணையினாலும், ஜரிகைப் புடவைகள், பட்டுப் புடவை, வைர நகைகள் முதலிய வைகளை அணிந்து கொண்டிருப்பதாலும், பார்ப்பதற்கு வசீகரமாகத் தான் இருப்பாள். அதுவும் அல்லாமல் பேய்கள் கூடப் பக்குவகாலத்தில் அழகாகத்தான் இருக்கும் என்று சொல்வதில்லையா. அது போல இவளுக்கு வயசும் பதினாறு, பதினேழு ஆகிறது. வெளிப்பார்வை பகட்டாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். கலெக்டருடைய பெண், பி.ஏ., வகுப்பில் படிப்பவள் என்றால், தங்க மூக்குக் கண்ணாடி அவசியமாக இருக்கும்; கை மணிக்கட்டில் அழகான கடிகாரம் கட்டிக் கொண்டிருப்பாள். வெள்ளைக்காரிகளைப் போல மெல்லிய மஸ்லின் ஜாக்கெட் அணிந்திருப்பாள். முகத்தில் மஞ்சள் குங்குமத்துக்குப் பதிலாக ரோஸ் பவுடர், கொண்டை ஊசி முதலியவைகளை அவசியம் காணலாம். தற்கால நாகரிகப்படி, அவள் வீணை, ஹார்மோனியம் முதலிய வாத்தியங்கள் ஏதாவது வாசிக்கக் கூடியவளாக இருக்கலாம். இந்த அங்கங்களில் இருந்து நாம் அவளுடைய உண்மையான குணம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா? அவள் அடக்கம், பணிவு, முதலிய நற்குணங்கள் உடையவளா என்பதை நாம் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?

கோபாலசாமி:- என்ன அப்பா, கந்தசாமி! நீ பேசுகிறது நிரம்பவும் அக்கிரமமாகவும் கர்னாடகமாகவும் இருக்கிறதே! வெள்ளைக்காரருடைய நாகரிகம் பரவிவரும் இந்தக் காலத்தில் கூட நீ சம்சாரம் இப்படி அடிமை போல நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், அது நிறைவேறுமா? பெண்களுக்குச் சமத்துவம் கொடுக்க வேண்டும் என்று எல்லோரும் கோஷிக்கும் இந்தக் காலத்தில் நீ இப்படிப் பேசலாமா? அதுவுமன்றி, பெண் பி.ஏ., பரிட்சையில் தேறி வரப் போகிறாள். கலெக்டருடைய பெண் உனக்குப் படிந்து நடக்க வேண்டுமானால், அது எப்படி சாத்தியம் ஆகும்.

கந்தசாமி:- மற்றவர்கள் எப்படியாவது சொல்லிக் கொண்டு திரியட்டும். அது எனக்கு அக்கறை இல்லை. கலியானம் செய்து கொள்வதெல்லாம், பெண்வடிவமான ஒரு எஜமானரை நாம் தேடிக் கொள்வதென்று அர்த்தமாகாது. அவளை நாம் தெய்வம் போல வீட்டில் ஓர் உன்னத ஸ்தானத்தில் குந்தவைத்து சகலமான காரியங்களுக்கும் வேலையாட்களை வைத்து, அவளை எப்போதும் சோம்பேறியாக வைத்துக் கொண்டிருப்பதற்காக நான் கலியாணம் செய்து கொள்ளவில்லை. அவள் கலெக்டருடைய பெண்ணாய் இருந்தாலும், டில்லி பாட்சாவின் பெண்ணாய் இருந்தாலும் சரி, அவள் புருஷனுக்கு அடங்கி நடக்க வேண்டியவளே. என் வீட்டில் உள்ள பெற்றோர், பெரியோருக்கு அவள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். வீட்டில் உள்ள சகல பொறுப்புகளையும் காலக்கிரமத்தில் அவளே வகிக்க வேண்டும். எங்களுடைய தேகபோஷணை விஷயத்தில் அவள் எவ்வளவு உழைப்பாக இருந்தாலும் பின் வாங்கக் கூடாது. தான் என்ற அகம்பாவத்தையே அவள் விட்டு புருஷனுடைய குடும்பத் தாருடன் ஐக்கியப்பட்டு நடக்க வேண்டும். அப்படிப்பட்டவளே குடும்ப ஸ்திரீ என்பது என்னுடைய அபிப்பிராயம். நான் சமீபகாலத்தில் ஒரு விஷயம் கேள்வியுற்றேன். அது உனக்கும் ஒரு வேளை தெரிந்திருக்கலாம். ஒரு பெரிய உத்தியோகஸ்த ருடைய பெண் பி.ஏ., பரிட்சையில் தேறியவளாம். அவளுடைய புருஷனும் அதே மாதிரி படிப்பாளியாம். அவர் ஏதோ ஒரு பிரமேயத்தைக் கருதி தமது மாமனாருடைய வீட்டுக்கு வந்திருந்தாராம். வந்திருந்த இடத்தில், உடம்பு கொஞ்சம் அசெளக்கியப்பட்டுப் போயிற்றாம். நடு இரவில் அவர் தேகபாதை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு தோட்டத்திற்குப் போக நேர்ந்ததாம். அந்தச் சமயத்தில் அந்தப் பங்களாவில் இருந்த வேலைக்காரர்களை எழுப்பி உடத்திரவிக்க அவருக்கு மனமில்லாமல், பக்கத்து அறையில் சயனித்திருந்த தம்முடைய மனைவியிடம் போய் தாம் அவசரமாக வெளிக்குப் போக வேண்டும் என்றும், தமக்கு ஒரு செம்பில் தண்ணிர் கொண்டு வந்து தோட்டத்தில் வைக்கும்படியும் அவர் சொன்னாராம். உடனே அந்த அம்மாளுக்கு ரெளத்திராகாரமான கோபம் வந்து விட்டதாம். அவள் உடனே அவரை நோக்கி, “ஓகோ! அப்படியா சங்கதி! நான் என்ன உம்முடைய ஜாடுமாலி என்று நினைத்துக் கொண்டீரா? யாரைப் பார்த்து இப்படிப்பட்ட அவமரியாதையான வார்த்தைகளைச் சொல்லுகிறீர்? உமக்கு நான் எந்த விதத்தில் தாழ்ந்தவள்? இப்படி எல்லாம் நீர் என்னை அகெளரதையாக நடத்துவீர் என்பது தெரிந்திருந்தால், நான் உம்மைக் கலியானம் செய்து கொண்டே இருக்கமாட்டேன். இந்த அகால வேளையில் நித்திரைக்குப் பங்கம் வந்தால், உடம்பு கெட்டுப் போகும் என்பது தெரியாதா? நீர் இப்படித்தான் பட்டிக்காட்டு அநாகரிக மனிதன் போல நடந்து கொள்ளுகிறதா? இது என்ன நளாயணி, சாவித்திரி முதலியோருடைய காலம் என்று நினைத்துக் கொண்டீரா? உமக்குச் சமமாக நானும் படித்திருக்கிறேன். நீர் பி.ஏ. படித்து விட்டு 35 ரூபா சம்பளத்தில் அமர்ந்தால், நான் அதே பரிட்சையில் தேறி 150 ரூபா சம்பளத்தில் அமரப் போகிறேன். ஆகையால் யாருடைய யோக்கியதை மேலானது என்பதைக் கவனித்துப் பாரும். இங்கிலீஷ் படிப்புப் படித்தும் வெள்ளைக்காரருடைய உயர்வான நாகரிகத்தை நீர் கொஞ்சமும் தெரிந்து கொள்ளாத சுத்தக் கட்டுப்பெட்டியாக இருக்கிறீர். உமக்கும் நமக்கும் கொஞ்சமும் பொருந்தாது. நீர் இந்த க்ஷணமே புறப்பட்டு இந்தப் பங்களாவைவிட்டு வெளியில் போம். இனி நீர் என்னுடைய புருஷனல்ல. உமக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இதோ இருக்கிறது உம்முடைய தாலி. இதையும் நீர் எடுத்தக் கொண்டு போகலாம்.” என்று சொல்லி, அந்த சரஸ்வதியம்மாள் உடனே தனது தாலியை அறுத்து அவருடைய முகத்தின் மேல் வீசி எறிந்து விட்டு, “அடே யாரடா தோட்டக்காரன்! இவரை இப்போதே இந்தப் பங்களாவுக்கு வெளியில் கொண்டு போய் விட்டுவா” என்று சொல்லி விட்டு, அப்பால் போய் வேறோர் இடத்தில் திருப்திகரமாகப் படுத்துக் கொண்டு துரங்க ஆரம்பித்தாளாம். அந்த மனிதர், பாவம்! அப்படியே ஸ்தம்பித்து இடிந்து உட்கார்ந்து போய் விட்டாராம். அவருடைய அடிவயிற்று உபத்திரவ மெல்லாம் ஒரு நொடியில் மாயமாய்ப் பறந்து போய்விட்டதாம். அவர் அந்த க்ஷணமே அவ்விடத்தை விட்டு வெளிப்பட்டு போய்விட்டாராம். அந்த அம்மாள் இப்போது ஏதோ ஒரு பெண் கலாசாலையில், பெரிய உபாத்தியாயினி உத்தியோகம் பார்த்து, தன்னிடம் படிக்கும் சிறுமிகளை எல்லாம், தன்னைப் போலாக்கும் மகா உத்தமமான திருப்பணியை எவ்வித ஆதங்கமும் இன்றி நடத்தி வருகிறாளாம். அவர் வேறே ஒரு பெண்ணைக் கலியாணம் செய்துகொண்டு சுகமாக இருந்து வருகிறாராம். இப்படிப்பட்ட ஸ்திரீகள் ஒரு புருஷரைக் கட்டிக் கொள்வதைவிட கன்னிகையாகவே தம் ஆயிசுகாலம் முடிவு வரையில் இருந்து விடுவது உத்தமமான காரியம். ஒரு ஸ்திரி ஒரு புருஷனுக்குப் பெண்ஜாதி ஆவதென்றாலே, அவளுடைய ஏதேச்சாதிபத்யமும் எஜமானத்துவமும் போய், அவள் பராதீனப் படுகிறாள் என்பது தான் அர்த்தம். அவள் எந்த மனிதனைக் கலியாணம் செய்து கொண்டாலும் சரி; அவனுடைய மனம் கோணாதபடி நடந்து கொண்டு தான் தீரவேண்டும். எப்படிப் பட்டவனும் தன் சம்சாரம் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று பிரியப்படுவானே அன்றி, அவளுக்குத் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று எண்ணவே மாட்டான்; விரும்பவும் மாட்டான்; வெள்ளைக்காரருடைய சமத்துவம் இந்த விஷயத்தில் நமக்குச் சரிப்படவே சரிப்படாது. கோபாலசாமி:- நீ சொல்வது வேடிக்கையாகத் தான் இருக்கிறது. அது வெள்ளைக்காரரிடத்தில் மாத்திரந்தானா இருக்கிறது? நம்மவர்கள் பெண்ஜாதியை நாயகி என்றும், எஜமானி என்றும், தலைவி என்றும் குறிக்கிறார்களே. அந்தப் பதங்களை எல்லாம், நீ நம்முடைய அகராதியிலிருந்து எடுத்து விடுவாய் போலிருக்கிறதே.

கந்தசாமி:- என்னடா, அடேய்! என் வாயைக் கிளப்புகிறதற்காகவா, நீ இப்படிக் கிளறிவிடுகிறாய். பெண்கள் நாயகி என்ற பட்டங்களை எப்படி சம்பாதிக்கிறது? தான் புருஷனுக்குச் சமமான படிப்புடையவள், புத்தியுடையவள் என்ற அகம்பாவத்தினாலும் ஆணவத்தினாலும் அதை அடைய முடியுமா? அவளுடைய குணத்தழகினாலும், நடத்தை அழகினாலும், அவள் அப்படிப்பட்ட யோக்கியதையைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். திராசு தட்டில், அதிக கனமுடைய தட்டு தாழ்ந்து நிற்கும், வெறுந்தட்டு உயர்ந்து நிற்கும். தண்ணீர் உள்ள குடம் சப்திக்காது. வெற்றுக் குடந்தான் ஓசை உண்டாக்கும். உண்மையான படிப்பும் ஞானமும் உள்ளவர் பணிவு, அடக்கம் முதலிய குணங்களுக்கே இருப்பிடமாய் தாம் என்பதை மறந்து ஒழுகுவார்கள். அவர்கள் எப்படிப்பட்ட தேகப் பிரயாசையையும் உழைப்பையும் ஓர் இழிவாகக் கருதமாட்டார்கள். இப்போது ஆண்பிள்ளைகளில் எத்தனையோ பேர் இதே வெள்ளைக்காரரிடம் உத்தியோகம் பார்க்கிறார்களே: உத்தியோக சாலைகளில் தலைமை அதிகாரிகளாக இருப்பவர்கள் சிலர் தற்குறிகளாக இருக்கிறார்கள். அவர்களுடைய மார்பைப் பிளந்து பார்த்தால் கூட, படிப்பென்பது மருந்துக்கு ஒர் அக்ஷரம் கூட அகப்படாது. அவர்களுக்குக் கீழ் பீ.ஏ., எம்.ஏ., பட்டங்கள் பெற்ற மேதாவிகள் எத்தனையோ பேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தலைவரிடம் அடிமைகளைப் போல நடந்து கொள்ளுவதை இழிவாக நினைக்கிறார்களா? அவர்களுக்குக் கிடைக்கும் ஸ்தானத்தில் அவரவர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படியே நடந்து கொள்ள வேண்டுமன்றி, தான் அதிகப் படிப்பாளி என்றும் புத்திசாலி என்றும் நினைத்து தலைவனோடு சமத்துவம் பாராட்டினால், அது துன்பமாகத்தான் முடியும். நீ எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள். குடும்ப ஸ்திரீகள் எப்பேர்ப்பட்ட மகாராஜனுடைய மகளாக இருந்தாலும், கல்வியில் சரஸ்வதியினுடைய அவதாரமாக இருந்தாலும், புருஷனிடத்தில் கொண்ட அந்தரங்கமான பிரியத்தினாலும் மதிப்பினாலும் சுயேச்சையாகவே அவனுக்கு அடிமை போல நடந்து கொள்ளும் ஸ்தானத்தை வகிப்பவள். இதற்கு உவமானம் நான் என்னுடைய அண்ணியைத் தான் திருப்பித் திருப்பிச் சொல்ல நேருகிறது. அவளைப் போல சிலாக்கியமானவளும் இல்லை; அவள் போல, அவ்வளவு பணிவாகவும், சலிப்பில்லாமல் உழைப்பவளும் உலகில் கிடையார்கள். அப்படி இருப்பதனால், எங்கள் குடும்பத்தில் உள்ள சகலமானவர்களும் அவளைத் தங்கள் இருதய கமலத்தில் வைத்து எங்கள் குல தெய்வம் போல மதித்துப் பாராட்டி வருகிறோம். அவளுடைய சொல்லுக்கு இரண்டாவது சொல் எங்கள் வீட்டில் யாரும் சொல்லுகிறதில்லை. அவ்வளவு தூரம் அவள் எங்களுடைய மனசை எல்லாம் கவர்ந்து எங்களை அவளுக்கு அடிமை போலச் செய்து கொண்டாள். இந்தக் கலாசாலையில் தங்கக்கூண்டில் அடைபட்டு இருக்கும் பஞ்சவர்ணக்கிளிகள் போலத் தத்தி இராப் பகலாக இங்கிலீஷ் புஸ்தகங்களைக் கட்டியழுது உண்மையான விவேகம் இருக்கும் மூலை தெரியாமல் தங்களுடைய யெளவனப் பருவத்தையும், அழகையும், கண்களையும் கெடுத்து, எண்ணெயை விணில் விரயம் செய்து கொண்டிருக்கும் இந்தப் பெண்கள் எல்லாம், எங்கள் வீட்டுக்குப் போய் என் அண்ணி குடும்பத்தை எப்படி நடத்தி மற்றவரிடம் எப்படி நடந்து கொள்ளுகிறாள் என்பதை ஓர் ஆறுமாச காலம் கவனிப்பார்களானால், இங்கே இவர்களுடைய ஆயிசுகாலம் எல்லாம் படித்தால் கூடத் தெரிந்து கொள்ள முடியாத உண்மையான விவேகத்தையும், எப்படிப்பட்ட மனிதரையும் அடக்கி முடிசூடாச் சக்கரவர்த்தினிகள் ஆகத்தகுந்த அரிய சூட்சுமங்களையும் தெரிந்து கொண்டு தங்களுடைய ஆயிசுகாலம் எல்லாம் சந்தோஷமாகவும் ஷேம மாகவும் இருக்கலாம். சாதாரணமாக இல்லறம் நடத்தும் ஸ்திரீகள் பி.ஏ., வகுப்பு வரையில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதற்கு அவ்வளவு விஷயம் என்ன இருக்கிறது? உபயோகமற்ற அநாவசியமான இங்கிலீஷ் புஸ்தகங்களை எல்லாம் படிப்பதில், இங்கிலீஷ் புஸ்தக வியாபாரிகள் பணக்காரர் ஆகிறார்கள். நம்முடைய பெண்களில் கண்களும், மூளையும், தேகமும், நற்குணமும் கெடுகின்றன. இவைகள் தான் கைகண்ட பலன்கள். நாம் போய் அந்தக் கலெக்டருடைய பெண்ணைப் பார்ப்பதும் ஒன்றுதான்; பார்க்காமல் இருப்பதும் ஒன்றுதான். அவள் எப்படி இருப்பாள் என்பது எனக்கு ஏற்கனவேயே ஒருவாறு புலப்பட்டு விட்டது.

கோபாலசாமி:- அப்படியானால், நாம் எதையும் பார்க்காமல், குருட்டுத்தனமாகவா இப்படிப்பட்ட முக்கியமான காரியத்தை நிறைவேற்றுகிறது? நீ பேசுகிறது வேடிக்கையாக இருக்கிறதே. முதல் பார்வையில் பெண்களின் குணாகுனங்கள் தெரியா தென்று நீ சொல்வது ஒருவிதத்தில் உண்மைதான். அப்படியானால், வெள்ளைக்காரர் செய்வதைப் போல பெண்ணையும் பிள்ளையையும் கொஞ்ச காலம் ஒன்றாகப் பழகவிட்டு, ஒருவர் குணம் ஒருவருக்குப் பிடிக்கிறதா என்று பார்த்துச் செய்வது ஒருவேளை உன் மனசுக்குப் பிடிக்கும் போலிருக்கிறது.

கந்தசாமி:- (ஏளனமாகச் சிரித்து) சேச்சே! அதைப் போல மூடத்தனம் வேறே எதுவுமில்லை. அந்த ஒரு விஷயத்தில் தான் வெள்ளைக்காரர் ஞானசூன்யராக இருக்கிறார்கள். பக்குவகாலம் அடைந்த ஒரு யெளவன ஸ்திரீயையும், ஒரு விட புருஷனையும் தனியாகப் பேசிப் பழகும்படி விடுவது, பஞ்சையும் நெருப்பையும் ஒன்றாகச் சேர்த்து வைப்பது போன்றதல்லவா. அப்படிச் சேராவிட்டால், அந்தப் பெண்ணினிடத்தில் உண்மையிலேயே ஆயிரம் கெடுதல்கள் இருந்தாலும், பையனுக்கு அவனுடைய புதிய மோகத்தில், அத்தனை கெடுதல்களும் அத்தனை அழகுகள் போலப் புலப்படும். ஆனால், அவர்கள் இருவருக்கும் தேக சம்பந்தம் நேரிட்டு காரியம் கெட்டுப் போன பிறகு அவன் அவளுடைய துர்க்குணங்களை எல்லாம் உணர்ந்து அவளை வெறுப்பானே அன்றி, அதற்கு முன் உணரவே மாட்டான். இப்படி அவர்களை விடுவதனால், எத்தனை புருஷர்கள் எத்தனை பெண்களை அழித்து மோசம் செய்துவிட்டு ஒடிப்போகிறார்கள். எத்தனை பெண்கள் கற்பழிந்து ரகசியத்தில் பிள்ளைப்பேறு, தற்கொலை முதலியவற்றைச் செய்து கொள்ளுகிறார்கள். ஆகா! அந்தத் துன்பம் சொல்லி முடியாது. இந்த விஷயத்தில் நம்மவர் செய்திருக்கும் ஏற்பாட்டுக்கு மிஞ்சியது ஒன்றுமில்லை. பகுத்தறி வில்லாத ஒரு பெண்ணை இளம்பருவத்தில் அதன் பெற்றோர் கலியானம் செய்து கொடுத்து விடுகிறார்கள். அந்தப் பெண் அதன் பிறகு இரண்டொரு வருஷ காலத்திற்குப் பிறகு புத்தியறிகிறது. அந்த மத்திய காலத்தில் அந்தப் பெண்ணின் மனசில் உண்டாகும். மாறுதலே நிரம்பவும் முக்கியமானது. புருஷன் விகார ரூபம் உடையவனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், துர்க்குணம் உடையவனாக இருந்தாலும், அந்தப் பெண் காலக்கிரமத்தில் அந்தக் குறைகளை மறந்து போகிறாள். அவள் தன் புருஷன், தன் புருஷன் என்று நினைத்து நினைத்து, ஒருவித பயபக்தியை வளர்த்து வருகிறாள். விசேஷ தினங்களுக்கு மாப்பிள்ளை வந்து போகுங் காலங்களில், பெற்றோரும் பெரியோரும் மாப்பிள்ளைக்குச் செய்யும் மரியாதைகளையும் காட்டும் அன்பையும் அந்தச் சிறுமி கண்டு கண்டு தானும் அவனிடம் அபாரமான வாஞ்சையையும் பக்தியையும் வைத்து வருவதால் அவை காலக் கிரமத்தில் பெருகி மனதில் நிலைத்துப் போகின்றன. அவர்கள் ஒன்று பட்டு இல்லறம் நடத்தத் தொடங்கும் காலத்தில், புருஷனிடம் உள்ள குற்றங் குறைபாடுகள் பெண்ணின் மனதில் உறைக்கிறதில்லை. அவள் அவனிடத்தில் உண்மையான பயபக்தி விசுவாசத்தோடு நடந்து கொள்ளுகிறாள். இப்படிப்பட்ட மன மாறுபாடு உண்டாவதற்கு, கலியாணத்திற்குப் பின்னும் சாந்தி முகூர்த்தத்துக்கு முன்னும் இரண்டொரு வருஷகால அவகாசம் இருப்பது இன்றியமையாத விஷயம். அந்தக் காலத்திற்குள் இருவரது குற்றங் குறைபாடுகளும் வெளிப்பட்டு, மனதில் உறைக்காமல் அற்றுப் போம். பிறகு வெறுப்பிற்கு இடமின்றி விருப்பே பெருகும். ஆரம்பத்திலேயே வயது வந்த இருவரையும் சேர்த்து விட்டால், அவர்கள் சிற்றின்ப மோகத்தில் ஒருவாறு குற்றத்தை மற்றவர் உணராமல் கொஞ்ச காலம் கழிப்பார்கள். புது மோகம் தீர்ந்த பிறகு, குற்றங்கள் ஒன்றுக்கு ஆயிரம் பங்காகப் பெருகித் தோன்றி, அவர்கள் மனசில் ஆயிசுகால பரியந்தம் தீரா விசனத்தையும் வேறுபாட்டையும் உண்டாக்கும் என்பது நிச்சயம். ஆகையால் வெள்ளைக்காரர் செய்வது போல விடபுரு ஷர்களும் புத்தியறிந்த பெண்களும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும்படி விடுவதைப் போன்ற பெருந்தீங்கு வேறே எதிலுமில்லை. இவ்வளவு தூரம் பேசும் நானே இந்தக் கலெக்டருடைய மகளோடு கூட இருந்து கொஞ்ச காலம் பழகுவதாக வைத்துக் கொள்வோம்! அவளிடத்தில் உண்மையிலேயே அநேகம் கெடுதல்கள் இருந்தால் கூட, அவளை நான் அடையும் வரையில் அவற்றை எல்லாம் அவ்வளவாகப் பாராட்ட மாட்டேன். அவளிடம் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும், அவளையே கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உறுதியும் மன இளக்கமும் ஏற்பட்டுவிடும். ஆகையால், அவளுடைய குணத்தை நாம் இப்போது ஆராய்ந்து பார்ப்பது சாத்தியம் இல்லாத காரியம். இதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் ஜாதகத்தின் மூலமாக இருவரது பொருத்தங் களையும் பார்க்கிறார்கள். அதுவுமன்றி, வதுாவரர்களுடைய தாய் தகப்பனாருடைய குணாகுணங்களையும் நடத்தையையும், அவர்கள் எப்படிப்பட்ட வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் கவனித்துச் செய்கிறார்கள். அந்தக் குறிப்பு அநேகமாய்ச் சரியாகவே முடிகிறது. தாயைத் தண்ணிர்த் துறையில் பார்த்தால், பெண்ணை வீட்டில் போய்ப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பார்களே. அது சரியான வார்த்தையல்லவா.

கோபாலசாமி:- (சிரித்துக் கொண்டு) என்ன, கந்தசாமி! நீ எந்த வழிக்கும் வராமல் இப்படிக் குளறிக்கொண்டே போனால், இதை எப்படித் தான் நிர்ணயிக்கிறது? எந்த வழியும் உனக்குச் சரிப்பட வில்லை, அப்படியானால், ஒன்றையும் பார்க்காமலேயே கலியாணத்தை நடத்தி விடலாமா? அறவடித்த முன்சோறு, கழனீர்ப் பானையில் விழும் என்று சொல்வார்கள்; அதுபோல இருக்கிறது உன் காரியம். நீ எல்லா விதத்திலும் ஆட்சேபம் சொல்லுகிறாய். கடைசியில், பெண் எப்படி இருக்கிறதென்று கூடப் பார்க்காமல் இதை முடிக்க நீ சம்மதித்திருக்கிறாய், பெண்ணுக்கு ஒரு கண் பொட்டையாக இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அல்லது பெரியம்மை வார்த்து முகம் எல்லாம் அம்மைத் தழும்புகளால் விகாரப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம்; அல்லது, காது செவிடாக இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம், கலெக்டருடைய பெண்ணுக்கு இந்தப் பிணியெல்லாம் இராது என்று நாம் நிச்சயித்துக் கொள்ளுவது சரியாகுமா? இதெல்லாம், பார்பதற்கு அருவருப்பான விஷயமல்லவா. பெண்ணின் உண்மையான குணம் அயலாருக்குத் தெரியப் போவதில்லை. அதனால், பிர்காலத்தில் துன்பமடைகிறவர்கள் நாமே! வெளிப் பார்வைக்கே விகாரமான அம்சம் ஏதாவது இருக்குமானால், ஊரார் சிரிக்க இடம் ஏற்படுமே. அதையாவது நீ பார்க்க வேண்டியது அவசியம் என்று என் மனசில் படுகிறது. உன் தகப்பனார் முதலியோர் என்ன காரணத்தினால் நன்றாக ஆராயாமல் இப்படிச் செய்திருந்தாலும் இருக்கட்டும். நீ இந்த ஊரில் தானே இருக்கிறாய். நிச்சயதார்த்த தினம் இன்னம் 10 தினமிருக்கிறதே. அதற்குள் நீ ஏதாவது தந்திரிம் செய்து அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டு வருவது நல்லது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுதான் பதமல்லவா. அதுபோல, நீ அந்தப் பெண்ணைப் பார்க்கையில், அவளுடைய நடையுடை பாவனைகள் குணங்கள், முதலியவை எப்படி இருக்கின்றன என்பதைக் கவனித்து வந்தால், அதிலிருந்து நாம் அநேக விஷயங்களை யூகித்துத் தெரிந்து கொள்ளலாம் என்றான்.

அவ்வாறு அந்த யௌவனப் புருஷர்கள் இருவரும் வேடிக்கையாக சம்பாஷித்துக் கொண்டே கரையை விட்டு வெகுதுரம் இப்பால் வந்துவிட்டார்கள்.

கந்தசாமி சிறிது யோசனை செய்த பின் மறுபடியும் பேசத் தொடங்கி, சரி உன் மனசுக்குத் தான் குறை எதற்கு? நீ சொல்லுகிறபதியே ஆகட்டும். நான் போய் அவளைப் பார்த்து எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டு வருகிறேன். ஆனால், இப்படி நான் செய்கிறேன் என்பது, என்னுடைய தாய் மா.வி.ப.1-5 தகப்பனாருக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால், அவர்களுடைய மனசுக்கு வருத்தமாக இருக்கும். இதற்குள் எனக்கு இவ்வளவு பெரியத்தனமா என்று அவர்கள் நினைத்துக் கொள்ளுவார்கள். ஆகையால் இது ரகசியமாக இருக்க வேண்டும்” என்றான்.

கோபாலசாமி:- நீ எப்படிப் போகிறது? அவர்களுடைய மாப்பிள்ளை என்று சொல்லிக்கொண்டுதானே போக வேண்டும். போனால், கலெக்டர் உன்னோடு கூடவேதான் இருப்பார். அவர்கள் எவ்வளவுதான் ஐரோப்பியரைப் போல இருந்தாலும், எப்படியும் அந்தப் பெண் உன்னைக் கண்டு லஜ்ஜைப்பட்டு ஒரு பக்கமாக விலகித்தான் இருக்கும். நீ அதிகமாக நெருங்கிப் பழக முடியாதென்று நினைக்கிறேன். ஆனாலும் பாதகமில்லை. தூரத்தில் இருந்தாவது பெண்ணுக்கு எவ்வித ஊனமும் இல்லை என்பதையாவது நீ கண்டு கொள்ளலாம்.

கந்தசாமி:- என்னடா, கோபாலசாமி! மூடத்தனமாகப் பேசுகிறாய்! கலியாணம் செய்து கொள்ளப் போகிற நான் அவர் களுடைய பங்களாவுக்குத் தனிமையில் போய் அவர்களுடன் பேசுவதென்றால், அது அசம்பாவிதமாகவும் விகாரமாகவும் இருக்காதா. அவர்களுக்கு என்னைப்பற்றி கேவலமான அபிப்பிராயம் ஏற்பட்டு விடாதா! சேச்சே! அப்படிச் செய்யக் கூடாது.

கோபாலசாமி:- (வியப்பாக) சற்றுமுன் நீயே போய்ப் பார்ப்பதாகச் சொன்னாய்; இப்போது அது நன்றாய் இராதென்கிறாய். இதைத்தான் க்ஷணச்சித்தம் க்ஷணப் பித்தம் என்று சொல்லுவார்கள்.

கந்தசாமி:- அடேய்! ஏனடா இப்படி அவசரப்பட்டுப் பேசுகிறாய்? என்னுடைய கருத்தை நான் பூர்த்தியாக வெளியிடு கிறதற்குள் நீ ஆத்திரப்படுகிறாயே! என்னை இந்தக் கலெக்டர் எங்கள் ஊரில் பல தடவை பார்த்திருக்கிறார். நான் இப்போது நேரில் போனால் அவர் உடனே அடையாளங் கண்டு கொள்வார்.

கோபாலசாமி:- அப்படியானால், அவர் தம்முடைய கச்சேரிக்குப் போயிருக்கிற சமயத்தில் போக நினைக்கிறாயா? அப்போது பெண் தனியாகத்தான் இருக்கும். ஆனால் அதில் பல இடைஞ்சல்கள் இருக்கின்றன. அவர் கலெக்டர். ஆகையால் வாசலில் டபேதார்களும், டலாயத்துகளும் ஏராளமாகக் காவல் காத்திருப்பார்கள். பெண் பங்களாவில் தனியாக இருக்கையில், அன்னிய புருஷனாகிய உன்னை அவர்கள் உள்ளேவிட மாட்டார்கள். நீ இன்னான் என்று நிஜத்தை வெளியிட்டால், அப்போது அவர்கள் உள்ளே போய், அந்தப் பெண்ணினிடம் சங்கதியைத் தெரிவிப்பார்கள். நீ உடனே உள்ளே போகலாம். பெண் உனக்கெதிரில் வராமல் உள்ளேயே இருந்து கொண்டு, பங்களாவில் உள்ள டெலிபோன் மூலமாகத் தகப்பனாரைக் கூப்பிட்டு நீ வந்திருக்கும் செய்தியைத் தெரிவிப்பாள். அவர் உடனே கச்சேரியை விட்டுப் புறப்பட்டு வந்து விடுவார். அப்போதும் உன்னுடைய கருத்து நிறைவேறாது.

கந்தசாமி:- அவர் கச்சேரிக்குப் போகும் போது அந்தப் பெண் அநேகமாய் இந்தக் கலாசாலைக்கு வந்துவிடுவாள். வராமல் இருந்தாலும் நீ சொல்லுகிறபடி தகப்பனாரை உடனே வரவழைத்து விடுவாள். அப்படி எல்லாம் நாம் செய்வது சரியல்ல. நான் மாத்திரம் போவதாக எனக்கு உத்தேசமில்லை. உன்னையும் கூடவே அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன்.

கோபாலசாமி:- (நிரம்பவும் ஆச்சரியமடைந்து) என்னடா கந்தசாமி! நீ நிஜமாகவே பேசுகிறாயா? அல்லது, என்னோடு விளையாடுகிறாயா? நானும், உன்னோடுகூட வந்தால்தான் என்ன? நீ தனியாகப் போகும்போது என்ன நடக்குமோ, அது தானே நாம் இருவரும் போகும் போதும் நடக்கும்.

கந்தசாமி:- (கபடமாகப் புன்னகை செய்து) உன்னை நான் சாதாரணமாக அழைத்துக் கொண்டு போகப் போகிறேன் என்று நினைக்கிறாயா? இல்லை. உன்னை எனக்கு எஜமானாக்கி அழைத்துக் கொண்டு போகப் போகிறேன்.

கோபாலசாமி:- என்ன, கந்தசாமி! மூடி மூடிப்பேசுகிறாயே. சங்கதியை நன்றாகத்தான் சொல்லேன். நீ ஏதாவது தந்திரம் செய்யப் போகிறாயா? உண்மையை என்னிடம் சொல்ல, இவ்வளவு யோசனை என்ன?

கந்தசாமி:- (ஒருவித லஜ்ஜையோடு) உன்மையை உன்னிடம் சொல்லாமல் காரியம் ஆகப்போகிறதில்லை. ஆனாலும், அதை நீ ஒப்புக் கொள்ளாமல் கேலி பண்ணுவாயோ என்று பயமாக இருக்கிறது.

கோபாலசாமி:- சேச்சே உன் விஷயத்தில் நான் என்னுடைய உயிரை வேண்டுமானாலும் கொடுக்கக் கூடியவன் என்பது. உனக்குத் தெரியாதா? நீ ஏதோ யோசனை செய்து, ஒரு காரியம் ஆக வேண்டும் என்று சொல்லும் போது நான் ஒரு நாளும் அதை மறுத்துப் பேசமாட்டேன். நீ அவ்வளவு மூடத்தனமான காரியம் எதிலும் இறங்கமாட்டாய் என்பது எனக்குத் தெரியாதா. பரவாயில்லை; சங்கதியைச் சொல்.

கந்தசாமி- நம்முடைய பள்ளிக்கூடத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து ஷேக்ஸ்பியர் காளிதாசர் முதலிய கவிகளின் நாடகங்களை நடத்தி வேஷங்கள் போட்டு ஆடினோமே. அந்த அனுபோகம் விண்ாய்ப் பேர்கவில்லை. அதை நாம் இப்போது நம்முடைய சுய விவகாரங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

கோபாலசாமி- (அதிகமான ஆச்சரியமும் குதுகலமும் அடைந்து) நீ உண்மையாகப் பேசுகிறாயா, அல்லது வேடிக்கை யாகப் பேசுகிறாயா என்ற சந்தேகமே இன்னமும் என் மனசில் உண்டாகிறது.

கந்தசாமி:- இல்லையப்பா. நான் நிஜமாகவே பேசுகிறேன். அன்றைய தினம் நான் சகுந்தலா வேஷம் போட்டுக்கொண்டு வந்த போது நீ என்னைப் பார்த்து என்ன சொன்னாய் நினைவிருக்கிறதா என்னைப் பார்த்தால், தத்ருபம் திபோல இருக்கிற தென்றும் என்னைப் போல ஒரு பெண்ஜாதி உனக்குக் கிடைத்தால், தின்ந்தினம் எழுந்தவுடன் என்னைச் சுற்றி வந்து நூறுதரம் பிரதகவின நமஸ்காரம் செய்வேன் என்றும், உன் ஆயிசு காலம் முடிய எனக்கு அடிமையாய் இருப்பேன் என்றும் நீ சொன்னாய் அல்லவா அதுபோல் உன் பிரியத்தை நிறை வேற்றலாம் என்று நினைக்கிறேன். 

கோபாலசாமி:- (ஆநந்தமயமாக மாறி) ஓகோ, அப்படியா நீ ஒரு பெண்ஜாதியைச் சம்பாதிப்பதற்கு முன், முதலில் நீயே இன்னொருவனுக்குப் பெண்ஜாதியாக இருந்து அந்தச் சுகம் எப்படி இருக்கிறதென்று பார்க்கப் போகிறாயா?

கந்தசாமி:- ஆம். நான் ஒரு பெண்ணைப் போல விேஷம் போட்டுக் கொள்ளுகிறேன். என்னுடைய உட்ம்பு சிவப்பாய் இருப்பதால், பவுடர் முதலியவை வேண்டியதில்லை. தலைக்கு மாத்திரம் டோப்பா வைத்துக் கொண்டால் அதுவே போதும். நல்ல உயர்ந்த ஆபரணங்களையும், பனாரீஸ் புடவை, ரவிக்கை முதலியவைகளை நான் அணிந்து கொள்ளுகிறேன். என்னைப் பார்த்தால், யாரும் ஆண்பிள்ளை என்று சந்தேகிக்கமாட்டார்கள். நீ ஒரு பெரிய மனிதன்போல, நல்ல வேஷடி சட்டை முதலியவை அணிந்து கொள். ஒரு பெட்டி வண்டி அமர்த்திக் கொள்வோம். சனிக்கிழமை தினம், கலெக்டருக்குக் கச்சேரி உண்டு. ஆனால் அன்று பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும். தகப்பனார். கச்சேரிக்குப் போயிருப்பார். பெண் வீட்டில் இருப்பாள். நாம் இருவரும் பெட்டி வண்டியில் உட்கார்ந்து கொண்டு அவர்களுடைய பங்களாவுக்குள் வண்டியை விட்டுக் கொண்டு போவோம். டபேதார்கள் யார் என்று கேட்டால், நீ உடனே கீழே இறங்கி மன்னார் கோவிலில் உள்ள இவர்களுடைய புதிய சம்பந்தியம்மாளுக்கு நான் தங்கை என்றும், ! என்னுடைய புருஷன் என்றும், நாம் கோமளேசுவரன் பேட்டையில் இருக்கிறவர்கள் என்றும் ஒரு நடை வந்து பெண்னைப் — பார்த்துவிட்டு வரும்படி, மன்னார். இருந்து கடிதம் வந்திருக்கிறதென்றும், அதற்காக வந்திருக்கிறோம் என்றும் நீ சொல், நான் மாத்திரம் உள்ளே போய் ஐந்து நிமிஷ நேரம் இருந்து பெண்னோடு பேசிவிட்டு வந்துவிட உத்தேசிப்பதாக நீ அவர்களிடம் தெரிவி. அவர்கள் உடனே உள்ளே போய்சங்கதியைப் பெண்ணினிடம் செல்லுவார்கள். அவள் நம்முடைய வேண்டுகோளை மறுக்க முடியாது. அவள் நம்மை அழைத்துவரச் சொல்வாள். நீ வெளிப் பக்கத்தில், உட்கார்ந்து கொண்டிரு. நான் மாத்திரம் உள்ளே போய் அந்தப் பெண்ணைப் பார்த்து அவளோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து, அவளுடைய உண்மையான குணாதிசயங்கள் எப்படி இருக்கின்றன என்பதை ஒரு நொடியில் தெரிந்து கொண்டு வந்து விடுகிறேன். அவள் அவளுடைய தகப்பனாருக்கு டெலிபோன் அனுப்பாமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.

கோபாலசாமி:- (கைகொட்டி ஆனந்தமாக நகைத்து) பேஷ்! பேஷ் முதல் தரமான தந்திரம். அப்படியே செய்துவிடுவோம். நாம் போவதானால் வெறுங்கையோடு போகக் கூடாது.

கந்தசாமி:- நல்ல உயர்வான இரண்டு ரவிக்கைத் துண்டுகள் வெற்றிலை பாக்கு பழவகைகள் மஞ்சள் குங்குமம் முதலியவை களை எல்லாம் வாங்கிக் கொண்டு போவோம்.

கோபாலசாமி:- “சரி; அப்படியே செய்து விடுவோம். ஆனால் முடிவு மாத்திரம் மாறும் என்று நான் நினைக்கவில்லை. இவ்வளவு தூரம் பேசும் நீ எப்படியும் அவளைக் கண்டு நிரம்பவும் மயங்கித் தான் போவாய். கலியாணம் முடிவதென்னவோ நிச்சயம்; இப்போது முன்னால் போவதில், பெண்ணினிடம் ஏதாவது கெடுதலிருந்தால், அதைத் தெரிந்து கொண்டு நாம் வீணில் மனசைப் புண்படுத்திக் கொள்வது தான் மிஞ்சப் போகிறது — என்றான்.

அதைக் கேட்ட கந்தசாமி, “சரி எது மிஞ்சினாலும் மிஞ்சட்டும். அந்தப் பெண்ணை எப்படியும் நான் பார்த்துத் தான் ஆக வேண்டும் என்ற ஒரு மூர்க்கமான ஆவல் என் மனசில் உண்டாகிவிட்டது. அதை நாம் எப்படியாவது நிறைவேற்றிவிடுவோம். நான் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது ஒரு வேளை தெரிந்து போனால் கூட அதனால் கெடுதல் ஒன்று மில்லை. நான்தான் மாப்பிள்ளை என்பது வெளியானாலும், அவர்கள் என்னை ஒன்றும் செய்யமாட்டார்கள்” என்றான். கோபாலசாமி அதை ஆமோதித்தான். அதன் பிறகு இருவரும் திருவல்லிக்கேணி டிராம்வண்டிப் பாதையை அடைந்து, வண்டியிலேறி, தங்கள் ஜாகை இருக்கும் கோமளேசுவரன் பேட்டைக்குச் சென்றனர்.