பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"தாயிற் சிறந்ததொரு..."

327

இந்த ரஸாபாசமான விஷயம் ஜானகிராமனின் காதில் நாராசம் போல் விழும். அவன், "அட கடவுளே! இது என்ன வெட்கக்கேடு!" என்று தலையில் அடித்துக் கொண்டே தன் மனைவியைப் பார்ப்பான்.

"தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை" என்பாள் அவள் சிரித்துக் கொண்டே.

மற்ற நாட்களிலாவது அலமேலு அம்மாள் சும்மா இருப்பாள் என்கிறீர்களா? - அதுவும் கிடையாது. அவர்களுடைய அறைக்கு அருகே நின்றுகொண்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனிப்பாள். அவர்களோ அவள் எதிர்பார்த்தபடி ஒன்றும் பேச மாட்டார்கள். அலமேலு அம்மாள் நின்று நின்று கேட்டுக் கேட்டு அலுத்துப் போவாள். கடைசியில் "விடிய விடிய என்னடா பேச்சு? அவளுக்குத்தான் வேறு வேலை கிடையாது. பொழுது விடிந்ததும் நீ வேலைக்குப் போக வேண்டாமா? ஓயாமல் ஒழியாமல் இப்படிப் பேசிக் கொண்டேயிருந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?" என்று அக்கரையுடன் இரைந்துவிட்டு ஏமாற்றத்துடன் சென்று படுத்துக் கொள்வாள்.

ஜானகிராமனுக்கோ ஒன்றும் புரியாது. அவன் மனோதத்துவத்தில் இறங்கித் தன்னுடைய தாயாரைப் பற்றி ஆராய்ச்சி செய்வான். ஆராய்ச்சியின் முடிவில் தன் அருமை அன்னை இளம் பிராயத்திலேயே கணவனை இழந்து விட்டது தான் மேலே குறிப்பிட்ட வம்புகளுக்கெல்லாம் காரணம் என்று தோன்றும், இருந்தாலும் வைஜயந்தி சொல்வது போல் "தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை" அல்லவா?

ஜானகிராமனுக்கும் வைஜயந்திக்கும் தாங்கள் கல்யாணமாவதற்கு முன்னால் தனித்தனியே இருந்து வாழ்ந்த உலகம் பழைய உலகமாகவும், கல்யாணம் செய்து கொண்டு இருவரும் சேர்ந்து வாழும் உலகம் புதிய உலகமாகவும் தோன்றிற்று. தாங்கள் கண்ட புதிய உலகத்தைப் பற்றி அவர்கள் என்னவெல்லாமோ பேசவேண்டுமென்று துடியாய்த் துடித்தார்கள். அதற்கு ஔவைப் பிராட்டியாராலும் ஆச்சாரிய புருஷர்களாலும் புகழப்பட்ட 'அன்னை' எவ்வளவுக் கெவ்வளவு இடையூறாயிருந்தாளோ, அவ்வளவுக் கவ்வளவு அவர்களுடைய ஆவல் அதிகரித்தது.