குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/கவிதை விளக்கம்
“இல்லோர்க்கு இல்லென்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்”
அதாவது என்னாளும் வறியார்க்கு இல்லை என்று கூறி இயைவதைச் செய்யாது, கரத்தல் மாட்டாது - நெஞ்சம் வற்புறுத்தலின் நம் காதலர், காதலித்தது, நம்மினும் காட்டில் பொருளேயாகும் என்பதாகும். இல்லை என்று சொல்லியே பழக்கம் இல்லாத நெஞ்சம் என்று இங்கு குறிப்பிடுவது தமிழ்ப் பெருங்குடியில், வழி வழியாக வளர்ந்திருக்கின்ற ஈகைப்பண்பைக் குறிக்கின்றது. அது மட்டுமின்றி “இயல்வது கரவேல்” என்ற பழமொழிக்கு ஒரு புதிய ஆழமான கருத்தை இப்பாடல் தருகிறது. வழக்கில் பெரும்பாலும் இயல்வது என்ற சொல்லுக்குப் பொருளுடைமை மாத்திரமே குறித்துப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அது முற்றிய பூரண கருத்தல்ல. பொருளில்லாது இருக்க, முயன்று தேடும் வலிவுடையராய் இருந்தும், இரவலர்க்குப் பொருள் இல்லை என்று கூறுவதும் இயைவது கரத்தலே ஆகும். இங்ஙனம் கொடுத்துக் கொடுத்துப் பழகுகிறவர்களுக்கு வாங்குகிறவர்கள் வராது போனால் அந்நிலையைக் கொடுந்துன்பமாகவே கருதுவார்கள். இக்கருத்தைக் குறுந்தொகைக் கவிதை ஒன்று அழகாக விளக்குகிறது. தலைவன் பொருள் வயிற்பிரிய நினைக்கின்றான். அப்பிரிவினையை முன் கூட்டியே தலைவியிடம் உணர்த்துகின்றான். அது போது தலைவன் நீ தனியே இருந்து வருந்தும்படி நின்னைப் பிரிந்து நெடுங்காலம் இருக்கமாட்டேன். அப்படி இருப்பேனாயின் இரப்போர் வருதலில்லாத வறிய நாட்கள் பலவுளதாகுக என்று கூறுகின்றான்.
இக்கருத்தை விளக்குகின்ற பாடல் கீழ்வருமாறு:
“மெல்லியல் அரிவை நின் நல்லகம் புலம்ப
நிற்றுறந்து அமைகுவனாயின் எற்றுறந்து
இரவலர் வாரா வைகல்
பலவாகுக யான் செலவுறு தகவே”
மிகச்சிறிய பாடலில் உயர்ந்த அறத்துறைக் கருத்தை விளக்கும் இக்கவிதையின் சுவை படித்துப் படித்து இன்புறத் தக்கது.
தமிழகத்தில் புலமை சான்ற தமிழ்ப் பெரியோர்கள் புரவலர்களிடம் சென்று பரிசிலும் கொடையும் பெறுவது வழக்கம். அப்படி வாங்கும் போது வாங்குகிறவர்கள் என்பதற்காகத் தன்னுடைய தகுதி குறையாமலே, தன் மதிப்புடன் வாங்குகிற மரபே இருந்து வந்திருக்கிறது. யாராவது பரிசில் கொடுக்க காலத்தை நீட்டித்தால் கூட புலவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. வல்வில் ஓரியை கழைதின் யானையார் பாடிய பாடல் ஒன்றில் மேற்சொன்ன கருத்து பெறப்படுகிறது. பாடல் அழகாகவும், அமைதியாகவும், அதே காலத்தில் பொருட்செறிவோடும், பண்பியல் அடிப்படையில் இடித்துரைக்கும் துறையிலும் சிறந்தமைந்து இருக்கிறது. கவிதையைக் காண்போம்.
“ஈயென இரத்தல் இழிந்தன்று அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று:
கொள் எனக்கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று:
தெண்ணீர்ப் பரப்பின் இழிழ்திரைப் பெருங்கடல்
உண்ணீர் ஆகுப நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உனக் கலங்கிச்
சேறோடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கின் அதர் பலவாகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனால்
புலவேன் வாழியர் ஒரி விசும்பில்
கருவி வானம் போல,
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னை”
கவிதை படித்து படித்து இன்புறத்தக்கது. இழிந்தோன் நிலையில் நின்று கொடு கொடு எனக் கேட்டல் இழிந்தது. அங்கனம் ஒருவன் கேட்க ஈயேன் என்று சொல்லி மறுத்தல் அங்ஙனம் கேட்டலினும் இழிவுடையதாகும். ஒருவன் தன்னுடைய நிலைகூறி தனக்கு எது தேவையென சொல்லிக் கேட்குமுன்னே அவனது தேவையை அவனது முக பாவத்தால் உணர்ந்து அவனுக்குத் தேவையானவற்றை வலிந்து கொள்க எனக்கொடுப்பது உயர்ந்தது. அங்ஙனம் அவன் கொடுக்க, அது வேண்டாம் என்று மறுத்துச் சொல்வது அக்கொடையிலும் மிக உயர்ந்தது. அலைகடல் ஆழத்திலும் அகலத்திலும் பெரிதாயினும் தண்ணிரை விரும்புவோர் கடல்நீரை குடிப்பதில்லை. அளவில் சிறியதாக விலங்கினங்கள் நீரை உண்ணச்சென்று உண்ணுதலின் மூலம் கலக்கிய சேறு கலந்த நீரை உடையதாயினும் உண்ணும் நீரையுடைய சிறிய குளத்தை நோக்கித்தான் பலர் செல்வர். அங்ஙனம் செல்வதனால் அக்குளத்திற்குச் செல்லும் வழிகளும் பலவாகும்.
புலவர் பரிசில் வாங்குதற் பொருட்டுச் சென்று பரிசில் பெறாது திரும்புவோராயின் பரிசில் தராதாரை இழித்துப் பேசும் வழக்குடையோர் அல்லர். பரிசில் பெறாமைக்குக் காரணமாகக் காலத்தையும் பறவை பறக்கும் சகுனங்களையுமே குறை கூறுவர். அதுபோல நீ என்னிடத்தில் எப்படி நடந்து கொண்டாயானாலும் உன்னை நான் வெறுக்கமாட்டேன், நீ வாழ்க! மழைபோல யாவர்க்கும் எப்பொருளையும் வரையாது வழங்கும் நீ வாழ்க! என்பதே கவிதையின் பொருள். இக் கவிதையின் மூலம் கீழ்க்கண்ட சிறந்த கருத்துக்கள் வலியுறுத்தப் பெறுகின்றன.
- 1. இரந்து வாழும் நிலையில் யாசிப்பது இழிவு.
2. அங்ஙனம் வறியோர் யாசிக்கின்றபொழுது யாசிக்கப் படுகிறவர்கள் இல்லை எனச் சொல்லுதல் அதனினும் இழிவு.
3. தன்னுடைய துன்பத்தை வந்து கூறி கேட்பதற்கு முன்னமே குறிப்பறிந்து கொடுப்பது மிக உயர்ந்த கொடை
4. அங்ஙனம் குறிப்பறிந்து கொடுக்கின்ற பொழுது அதனைக் கொள்ளேன் என மறுத்தல் அதனினும் உயர்ந்தது.
5. கடல் பரந்த நீர்ப்பரப்பை யுடையதாயினும் அது பருகுவதற்குத் தகுதியில்லாமல் உப்பு நீராக இருப்பதால் தண்ணீர் விரும்பும் மக்கள் அதனை நாடிச் செல்வதில்லை. அது போலவே பெரும் செல்வராயினும் பிறருக்குக் கொடுத்து வழங்காத, ஈதல் பண்பில்லாதவன் நெஞ்சம் உடையார் மாட்டு மக்கள் செல்வதில்லை.
6. அளவிலும் நீர்ப்பரப்பிலும் சிறியதாகி, சேறு கலந்த நீரை உடையதாயினும் பருகுதற்குரிய நீரையுடைய தகுதி குளத்திற்கு இருத்தலின் மக்கள் அதனை நாடிச் செல்வர். அதனால் அச்சிறியநீர் நிலைக்குக்கூட செல்கின்ற வழிகள் பலவாகும்.
7. தான் விரும்பிய ஒன்றைக் கொடுக்காதவரைப் பழித்தல் சால்புடைய பழக்கமன்று. அதற்குப் பதிலாகத் தம்முடைய காலத்தையும் மற்றையவற்றையும் நொந்து கொள்வதே முறையாகும்.
8. வழங்காத வரையும் வாழ்க என வாழ்த்துகின்ற பேருள்ளம் வேண்டும். என்று இக்கவிதைகளின் அறக் கருத்துக்களை வகுத்துப் பிரித்து படிக்கின்றபொழுது எவ்வளவு அருமையான கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன என்று விளங்கும். மழை பொழிகிறது. மழை பொழிந்து ஓய்ந்தபோதுகூட மரங்களின் அடியில், இலைகளிலிருந்தும், கிளைகளிலிருந்தும் நீர்த்துளிகள் விழுவது ஓய்வதில்லை. அங்ஙனம் மழை ஓய்ந்தும் நீர்த்துளிகள் ஓயாது விட்டு விட்டு விழுந்து கொண்டிருப்பதனால் புள்ளும் மாக்களும் வேதனைப்படுகின்றன. இக்காட்சி சாதாரணமாக நாம் எல்லோரும் பார்க்கின்ற காட்சி. ஆனால் நாம் சாதாரணமாகவே பார்க்கின்றோம். அவற்றினுடே நமது கருத்துப்பதிந்து சிந்திப்பதில்லை. இதே காட்சியைச் சித்தாந்த சிவநெறிச் செல்வராகிய மாதவச் சிவஞான முனிவர் பார்க்கிறார். இக்காட்சியைத் தம்முடைய கவிதையில் வைத்து ஒரு அழகான நுணுக்கமான சமயக்கருத்தை விளக்குகின்றார். அதாவது ஆன்மாக்கள் இயற்கையிலேயே மலத்தொடர்புடையன, சாதனைகளினால், வழிபாட்டால் ஆன்மா மெய்யுணர்வில் தலைப்பட்ட பிறகும் பழைய மலவாசனை தாக்கும். இதனை “இவ்வான் மாக்களுக்கு ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞானத்தை வேம்புதின்ற புழுப்போல நோக்கிற்றை நோக்கி நிற்குமாகலின்” என்ற சிவஞான போதக் கருத்தால் அறியலாம். கசப்பு நிறைந்த வேம்பைத் தின்று பழகிய புழுவை இனிப்புடைய கரும்பினிடையே விட்டால் கரும்பைத் துய்க்காது பழக்கத்தின் வழி அது வேம்பையே தின்ன அவாவும் என்பதாகும். அதுபோல மெய்யுணர்வு தலைப்பட்ட கண்ணும் பழக்கத்தின் வழி மலவாசனைத் தாக்கும் என்ற கருத்தை மேற்சொல்லிய உவமையின் மூலம் விளக்குகின்றார். ஆழமான நுட்பக்கருத்து கவிதையைக் கேளுங்கள்.
“போதம் மேலாகப் பண்டே புல்லிய மலநோய் தீர்ந்தும்
வாதனை தாக்கு மாபோல்; மழைப்பெயப் மாறித் தீர்ந்து
காதல் செய்து உறையும் புள்ளும் மாக்களும் கவன்று நெஞ்சம்
நோதக மரங்கள் எல்லாம் நுன்துளி துவற்றும்மாதோ”
இத்தகைய கவிதைகள் சாவாப் புகழ் படைத்தவையாகும்.
உலகோர் எல்லோரும் ஓடி உழைக்கின்றார்கள், உரிமை முரசு கொட்டுகின்றார்கள், எதற்காக? பொருளுக்காக, பொன்னுக்காக, வேலிக் கணக்கில் நிலங்களுக்காக. இதை கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பார்க்கிறார். பார்த்து வியப்போடு கேட்கிறார். இங்ஙனம் ஓடிஓடிச் சேர்க்கும் வீடும், விளைநிலமும், தோப்பும் மாடும் நமக்கு நிலையானவைதானா? இவை எப்பொழுதும் எங்கும் தொடர்ந்து வருமா? அவை இருந்த இடத்திலேயே இருப்பவை தானே. உடம்பு எங்கே கிடைக்குமோ அங்கேயே கிடக்கும் இந்த உடமையெல்லாம். அதுபோல அல்லாமல் என்றும் எப்பொழுதும் தொடர்ந்து வருகின்ற துணைவன் அல்லவா முருகன்? அவனைக் கூப்பிடவேண்டாமா? அவனைத் தேடி சுகமடைய வேண்டாமா? என்று அழகு சொட்டும் தமிழில் கவிஞர் கேட்கின்றார். கவிதையின் அமைப்பு அற்புதம். ஆழமோ சொல்லும் தரத்தன்று. உணர்த்தும் கருத்தோ மிகச்சிறந்தது. கவிதையைக் கேளுங்கள்.
“முத்தைய்யா: வேலா! முருகா! என ஓதும்
சொத்தையே தேடிச் சுகமடைவீர். நித்தம் இவ்
வீடும் களமும் விளைநிலமும் தோப்புகளும்
மாடும் சதமாகுமா?”
என்று கேட்கிறார். எவ்வளவு அழகான உபதேசம், எல்லோரும் முருகா முருகா என்று சொல்லி பாடிப்பரவி அவன் திருவடிகளையே சொத்தாகச் சேர்ப்போமாக.