உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/செல்வத்துப் பயன்

விக்கிமூலம் இலிருந்து




10


செல்வத்துப் பயன்


தெண்கடல் வளாகம் பொதுமையின்றி
வெண்குடை நிழ்ற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவு மெல்லாம் ஒரொக்கும் மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

- புறம் 180

நக்கீரனார் நற்றமிழ்க் கவிஞர்; தமிழ்ச் சங்கத்துத் தலைமைப் புலவர். நக்கீரனார் பெற்றிருந்த பெருமைகள் பலப்பல. ஆயினும் அவர்தம் சிந்தனை தூய்மையானது. அதனாலன்றோ கண்ணுதற் பெருமான் கவிதையிலும் குற்றங்காணும் துணிவு தோன்றியது. குற்றமற்றவனே குற்றம் காண்பதற்குத் தகுதியுடையவன். இன்றோ குற்றமுடையோன் தன் குற்றங்களை மறைப்பதற்கே பிறர் மீது குற்றம் காண்கிறான். பழி தூற்றுகின்றான். அதனால் எது குற்றம்? என்பதே இன்று முடிவு செய்ய முடியாத ஒன்றாக இருக்கிறது. இஃது இன்றைய உலகியல் போக்கு. அதுமட்டுமன்று இருக்கும் இடம் பெரிதாக இருந்தால் இன்று குற்றம் மறைந்து விடுகிறது. இஃதொரு விபரீதமான உலகம்.

நக்கீரனார் காலத்தில் சிறுமையைத் தூற்றுதல், சிறுமையுள் சிறுமையாகக் கருதப் பெற்றது. திருத்தும் முயற்சியின்றித் தூற்ற முயற்சி செய்வது பகைவழிப்பட்டது. நோக்கம் சிறுமை நீங்க வேண்டுமென்பதன்று. தனது பகைவன் அழிக்கப்பெற வேண்டுமென்பதே. நக்கீரனார் குற்றத்தைக் குற்றத்திற்காகவே கண்டவர். குற்றமுடைய கவிதையைச் செய்தவன் கண்ணுதற் பெருமானாகவே இருந்தும் துணிவுடன் ‘குற்றம் குற்றமே’ என்று சாதித்தவர். ஆம், அவருக்குக் கண்ணுதற் பெருமானிடத்தில் ஆகவேண்டியது ஒன்றுமில்லை. புலன்களை வென்று விளங்கிய புண்ணியப் புலவனாக இருந்ததால் கண்ணுதற் பெருமானையும் எதிர்த்து வழக்காடும் ஆற்றல் கிடைத்தது. அவர்தம் வாழ்க்கை எளிய வாழ்க்கை.

உலகம் முழுவதையும் ஒரே குடைக்கீழ் வைத்து ஆளும் உரிமை பெற்றவனுக்கும் மிகச் சாதாரணமான ஒரு மனிதனுக்கும் துய்க்கும் வாழ்க்கை ஒரே வகையானதே. அதாவது உண்பது நாழி அரிசிச் சோறு; உடுப்பன இரண்டு துணி. இந்த வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லை. ஆயினும் இந்த அறிவினைப் பெறாதவர் பலர். மேலும் மேலும் செல்வத்தை இவறிக்கூட்டிச் சேர்க்கின்றனர். அங்ஙனம் சேர்ப்பது ஏன்? என்று நக்கீரர் கேட்கின்றார். திருவள்ளுவரும், கோடி தொகுக்கலாம். ஆனால் துய்த்தலரிது என்றார். பிறர் உழைப்பில் செல்வத்தைச் சேர்த்தல் பாவம். சேர்த்த செல்வத்தைத் தாமே துய்த்தல் கொடிய பாவச் செயலாகும்.

இன்றோ மனிதனின் தேவைகள் சிறகடித்துப் பறந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன. அம்மம்ம! பழங்காலத்தில் “கூழுக்கு உப்பு இல்லை என்பாரும் பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பாரும்” என்று வறுமைக்கு எல்லைக்கோடு கட்டினார். ஜீவா, சற்று வளர்ந்து ‘காலுக்குச் செருப்பில்லை’ என்று வறுமைக்கு எல்லை கட்டினார். ஆனால் இன்றைய தேவை எல்லை பெருகி வளர்ந்திருப்பதால் வறுமையின் வடிவங்கள் மாற்றப் பெற்றுள்ளன. “படம் பார்க்கக் கையில் பணம் இல்லை; காருக்குப் பெட்ரோல் இல்லை” என்றெல்லாம் வறுமையின் எல்லைக்கோடுகள் உருமாறி வளர்ந்துள்ளன. இந்த வளர்ச்சி நேரியதன்று.

துய்க்கும் வேட்கை மீதூர மீதூர மனிதனின் தன்னலம் விரிவடையும். தன்னல எல்லை விரிவடைவதன் மூலம் பிறருடைய துய்ப்பு நலன்கள் ஆக்கிரமிக்கப்படும். அதன் காரணமாக அழுக்காறு வளர்ந்து பகை கால்கொண்டு செல்வத்தைப் பறிப்போர் தோன்றுவர். தேடிய செல்வத்தைத் துய்த்து மகிழ்தலைவிட மற்றவர்க்கு வழங்கித் துய்ப்பித்து மகிழுதல் பேரறம். துய்த்தலே நாகரிக வழிப்பட்டது. எந்த ஒன்றையும் தானே துய்ப்பது நாகரிகமன்று. அத்துய்ப்பும் நஞ்சாக மாறும். பிறர் அன்பின் நெறி நின்று துய்ப்பிக்கத் துய்த்தலே இன்ப அன்பினை வளர்க்கும்; துய்த்தலும் அமுதாகும். அதனாலன்றோ இயற்கை, வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் ஊட்டுவோரையும் உண்பிப் போரையும் ஒன்றாகச் சேர்க்கிறது. நக்கீரனார், “அளவின்றி ஆசைப்பட்டுக் கோடி சேர்த்தாலும் உண்பது நாழிதானே; ஏன்? ஊரையழித்து உலையில் போடவேண்டும்” என்று கேட்கிறார். அதுமட்டுமின்றி வாழ்க்கையின் தேவை உண்பது நாழியாக - உடுப்பது இரண்டாக நெறிமுறைப்படுத்தப் பெறுமாயின் ஆடம்பரம் குறையும். ஓரிடத்து ஆடம்பரமாகச் செலவழிக்கப் பெறுவது பிறிதோரிடத்தின் உணவேயாகும் என்று எண்ணினால் வாண வேடிக்கை காட்ட மனம் வருமா?” என்றும் அறிவுறுத்துகிறார். ஏன்? தான் துய்த்தலுக்காகச் செல்வமல்ல, ஈதலுக்காகவே செல்வம் என்று தேற்றேகாரம் கொடுத்துக் கூறும் பொன்னுரை இன்றைய சமுதாய வாழ்க்கையில் பொருள் பொதிந்தது. செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேன் எனினே தப்புத பலவே!” என்ற வாக்கு நம் வாழ்க்கையில் அமைவதாக!