குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/செல்வத்தின் பயன்

விக்கிமூலம் இலிருந்து




9


செல்வத்தின் பயன்


மனிதகுலம் உயிர்ப்போடு உலாவி வாழ அடிப்படைத் தேவை உணவும் உடையுமே! அடுக்கிய செல்வம் ஆயிரம் பெற்றவனுக்கும் அவனுடைய இன்றியமையாத் தேவை - உணவுக்கு அரிசி நாழி, உடை இரண்டு. இந்த இரண்டை விஞ்சித் துய்த்தலும் அரிது. அதாவது நானாழி உண்பதும் அரிது. நாலிரண்டு எட்டு உடை உடுத்தலும் அரிது.

புதுமை உலகில் உடைகளின் உருவம் மாறியிருக்கின்றன. ஆனால் அளவில் மாறுதலில்லை. பழங்காலத்தில் இடையிற் கட்டிய ஆடை அளவுக்கே, மேல் ஆடை போட்டிருந்தனர். ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும், அடுக்கிய செல்வங்கள் கோடி பெற்றிருந்தாலும் ஒருவன் துய்க்கும் துய்ப்பின் அளவு கூடுதல் இல்லை. ஆதலால், துய்ப்பிற்கு எல்லையை இயற்கை வரையறை செய்துவிட்டது. அப்படியிருக்கச் செல்வத்தை இவறிக் கூட்டிச் சேர்ப்பதில் பயன் யாது.

இயற்கையின் எல்லையைக் கடந்து துய்ப்பின், அந்தத் துய்ப்பு இன்பந்தராது. துன்பமே தரும், துய்ப்பனவும் தப்பும். உண்ணின் உறுபலன் பிணியே! பிணி துய்ப்பிற்கு ஊறு செய்யும்; உண்ணும் வேட்கையைத் தரும். ஆனால் உண்ண இடந்தராது.

ஓரிடத்தில் எல்லை கடந்த துய்ப்பு இருப்பின் அது பிறிதோரிடத்தில் இயற்கையமைத்த துய்ப்புமின்றிப் பலர் வருந்த வழிவகுக்கும். வருந்துவோர் வாளா இரார். துய்ப்பினை இழந்து துயருறுவோர் துய்ப்போருக்குத் தொல்லை தருவர். ஆதலால் நியதி வழிப்பட்ட துய்ப்புக் கூடத் தடுமாறும்.

செல்வத்தின் பயன் துய்ப்பல்ல. ஒரே பால்வகைக்குள் காதல் தோன்றுதலில்லை. பால் வேறுபட்ட இடத்தில் தான் காதல் அரும்புகிறது; கனிந்த அன்பு கால் கொள்கிறது; ஆங்குத் துய்ப்பித்துத் துய்த்தலே இயல்பான ஒழுக்கமாக அமைந்து விடுகிறது. அவரவர்களே வலிய திட்டமிட்டுத் துய்த்தல் துய்ப்பன்று, அஃதோர் அசுர உணர்ச்சி! அது மனித உலகத்திற்குப் பகை, ஒருவர் துய்ப்பிக்கத் துய்த்தலே ஒழுக்க வழிப்பட்ட துய்ப்பு. இத்தகைய துய்ப்பே நியதி; நீதி! இத்தகைய தூய துய்ப்பே உயிர்க் குலத்திற்கு வாழ்வளிக்கும். வையகத்தையே வானகமாக மாற்றும்.

பிறர் வாழ்வில் தன்வாழ்வை இணைத்துக்கொண்டு பிறரை வாழ்விப்பதன் மூலம் வாழும் இயற்கையொழுக்கம், இன்றும் நற்சாதி விலங்குகளிடமும், நற்சாதித் தாவர இனங்களிடமும் இருக்கிறது. அவை மனிதனைத் துய்ப்பிக்கின்றன. மனிதன் அவைகளை ஊட்டுவிக்கின்றான். ஆனால், மனிதனோ தன்னுடைய துய்ப்புக்குத் தானே பட்டியல் தயாரிக்கிறான்; தேடித்துய்க்கிறான்; மற்றவர்களிடத்திலிருந்து ஒதுங்கித் தன்னைத் தானே பூட்டிச் சிறைப்படுத்திக் கொள்கிறான். மற்றவர்களுக்கு எது பிடிக்கும் என்பது அவனுக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளும் முயற்சியும் அவனுக்குப் பிடிக்காது. இது வாழ்க்கை முறையன்று.

செல்வத்தின் பயன் ஈதல்! இது எவ்வளவு உயர்ந்த தத்துவம்! இந்தத் தத்துவம் சமுதாயத்தில் வாழ்க்கை நெறியாக மலர்ந்திருக்குமானால் சமுதாயத்தில் இவ்வளவு மேடு பள்ளங்கள் இருக்காது. மனிதர்களுக்கிடையில் பகையும் வளர்ந்திருக்காது. பகையின்மையால் களவு - காவற் பணிகள் தலையெடுத்திருக்கா, இன்றோ, செல்வம் செல்வத்தைச் சம்பாதிக்கப் பயன்படுகிறது. இஃது ஒரு கொடுமை! செல்வம் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தப் பயன்படுத்தப் பெறுகிறது. ஏன்? நாடாளும் அரசிலிருந்து ஆண்டவன் சந்நிதானம் வரை இந்தப் பண்பிழந்த செல்வத்திற்கு அமோக மரியாதை! இது வையகத்தின் இயல்பான நடைமுறையன்று. நெறிமுறை பிறழ்ந்த நடை முறையே!

இதனைச் சங்கத்துச் சான்றோர் நக்கீரனார் நயம்பட எடுத்துக் காட்டுகின்றார். உலகம் முழுவதும் ஆண்டா லென்ன? அவனுக்கும் இயற்கை விதித்த உணவு நாழி தானே! மானம் மறைக்கும் உடையும் இரண்டுதானே! அப்படியிருக்க ஏன் துய்ப்பில் அதிக ஆசை அளவுக்கு விஞ்சிய துய்ப்பு இன்பத்தைத் தருவதற்குப் பதில் கழிபிணியைத் தந்து இயற்கையமைத்த துய்ப்பினையும் தப்பச் செய்யும். இயற்கையின் தேவையான துய்ப்பின்றிப் பலர் துயருறத் தாமே துய்க்க நினைத்தல் இயற்கைக்கு இசைந்த வாழ்க்கையன்று. இந்த முறையில் ஒன்றைத் துய்க்க நினைத்தாலும் அவ்வழி பல தப்பும். இதுவே நக்கீரனார் தந்த நல்லுரை:

தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்
கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை யிரண்டே
பிறவு மெல்லாம் ஓரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புத பலவே.

-புறநானூறு