உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/துணையின் இலக்கணம்

விக்கிமூலம் இலிருந்து




8


துணையின் இலக்கணம்


மனித சமுதாயம் ஒரு சந்தை, சந்தையில் பலர் வாழ்கின்றனர் - வாழ்வார்கள். இந்த மானிடச்சந்தையில் வாழ்வோர் தமக்குள் ஒருவருக்கு ஒருவர் துணை நிற்றல் இயற்கையின் நியதி - தவிர்க்க முடியாதது. துணை - உதவி மனித உலகத்தைக் கட்டிக் காப்பாற்றும் பேரறமாகும். துணை நிற்றல் ஒரு தூய பண்பு; அறப்பண்பு; இனிமை தழுவிய பண்பு. உதவி செய்தல் என்ற விழுமிய அறத்திற்கு இணையாக வேறு எந்த ஓர் அறத்தையும் எடுத்துக் கூற முடியாது. ஈதலினும் உதவுதல் உயர்ந்த பண்பு. உதவுதல், உதவி பெறுவோரை வளர்த்து வாழ்விக்கும் பண்பாகும். துணை - உதவி எப்பொழுதும் பேரறமாகி விடாது. இன்றைய உலகியல் வழக்கில் நிகழும் துணை - உதவி ஆகியவற்றில் அறத்தின் சுவட்டையே காணோம். காரணம், இன்று துணை நிற்றல் வணிக அடிப்படையிலேயே நிகழ்கின்றது. இவருக்கு இந்த வகையில் துணை நின்றால் அவர் நமக்கு எந்த வகையில் துணையாயிருக்கக்கூடும் என்ற ஆராய்ச்சியில்லாமல் யாரும் யாருக்கும் துணை நிற்க முன் வருவதில்லை. அது மட்டுமா? வலியோர் வலியோருக்கே துணை போகின்றனர். இதில் என்ன பயன்? இயற்கையின் நோக்கம், நியதியின் திறம், அறத்தின் குறிக்கோள் நிறைவேறுகிறதா? வலியர், வலியரைச் சார்ந்து துணை போனால் ஆதிக்க உணர்வு கால் கொள்ளும் - சர்வாதிகாரம் தோன்றும். முகத்துதி படலங்கள் விரியும்; மனித சாதியின் வாழ்க்கை நரகமாகி விடும். மாறாக வலியில்லாதாருக்கு வலியுடையாரின் வலிமைக்குப் பொருள் தெரியும் - பயன்படும். வலியில்லாதாரும் வளர்வார்கள். இதுவே வாழ்வியல் நெறி; சமுதாய நெறி; சிலர் உறவினர் பலரைப் பெற்றிருப்பது எப்படி? அன்பின் அடிப்படையிலா? இல்லை - அவர்களுடைய வளம் நோக்கிப் பலர் உறவினராவர். உறவினர் பலர் பலராகப் பெற்றிருக்கும் சீமான்களுக்கு உறவினராதல் அறமாகாதது மட்டுமல்ல - பயனும் அற்றது. “தனி ஒருவனாக யாரும் உறவினர் இன்றி, உறவினர் கூட்டத்தைப் பெறாத - நஞ்சை புஞ்சைகளைப் பெறாத - சாதாரண மனிதருக்கு உறவினராதலே சீலத்தில் சிறந்த வாழ்க்கை.

மாங்குடி கிழார் தமிழாராய்ந்த அறிஞர். புறநானூற்று உலகத்துச் செந்நாப்புலவர். அவர் எழினியாதனை வாழ்த்திப் பாடுகின்றார் - எழினியாதன் வழங்கி வாழ்வதில் சிறந்தவன். ஆனாலும் அவன் துணை நின்றது யாருக்கு? உருவத்தால் மனிதராயினும் உள்ளமின்மையால் வலிமையற்று நடைப் பிணமாகி நலிவோருக்கு அவன் வலிமையாகி நின்று வலிமை தந்து வாழ்வளித்தான். ஒருவர் வாழ்க்கையில் இடறி வீழும்போது, வீழும்படி பார்த்திருப்பதும் வீழ்ந்ததை விமர்சனம் செய்வதும் பண்பல்ல. இடறி வீழும் தறுவாயில் எடுத்து நிறுத்த முயல்வதும், அறியாமை கண்ட போது, அறிவு கொளுத்துதலும் நலியும் போது வலிமை தந்து வாழ்வளித்தலும் சிறப்புடை மரபில் வந்தோரின் இயல்பு. எழினியாதன் கேளிர் பலர் உடையோருக்குக் கேளாக விளங்க முடிய வில்லை. கேளிர் இல்லாதிருந்த தனியருக்கே கேளாகி வாழ்வளிக்க விரும்பினன். இதனை மாங்குடி கிழார்,

 
உள்ளிலோர்க்கு வலியாகுவன்
கேளிலோர்க்குக் கேளாகுவன்”

- புறம் 396

என்று கூறுகின்றார்.

வாழ்வோருக்கு மாரடிப்பது சங்ககால வாழ்க்கை மரபன்று. வாழவேண்டியவர்கள் பக்கம் நிற்பதே பழந்தமிழர் மரபு.