உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/தங்கத் தலைவி தருவார்!

விக்கிமூலம் இலிருந்து







20


தங்கத் தலைவி தருவார்!


கழகம் கதிரொளி பரப்புவதற்குச் சாதனம் “கழகக் கதிர்”. கதிர் கழகத்தை இனம் காண உதவுவது. பழங்காலம் தொட்டே தமிழர்கள் தமிழ்க் கழகம் வைத்துத் தமிழைப் பாதுகாத்தனர்; வளர்த்தனர். கடல்கொண்ட தென்குமரி நாட்டிலேயே தமிழ்க் கழகம் இருந்ததாக வரலாறு. சங்க காலத்தில் கடைசித் தமிழ்க் கழகம் இருந்தது. கடல்கொண்ட தென்குமரிக் கண்டம் தொடங்கித் தமிழ் நாட்டு வரலாற்றில் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்க் கழகங்கள் இலக்கிய உலகத்திற்குச் செய்துள்ள பணிகள் நிலனும் வானும் உள்ளவரை நிலைத்து நிற்கும். இன்று சங்க இலக்கியங்கள் என்று போற்றப்படுபவை தோன்றிய பொற்காலம் முத்தமிழ்ச் சங்க காலமேயாகும்.

மொழி வரலாற்று அடிப்படையில் இலக்கியங்கள் தோன்றிய பிறகே இலக்கணம் தோன்றும். இன்று நம்மிடத்தில் உள்ள பழைமையான இலக்கணநூல் தொல்காப்பியம். தொல்காப்பியம் மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. ஆனால், தொல்காப்பியத்திலேயே சமஸ்கிருதச் சொற்களின் கலப்பு - நாகரிகக் கலப்புத் தொடங்கிவிட்டது.

“நிறை மொழி மாந்தர் முறைமையிற் கிளந்த
மறை மொழி தானே மந்திரம் என்ப”

என்ற நூற்பாவுக்கு, பேராசிரியர் உரையெழுதும்போது “தானே என்று பிரித்துக் காட்டியது தமிழ் மந்திரம் என்பது அறிவித்தற்கு” என்று கூறுகிறார். ஆதலால் தமிழில் பிற மொழிக் கலப்புக்கள், பிற நாகரிகக் கலப்புக்கள் ஏற்பட்டுப் பல நூற்றாண்டுகளாகி விட்டன! ஆனாலும் தமிழ், தனது தனித்தன்மையை இழந்து விடாமல் இருப்பது சிறப்பு. உலக மொழிகளிலேயே தனித்தியங்கும் ஆற்றலுடைய மொழி, தமிழ். அதுமட்டுமல்ல. இனிமையும் எளிமையும் பொருந்திய மொழி. பழந்தமிழ் இலக்கியங்கள் - அகத்தினை நூல்கள், புறத்திணை நூல்கள் அனைத்தும் தமிழருடைய வாழ்க்கையில் தோன்றியவை. பழந்தமிழ் இலக்கியங்களில் புனைந்துரைகளும் கற்பனைகளும் குறைவு. தமிழ் இலக்கியங்கள் கவிதை வடிவின. தமிழ், முத்தமிழாக வளர்ந்து வந்துள்ளது. கூத்து, இசை, இயல் என்ற வரிசையில் அவ்வத்துறையில் தமிழ் பெற்றுள்ள வளர்ச்சி பெருமைக்குரியது.

பழந்தமிழ் இலக்கியங்கள் பண்பாட்டுக் கருவூலங் களாகத் திகழ்கின்றன. பழந்தமிழரின் பண்புகள் காதல், கொடை வீரம் ஆகியனவாம். அகத்திணை முழுதும் காதற் கவிதைகளேயாம். காதற் கவிதைகளேயானாலும் பண் பாட்டுத் திறன்களை எடுத்துக்கூறத் தவறவில்லை. தமிழர் ஈத்துவந்து இன்பமார்வதில் விருப்பத்துடன் ஈடுபடுவர். பழந்தமிழர்கள் என்றும் படைமடம் பட்டாரில்லை. ஆனால் கொடைமடம் பட்டதுண்டு.

“பாத்திரம் அறிந்துபிச்சை யிடு” என்பது அயல்வழக்கு. தமிழர் வழக்கோ

‘மடவர் மெல்லியர் செவினும்
கடவன் பாரி கை வண் மையே!”

என்பது. விண்ணுலகு கருதி ஈதல் அயல் வழக்கு. விண்ணுலகு இல்லெனினும் ஈதல் தமிழ் வழக்கு.

தலைவன் பொருள் தேடப் பிரிந்து சென்றுள்ளான். ஆனால் சொன்னபடி கார் காலத்தில் திரும்பி வரவில்லை. தலைவி கவலைப்படுகின்றாள். தோழி தேற்றுகின்றாள். “தலைவன் சீக்கிரம் வந்துவிடுவான்; கவலற்க!” என்று தோழி தேற்றுகின்றாள். ஆயினும் தலைவி, ஆறுதல் பெறவில்லை! ஏன்? தலைவனுடன் பழகிய தலைவிக்குத் தெரியும் தலைவனின் இயல்பு. தலைவனுக்குத் தலைவி மீதுள்ள விருப்பத்தைவிட, பொருள் மீது தான் விருப்பம் அதிகமாம்! ஏன்? பொருட் பேராசையா? இல்லை, இல்லை! தம்மிடம் வந்து இல்லை என்று கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லும் பழக்கம் தலைவனுக்கு இல்லை. அதனால் தம்மை நோக்கி இரந்து வருபவர்கள் துன்பம் நீங்கி மகிழ்ச்சி பெற வழங்க வேண்டுமே! அதனால் தலைவனுக்குப் பொருள் மீதே விருப்பம் அதிகம். பொருள் தேடும் முயற்சியிலேயே ஆர்வம் மிகுதி என்று தலைவி தோழிக்கு எடுத்துச் சொல்கிறாள்.

இல்லென் றிரப்போர்க்கு இயைவது சுரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப
நம்மினும் பொருளே காதலர் காதல்

என்பது அகநானூறு.