குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/புதுச்சேரி கம்பன் விழாத் தலைமை உரை

விக்கிமூலம் இலிருந்து





19
புதுச்சேரி கம்பன் விழாத்
தலைமை உரை


கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கின்ற நண்பர்களே! பெரியோர்களே! சான்றோர்களே! சகோதரர்களே! சகோதரிகளே! கம்பனின் புகழ்பாடிப் பரவுகின்ற இந்த விழாவில் இந்த ஆண்டு கம்பனைப் புரட்சிப் பார்வையில் பார்க்க வாய்ப்பளித்த கம்பன் கழகத்து நண்பர்களுக்கு என்னுடைய பாராட்டு! வாழ்த்துக்கள்! நன்றி.

புதுவைக் கம்பன் கழகத்திற்கு 25 ஆண்டுகளாயிற்று. புதுவைக் கம்பன் கழகத்திற்கு நல்ல முறுகிய இளமை போலத் தெரிகிறது. எனவே புரட்சியைப் பற்றி அது சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது. நான் நினைக்கிறேன் கடந்த காலம் வரையில் - கடந்த 24 ஆண்டுகளில் புரட்சி என்ற தலைப்பில் இந்தக் கழகம் சிந்தித்ததுமில்லை தலைப்புக் கொடுத்துப் பேசச் செய்ததுமில்லை; யாராவது எதிர்பாராமல் பேசினார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்துக் கம்பன் கழகம் இப்படி ஒரு சிந்தனையை ஏன் சிந்திக்கிறது என்பதை நான் எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எல்லாத் துறையிலும் புரட்சி! புரட்சி! புரட்சி! என்ற தலைப்பைச் சேர்த்திருக் கிறார்கன். கம்பன் காலத்தில் புரட்சி என்ற சொல்லே தமிழில் இல்லை. அந்தச் சொல்லை முதன்முதலில் தமிழுக்குத் தந்த கொடையாளன் நம்முடைய பாரதி என்பதை மறந்துவிடக்கூடாது. அவன்தான் முதன் முதலில் தமிழுக்குப் புரட்சி என்ற சொல்லை உருவாக்கிச் சேர்க்கின்றான்.

“ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி” என்று சோவியத் நாட்டில் எழுந்த புரட்சியை வரவேற்று எக்களிப்பிலே பாடுகின்றான் பாரதி. ஆக “புரட்சி” என்ற சொல் தமிழுக்கு வராமல் இருந்த பொழுதே கம்பன் எப்படி புரட்சிக் கவிஞனாக இருக்க முடியும் என்பது முதல் வினா.

புரட்சி என்ற சொல்லினால் மட்டுமே புரட்சி பற்றிச் சொல்லவேண்டும் என்ற அவசியமில்லை. சில கொள்கைகள், சில கோட்பாடுகள் நீண்ட நெடுங்காலம் சமுதாயத்தில் உலா வந்திருக்கும். அதைப் பற்றி நாம் அக்கறை காட்டிக் கொள்ளாமலும் இருந்திருப்போம். ஆனால், பாரதி அப்படி ஒரு புதிய எண்ணத்தை நமக்குக் கொடுக்கிறான். ஆனால் கம்பன் தன்னுடைய காவியத்தின் மூலம் பல்வேறு செய்திகளை நினைவூட்டுகிறான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இன்னொன்று கம்பன் கழக நண்பர்கள், புரவலர்கள் அன்புகூர்ந்து நினைவில் கொள்ளவேண்டிய செய்தி. கம்பனைக் “கவிச்சக்கரவர்த்தி” என்று சொல்கிறீர்கள். ஆம்! கவி உலகத்திலே ஒரு முடிசூடா மன்னன் கம்பன்! அதனோடு உங்கள் மனம் அமைதி கொள்ளவில்லை. அவன் ஒரு தெய்வமாக்கவி என்றும் சொல்கிறீர்கள். கம்பனைக் கவிச்சக்கரவர்த்தி என்று நீங்கள் சொல்லுவதைவிட கம்பனை ஒரு தெய்வமாக்கவி என்று சொல்கிறபொழுது ஏதோ என்னிடத்தில் வலிமையாக நீங்கள் சிக்கிக் கொள்கிறீர்கள் என்று தோன்றுகிறது. தெய்வமாக்கவி என்றால் என்ன? தெய்வம் உண்மைதான் சொல்லும். உண்மை சொல்வதற்குத்தான் தெய்வம் என்று பெயர். தெய்வத்தின் வார்த்தைக்கு மறு வார்த்தை இருக்கக்கூடாது. இது நாம் அனைவரும் நம்புகிற செய்தி. ஆனால் நடப்பில் நம்முடைய நாட்டு மக்கள் தெய்வத்தையும் ஏமாற்றத் தொடங்கிவிட்டார்கள். தெய்வத்தின் முன்னே போனாலும் தெய்வம் விரும்புவதைக் கொடுக்காமல் தன்னிடத்தில் இருப்பது எதையாவது கொடுத்துவிட்டு கொடுத்ததை விடக் கூடுதலாகத் தெய்வத்திடத்தில் பிச்சை கேட்கிறவர்கள் நாட்டில் ஏராளம். கம்பன் என்ற தெய்வமாக்கவியின் சன்னிதியில் நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்பது என்னுடைய கேள்வி.

பொதுவாகச் சென்ற காலம் நம்முடைய வரலாற்றுக்கு மிகச் சிறந்த காலம் என்பதில் இரண்டு விதக் கருத்து இருக்கமுடியாது. ஆனாலும் கடந்த காலம் கடந்த காலந்தான். எப்படி கறந்த பாலை பால் மாட்டு மடிக்குள் திரும்ப நுழைக்க முடியாதோ அதேபோலச் சென்றகால வரலாற்றை திருப்பி நாம் கொண்டு வரமுடியாது. ஆனால் வரலாற்றாசிரியர்கள் சில சமயத்தில் சொல்லுகிறார்கள் “History Repeats itself” என்று.

நான் இந்த ‘புரட்சித்’ தலைப்பைப் பற்றி சிந்திக்கத் தொடங்கிய பொழுது இந்தப் பழமொழியைப் பற்றியும் கொஞ்சம் சிந்திக்கத் தொடங்கினேன். “சரித்திரம் திரும்பி வருகிறது” என்று சிலர் சொல்கின்றனர். அப்படித் திரும்பி வந்தால் அதில் என்ன பயன்? எந்த ஒன்றும் அது இருந்தபடியே இருக்குமானால் அது பயனுடையது அல்லவே. மாற்றமும் வளர்ச்சியும் வேண்டுமே. சரித்திரம் திரும்பி வருகிறது என்று சொன்னால் அதில் என்ன பொருள் என்று நீண்ட நேரம் யோசித்தேன்! பின் நான் இப்படிச் சொல்லலாமா என்று கருதினேன். புதுவையில் தான் முதன் முதலில் மக்கள் மன்றத்தில் சொல்கிறேன். ஆய்வு செய்து பாருங்கள். நல்ல அறிஞர்கள், நல்ல புலவர்கள், நூல் எழுதுகிறவர்கள் எல்லோரும் வந்திருக்கிறீர்கள். என்னைப் பொருத்தவரையில் இந்த முன்னுரை ஒரு கலக முன்னுரைதான். அவ்வளவுதான்! ஆனால் ஓர் அறிவியல் கலகம் இது! “History repeats itself” என்பதற்குப் பதிலாக “History returns itself” என்று சொல்லலாமா? நாம் ஒரு செயல் செய்தால் எவ்வளவு திரும்பவரும் என்று கேட்பதைப்போல், வரலாற்றுக்கு நீ என்ன கொடுத்தாயோ, வரலாற்றின் வளர்ச்சிக்கு நீ எவ்வளவு கொடுத்தாயோ? வரலாற்றின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் நீ எவ்வளவு பணிகளைச் செய்தாயோ அந்த அளவுக்கு உனக்கு வரலாறு திரும்பத்தரும். நீ வரலாற்றை வறிதே செல்வதற்கு அனுமதித்து விட்டாயானால் நீ பிறந்து வளர்கின்ற காலந் தொட்டு இந்த நாட்டுக்கு எந்தப் புதுமையும் எந்தப் பொலிவும் சேர்க்காமல் வறிதே பாலைவனத்தில் செல்வதைப் போல் நாட்டு வரலாறு செல்லுமானால் உனக்கு அந்த வரலாறு திருப்பிக் கொடுப்பதும் மிகவும் குறைவாக இருக்கும். சென்ற காலம் நிகழ்காலத்தின் முன்னாலே வீழ்ந்து வணங்கி புன்சிரிப்போடு விடைபெற்றுக் கொள்கிறது. இப்பொழுது நம் நாட்டுத் தினத்தாள்களில் எல்லாம் ஜனவரி முதல் தேதி பிறக்கிறபொழுது அப்படி ஒரு படம் போடுவார்கள்; ஒரு கிழவன் மூட்டை முடிச்சோடு வெளியே போவதுபோலவும் ஒரு புதிய குழந்தை உள்ளே வருவது போலவும் படம் போடுவார்கள். ஆக சென்ற காலத்தலைமுறை நம்மிடத்திலிருந்து விடைபெற்றுக் கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறது. புன்சிரிப்போடு புதிய தலைமுறை வருவதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அமையும் புதிய தலைமுறைக்கு புதிய வரலாற்றுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

ஒரு மேடையிலே சொன்னதையே திரும்பச் சொன்னால் நீங்கள் கேட்டு மகிழ்வதில்லை. கம்பனையே நான் படித்தாலும் சென்ற தடவை படித்ததைவிட புதிய பார்வையில் புதிய கோணத்தில் கம்பனைப் படிக்காது போனால் நான் வறட்சித் தன்மையுடன் கம்பனைப் படிக்கிறேன் என்பது பொருள். இந்தப் பரந்த உலகம் இயங்கிக் கொண்டேயிருக்கிறது, வளர்ந்துகொண்டேயிருக்கிறது. ஒன்று இந்த உலகத்தில் நீங்கள் பார்க்கிற கொள்கைகள் கோட்பாடுகள் நிகழ்ச்சிகள் இவற்றைக் கம்பனில் தேடிப் பாருங்கள் கிடைக்கின்றனவா என்று. இந்த நாட்டினுடைய நிகழ்வுகளுக்கு கொள்கைகளுக்கு கோட்பாடுகளுக்கு கம்பன் ஏதாவது காரணம் சொல்லுகின்றானா என்று கம்பனில் தேடுங்கள். இஃது ஒரு பார்வை. இதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் கம்பனையாவது இந்த நாட்டின் வீதிகளிலே தேடிப்பாருங்கள். இது கம்பன் சொல்வதுபோல இருக்கிறது என்றாவது சொல்லுங்கள்.

உயிர்ப்புள்ள மானுட சமூகத்தின் வாழ்வியலோடு ஒட்டிவராத இலக்கியங்கள் இந்த உயிர்ப்புள்ள மானுட சமூகத்தை உந்திச் செலுத்துகின்ற ஆற்றல் மிக்கதாக இல்லாத இலக்கியங்கள் காலப்போக்கில் தேவலோகத்து அனுபவம் போல அனுபவத்தோடு நின்றுவிடும். நம் நாட்டுப் புராணங்களில் எல்லாம் தேவலோகத்தில் எல்லா அனுபவங்களும் உண்டு என்று சொல்லுவார்கள். காமதேனு உண்டு, கற்பகத்தரு உண்டு என்று சொல்லுவார்கள். ஆனாலும் அவற்றை அறிந்த ஆள்தான் இல்லை.

இந்தப் பார்வையில் கம்பனைப் பார்க்கிறபொழுது புரட்சி என்றால் என்ன? கொஞ்சம் பழைய சமயவாதிகள் புரட்சியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் புரட்சி என்ற பெயரில் சொல்லவில்லை. பிரளயம், யுகப் பிரளயம் என்று சொல்வார்கள். எல்லாமே அடியோடு மாறி ஒரு புது யுகம் தோன்றுவதை யுகப்பிரளயம் என்று சொல்வார்கள். பாரதி கலியுகத்தைக் கொன்றுவிட்டு கிருதயுகத்தைக் கொண்டுவருவேன் என்று சபதம் செய்கிறான். அப்படி யானால் என்ன பொருள்? கலியுகம் அவன் வாழ்கிற யுகம். அவன் வாழ்கிற காலம் வாழ்க்கைக்கு ஏற்றதாக இல்லை. எனவே கலியுகத்தைக் கொன்றுவிட்டு கிருத யுகத்தைக் கொண்டுவரவேண்டும் என்கிறான். இந்த யுகப்பிரளயத்தை முன்னே இருந்தவர்கள் எல்லாம் கடவுள் செய்வார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பாரதி முதன் முதலில் தன்னந்தனியனாய் நான் கொணர்வேன் என்று சொன்னான். ஒரு தன்னம்பிக்கை உடைய ஆளுமை உடைய ஒரு ஆவேசக் குரல் கேட்கிறது, கலியுகத்தைக் கொன்று கிருதயுகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று!

கலியுகத்தினுடைய தன்மை என்ன? புரட்சி என்றால் என்ன? நாம் வாழ்கிற உலகம் நாம் வாழ்கிற சமூக அமைப்பு, நான் இப்படிச் சொல்லும்போது எனக்குக் கொஞ்சம் சங்கடம் தோன்றுகிறது. ஏனென்றால் நம் நாட்டில் தற்போது சமூகம் இல்லை. இன்னமும் நம் நாட்டில் சமூகம் - சமூக அமைப்பு தோன்றவில்லை. நம் நாட்டில் நாமெல்லாம் மக்கள் கூட்டம் அவ்வளவுதான். நீங்கள் காடுகளைப் பார்த்திருப்பீர்கள். காடுகளில் ஓங்கி உயர்ந்து அடர்ந்த மரங்கள் இருக்கும். காடுகள் சமுதாயத்திற்குத் தேவைதான். ஆனாலும் காடுகளைப் பற்றிக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்; அந்தக் காடுகளிலே மரங்கள் ஒழுங்காக இருக்காது. நெறிமுறை இருக்காது. அழகுபட அமைந்து மரங்கள் வரிசையாக இருக்காது. காட்டில் மரங்கள் தன்னிச்சையாகத் தோன்றும். தன்னிச்சையாக வளரும். அந்தக் காட்டிலுள்ள மரங்களுக்கிடையே அருவெறுக்கத்தக்க ஆபாசமான போட்டிகள் இருக்கும். தெளிவாக உண்மையைச் சொன்னால் வல்லாண்மை மிக்க தாவரங்கள் வல்லாண்மை இல்லாத தாவரங்களை ஆக்கிரமித்து அழித்துவிடும். இது காட்டின் இலக்கணம்.

ஒரு பழத்தோட்டம்! ஒரு தென்னந்தோப்பு! இவற்றைக் கூர்ந்து பாருங்கள். அவற்றில் ஒழுங்கு இருக்கிறது; வரிசை இருக்கிறது; நெறிமுறை இருக்கிறது. ஒவ்வொரு மரத்திற்கும் உத்திரவாதம் அளிக்கப்பட்ட உரமும் தண்ணீரும் கிடைக்கும். நம்முடைய மானுட சமுதாயம் சமுதாயமாக உருவெடுத்துவிட்டதென்றால் ஒரு பழத்தோட்டத்தைப் போல இருக்க வேண்டும். இன்றைக்கு நாம் இருப்பது மக்கள் கூட்டம்! அது காடு போல இருக்கிறது. எனக்குள்ளதுதான் எனக்குத் தெரிகிறதே தவிர மற்றவர்க்கு என்ன தேவை என்பது எனக்குத் தெரிவதில்லை.

மனம் போன போக்காக இருக்கின்ற சமுதாய அமைப்பு, வாழ்வதற்கு தகுதியுடையதாக இல்லை என்றால் அதனை மாற்றியமைக்க வேண்டும். மாற்றியமைப்பதற்குப் பதில் சில சமயங்களில் சமாதானமாகப் போகலாமா? என்று சிலர் சொல்வார்கள். இவர்கள் வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் கூடச் சமாதானம் செய்வார்கள். அந்தச் சமாதானத்திற்குப் பெயர்தான் பழைமையைச் சீர்திருத்தம் செய்வது என்பது. ஆனால் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் மிகவும் பாழாய்ப்போன வீட்டை பழுதுபார்ப்பதைவிட இடித்துக் கட்டிவிட்டால் நல்லது போலத் தெரிகிறது. ஏனெனில் அதைப் பழுது பார்ப்பதற்கு ஏராளமான செலவு செய்யவேண்டும். ஏராளமான ஆற்றல் வேண்டும். ஒருவன் ஒரு கைமரத்தைக் காப்பாற்றவேண்டும் என்று சொன்னால் இன்னொருவன் போட்டிபோட்டுக் கொண்டு எனக்கு இந்தக் கைமரத்தைக் காப்பாற்றவேண்டும் என்று சொல்வான். புரட்சி என்பது ஒட்டுறவே இல்லாமல் மாற்றியமைப்பது; காய்தல் உவத்தல் இல்லாமல் மாற்றியமைப்பது. அந்தப் புரட்சி நமது நாட்டில் எளிதாகத் தோன்றாது. தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள். நமது நாட்டில் புரட்சி தோன்றாது. காரணம் நாம் துன்பங்களையெல்லாம் சகித்துக் கொள்ளப் பழக்கமாகிவிட்டோம். மலங்களில் கிடந்து புரளுகின்ற பன்றிகளைப்போல, நமது துன்பங்களை யெல்லாம் சகித்துக் கொண்டு சுரணையில்லாமல், சூடு இல்லாமல் வெட்கமில்லாமல் வாழ்கிற செளஜன்யமான பழக்கத்திற்கு நாம் ஆளாகிவிட்டோம். அவமானம், இழிவு, வறுமை, ஏழ்மை இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு “இப்படித்தான் இருக்கும்” என்று ஒரு சமாதானம். “திடும் என்று ஒரு நாளிலே உலகம் மாறிவிடுமா?” - நாய் வாலை நிமிர்த்திட முடியுமா? என்ன?” என்று சமாதானம். இப்படி என்னென்ன சமாதானம்? இந்த நாட்டிலே புரட்சியாவது? அது வருவதாவது?

புரட்சி என்பதற்கு ஒரு சிறிய சான்று சொல்லி விளக்க நான் ஆசைப்படுகிறேன். கோழி முட்டை பலருக்குத் தெரிந்த ஒரு பொருள். அந்த முட்டைக்குள்ளே குஞ்சு உருவாகி இருக்கிறது. அந்தக் குஞ்சால் அந்த முட்டையினுள் உள்ள அந்த பரிணாம எல்லை இருக்கிறதே அந்தக் குறுகலான எல்லைக்குள் வாழமுடியவில்லை; குஞ்சுக்கு வாழப் பிடிக்கவில்லை; விருப்பமில்லை. பரந்த உலகத்திற்கு வந்து சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறது. அந்த ஆவேசத்தால் உள்ளிருந்தபடியே முட்டையின் ஓட்டை உடைக்கிறது. அப்படியே ஓட்டை உடைத்து வெளியே வருகிறதே அதுபோன்றது புரட்சி.

நாமெல்லாம் இப்படி உடைப்போமா? “என்னவோ நம் தலையிலே எழுதினபடி நடக்கிறது” என்று சமாதானம் கூறிவிடுவோம். நான் கடவுள் நம்பிக்கையும் மதநம்பிக்கையும் உடையவன்தான். ஆனால் இடைக்காலத்தில் மதப் புரோகிதர்கள் மதத் தலைவர்கள் இந்தச் சமூகம் எழுந்து நிற்பதற்குரிய தெம்பும் திராணியும் இல்லாமல் போகும்படி குப்பைக் கூளங்களை மூளையிலே ஏற்றி விட்டார்கள். ஆதலால் எழுந்திருக்கவே மனமில்லாமற் போய்விட்டது. “ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி” என்று சொல்கிறான் பாரதி! நாமாவது புரட்சியாவது செய்கிறதாவது? பக்கத்தில் இருக்கிற வீட்டிலே இருப்பவருடன் சண்டைபோடாமல் இருந்தாலே பெரிய காரியம். இந்த அளவுக்கு நாம் கொச்சைப்படுத்தப்பட்டு விட்டோம் என்பதை மறந்து விடாதீர்கள்!

கம்பன் அப்படி ஓர் சிந்தனை செய்கிறான்! மீண்டும் நான் பணிவோடு சொல்ல ஆசைப்படுகிறேன், கம்பன் கழகத்தாருக்கு! கம்பனின் நாட்டுப் படலப் பாடல்களை - கம்பனின் கனவுகளை, உடோப்பியா - கற்பனை கனவு என்று கருதுகிறீர்களா அல்லது கம்பன் அப்படி ஒரு நாட்டைக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டான் என்று நினைக்கிறீர்களா? யோசனை செய்யுங்கள்! அவனுடைய நாட்டுப்படலம் பாடல்களுக்கும் காப்பியத்திற்கும் கிட்டத்தட்ட உறவில்லாமல் இருக்கிறது. நாட்டுப்படலப் பாடலிலே படைக்கப்பட்ட இலக்கணங்களுக்கேற்றவாறு பாத்திரங்கள் காப்பியத்தில் இருக்கின்றனவா என்று கூடத் தேடித்தான் பார்க்க வேண்டும். ஆனால் நாட்டுப்படலத்திலே,

“கள்வருமில்லை காவல் செய்வாருமில்லை
கொள்வாரு மில்லை கொடுப்பார்களு மில்லை”

என்கிறான்.

ஆனால் இராமன் நாட்டை விட்டுக் காட்டுக்குப் போகிறபோது பார்ப்பனர் ஒருவர் பசு கேட்கிறார். கம்பனோ ஒரு இலட்சிய நாடு அமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

கம்பன் பாடி எத்தனை ஆண்டுகளாயிற்று?

நம் நாட்டில் கள்வர் இருக்கின்றனரா? இல்லையா? இன்றைக்கு இந்த நாட்டில் தீவிரமாக வளர்கிற தொழில் பூட்டுத் தொழில், புதுப்புதுப் பூட்டுகளாகச் செய்கிற “லாக் டெக்னாலஜி” வளர்கிறது. புதிய தொழில்நுட்பம் தடுக்க முடியாதது. புதிய புதிய தொழில் நுட்பம் சார்ந்த பூட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை மறந்துவிடாதீர்கள்! பூட்டுகளை உடைப்பவர்களும் சும்மா இருக்கவில்லை. அதை உடைப்பதற்குரிய தொழில்நுட்பத்தையும் தொடர்ந்து கண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றனர். நமக்குக் ‘கள்வருமிலாத காவல் செய்வாருமிலாத ஒரு நாடு வேண்டும்! இன்று அதுதான் புரட்சி! ஆனால் கம்பன் எந்தக் கள்வனைச் சொன்னான்; எந்தக் காவலைச் சொன்னான்? ‘கள்வனை' என்று சொன்னால் மட்டும் போதாது. எந்தக் கள்வனைச் சொன்னான்? எப்படி முதன்முதலில் புதுமையாக ‘புரட்சி’ என்ற சொல்லைத் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்தானோ அதுபோல கள்வர் என்ற சொல்லுக்கு புதுப்புனைவு புதுப்பொருளை முதலில் தந்தவன் பாரதி.

இப்போது களவு என்றால் என்னுடைய பையில் இருக்கிற பேனாவைத் திருடிப்போதல் களவு. இந்த மேசையில் உள்ள புத்தகத்தை எடுத்துக்கொண்டு போதல் - திருடு. இதுவும் இடம் நோக்கி பொருள் கொள்ளப்படும். என்னுடைய பேனாவை யாராவது எடுத்துக்கொண்டு போனார்களானால் அதற்கு ஏராளமான அடாவடித் தனங்கள் நடக்கும். நான் இன்னொருவர் பேனாவை - புலவர் அருணகிரி பையிலிருக்கும் பேனாவை எடுத்துக் கொண்டுவிட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் திருடிவிட்டேன் என்று அருணகிரி சொன்னால் காவல்துறை அலுவலகம் “அடிகளாராவது அருணகிரி பேனாவை எடுக்கிறதாவது” என்று என்னை வைத்துத்தான் வழக்கைப் பார்க்குமே தவிர அருணகிரியை வைத்து வழக்கைப் பார்க்காது.

பாரதி முதன்முதலில் களவுக்கு ஒரு பொருள் சொல்லுகிறான். “பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்” என்றான். “திருடு” என்ற சொல்லுக்கு முதல் தடவையாகப் புதிய பொருள் சொல்லுகிறான். ஓர் உழைப்பாளி உழைக்கிறான். உழைப்புக்கு என்ன அளவுகோல்? ஒரு பொருளை பயன்படு பொருளாக மாற்றுவது உழைப்பு. சான்றாக ஐம்பது வெண் பொற்காசுகள் மதிப்புடைய ஒரு இரும்புத் துண்டு இருக்கிறது. அது ஒரு சாதாரணக் கொல்லனிடத்தில் இரும்புக் கொல்லனிடத்தில் கிடைக்கிறது. அவன் அதை இலாடமாக அடிக்கிறான். அந்த ஐம்பது வெண்பொற்காசுகள் விலை மதிப்புடைய இரும்பு நூறு இலாடமாக அடிக்கப்பட்ட பிறகு நூறு ரூபாய் விலை மதிப்புடையதாக மாறுகிறது. இந்த நூறுக்கும் ஐம்பதுக்கும் இடையில் இருக்கிற ஐம்பதை யார் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை வைத்துத்தான் களவு நிர்ணயிக்கப்படவேண்டும். இந்த இரும்புத் துண்டை யாரோ ஒருத்தர் வீட்டுத் தோட்டத்திலே பொறுக்கிவைத்திருந்தாரே அவர் அந்த இரும்புக்கொல்லருக்குப் பத்தோப் பதினைந்தோ கொடுத்து விட்டு மீதியை அவர் எடுத்துக் கொள்ளுகிறார். அதற்குத் “திருடு” என்று பெயர் வைக்கிறான் பாரதி. அதே இரும்பை இன்னும் நுண்ணிய செயற்பாட்டுடன் காலம் காட்டும் கருவியாக கடிகாரமாக உருமாற்றம் செய்தால் அதற்கு ஐந்நூறு ரூபாய் விலை, இந்த ஐம்பது ரூபாய் விலை மதிப்புள்ள பொருளுக்கும் ஐந்நூறு ரூபாய் விலை மதிப்புள்ள பொருளுக்கும் இடைவெளியில் இருக்கிற பணம் எங்கு செல்கிறது? அங்கே களவு தோன்றுகிறது. உழைப்பைச் சுரண்டுகிறவரைக் கள்வர் என்று சொல்கிற பழக்கம் நம் நாட்டில் வரவேயில்லை. புரட்சி அங்கேதான் தோன்ற வேண்டும்! இப்படிப் பொருள் ஒரு இடத்திலே குவிகிறது; ஓரிடத்திலே வறுமை வளர்கிறது. “வண்மை இல்லை. ஓர் வறுமை இன்மையால்” என்றான் கம்பன். கம்பன் காலத்திலேயே வறுமை இருந்திருக்கிறது. அதை மாற்றியமைக்க நினைத்துப் பாடியிருப்பான் போலத் தெரிகிறது. ஏனென்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு வறுமை என்பது பரம்பரைச் சொத்து. பாட்டன், முப்பாட்டன், அவன் பாட்டன் காலத்திலேயே பெருந்தலைச் சாத்தனார் காலத்திலேயே வறுமைதான்! மடியில் கிடக்கிற பச்சிளங் குழந்தை தனக்குப் பால் கிடைக்காமல் தாய் முகத்தைப் பார்த்து அழுகிறது. அக்குழந்தைக்கு பாலூட்ட முடிய வில்லையே என்று தாய் கணவன் முகத்தைப் பார்த்து அழுகிறாள். அவன் அரசின் முகத்தைப் பார்த்து அழுகிறான். இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்க்கைச் சித்திரம் மறந்துவிடாதீர்கள். அதே இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழ்நாட்டின் நிலையைத் தமிழ்ப் பெருமக்கள் தமிழாசிரியன்மார்கள், சங்ககாலம், பொற்காலம், கடையெழு வள்ளல்கள் இருந்த காலம் என்றெல்லாம் கூறுகிறார்கள். அந்தக் காலத்திலேயே நண்பகல் உச்சிவேளை பசிக்கிற நேரம் கட்டிளங் காளைகளுக்கு வீட்டிலே அள்ளிச் சாப்பிட சோறில்லை. எங்கே சோறு கிடைக்கும் என்று அலைந்து திரிகிறார்கள். யாரோ ஒரு மனிதன் ஒரு குண்டான் சோறு வடித்துப் பிசைந்துக் கையுருண்டைச் சோறாக உருட்டி உருட்டிக் கொடுக்கிறான். அப்படி கையுருண்டைச் சோறு உருட்டிக் கொடுத்தவனுக்கு பசிப்பிணி மருத்துவன் பண்ணன் என்று புகழ்பாடிய நாடு இந்த நாடு. கையுருண்டைச் சோற்றை வாங்கிச் சாப்பிட்டு விட்டு எறும்புகளைப்போல வரிசை வரிசையாகப் போகிறார்கள் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டினுடைய நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது, நமது இலக்கியம். 2000 ஆண்டுகள் கழித்து நாம் என்ன முன்னேறியிருக்கிறோம்? சிறிய முன்னேற்றம் கையிலே உணவு வாங்குவதற்குப் பதில் தட்டிலே வாங்குகிற முயற்சி இங்கே நடந்திருக்கிறது. நமக்கு வெட்கம் இருக்க வேண்டாமா? எங்கேயிருந்து புரட்சி தோன்றும்? வறுமைக்கு என்ன காரணம்? புரட்சியைப் பற்றி சிந்திப்பது மட்டும் போதாது. காரணங்களையும் கண்டுபிடிக்க வேண்டும். கம்பனின் பாடல்கள் என்ன வறட்சி நிறைந்த பாடல்களா? அவைகளுக்கு உயிர்ப்பில்லையா? அவைகள் நமக்கு நடைமுறைகளைக் காட்டக் கூடிய வழிகாட்டி இல்லையா? ஏன் கம்பன் நினைத்தது நடைபெறவில்லை!

கடைசியாக ஒன்றைச் சொல்லி முடிக்கின்றேன். கம்பனுடைய இராமகாதையே நீண்டதற்குக் காரணம் என்ன? இராமனுக்கு நாடு கிடைக்காததாலா? பரதன் நாடாள முடியாது என்று சொன்னதாலா? இவ்வளவு பெரிய காவியமாக இராமகாதை உருக்கொள்வதற்குக் கருவாக அமைந்தது எது? கைகேயி, நல்ல பெண்; நல்ல தாய்; நல்ல தலைவி; இரக்கமுடையவள்; இராமனிடத்தில் அளவற்ற அன்புடையவள். இராமனுக்கு முடிசூட்டு விழா என்றவுடன் அவள் மகிழ்ந்ததைப்போல கோசலை கூட மகிழவில்லை. இராமனுக்கு முடி சூட்டுவிழா என்ற செய்தியைக் கொண்டு வந்தவளுக்கு மணிமாலையைக் கழற்றிக் கொடுக்கிறாள்! எவ்வளவு உயர்ந்த தாய்! “நதியின் பிழையன்று நறும்புனலின்மை” என்று கம்பன் அற்புதமாகப் பாடிக் காட்டுகிறான். அந்தக் கைகேயி எவ்வளவு பெரியவளாக உயர்ந்து விளங்கிய கைகேயி கூனியினுடைய தொடக்க காலப் பேச்சில் மயங்கி விழாத கைகேயி ஏன் வீழ்ந்தாள்? எப்பொழுது வீழ்ந்தாள்? கண்டுபிடிக்க வேண்டாமா? அங்குதான் இருக்கிறது - புரட்சிக்குரிய கருத்து.

புரட்சிக்குரிய கருவாக இருந்தது, இராமகாதைக்கும் கருவாயிற்று. பல்வேறு செய்திகள் சொல்லிப் பார்க்கிறாள் கூனி, கேட்கவில்லை. கடைசியில் ஒன்றே ஒன்று சொல்கிறாள் “இராமன் முடிசூடினால் உடைமையெல்லாம் கோசலைக்காம் நினக்கு ஒன்று வேண்டின் கோசலை உதவி செய்தால்தான்” என்கிறாள் கூனி! முடிந்தது! விழுந்து விட்டாள் கைகேயி! அப்படியானால் என்ன நினைக்கிறீர்கள் நீங்கள்? ஆட்சியில் யார் அமர்கிறார்களோ அவர்களுக்கே உடைமை ஏகபோகமாகி மற்றவர்களுக்கு மற்றவர்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லை; பாதுகாப்பில்லை என்ற பயம் ஏற்பட்டுவிடுகிறது. அந்தப் பயத்தினால் கைகேயி விழுகிறாள். இன்றைக்கு என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது? அதேதான்! அதேதான்! அதேதான்! ஆள்கிறவர்கள் தயவு இல்லாமல் நம்மால் ஒரு நாள் மூச்சுவிடக்கூட முடியாது போலிருக்கிறதே! உடைமை என்பது ஓர் இரும்புப்பிடி. எந்த நாட்டில் மனிதனுக்கு உத்தரவாதமும் பாதுகாப்பும் இல்லையோ அந்த நாட்டில் ஒழுக்கத்தைக் காப்பாற்ற முடியாது.

கைகேயி சிறந்த சீலமுடையவளாக இருந்தாலும் சிறந்த தியாக புத்தி உடையவளாக இருந்தாலும் உத்தரவாதமும் பாதுகாப்பும் அவளுக்கும் அவள் மகனுக்கும் இல்லையென்று சொன்னவுடன் சடசடவென்று விழுந்துவிட்டாள். அதைப் போல இந்த நாட்டில் சடசடவென்று ஒழுக்கத்தை மறந்து அதை மறந்து இதை மறந்து நாலு காசு தேடி வைத்துக்கொள்ள வேண்டாமா என்று அலைகிறார்கள். அது அவர்கள் குற்றமல்ல. நாட்டு மக்களிடத்தில் பணத்திற்குத் தரும் மதிப்பு குறைய வேண்டும். மானுடத்தின் மதிப்பு உயர்ந்து விளங்க வேண்டும். மானுடம் சிறந்து விளங்க வேண்டும். எனவேதான் மானுடம் வென்றதம்மா என்று பின்னே முடிக்கிறான் கம்பன்.

கம்பன் புரட்சிக்கரு தாங்கிய பாடல்களை நாட்டுப் படலத்தில் - நகரப்படலத்தில் பாடியிருக்கிறான். ஆனால் அது புரட்சியாக உருப்பெறவில்லை. பாடலில் குறையில்லை. நாம் மரத்துப்போனவர்கள். மின்சாரம் கூட நம்மைத் தாக்காதுபோலத் தெரிகிறதே! ஆதலாலே கம்பன் வெள்ளி விழா கொண்டாடுகிற இந்தத் தருணத்தில் கம்பனுடைய பாடல்களில் நடைமுறைச் செயற்பாட்டுக்குரியவைகளைத் தேர்ந்தெடுப்பது, அவைகளைப் பற்றியும் மக்களுக்குச் சொல்வது, நடைமுறைச் செயற்பாட்டில் கம்பனைப் புகுத்தி வழிகாட்டி நன்னெறிப்படுத்துவது, ஆகிய நிகழ்ச்சிகளையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இனி எதிர்வரும் காலத்தில் என்னுடைய வாழ்வியலோடு கம்பன் ஒட்டிக் கொண்டு வரவேண்டும். நான் கம்பனைப் புதுப்பார்வையில் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நான் மிக இளமைக் காலத்தில் திருக்குறளைப் படிக்கத் தொடங்கினேன். மிகத் தெளிவாகச் சொன்னால் கம்பன் கழகத்து நண்பர்கள் எனக்கு நண்பர்களாக ஆன பிறகுதான் நான் கம்பனைப் படிக்கத் தொடங்கினேன். நண்பர்களுக்கு அனுசரணையாக இருக்கவேண்டும் என்பதால், என்னைக் கவர்ந்தது முதலில் திருக்குறள் தான். பலகாலும் திருக்குறளைப் படித்திருக் கிறேன். நேற்றைக்கு முன்தினம் நான் படித்த திருக்குறள், இன்றைக்கு ஒரு புதுப் பொருளோடு என் முன்னால் நிற்கிறது. “நீ என்னைப் படித்தாயா? உண்மையாகப் படித்தாயா?” என்று என்னைத் திருவள்ளுவர் கேட்பது போலத் தெரிகிறது. நாள்தோறும் அவர் சொல்கிற குறளில் புதுமை தெரிகிறது. அதுபோல் கம்பன் உங்களிடத்திலே பேசவேண்டும்; உயிர்ப்புடன் பேசவேண்டும்.

ஒரு சிறந்த மாக்கவி, தெய்வமாக்கவிஞன், ஒரு புதிய நாட்டைப்பற்றி எண்ணுகிறான் “கள்வரும் காவல் செய்வாரு மில்லாத நாடு” என்று அவனுக்கு முன் யாரும் பாடவில்லை. அவன்தான் முதன்முதலில் அப்படிப் பாடுகிறான். ‘திருடாதே’ என்று சொன்னவர்கள் உண்டு; திருடுவது பாவம் என்று சொன்னவர்கள் உண்டு. அவையெல்லாம் மிகப் பெரிய வசதி படைத்தவர்களுடைய ஒலி பெருக்கிகள்! கம்பன் தான் முதன்முதலில் - கம்பனும் பாரதியும் தான் ஒருவர் உழைப்பை எடுத்துக் கொள்கிறானே அவன்தான் முதல் திருடன் என்று சொல்லுகின்றனர். உழைப்பைச் சுரண்டுகிற முதல் திருடன் தோன்றிய பிறகு அடுத்தத் திருடன் தோன்றுகிறான். ஒரு திருடன் அடுத்தத் திருடனைத் தோற்றுவிக்கிறான். அதைத் தான் பாவேந்தனும் “பொருளாளி திருடர்களை விளைவிக்கின்றான்” என்றான். இவ்வகையில் புரட்சியைப் பற்றிச் சிந்தனை செய்து பாருங்கள்! ஆனால் இந்த நேரத்தில் நான் இப்படிப் பேசியபிறகு, புரட்சி, சோஷலிஸம் சமவாய்ப்புச் சமுதாய அமைப்பு இவைகளையெல்லாம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலே நிலைகுலைந்து கிடக்கின்றனவே என்று நீங்கள் கேட்கலாம்! அவையெல்லாம் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படுகின்ற சோதனைகள். அந்தச் சோதனைகள் காரணமாகவே அவைகளெல்லாம் பொய்த்துப் போய்விட்டன என்று சொல்லமுடியாது. நம்முடைய வள்ளலார்கூட முதன்முதலில் சோஷலிஸத்தைப் பற்றிச் சொல்லுகிறார்.

“வல்லார்க்கும் மாட்டார்க்கும் வாய்ப்பளிக்கும் வாய்ப்பே

என்று பாடுகின்றார்.

வாய்ப்பு என்பது Oppurtunity. சோஷலிஸ சமுதாயம் என்பது வீடும் துணியும் கொடுப்பது அல்ல. ஒருவனுக்கு பொருள் ஈட்டிக் கொள்வதற்குரிய உரிமைகளை வாய்ப்புகளை உண்டாக்குவது. ஒருவன் கைகளுக்கு வேலை செய்ய உரிமையைக் கொடுப்பது. அவனுடைய படைப்பில் உண்டான பொருள்களை அவனே அனுபவிப்பதற்கு உரிய உரிமையைக் கொடுப்பது அல்லது நாட்டுக்கு அர்ப்பணிக்கின்ற உரிமையைக் கொடுப்பது. சுதந்திரம் என்பதே எப்பொழுது சுதந்திரமாக இருக்கும்? கம்பன் அதைத்தான் எடுத்துச் சொல்கிறான். சுதந்திரம் என்பது என்ன? இன்னொருவனுடைய சுதந்திரத்திற்கு நீ ஒப்புரிமை கொடுத்தால்தான் உன்னுடைய சுதந்திரம் பாதுகாக்கப்படும். அதுதான் புரட்சியின் தடம். அந்தத் தடத்தை இனம் கண்டு கொள்ளுங்கள்.

கம்பன் புகழ் பற்றியும் புரட்சி பற்றியும் சிந்திப்பதற்கு வாய்ப்பளித்த கம்பன் கழகத்தார்க்கு மிக மிக நன்றி!

கம்பனுடைய நாட்டுப்படலப் பாடல்களை நகரப்படலப் பாடல்களை நான் எப்பொழுதும் ‘உடோப்பியா’ என்று எண்ணியதில்லை. அவை உயிர்ப்புள்ள பாடல்கள். கம்பன் ஒரு புதிய சமுதாயத்தைப் பற்றி எண்ணியிருக்கிறான். ஆனால் வழக்கம்போல நாம் பதவுரை, பொழிப்புரையிலேயே நீண்டகாலம் சென்று விட்டதால் கம்பனுடைய ஆன்மாவை கண்டுபிடிக்காமலேயே விட்டு விட்டோம். இன்றுதான் கம்பனுடைய ஆன்ம தரிசனத்தை நானும் பார்க்கிறேன்! அனுபவிக்கிறேன்! உங்களுக்கும் காட்டியிருக்கிறேன்!

நன்றி! பாராட்டு! வாழ்த்துக்கள்!