குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/கம்பன் கண்ட பொதுமைச் சமுதாயம்

விக்கிமூலம் இலிருந்து







18


கம்பன் கண்ட பொதுமைச் சமுதாயம்


கம்பன், காப்பியம் செய்ய எடுத்துக் கொண்டது பழைய வரலாறு. ஆனால் கம்பன் புதுமையும், பொதுமையும் விரும்பிய கவிஞன், கம்பனுக்கு முன் தோன்றிய இலக்கியமெல்லாம் உடைமைச் சமுதாயத்திற்கு அரண் செய்தவைகளேயாம். மனித உலகத்தில் முதன் முதலாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் உடைமைச் சமுதாயத்திற்கு எதிரான கருத்தை மாமுனிவர் மார்க்சு காண்கிறார். ஆனால் கம்பன் மார்க்சுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சிந்திக்கத் தொடங்கிவிட்டான். முடியுடைய அரசைப் பற்றிக் காப்பியம் செய்யும் கம்பன், உடைமைச் சமுதாயத்திற்கு எதிராகவும் சிந்தித்திருக்கிறான். இது கம்பனிடத்திலிருந்த துணிவைக் காட்டுகிறது. காப்பியம் முழுவதிலும் கம்பன் பல சமுதாய மாற்றங்களைக் கோடிட்டுக் காட்டுகிறான். கண்ணை மூடிக்கொண்டு அவன் அயோத்தியைப் போற்றிடவுமில்லை; இலங்கையை இகழ்ந்து விடவுமில்லை. இன்று எல்லாத் துறையிலும் சமூகம் வளர்ந்திருக்கிறது. ஆனாலும் தகுதிகளுக்கு ஏற்பப் பாராட்டு-ஆய்வு என்ற மனப்போக்கு இன்னமும் வளர்ந்த பாடில்லை. ஆட்டு மந்தைகளைப் போலக் குருட்டுத்தனமாக, வாழ்த்துதல்-வசைபாடுதல் இன்று நடைபெறுகிறது. ஆனால் கம்பன், நிறுத்துப் பேசுகிறான். இராமனின் சிறப்பைப் பாடுவதற்காகக் காவியம் செய்தானாயினும் இராவணனின் ஆட்சிச் சிறப்பைப் புகழ மறந்தானில்லை, அதுபோலத் தான் முடியுடைய அரசுகளைப் பாடிய அவன், அரசேயில்லாததனி உடைமையே இல்லாத ஒரு பொதுவுடைமைச் சமுதாயத்தைப் பற்றியும் என்ணுகிறான்.

கம்பனின் பொதுவுடைமைக் கருத்து வெறும் “உடோப்பியா” அல்லது கற்பனை என்பர் சிலர். இது. மார்க்சீய பக்தியில் விளையும் கருத்து. கம்பனை விட மார்க்ஸ் பொதுவுடைமைச் சமுதாயத்தை எப்படி அமைப்பது என்ற வகையில் தெளிவு கண்டுள்ளார் என்பது உண்மை. ஆனால் கம்பனுக்குப் பின் இருந்த காலம் மார்க்சுக்குத் துணையாக இருந்தது. கம்பன் விரிவாக வழிமுறைகள் சொல்லாமையின் காரணமாக கம்பனின் கருத்து கற்பனையாகி விடாது. கம்பனின் கருத்து முற்றாக உண்மை. கம்பன், தனியுடைமைச் சமுதாயத்தின் தீமைகளையும் சொல்கிறான். தனி உடைமைச் சமுதாயத்தில் வள்ளல்களிருப்பார்கள். எங்கு வள்ளல்கள் இருக்கிறார்களோ அங்கு வறுமையாளர்களும் இருப்பார்கள். ஒருவர் உழைப்பின் செல்வத்தை முறைகேடாக உரிமைப்படுத்திக் கொண்டு வறுமையைப் படைத்துப் பின் வறுமையை மாற்றும் வள்ளல்களாகவும் காட்சியளிப்பர். இந்தத் தந்திரத்தைக் கம்பன் தோலுரித்துக் காட்டுகிறான்.

“வண்மை இல்லை ஓர் வறுமையின்மையால்”

என்பது கம்பன் வாக்கு.

அடுத்து இன்று நாட்டை அலைக்கழிப்பன களவு, காவல் என்பன. இன்று காவல்துறை வளர்ந்து கொண்டே வருகிறது. காவலுக்குரிய கருவிகளும் பல்கிப் பெருகி வளர்ந்து கொண்டிருக்கின்றன. இன்று செல்வத்தை ஈட்டும் முயற்சியை விட, அதைக் காக்கும் முயற்சி அருமைப் பாடுடையதாகி விட்டது. ஏன் இந்த அவலம்? களவு முதலில் தோன்றியதா? காவல் முதலில் தோன்றியதா? கள்வர் யார்? பாரதி “பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்” என்று சொன்னபடி பிறர் பங்கைத் திருடுகிறவர்கள் கள்வர்கள். இத்தகைய திருடர்கள் இல்லாத நாட்டில் காவல்காரர்கள் ஏன்? இதனைக்

“கள்வர் இல்லாமைப் பொருள் காவலும் இல்லை”

என்று கம்பன் பாடுகின்றான். கம்பன் பார்வையில் கள்வர் என்பவர் திருடுபவர் மட்டுமல்லர்; பிறர் பங்கைச் சுரண்டுபவர்களும் சேர்ந்தவரேயாம்.

கம்பன் கண்ட நாட்டில் தனியுடைமையர்கள் இல்லை. எங்குத் தனி உடைமைச் சமுதாயம் இல்லையோ அங்கு இல்லாமையும் இல்லை. இதுவே பொதுவுடைமைச் சமுதாயத்தின் அமைப்பு, கம்பன்.

“இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை”

என்று ஐயத்திற்கிடமின்றிக் கூறுகின்றான்.

இன்றும் நம்முடைய நாட்டில் சிலர், பொதுவுடைமைச் சமுதாயம் என்றால் ஏழ்மையைப் பங்குபோட்டுக் கொள்ளுதல் என்று கேலியாகக் கூறுவர். இதற்கும் கம்பன் அன்றே விடை சொல்கிறான். கம்பனின் பொதுவுடைமைச் சமுதாயத்தில் செல்வம் பெருகும். அச்செல்வம் சமநிலையில் எல்லாருக்கும் கிடைக்கும் என்பதை

“எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை”

என்று பாடுகின்றான்.

கம்பன் ஒரு சிறந்த மானுடக் கவிஞன். மானுடத்தைப் பற்றிப் பாடிய கவிஞன். பாரதி, “கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்” என்று போற்றுவான். மானுடச் சாதியினைத் தொடர்ந்து வருத்திவரும் வறுமையை மாற்றப் பொதுவுடைமைச் சமுதாயத்தைக் காண்பதே தீர்வு என்ற முடிவுக்கு வந்துவிட்டான். ஆதலால் சோழப் பேரரசு இருந்த காலத்தில் வாழ்ந்த கம்பன், நிலவுடைமைச் சமுதாயம் கொழுத்து வாழ்ந்திருந்த காலத்தில் தனியுடைமைச் சமுதாய நீக்கத்திற்கும், பொதுவுடைமைச் சமுதாயக் கால்கோளுக்கும் காப்பியம் இயற்றினான். கம்பனின் பொதுவுடைமைச் சமுதாயம் மலர்க!

"வண்ணம் இல்லை ஓர் வறுமை இன்மையால்,
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை பல்கேள்வி மேவலால்'

(நாட்டுப்....53)

"தெள்வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும்
வள்வார் முரசம் அதிர்மா நகர் வாழும் மக்கள்
கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ"

(நகரப்.....73)

'கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் கல்விமுற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லார் அல்லாரும் இல்லை;
எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ"

(நகரப்...74)