உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6/பாரதியின் சக்திவழிபாடு

விக்கிமூலம் இலிருந்து







6


பாரதியின் சக்தி வழிபாடு


பாரதி, அடிமையாகப் பிறந்தவன்; அடிமையாக வாழ்ந்தவன்; அடிமையாகவே மறைந்தவன். ஆனால் பாரதிக்கும் மற்றைப் பெரும்பான்மையோருக்கும் ஒரு வேற்றுமை இருந்தது. பாரதி, அடிமையாக இருப்பதற்கு வருந்தினான்; அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேட்கை கொண்டான். இல்லை. பாரதியின் ஆன்மா அடிமைத்தளத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டது! பாரதி, அடிமைத் தளத்தில் முடங்கி கிடக்கும் நாட்டு மக்களை எழுச்சியுறச் செய்ய வேண்டுமென எண்ணினான். எழுச்சிக்கும் ஏற்றத்திற்கும் அடிப்படை ஆற்றல் அதாவது சக்தி. எனவே, ஆற்றலை வழங்கும் சக்தி வழிபாட்டைப் பாரதி விரும்பினான்; செய்தான் சக்தியைப் பெற்றான். அவன் மூலம் இந்த நாடும் சக்தியைப் பெற்றது; நாடும் விடுதலை பெற்றது.

வழிபாடு என்பது சடங்குகள் மட்டுமல்ல. அஃது ஓர் உயிரியல் முயற்சி. தாழ்ந்து கிடக்கும் உயிர் உயர்ந்து விளங்க வேண்டுமென்ற வேட்கையில் எல்லையற்ற பரம்பொருளைத் துணையாக நாடிப்பெறும் முயற்சியே வழிபாடு, கடவுளை முன்னிட்டுச் செய்யப் பெற்றாலும் வழிபாட்டின் பயன், உயிர்களுக்கேயாம். எல்லையற்ற பரம்பொருளின் ஆற்றலை சக்தி என்று கூறுவது தமிழர் மரபு. எல்லையற்ற பரம்பொருளுக்குச் சிவம் என்ற பெயரைத் தமிழர்கள் சூட்டினர். சிவத்தின் சக்தி அம்மை, நெருப்புக்குச் சூடுபோல் சிவத்திற்குச் சக்தி, இன்றைய அறிவியல் உலகத்தில் பொருளையும் (Matter) பொருளின் ஆற்றலையும் (Energy) தனியே பகுத்துக் காணும் மரபு வளர்ந்திருக்கிறது. இம் முறையில்தான் பண்டைத் தமிழர்கள் சிவத்தைப் பொருளாகவும் அம்மையைப் பொருளின் ஆற்றலாகவும் கண்டு போற்றினர்; வழிபட்டனர். அம்மை வழிபாடு ஆற்றலை வழங்கும். ஆற்றல் நிறைந்த மனித சமுதாயம் நல்லனவற்றைப் படைக்கும் ஆற்றலுடையதாகவும், தீயனவற்றை அழிக்கும் ஆற்றலுடையதாகவும் விளங்கும்.

வாழ்க்கையென்பது நொய்மையுடையதன்று. ஆற்றல் மிக்குடையதாக அமைய வேண்டும். செத்து மடிவது வாழ்க்கையின் நோக்கமன்று. வாழ்க்கை, ஆக்கத்தின் பாற்பட்டதாக அமைய வேண்டும். வாழ்க்கை பொய்யன்று; புழுக்கூடுமன்று. துன்பச்சுமையுமன்று. வாழ்க்கை அருமையுடையது; ஆற்றலுடையது. இசை போன்ற இன்ப அமைப்பு உடையது. வாழ்க்கை அறிவுத் தன்மையுடையது. உயிர்க்கு இயற்கை, அறிவுடைமை, ஐயோ, பாவம் ! சுற்றுச் சூழ்நிலைகளால் உயிர், தான் பெற்றிருக்கும் இயற்கையறிவை இழக்கிறது. உயிர் வாழ்க்கை ஆற்றல் மிக்குடையது. ஆனாலும் அவலத்தால் அழிகிறது. மானுடப் படைப்பு சோற்றுக்கும் தண்ணீருக்குமாக ஏற்பட்டதன்று. அஃதொரு புகழ்பூத்த படைப்பு. ஆம்! இறைவனின் ஐந்தொழிலுக்குத் துணையாக அமைந்த படைப்பு. படைப்பாற்றலுடையதாக அமைந்த பிறப்பு. மானுடப் பிறப்பு. ஆனால் எத்துணைபேர் இப்படி வாழ்கிறார்கள்? அவரவர் வயிற்றுக்குச் சோறு தேடுவதிலேயே இன்னும் வெற்றி பெறவில்லையே! எப்படி வெற்றி பெறமுடியும்? ஒவ்வொரு மனிதனும் அவனைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறான். மற்றவனைப் பற்றி எண்ணிப்பார்க்க மறுக்கிறான். மனிதர்களை மையமாகக் கொண்டு கட்சிகள் தோன்றி இயக்கும் கொடுமை இந்த நாட்டில்தானே நடக்கிறது! நாடு, மக்கட் சமுதாயம்-என்ற கவலையா வந்திருக்கிறது? விலங்குகளும் கூடத் தம் வயிற்றுக்கு உணவு தேடித் தின்று வாழ்ந்து விடுகின்றன. மானிட சாதியைப் போல விலங்குகளில் பட்டினிச் சாவைக் காணோம். ஆனால், நாட்டைவிட, சமுதாயத்தைவிடத் தான் பெரிது என்ற உணர்வு மானிட உலகில் வளர்ந்துவருகிறது. இதன்விளைவுதான் ஒழுக்கக் கேடுகள்! நீர்வாயுக் குண்டுகளை ஒத்த கொலைக் கருவிகள்! ஆற்றல் மிக்க வாழ்க்கை உலகத்தையே வாழ்விக்கும், மாநிலம் பயனுற வாழ வகைசெய்யும். ஆற்றலோடு வாழ்பவர்கள் நிலத்திற்குச் சுமையென ஒரு பொழுதும் வாழார் நிலத்திற்குப் பொருள் சேர்ப்பர்; புகழ் சேர்ப்பர்; நிலத்தின் பயனைக் கூட்டுவர்; இங்ஙனம் பயனுற வாழ்வதற்காகச் செய்யும் வழிபாடே ஆற்றல் வழிபாடு-சக்தி வழிபாடு!

      நல்லதோர் வீணை செய்தே-அதை
          நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
      சொல்லடி சிவசக்தி!-எனைச்
          சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்!
      வல்லமை தாராயோ!-இந்த
          மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
      சொல்லடி சிவசக்தி!-நிலச்
          சுவையென வாழ்ந்திடப் புரிகுவையோ!

என்பார் பாரதி.

உயிர் வாழ்க்கைக்குத் துணை உடல், உயிரின் உள்ளம் விரும்புகிறபடி உடல் செயற்படவேண்டும். உயிர்-உள்ளத்தின் விரைவுக்கு இசைந்தவாறு உடல் இயங்க வேண்டும். இது பாரதியின் பிரார்த்தனை! ஆம்! உடலுக்கு அடிமைப் பட்டவர்கள் ஊனைப் பெருக்கிக் கொழு கொழுவென்று வளர்த்து ஊதுடலை உயிர்க்குச் சுமையாக்கி எய்த்துக் களைத்திடச் செய்வர். ஐயகோ! அவர்களின் உயிர் சிறுத்துப் போய் உடலுக்கு அடங்கி நடப்பர்; உடற்பொறிகளின் மீது உயிரறிவு ஆணை செலுத்தாது; பொறிகள் உயிரை ஆட்டிப் படைக்கும். முடிவு, நோய்க்கு விருந்து! இகழ்வின் சின்னம் ! நிலத்திற்குச் சுமை! ஆதலால் பாரதி, அடிக்கப்படும் பந்து விரைந்து எழுதல் போல, உள்ளத்திற்கு இசைந்தவாறு இயங்கும் உடல் வேண்டுகிறார்.

மனம்! - அது ஒரு புதிர். அதை தன்முறையில் பழக்கினால் அதற்கு இணையான துணை வெறொன்றில்லை. ஆனால், இயல்பில் மனம் ஆசைப்படும். ஆசையென்பது நோக்கம் இல்லாதது; நிர்வாணமான துய்த்தல் வழிப்பட்டது. தன்னைப் பற்றியே வட்டமிடும் உணர்வுக்கு ஆசையென்று பெயர். இத்தகு மனம் உயிரை அலைக்கழிக்கும். ஆதலால், பாரதி ஆசையற்ற மனம் கேட்கிறார். உயிர், நாள்தோறும் புதிய புதிய உணர்வுகளால் ஒளிபெற்றுத் திகழவேண்டும். பழைய பஞ்சாங்கத்தையே சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது.

     "..........நித்தம்
     நலமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்"

என்பார் பாரதி.

துன்பங்கள் இயற்கை. அவை மிகுதியும் உடலைச் சார்ந்தவை. உடல் சுடப்படுவதால் உயிர்க்குத் தீங்கு வரப் போவதில்லை. அதுவும் ஆற்றல் மிக்க அன்னையைப் பாடிக் களித்துப் பரவிடும் உயிர்க்கு எம்மட்டு? என்ன செய்யும்? அறிவு வேண்டும்; அந்த அறிவும் உறுதியானதாக இருக்க வேண்டும்; மானிட வரலாற்றில் உறுதியானதாக இருக்க வேண்டும். மானிட வரலாற்றில் அறிவில்லாமல் கெட்டவர்கள் மிகக்குறைவு. ஆனால் அறிவு பெற்றிருந்தும் அதில் உறுதியும் கடைப்பிடிப்பு இல்லாமல் கெட்டவர்களே மிகுதி. நல்லது என்று தெரிந்து தெளிந்த ஒன்றை உறுதியாகக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். இவையெல்லாம் ஆற்றலை வழிபடுவோரின் அடையாளங்கள்; குணங்கள்; ஒழுக்கங்கள் இதனை,

      விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
          வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்;
      நசையறு மனங்கேட்டேன்; - நித்தம்
          நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்;
      தசையினைத் தீசுடினும்-சிவ
          சக்தியைப் பாடுதல் அகங்கேட்டேன்!
      அசைவறு மதிகேட்டேன்; - இவை
          அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

என்று பாரதி பாடுகின்றார்.

இன்றைய தமிழகத்தின் நிலை இரங்கத்தக்கது. இன்றைய தமிழகத்தில் வாழ்வோர் சிலரே பிழைப்பு நடத்துவோர் பலர். இந்தச் சூழ்நிலையில் பாரதியின் அடிச்சுவட்டில் ஆற்றலை - அன்னை பராசக்தியை வழிபட்டுப் பாரதி பெற்ற திறன்களைப் பெற்று மாநிலம் பயனுற வாழ்தல்; இன்று காலம் விதித்துள்ள கட்டளை.