குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/திருவாசகத்தில் சமுதாய நோக்கு

விக்கிமூலம் இலிருந்து

4
திருவாசகத்தில் சமுதாய நோக்கு

மாணிக்கவாசகர் ஞானக்கதிரவனாய் நாட்டில் நடமாடியவர். சேற்றில் கிடக்கும் செந்தாமரை போல மானிட குலத்தில் பிறந்து நடமாடியவர். சேற்றின் குணம் செந்தாமரையில் இல்லை. சேற்றின் மணம் செந்தாமரையில் இல்லை. செந்தாமரையின் குணமும் மணமும் சேற்றிலும் இல்லை. ஆனால் சேற்றிற்கும் செந்தாமரைக்கும் இடையிலுள்ள உறவை யார்தான் மறக்கமுடியும், ஏன், சேற்றின் மணத்தைத்தானே செந்தாமரை ஏற்று நறுமணமாக மாற்றி வையகத்திற்கு வழங்குகிறது! சேற்றுக்கும் செந்தாமரையால் பெருமை உண்டு. செந்தாமரையின் தோற்றத்தால்-வளர்ச்சியால் சேறு தன்னிலை தாழாமல் வாழ்கிறது. சேற்றினின்றும் விலகினால்தான் செந்தாமரை என்பது இல்லை. சேற்றிற்குள் கால் பாவி நின்றாலும் செந்தாமரை செந்தாமரைதான்! மானிட குலத்தில் பிறந்து நாட்டின் அமைச்சராகி, ஞானாசிரியராக விளங்கிய மாணிக்கவாசகர் மானிட குலத்தின் உணர்வுகளில் கால் பாவி நின்றார். அவற்றை அவர் புறக்கணிக்கவில்லை. அவர் குறைகளைக் கடந்தவராக விளங்கினாலும் மானிட குலத்தின் குறைகளை நினைந்து மாற்றத்திற்காகப் பாடுகிறார்; இடித்துரைத்து வழி நடத்துகிறார்.

மனித சமுதாயம் தொன்மைக் காலத்தில் தோன்றிய நாட்டிற்கேற்ப மொழியால், வாழ்க்கை முறையால் மாறுபட்டிருந்திருக்கும். ஆனாலும் மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு எதிரான வேற்றுமைகள் - முரண்பாடுகள் இடம் பெறவில்லை. அதன் காரணமாக மனித சமுதாயத்தின் இடையே பகை இல்லை; துன்பமில்லை. இன்ப அமைதி தழுவிய வாழ்க்கை நிலவியது. வரலாற்றுப் போக்கில் தன்னயப்பு மிகுந்ததாலும் வலியோர் மெலியோரை வஞ்சித்து வாழத் தலைப்பட்டதாலும் சமயம், வாழ்க்கையாக இல்லாமல் நிறுவனங்களாக மாறிவிட்டதாலும், அரசு வாழ்வோரையே சார்ந்து இயங்கியதனாலும் இயற்கையில் அமைந்த மனித சமுதாய மாறுபாடுகள் நியதிகளாக்கப்பட்டன; நெறி முறைகளாக்கப்பட்டன. காலப்போக்கில் இந்த நியதிகள் - நெறிமுறைகள் பிறப்பின் வழியது என்றும் வலியுறுத்தப்பட்டன. இந்த தவறான- நெறியல்லா நெறிமுறைகளால் கற்பிக்கப்பட்டவையே சாதிமுறைகள்.

மனித குலத்தில் சாதிப்பிரிவினைகள் எல்லா வகையாலும் நியாயமில்லாதவை. இச்சாதிப் பிரிவினையால் மனிதகுல வரலாற்றில் விளைந்தது தீமையே! அழுக்காறு, அவா, வெகுளி என்று வள்ளுவம் வரிசைப் படுத்தும் தீமைகள். சாதிப் பிரிவினைகளும், அவ்வழி பொருளியல் ஏற்றத்தாழ்வுகளும் தோன்றிய பிறகு தோன்றிய தீமைகளேயாம். இத்தீமைகளின் காரணமாக மனிதகுலம் இணைந்து வாழ்வதற்குப் பதிலாகத் தம்முள் முரணிப் போராடித் தம் ஆற்றலை இழந்து வந்திருக்கிறது; வையகத்தின் வளத்தையும் அழித்திருக்கிறது. குலவேறுபாடுகளும் இயற்கையல்ல. ஒழுக்கத்தின் பாற்பட்டனவே. ஒழுக்கம் வழி வழியாக வரக்கூடியது. ஆனாலும் வழிதப்பக் கூடாதென்பது நியதியல்ல. அதனால் குலமும் கூட நல்லவர், கெட்டவர் என்று பகுத்துக் காணப் பயன்படுமேயன்றி, மனித குலத்தை வேறுபடுத்திப் பிரிப்பதற்குப் பயன்படக் கூடாது. மனிதன் எவ்வித உணர்வுமின்றிப் பிறக்கிறான். பின் வையகத்தில் படிப்படியாகத் தேறி வளர்ந்து ஒழுக்க நெறிகளை ஏற்றுக் கொள்கிறான். இதுதான் இயற்கை. ஆனால் பிறப்பிலேயே கீழ்ச்சாதி, மேற்சாதி என்று மானுட சாதியைப் பிரிப்பது ஆற்று வெள்ளத்தில்-தம்மை அகப்பட்டாரை விழுங்கும் சுழியை ஒத்தது, என்று மாணிக்கவாசகர் உருவகம் செய்து கூறுகின்றார்.

ஆற்றிடைச் சுழியில் அகப்பட்டவர் தடுமாறுவதைப் போலத்தான் சாதிகுலம் பிறப்பு என்னும் வேறுபாட்டில் சிக்கித் தவிக்கும் சமுதாயமும் தடுமாறும். சாதி வேற்றுமைகளின் காரணமாகப் பகை வளர்ந்தமையால் அணைத்து ஆதரவு தரவும் யாரும் இல்லை. ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழவேண்டிய சமுதாய அமைப்பு ஆதரவுகளை இழந்து அல்லற்பட்டு உழல்கிறது. இன்று எங்கு பார்த்தாலும் சாதிகளைக் காப்பாற்றும் போராட்டங்கள்! சாதிகள் வழிக் கலகங்கள்! திருக்கோயில் திருவிழாவிலிருந்து தேர்தல் வரை சாதி வெறி இடம் கொள்கிறது. ஆண்டவன் வாழும் ஆலயத்திலிருந்து அந்தணர்கள் வாழும் திருமடம் வரை சாதி முறைகளே இடம் பெற்றுள்ளன. இதனால் உயர் நெறிகள் பற்றி உபதேசங்கள் பெருகினாலும் உயர் நெறிகள் இடம் பெறவில்லை. மானிட சமுதாயத்தை என்புறுக்கி நோயென அழித்து வரும் இந்தச் சாதிப்பேயிலிருந்து சமுதாயத்தை மீட்பதுதான் மாணிக்கவாசகர் தந்த திருவாசக நெறி.

“சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யானெனதென துரைமாய்த்துக்
கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே!”

என்பது மணிமொழி.

இரண்டாவதாக மானிட சமுதாயத்தை வருத்தும் துன்பம் வறுமை. மாணிக்கவாசகர் தம் அளவில் மாசிலாத் துறவி, “பொன் வேண்டேன்; பொருள் வேண்டேன்; புகழ் வேண்டேன்; என்று பாடுகின்றார். அங்ஙனம் பாடியதால் மற்றவர்களுடைய வாழ்க்கையையும் அதே அளவுகோலைக் கொண்டு அவர் அளக்க விரும்பவில்லை. மற்றவர்கள் வறுமையின்றி வாழவேண்டுமென்று விரும்புகின்றார். வறுமையைக் கடக்காத மனிதர் வளமான ஞான வாழ்க்கைக்கு வருதல் இயலாது என்பது சமயத் தத்துவம் கூறும் உண்மை. ஆதலால் மாணிக்கவாசகர் ‘தொல்விடம்’ என்று வறுமையை வருணிக்கின்றார். இந்த நல்குரவாம் தொல்லிடத்திருந்து மானிட சமுதாயம் தப்பிப் பிழைத்துக் கரையேற வேண்டும் என்று திருவுளம் பற்றி அருளிச் செய்துள்ளார். மாணிக்கவாசகர் பிறந்த நாட்டில் நூற்றுக்கு அறுபது விழுக்காட்டு மக்கள் வறுமை விளிம்புக் கோட்டுக்குள் வாழ்கிறார்கள். அவர்கள் துய்த்து அறியாது காமுற்று அலையும் உணர்வுகள் பலப்பல. மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் இந்த நாடு நடைபயில வேண்டுமானால் வறுமை நீக்கத்திற்குரிய பணிகளைச் செய்து, அவர்கள் வறுமைத் துன்பத்திலிருந்து பிழைத்துப் பெருநெறி வந்த சேர உரிய பணிகளை மேற்கொள்ளப் பெற வேண்டும்.

மாணிக்கவாசகர் நாட்டில் நடமாடியவர்; நாட்டாரின் குறைநிறைகளை உணர்ந்தவர். நாட்டு மக்களிடையே அன்று முதல் இன்றுவரை நிகழும் ஒரு குறைபாட்டை மாணிக்கவாசகர் மிகுந்த வேதனையுடன் குறிப்பிடுகின்றார். ஊரில் உள்ளோர் அனைவரும் பேசுகிறார்கள். வாய் பெற்றோர் எல்லாரும் பேசுகிறார்கள். என்ன பேசுகிறார்கள்? “பேசிற்றாம் ஈசனே எந்தாய் எந்தை” என்று மாணிக்கவாசகர் சொன்னபடியா பேசுகிறார்கள்? இல்லை அவர்களைப் பற்றியாவது-தமக்குத் தெரிந்தது தெரியாததைப் பற்றியாவது பேசுகிறார்களா? அதுவும் இல்லை. அவர்கள் மனத்தில் தோன்றுகின்றனவற்றை யெல்லாம் பேசுகிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சி சைத்தானாக இருந்தால் அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் சைத்தான் என்றே பேசுவார்கள். மற்றவர்களைப் பற்றி அறியாத செய்திகளை பேசுகிறோமே என்றும் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் வருந்துவார்களே என்றும் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டால் செத்துப் போகலாம் என்ற அளவு துயரத்தின் கொடுமுடிக்கு மாணிக்கவாசகர் செல்கிறார். ஆம்! அவருடைய வாழ்க்கையில் அரசை நன்னெறியில் நிறுத்துவதற்காகச் செய்த பணிகள் அன்று நீதிக்கு முரணானவை என்று எடுத்துக் கொள்ளப் பெற்றன. அன்றும் மாணிக்கவாசகர் என்ன நோக்கத்தில், ஏன் செய்தார்? என்று கேட்காமலேயே அரசும் அரசைச் சார்ந்த மக்களும் அவரைத் துன்புறுத்தினர். இன்றும் பகுத்தறிவு வாதிகள் அங்ஙனமே குற்றம் சுமத்துகின்றனர். ஒரு நாட்டின் அரசு போருக்கும் களியாட்டத்திற்கும் பயன்படும் குதிரைகளை வாங்குவதைவிட மக்களிடையே கலையை வளர்த்து, அருளியல் வழி இன்ப அமைதி தழுவிய வாழ்க்கையைப் படைத்தல் நன்று என்ற நோக்கத்தோடு மாணிக்கவாசகர் செய்தார். அவர் மனத்திலிருந்ததை அன்று புரிந்து கொண்டார் யார்? இன்றும் நாத்திகம் பேசினாலும், அவர்கள் நமக்கு அயலார்கள் அல்லர்; நம்மோடு கூடப்பிறந்த வாழும் ஆப்தமானவர்கள்; அவர்களோடு முரணி நிற்றல் அறநெறியுமன்று; அருள் நெறியுமன்று; கருத்து வழிப்பரிமாற்றங்கள் மன அழுத்தங்களைக் குறைக்கும்; பகையைத் தவிர்க்கும் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப் பெறும் செயல் முறைகளை, அச்செயல்முறையின் நோக்கங்களை அறிந்து பாராட்டுவோர் எத்தனை பேர்? பழி தூற்றுவோரே மிகுதி என்ற நடைமுறை அனுபவம் திருவாசகத்திற்கு ஒத்ததாக இருக்கிறது.

உத்தமன அத்தன் உடையான் அடியே நினைந்துருகி
மத்த மனத்தொடு மாவிவுன் என்ன மனநினைவில்

ஒத்தன ஒத்தன சொல்விட ஊருர் திரிந்தெவரும்
தத்தம் மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல் சாதுவே!

என்பது மணிமொழி. நம் மனங்கொண்டதே மாளிகை என்று பேசுவது கூடாது; வழக்கிடுதல் தகாது. மற்றவர் மனமறிந்து பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். அதுவே மாணிக்கவாசகர் காட்டிய வாழ்க்கை நெறி.

மாணிக்கவாசகர் கடவுளையே மண்ணில் நடமாட வைத்தவர். மாணிக்கவாசகருடைய தூய அன்பை, அவர்தம் அன்பில் நனைந்து தோன்றிய மணி வார்த்தைகளைக் கேட்டு மகிழ, பெருமான் மண்ணில் நடந்தான்; கொற்றாளாக மண் சுமந்தான்; புண்ணும் சுமந்தான். இந்த வரலாற்று நிகழ்வு நம் இதயத்தைத் தொடுகிறது. கடவுள் வாழ்த்துப் பொருளல்ல; வாழ்வும் பொருள் என்பது திருவாசகத் தத்துவம். ‘வாழ்முதல்’ என்பார் மாணிக்கவாசகர். பெருமான் இல்லங்கள் தோறும் எழுந்தருளுவான், ஆண்டவனாக அல்ல, சேவகனாக! என்னே விந்தை! ஆண்டவனையே சேவகனாக இல்லங்கள் தோறும் எழுந்தருளுச் செய்த மாணிக்கவாசகர் சமுதாயத் தொண்டு நெறியை நினைவூட்டுகிறார். இல்லங்கள் தோறும் சென்று துன்பம் துடைத்துச் சமுதாயத்தை வாழ்வித்தல் இறை நெறி என்று மாணிக்கவாசகர் பாடுகின்றார். இன்று நம் சமுதாயம் இல்லங்களை நோக்கி வரும் சமயத்தைப் பெறமுடியாமல் அலமருகின்றது. ஏன் கோயிலை நாடி வந்தாலும் இன்று அணைப்பாரைக் காணோம்! மாணிக்கவாசகர் நெறி இல்லங்கள் தோறும் சென்று துன்பம் துடைக்கும் தூய தொண்டு நெறியேயாகும். இந்நெறி நிற்பதே மாணிக்கவாசகர் வழிபாடு!