உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தை இலக்கியம்/மக்கள்

விக்கிமூலம் இலிருந்து

மக்கள்





37.தாத்தா ... 81
38.பாட்டி ... 82
39.பாட்டி ... 83
40.தம்பி பையன் ... 84
41.தம்பி ... 86
42.வளையற்காரர் ... 87
43.தட்டார் ... 89
44.குறுத்தி ... 91
45.முன்னோர் ... 93
37

டியை ஊன்றி நடப்பார்;
தாடை ஒட்டிக் கிடப்பார்;
உடல் இளைத்து நரைத்தே
சொள் ஒழுகச் சிரிப்பார். 1

இருமிக் கொண்டே இருப்பார்
என்னை அம்மாள் அடித்தால்
அருகில் வந்து தடுப்பார்;
அணைத்து முத்தம் கொடுப்பர் 2

பாட்டுச் சொல்லிக் கொடுப்பார்;
பாடம் சொல்லிக் கொடுப்பார்
வீட்டில் என்றன் உள்ளம்
விரும்பும் நல்ல தாத்தா! 3

38

பாக்கி டிப்பாள் பாட்டி!
பாய்மேல் காலை நீட்டி,
கையும் தலையும் ஆட்டி- 1

வெற்றிலை பாக்கை எடுப்பாள்;
சுண்ணாம்பு வைத்தும் மடிப்பாள்;
மெல்லக் கல்லால் இடிப்பாள்!2
 
இடித்த வெற்றிலை எடுப்பாள்
இட்டு வாயில் களிப்பாள்
எச்சில் துப்பித் துடைப்பாள்! 3

பல்லில் லாத வாயும்
பாக்கு வெற்றிலை மேயும்!
கல்லின் இடிப்பும் ஓயும்! 4

பாட்டி - II


39

பாட்டி பாப்பா ஆனாள்!
பாட்டி பாப்பா ஆனாள்!

நீட்டி விட்ட காலால்,
நில்லா தாடும் தலையால்,
கோட்ட மான முதுகால்,
குழறிப் பேசும் பேச்சால்- பாட்டி

சொள்ளை ஒழுக விட்டுச்
சோம்பித் துரங்கி விழுந்து,
பிள்ளை போலத் தன்னுள்
ஏதோ பிதற்றிக் கொண்டு- பாட்டி

பழுத்த பாட்டி கண்டு
பரிக சிக்க வேண்டாம்;
பழுத்த ஓலை எல்லாம்
பச்சை ஓலை பாப்பா!- பாட்டி

40

ம்பிப் பையன் சிறுபையன்!
தாமரை மலரைப் போற்கையன்!
தம்பிப் பையன் சிறுபையன்!
தங்கக் கட்டி போல்மெய்யன்! 1

கண்மலர் காட்டி அழைத்திடுவான்!
கைம்மலர் நீட்டி அழைத்திடுவான்!
உண்ணும் போழ்து முதுகேறி
உலுக்கிக் குலுக்கி ஆட்டிடுவான்! 2

கோலை எடுத்தே அடித்திடுவான்!
கோழி விரட்டிச் சிரித்திடுவான்!
நூலை எடுத்துக் கிழித்திடுவான்!
நுனிப்புல் காட்டிப் பழித்திடுவான்! 3

அக்காள் சடையைப் பிடித்திழுப்பான்!
அம்மா உடையைக் கடித்திழுப்பான்!
சொக்காய் போட்டு நடைகாட்டித்
துள்ளித் துள்ளிக் குதித்திடுவான்! 4

வாயில் ஓடிக் கதவடைப்பான்!
வந்தால் ஓடி வழிமறிப்பான்!
பாயில் படுத்துக் கால்தூக்கிப்
பாட்டி அணைத்துப் படுத்திருப்பான்! 5




41

ணான் போலத் தலைதூக்கி
உடலை நெளித்துப் பார்த்திடுவான்;
ஆணோ பெண்ணோ வரக்கண்டால்
கை,கால் தூக்கி அழுதிடுவான்! 1

மண்ணைச் சுவரிற் பெயர்த்திடுவான்;
வாயில் வைத்துக் குதப்பிடுவான்;
கண்ணிற் கண்ட பொருளெல்லாம்
தாவித் தாவிப் பிடித்திடுவான்! 2

தஞ்சா ஆர்ச்சிறு பொம்மைபோல்
தலையை, உடலை ஆட்டிடுவான்;
பஞ்சு போன்ற செங்கையால்
பாயைத் தரையை அடித்திடுவான்! 3

நாயைக் கண்டால் நகர்ந்திடுவான்;
சோற்றைக் கண்டால் நகர்ந்திடுவான்;
தாயைக் கண்டாற் சிரித்திடுவான்;
தலையை ஆட்டி அழைத்திடுவான் 4

கட்டை விரலைச் சுவைத்திடுவான்
காலைத் தூக்கி உதைத்திடுவான்;
பிட்டு மாவைப் பிசைவார்போல்
மண்ணை வாரிப் பிசைந்திடுவான்! 5

42

நெற்றியிற் பட்டை நாமம்;
நெடுந்தோளிற் கயிற்றாற் கோத்த
விற்புரு வத்தார்க் கேற்ற
விதவித வளையல்; சால்வை;
சுற்றிலும் காதை மூடும்
பாகையோ கிழிந்த சோமன்;
மற்றொரு தோளில் தொங்கும்
வளை,மஞ்சள் நிறைந்த பெட்டி! 1

வழியெலாம் வளையற் காரர்.
‘வளையலோ வளையல்!’ என்பார்!
விழியினாற் குளிர்மை காட்டி,
‘இந்தாங்கோ!’ எனவி ளித்துப்,
பழகிய மக்கள் போலப்
பக்கத்தில் வந்து குந்திக்
குழிவிழுங் கன்னப் பெண்கள்,
‘விலையென்ன? கூ’றென் பார்கள்! 2

கைவளை வளையற் காரர்
எடுத்திடக் களிப்பார் பெண்கள்;
கைவழி வளையை மாட்ட,
உடலெலாம் நெளித்துக் காட்டி,
மைவிழி நீரைச் சொட்ட
வருந்துவார் வளைய லெல்லாம்
கையினில் நுழைத்த பின்னர்
அவர்காட்டும் களிப்பைப் பாரீர்! 3



43

ட்டார் இவர் தட்டார்!-நாளும்
தட்டா விட்டாற் கெட்டார்!

பொட்டுச் செய்து கொடுப்பார்-இடை
போடும் நாணல் கொடுப்பார்;
தட்டு முட்டுச் சாமான்-வெள்ளித்
தடியும் செய்து கொடுப்பார்!

காது குத்த வருவார்-பெண்கள்
காலுக் கணியும் தருவார்;
மாதர் நெற்றிச் சுட்டி-தோள்
வளையம் செய்தும் தருவார்!

ஓவியரைப் போன்றார்; -கல்லை
உடைக்கும் சிற்பி போன்றார்;
பாவி யற்றி வாழும்-ஏழைப்
பாவலரைப் போன்றார்!

குற்றஞ் சொல்லு கின்றார்-’அவர்
சூது செய்வா’ ரென்று!
குற்ற மற்றார் யாரே-என்று
கூற உம்மால் ஆமோ?




44

சங்குக் கற்றை தலைய ழுத்தும்;
கையில் மொந்தை இருக்கும்;
கொசுவம் தொங்கும்; குனிந்த கத்திப்
பிடியும் எட்டிப் பார்க்கும்! 1

கூடை முறமும் கட்டிக், கூழை
வாங்கிக் குடித்துப் பிழைப்பாள்;
காடு மேடு சுற்றி, ஈச்சன்
கசங்கை வெட்டிச் சேர்ப்பாள் 2

முறத்தின் முதுகில் அகணிப் பட்டை
கோத்துக் கோத்து இழுப்பாள்;
உறவுத் தாலி மெலிந்த கழுத்தில்;
உடலில் நரம்புப் புடைப்பே! 3

மாலை கண்ட மலரைப் போல
வாடி வதங்கிச் சோர்ந்து,
காலை நீட்டி, முதுகைத் தாழ்த்திக்
கசங்கை வெட்டிப் பிளப்பாள்! 4

மூக்கு வடியும் பிள்ளை வளைந்த
முதுகில் தூங்கி விழிக்கும்;
நாக்கை நீட்டித் தலையை
யாட்டிப் பசிக்குக் கூழைக் கேட்கும்! 5

கொடுத்த கூலி வாங்கிக் கொண்டு
பழையது கொஞ்சம் கேட்பாள்!
எடுத்துவரக் கண்கள் காட்டும்
ஒளியை என்ன என்று சொல்வேன்! 6

மொந்தைக் கூழை எடுத்துப் பார்ப்பாள்;
குழந்தைக்குக் கொஞ்சம் கொடுப்பாள்;
சிந்திச் சிந்திக் குடிக்கக் கண்டு
சிரித்து முத்தம் கொடுப்பாள்! 7

அகணிப் பட்டை, கசங்குக் கற்றை ,
உகரம் போன்ற அரிவாள்,
முகம்வெ ளுத்த குழந்தை, மூளி
மொந்தை யவள் சொத்தே! 8

45

ன்னை தந்தை உன்முன்னோர்!
அவர்க்கு முன்னோர் தாய்தந்தை!
தென்னா டளித்த மூதாதையரே
செந்தமிழ் நாட்டு முன்னோர்கள்! 1

கல்வி கேள்வி வல்லோர்கள்;
கடமை தவறா நல்லோர்கள்;
செல்வம் தேடி ஈந்தோர்கள்;
செழுமை யோடு வாழ்ந்தோர்கள்! 2

அறத்தின் வழியே நின்றோர்கள்;
அல்லவை யாவும் கொன்றோர்கள்;
மறத்தின் எல்லையைக் கண்டோர்கள்;
மறிகடல் வெற்றி கொண்டோர்கள்! 3

வயலைத் திருத்தி விளைத்தோர்கள்;
மலைபடு மணியை அளித்தோர்கள்;
கயல்விற் புலியைப் பொறித்தோர்கள்;
கனக விசயரை, நெரித்தோர்கள்! 4

அரசை அமைச்சைப் படைத்தோர்கள்;
அடங்கார் மண்டை உடைத்தோர்கள்;
முரசு மூன்றும் உடையோர்கள்;
மூர்க்கப் புலியின் நடையோர்கள்!

கோட்டை கொத்தளம் அமைத்தோர்கள்;
குளிர்பூஞ் சோலை அமைத்தோர்கள்;
நாட்டுக் குயிரைக் கொடுத்தோர்கள்;
நல்லார் இணக்கம் அடுத்தோர்கள்!

மானம் உயிராய் மதித்தோர்கள்;
வாழும் வகையை விதித்தோர்கள்;
ஈனம் கண்டு கொதித்தோர்கள்;
எதிர்த்த பகையை மிதித்தோர்கள்!

காதல் வீரம் வளர்த்தோர்கள்;
காவியம் அளவிலா தளித்தோர்கள்;
சாதல் வரினும் தன்மானத்
தகைமை பேணிக் களித்தோர்கள்!