குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/இந்தியா உருவான வரலாறு
பழங்காலத்தில் இந்தியா இன்றுள்ளது போல அகண்ட இந்தியாவாக இருந்ததில்லை; இருந்திருக்க முடியாது. பலப்பல நிலப்பகுதிகளாக மொழி, இனம், மதம், அரசு இன்னபிற அடிப்படையில் பிரிந்துதான் கிடந்தன. அன்று சண்டைகள் நடந்த வண்ணமாக இருந்தன. இந்த அவலத்தை உணர்ந்து எல்லைகளைக் கடந்த அகண்ட இந்தியாவை உருவாக்கப் பலர் சிந்தித்தனர். பலர் போராடினர்.
சிற்றெல்லை தழுவிய சிந்தனைகள் தாழ்ந்தவை; நலம் செய்யாதவை. ஒரு சின்னக் குவளையில் தண்ணீரில் தூசி இருந்தால் அதை ஊற்றி விடுகிறோம். ஆனால் ஆறு, ஏரிகளில் தூசி பார்ப்பதில்லை; பார்க்க முடியாது. அதுபோல எப்போதும் விரிவான எல்லையும் பரந்த நோக்கமும் விரிந்த பார்வையும் தான் மனிதனை மனிதனாக வாழ வைக்கும், சின்னப் புத்திகள் மனிதனைக் கெடுத்து மிருகமாக்கி விடும்.
ஆதலால், அறிவை விரிவாக்கிக் கொள்ள வேண்டும். அறிவை அகண்டமாக்கிக் கொள்ள வேண்டும். நாடு, மொழி, இனம், மதம் என்ற எல்லைகளைக் கடந்து உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாட்டுப்பற்று ஆக்கப்பணிகளின் அமைவுக்காகவே தவிர, கெட்டியான எல்லை கட்டஅல்ல. காதலும் நட்பும் மனிதன் வகுத்த எல்லைகளைக் கடக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டத்தில் பூங்குன்ற நாடு என்பது ஒரு பகுதி. இந்தப் பகுதியில் சங்க காலத்தில் தமிழ் வளர்ந்தது. இந்தப் பகுதியில் மகிபாலன்பட்டி என்று இன்று அழைக்கப்பெறும் ஊர், சங்க காலத்தில் பெற்று விளங்கிய பெயர் கண்டறிய வேண்டும். இங்கு ஒரு ஜோதிடர் வாழ்ந்தார். அவருடைய தொழிற் பெயரும் நாட்டுப் பெயருமே தெரிகின்றன. அவருடைய பெயர் கணியன் பூங்குன்றன். கணியன் பூங்குன்றன் காலம் கி.பி. 200க்கு முந்திய காலம், கணியன் பூங்குன்றன் எல்லைகளைக் கடந்து வளர்ந்த மனித குலத்தையே பாடுகின்றான்.
யாதும் ஊரே யவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிதென மகிழ்ந்தென்றும் இலமே!
முனிவின் இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேரியாற்று
நீர்வழிப் படுஉம் புனைபோல் ஆருயிர்
இறைவழிப்படுஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
புறம் – 192
என்பது கணியன் பூங்குன்றன் பாட்டு.
ஆம்! எல்லா ஊர்களையும் சொந்த ஊர்களாக எண்ண வேண்டும்; எண்ணி வாழ்தல் வேண்டும். இந்த உலகில் எந்தப் பகுதியில் வாழ்பவர்களாயினும் அவர்கள் உறவினர்களேயாம். இது, 1800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிந்தனை. "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" என்ற இந்த வரி முன்னான் இந்தியப் பிரதமர் அன்னை இந்திரா காந்திக்கு மிகவும் பிடித்தமானது. அன்னை இந்திரா காந்தி ஐக்கிய நாடுகள் பேரவையில் பேசும் பொழுது "யாதும் ஊரே ! யாவரும் கேளிர்!" என்ற வரியை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று எங்குப் பார்த்தாலும் குறுகிய நிலையில் ஊர்ப்பற்றுக்களும், சாதிப்பற்றுக்களும், மதப்பற்றுக்களும், நாட்டுப் பற்றுக்களும் வளர்ந்து மனித குலத்தை என்புருக்கி நோய் போல் அழித்து வருகின்றன. நாட்டுப்பற்று, மற்ற நாடுகளுக்குத் தீமை செய்ய தூண்டுகிறது. ஆதிக்கம் செய்ய நினைப்பவர்கள் கெட்ட போர்களைத் தோற்றுவித்து வளர்க்க நாட்டுப்பற்றையே கருவியாகக் கொள்கின்றனர். இன்று நடக்கும் வளைகுடாப் போர் ஆதிபத்திய ஆசையின் காரணமாகத் தோன்றிய நாட்டுப் பற்றின் விளைவே! மொழிப்பற்று பல மொழிகளைக் கற்பதை, அறிவை விரிவாக்கிக் கொள்ளும் முயற்சியைத் தடை செய்து விடுகிறது. மதப்பற்று மனித நேயத்திற்கே உலை வைத்து, பூரணத்துவம் உள்ள கடவுளையே பின்னப்படுத்தி "இவர் தேவர் அவர் தேவர்" என்ற சண்டைகள் தோன்றக் காரணமாகிறது. சாதிப்பற்று மனிதகுல உறவை அழித்து விடுகிறது. ஆதலால், நமது இலட்சியும் ஒருலகம், ஒரு மொழி, ஒரு மதம் என்று வளர, வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்று சொன்ன கணியன் பூங்குன்றன். இந்தியாவை உருவாக்கிய கவிஞன். கணியன் பூங்குன்றன் வழித்தடத்தில் வாழ்வோமாக! எல்லா ஊர்களும் நம்முடைய ஊர்களே! அனைவரும் நம்முடைய உறவினர்களே !