பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

இப்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சேர்ந்திருக்கிற கரூர் வட்டமும் வேறு சில பகுதிகளும் பழங் காலத்தில் கொங்கு நாட்டில் சேர்ந்திருந்தன. அக் காலத்தில் கருவூர், கொங்கு நாட்டின் தலைநகரமாக இருந்தது. கொங்கு நாட்டைச் சேர்ந்திருந்த அந்தப் பகுதிகள், ஆங்கிலேய கிழக்கிந்தியக் கும்பினியார் நாடு பிடித்து அரசாளத் தொடங்கிய பிற்காலத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இணைக்கப்பட்டன.

பழங்கொங்கு நாட்டின் வடக்கெல்லை மைசூரில் பாய்கிற காவிரி ஆற்றுக்கு அப்பால் நெடுந்தூரம் பரவியிருந்தது என்று கூறினோம். இக்காலத்தில் மைசூர் இராச்சி யத்தின் தென்பகுதிகளாக இருக்கிற பல நாடுகள் அக் காலத்தில் வட கொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தன. பேர் போன புன்னாடு, கப்பிணி ஆற்றங்கரை மேல் உள்ள கிட்டுரைத் (கட்டூர்) தலைநகரமாகக் கொண்டிருந்தது. அது, சங்க காலத்தில் வட கொங்கு நாட்டை சேர்ந்திருந்தது. எருமை ஊரை அக்காலத்தில் அரசாண்டவன் எருமையூரன் என்பவன். எருமை ஊர் பிற்காலத்தில் மைசூர் என்று பெயர் பெற்றது. (எருமை—மகிஷம். எருமையூர்—மைசூர். எருமை ஊர் மைசூர் என்றாகிப் பிற்காலத்தில் கன்னட நாடு முழுவதுக்கும் பெயராக அமைந்துவிட்டது.)

இப்போதைய மைசூர் நாட்டில் உள்ள ஹளேபீடு (ஹளே = பழைய, பீடு= வீடு) அக் காலத்தில் துவரை என்று வழங்கப்பட்டது. துவரை, இக் காலத்தில் துவார சமுத்திரம் என்று பெயர் பெற்றுள்ளது. இங்கு ஒரு பெரிய ஏரியும் அதற்கு அருகிலே உள்ள மலையடிவாரத்தில் அழிந்துபோன நகரமும் உள்ளன. இந்த நகரம் சங்க நூல்களில் கூறப் படுகின்ற அரையம் என்னும் நகரமாக இருக்கக் கூடும். துவரையையும் அதற்கு அருகில் இருந்த அரையத்தையும் புலிகடிமால் என்னும் அரச பரம்பரை யரசாண்டது. மிகப் பிற்காலத்தில் மைசூரை யரசாண்ட ஹொய்சளர், பழைய