உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/எண்கூர்வாளி

விக்கிமூலம் இலிருந்து

2எண்கூர்வாளி


உலகத் தீரே! உலகத் தீரே!
அலகில் பிறக்கத்துப் பல்லுயிருள்ளும்
உள்ளஞ் சான்ற உலகத் தீரே!
நாம்வேட்டுப் பிறந்தன்றிலமே; பின்றலை
நாம்வேட் டிறந்தன்று மிலமே ஊங்கு 5
வாழ்தல் ஞான்றும் வைகறை யுவப்போர்
மாலை யழுங்கலும் மாறுகொல் அன்றே;
புள்ளும் மாவும் எள்ளுவ மாயினும்
அவையினும் ஒம்புதல் இலமே! அலமர
வைகலுந் தினையும் உய்யலு மிலமே! 10
என்கொல் இலக்குதும் வாழ்வே; இலக்கத்து
என்கொல் ஒளிர்ந்ததும் அறிவே! வானோக்கி
எண்கூர் வாளி எய்பின் அன்ன
வறிதா கின்றே வாழ்க்கை;
அரிதா மாறே அழிவறிந் துயினே! 15


பொழிப்பு:

உலகத்தவரே! உலகத்தவரே! அளவற்ற பிறப்பாகிய பல்லாயிரங் கோடி உயிரினங்களுக்குள்ளே, எண்ணுதல், தெளிதல், தேர்தல் ஆகிய முத்திறனும் நிறைவாக, மேம்பட்டு நிற்கும் உள்ளம் பொருந்திய உலகத்தவரே!

நாம் இப்பிறப்பு வேண்டி அழுந்தி விரும்பிப் பிறந்தோம் அல்லோம்; அதுபோன்றே இப்பிறப்பின் எல்லையிலும் நாம் அழுந்தி விரும்பி இவ்வுலக வாழ்வினைத்துறப்போம் அல்லோம்; இவ்விடைப்பட்ட காலத்து நமக்கு அமைந்த இவ் வாழ்க்கைப் பொழுதிலும், நாள் தொடக்கமாகிய இருள் நீங்கா முன்காலையில், வரும் பொழுதை எண்ணி அவாவி உள்ளங்களிப்பார், நாள் முடிவாகிய இருள்படி பின் பொழுதில், கடந்த அந்நாளைய நிகழ்வுகளை எண்ணி மிக வருந்துதலாகிய தொடர்ந்த போக்கிற்கு மாறுபாடு உறுவது இல்லை ஆக-

அப் படித்ததாய வாழ்வென் பொழுதிலும் பொந்தில் அடங்குவன வாகிய பறவையினங்களையும், புழையுள் ஒடுங்குவனவாகிய விலங்கினங் களையும் , அவற்றின் உள்ளம் நிறைவுற வாயாத போக்கிற்கு இழித்து நினைப்போம் எனினும், தம் நிலையினின்று தாழ்ந்து போகாத அவை போன்ற முறையிலும், நாம் நமக்கமைந்த நம் உள்ளங்களைப் பேணிக்காத்தல் செய்யாது வாளா நிற்கின்றோம். மனம் மருள நேர்கின்ற துயரம் நிறைந்த சூழலில் பட்டும், ஒவ்வொரு நாளுக்கும் தினை அளவிலேனும் நம்மை நாம் உய்வித்துக் கொண்டோம் அல்லமே!

உங்கள் வாழ்க்கையெனும் உள்ளச் செலவிற்குக் குறியாவது எது? அக் குறியீட்டு அளவில் எவ்வளவில் தேர்ந்து விளங்கியது உங்கள் அறிவு? டோக்கிற்குத் தடுப்பு அற்ற இப் பரந்து அகன்ற வானத்தில் நோக்க மிலாது, மிகவும் கூரியதாகிய அம்பு ஒன்றினை எய்தி வீணாக்குதல் போல், உங்கள் வாழ்க்கை எவ்வகை ஊதியமுமின்றிக் கழிகின்றது. இவ்விடைப்பட்ட தேர்வாகிய வாழ்வு சிறிது சிறிதாக அழிந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிவினால் தேர்ந்து, இதன் பயன்கொண்டு உய்வீர்களாயின், இவ்வாழ்க்கைச் செலவு மிக அருமையுடையது ஆகும்.

விரிப்பு:

உலகத்தீரே என்றது இவ்வுலக உருண்டையில் வாழ்ந்து கொண்டிருக் கின்ற எல்லா மாற்ற இனங்களையும் விளித்துக் கூறியது. முன் பாட்டில் உலகம் உண்டு என்ற தேற்றக் கருத்தை அடியொட்டி உண்டாகிய அவ் உலகத்து நிற்கும் மாந்தரீரே என்று விளிக்கப் பெற்றது.இச்சொல் இருமுறை அடுக்கி வந்தது அண்மையும் சேய்மையும் நிற்போரை விளிப்பான் வேண்டியும், இக்கருத்திற்குச் செவிகொள்ளுமாறு அவரை வலியுறுத்த வேண்டியுமாம்.

அலகு அளவு; ஒரு வரையறை, ஓர் எல்லை.

பிறக்கம் - பிறப்பு. அம் ஈறுபெற்ற பெயர்ச்சொல்.பிறக்குதல்வெளிப்படுதல்

உள்ளம் - படிதலாகிய உணர்வு. இப் புடவியின்கண் நுண்ணிதாய் ஊடறுத்துப் பரந்து நிற்கும் உணர்வுப் பெருக்கத்துள், நம் கொள்திறனுக்கேற்பப் புலப்படுகின்ற ஒருபுடை உணர்வு படிகின்ற இடம். இவ்விடம் நாம் உழுது பண்படுத்தும் அளவிற்கேற்பப் பயன் தருவதாகிய மூளைச் சேற்றிற்கும், உயிர்ப்பு நிகழும் நெஞ்சாங்குலைக்கும் இடைப்பட்டு ஏறியிறங்கா நிற்கும் உணர்வு என்பர். மெய்ந்நூலார்.

சான்றல் - நிறைதல், மேம்பட்டு நிற்றல்.

வேட்டல் அழுந்தி விரும்பல். பிறப்பு-உருவிழந்து நின்ற புலம்பன் (ஆன்மா உருவேற்று வெளிப்படல். என்னை? கட்புலனுக்குப் புலப்படாது நிற்கும் உயிர்வளி (பிராணவாயு) தீப்பொறியுட் பற்றி ஒளி வடிவாகிச் சுடர் என்று நின்றாற் போல, திண்மமும், தண்மமும், சூடும் இயக்கமும் ஒடுக்கமும் ஆகிய ஐம்பூத நிலைகளில் புலம்பன் படிப்படியாக இறங்குதல் செய்யும். இப் படிநிலைகளில் தனித்தனித் தங்குதலும், ஒன்றி வெளிப்பட்டுப் பிறப்புறுதலும், அறுதலும் நாம் விரும்பி நிகழுதல் அல்ல.

இறப்பு - பூதநிலைகளில் படிந்து நின்ற புலம்பன் அவற்றை விட்டுக் கடந்து ஆவி நிலையில் நிற்குந்தன்மை இறத்தல்- கடத்தல்-வெளிப்போதல்,

ஊங்கு - இவ்விடைப்பட்ட நிலையில்.

உவத்தல் - உள்ளம் களித்தல். எண்ணி மகிழ்தல்,

அழுங்கல் - மிகுவருந்தல்.

எள்ளல் - சிறிதாமென் றிகழ்தல்,

ஒம்பல் - பேணிக்காத்தல்

அலமரல் - துயரச் சுழற்சி.

வைகல் - நாள்தொறும்.

இப்பாட்டு, வாழ்வு அமைவினையும், அதற்கியைந்த பெருமையினையும், அப்பெருமையை நிலை நிறுத்தும் தன்மையினையும், அவ்வழி நில்லாத வாழ்வின் வெறிய போக்கினையும், அவ்வழி நின்ற வாழ்வின் அரிய நிலையினையும் கூறிநிற்கும், நேரிசை ஆசிரியப்பாவாம்

இது, பொதுவியல் என் திணையும், பொருண்மொழிக் காஞ்சி என் துறையுமாம்.