நூறாசிரியம்/இருக்குநாள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
3தோன்றிலாதாரே


குன்றம் பொடித்துக் குரைகடல் பாய்ச்சி
எந்திரக் கொழுவி னிராப்பகல் உழுது
வான வூர்தி மேனிலை நின்றே
அளப்பற வித்தி வளப்புற விளையினும்
கொளப்பெறு மளவொரு கையே; கொள்வதும் 5
உணப்பெறு மளவொரு வாயே; உண்பதும்
ஒருபொழு தளவொரு வயிறே; ஒருநாள்
இருபொழு தளவே! இருப்பதன் வரையே!
எஞ்சிய தின்னவர்க் கிவ்வள வெனுமுன்
துஞ்சிய ரெவருந் தோன்றிலா தாரே! 10
இருக்குநா ளிருக்க ஈகுக
பெருக்க முற்றவர் கருக்கமுற் றார்க்கே!

பொழிப்பு:

குன்று போலும் மண்மேடுகளைப் பொடித்து நிரவி நில மட்டமாக்கி, ஒலிக்கின்ற கடல் நீரைப்பாய்ச்சிக் குழைத்துச் சேறாக்கி, விசைப்பொறி யமைந்த கொழுபூட்டிய ஏரினால் இரவுபகல் ஓயாமல் உழுது கழனியாக்கிப் பரப்பும், இயலாமையும் கருதி வானவூர்தியின் மேல் நின்று அளவில்லாமல் விதைத்து, அதன் பயனாக வளம் பெருகுற்ற விளைவு கிடைப்பினும், நாம் அதனிற்கொள்வது ஒரு கை அளவினதே; அவ்வாறு கொண்டதில் உண்பது ஒரு வாய் அளவினதே; அவ்வாறு உண்பதும் ஒரு பொழுதில் ஒரு வயிற்று அளவினதே; அதுவும் ஒருநாளில் இரு பொழுதளவினதே; அவ்வூண்பாடும் நாம் வாழ்ந்து இருக்கின்ற எல்லையளவினதே! இவ்வழித் தாம் மிசைந்து எஞ்சிய ஈட்டத்தினை இன்னவர்க்கு இவ்வளவு எனப் பங்கிட்டு ஈயுமுன் இறந்துபடும் எல்லாரும் இருந்தார் என்னும் சுவடு இல்லாதவரே. ஆகலின் நாம் வாழ்ந்திருக்கும் நாட்களை வாழப்போவார் நன்றியின் நினைவுகூர, உலகச்சுழற்சியில் வந்து கூடிய செல்வப் பெருக்கினார்.அவ்வழி வந்து கூடாது வளஞ் சுருங்கினார்க்கு அதனை ஈந்து பெருமையுறுக என்றவாறு,

விரிப்பு :

குன்றம் பொத்தலும் குரைகடல் பாய்ச்சலும் எந்திரக் கொழுவின் இராப்பகல் உழுதலும், வானவூர்தி மேனிலை நின்று அளப்பற வித்தலும் - முயற்சி அருமை பற்றிக் கூறல் நேர்ந்தது - இல்பொருள் உவமை. பயனுறு உருவகமுமாம். அருமுயற்சியின் விளைவித்தாலும் தாமே நுகர்தல் அருமை என்பது பற்றிக்கொள்ளல், உண்ணல், பொழுது, வாழ்தல் இவற்றிற்கு எல்லையளவு கூற நேர்ந்தது.

எஞ்சியது இன்னவர்க்கு இவ்வளவு எனும் முன் துஞ்சல் - எஞ்சிய ஈட்டத்தைத் தம் பிறங்கடைகளுக்கு உரிமையாக்கு முன் தாம் இறந்து படல்.

இறப்பு நம் வினைப்பாடு முடியுமுன்னரே வந்து பற்றும் என்னும் உறுதி நோக்கிச் சொன்னது.

இருக்குநாள் இருக்க - நாம் வாழும் நாளின் வரலாறு பின்னோரால் மறந்து படாமல் நிலைத்து இருக்க இப்பாட்டு வாழ்வு நிலையாமையையும் அறத்தின் நிலைப்பாட்டையும் சுட்டி, ஈதலறத்தை வலியுறுத்தி நிற்கும், நேரிசை ஆசிரியப்பாவாம்.

இதுவும் பொதுவியல் என் திணையும், பொருண்மொழிக் காஞ்சி என் துறையுமாம்.