நூறாசிரியம்/உள்ளத்தாட்சி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
4 உள்ளத்தாட்சி


பரல்பரந்து அரலைவாரி
நுரைதுங்கிப் புரைபுகுந்தே
உள்ளோடிப் புறநடக்கும்
வெள்ளம் போலெம் உள்ளத் தாட்சி!
சொல்லிற் போகா நினைவு முட்ட 5
அல்லில் விழிக்கும் பகலிற் றுயிலும்
பல்லார் முன்னம் பாடுவாய்ப் படுத்தி
நல்லார் போய செந்நெறி நயக்கும்.
அஃதான்று 10
புனல்சாய்க்கும் புல்லென்கோ
அனலுருக்கும் மெழுகென்கோ
மேற்சிதர்ந்தே உட்கவிந்த
கார்போர்த்த கதிரென்கோ
தூவெண் பஞ்சின் திறத்த தாகி
நாவும் நெஞ்சும் ஒன்றி நடக்கும் 15
இனியர்க் குவந்தே இன்னார்க் கஞ்சி
முனிவி னடுங்கிக் கனிவிற் கலக்கும்
என்னிற்கா திறமுரைக்கோ
தற்படுத்தும் பெட்புரைக்கோ
பொருள்சேரின் புறமிறைத்தே 20
அறிவயிரும் நிரல் நிரப்பின்
உகுகண்ணிர் உளங்கொளுத்த
தகுமனைமேல் அழல்வீசிப்
புறவாழ்க்கைப் புற்பழித்தே
அகவாழ்க்கை அடிப்படுக்கும் 25
முட்டத் தடங்கிய முற்றா நெஞ்சின்
ஆட்டத் தழுந்திய இன்பம்
நாட்ட நாட்ட நாதா டாதே!

பொழிப்பு:

பருக்கைக் கற்கள் மேல் அளாவிப் பரந்தும், பெருமணலை அரித்து வாரியும், கதுமெனப் பாய்ந்து அலைதலின் துரையினை மிகுவாகத் தோற்றியும், நிலத்தின் உட்டுளை புகுந்தும், அடிக்கண் விரைவு படவும் மேற்கண் மென்னடையிட்டும் பாய்ந்தோடும் புதுப்புனலின் தன்மையதாம் எம் உணர்வு துளும்பும் உள்ளத்தின் ஆளுகை!

சொற்களில் இதுகாறும் புகுந்து வெளிவரா நிலைத்த எண்ணங்கள் எஞ்ஞான்றும் புறப்பாட்டிற்கு உணர்வை மூட்டுதல் செய்தவதால், திடுமென அமைதியான இராக்காலத்தே விழித்து எழவும், பாடு நிரம்பிய பகற்காலத்தே இராவிழித்த களைப்பால் துயிலவும், பலபடக் கூடுவார் முன்னிலையில் வெளிப்பாடுற உரைதரவும், அவ்வுரைப் பாட்டின் வழி, முன்னை நலஞ் செய்தாரின் வழியே செவ்விய நெறிமுறைகளை விரும்பிப் பாராட்டி ஏற்கவும் செய்வதாம் அவ்வுள்ளத்தின் ஆளுகை!

அவ்வாளுகை நிறைந்து, எம்மை, அவ்வுணர்வெனும் புதுப்புனலால் சாய்வுறும் புல் என்று கூறுவேனோ? அனல் பாய்ந்து உருக்குகின்ற மெழுகென்று கூறுவேனோ? அன்றிப், புறத்தே விரிவார்ந்து அகத்தே கவிழ்ந்த மழை நிரம்பிய முகிலால் போர்க்கப் பெற்ற கதிரென்று கூறுவேனோ?

தூய வெண்மையான மெல்லிழை சான்ற பஞ்சு போல், புறப்படுத்தும் நாவும் அகப்படுத்தும் நெஞ்சும் ஒன்றே ஆகி, நலஞ்சான்ற இனித்த நடையுடையார் தம் தன்மைக்கு மகிழ்ந்து, அவ்வாறல்லாத நடையினார் தம் புன்மைக்கு வெருண்டு, நடுங்குதல் செய்தும், முன்னையோர் கனிவான சொல்லிலும் செயலிலும் கலந்து ஒன்றாகும் எமக்குச் சிற்சிலகால் வயப்பட்டு நிற்காத தன்மையை உரைக்க மாட்டுவனோ? எம்மைத் தம் வயப்படுத்தும் விருப்பினை உரைக்க மாட்டுவனோ?

எம் இயல்பான வினைவழிப் பொருள் வந்து சேரின், அதனைப் புறத்தார்க்கும் வாரி இறைத்துத் தீர்த்தும், எம் அறிவினை உண்கின்ற வரிசைப்பட்ட வறுமையினால், எம் உளத்தைக் கொளுத்தும் படி உகுக்கின்ற கண்ணீர் நிரம்பிய எம் போக்கிற்கு இயைந்த மனையாட்டியின் மேல் தீப்போலும் உரையை வீசியும், இவ்வுலகியல் மாந்தர் தாம் புறத்தே ஆரவாரிக்கும் புல்லிய வாழ்க்கையைப் பழித்தும், அகவாழ்க்கைக்கு எம்மை அடிமைப்படுத்தும் எண்ண மூட்டங்களால் உள்ளடங்கிக் கிடக்கும் எம் முதுமை சாரா இள நெஞ்சினது ஆட்டத்தே அழுந்திக் கிடப்பதான இன்பத்தை எடுத்து விளக்க முற்பட முற்பட நாவும் நாடுதல் இயலாதாகின்றது.

விரிப்பு:

பரல் - பருக்கைக் கற்கள்; பரந்து - அளாவிப் பரந்து, அரலை - பெருமணல்; நுங்குதல் - மிகுவாகத் தோற்றுதல்;

புரை - நிலத்தின் உட்டுளை

உள்ளோடிப் புறம் நடக்கும் - அடிப்புறம் விரைந்தும், மேற்புறம் விரைவு குறைந்தும் நடையிடும் வெள்ளத்தின் இயல்பாந்தன்மை உணர்வு நிறைந்த உள்ளத்தின் தன்மையும் அதுபோல் என்க. புறத்தே நோக்குவார் உள்ளோட்டம் அறியார் ஆகலின் அவ்வாறு கூறலாயிற்று. உணர்வு நிரம்பிய உள்ளம், புதுப்புனல் வெள்ளத்திற்கும், அது பரந்து செல்லும் தன்மை அவ்வுள்ள உணர்விற்கும், பரல் பெருத்த வினைகளுக்கும், அரலை சிறு வினைப்பாட்டிற்கும், அவற்றில் பரந்து தோன்றும் நுரை அவ்வினைப்பாடுகளால் மீதூரும் இன்ப துன்பத்திற்கும், உட்டுளை காலத்திற்கும், அதனுள் ஒரளவு வெள்ளம் புகுந்து கரவுதல், காலத்தால் அவ்வுணர்வின் ஒரு பகுதி மறைந்து போதற்கும், பொருந்தக்கூறி, உள்ளத்தின் ஆளுகையே உணர்வு சான்ற புலவன் ஒருவனின் வாழ்க்கை என்று உருவகித்துக் கூறியதென்க. என்னை? உள்ளத்தின் ஆளுகையே வாழ்க்கையாயின் அறிவின் ஆளுகை எதுபோலாம் எனின், அமைச்சு போலாம் என்க.அறிவு அமைச்சு போலும், உள்ளம் அரசு போலும் நின்று ஆள்வதே உணர்வு வாழ்க்கை எனக்கொள்க. இனி, உணர்வற்றார் வாழ்க்கை இருள் நிரம்பிய உள்ளம் போலும், மருள் நிரம்பிய அறிவு போலுமாகித் துன்பம் சேர்ப்பதாம் என்க.

சொல்லிற் போகா நினைவு - நினைவோட்டத்திற்குச் சொற்களே வாய்க்கால் ஆகலின், அதன் வழிக் கழியாத நினைவுகள் என்றபடி நினைவு. நிலைத்த எண்ணங்கள். நில்- முதனிலை,

முட்டுதல் - புனல் நிரம்பிக் கழிவாயை முட்டுதல் செய்தல் போல், உணர்வுச் சுவரை நிரம்பிய எண்ணங்கள் முட்டி நிற்பது.

விழிக்கும் துயிலும் - தாமே நிகழ்பவாகலின் விழிக்கும் துயிலும் எனலாயிற்று. விழிப்புநிலை பகலுக்கும், துயிலுநிலை இரவுக்கும் உரியவாயிருக்க, மாறாகச் செயல்படுவது உணர்வோட்டம் தொடர்ந்து நடக்குமாகவின் என்க.

பாடுவாய் - வாயுரை, வாய்பாடு என்பது மாறி வந்தது. படுத்தல் - செய்தல்.

செந்நெறி - செவ்வியநெறி. நயக்கும் - விரும்பி ஏற்கும்.

ஆன்றல் - நிறைதல்.

புனல்காய்க்கும் - கதிரென்கோ புனல் பாய்தலால் அதன் விரைவு தாளாது சாயும் புல்லைப் போலவும், அனல் காய்தலால் அதன் சூடு தாளாது உருகும் மெழுகைப் போலவும், விரிந்து சிறகார்ந்த முகிற் கூட்டத்துள் ஒடுங்கிய கதிர் போலவும் எம்முடல் ஆட்பட்டு நிற்கின்றது என்பதாம். புனலால் சாய்க்கப் பெறும் புல் தன் வலியிற் குன்றி நீரின் வலிக்குத் தன் உடலை ஆட்படுதலும், அனல் போன்ற உணர்வால் தான் உருக்குலைதலும் காட்டப்பெற்றதென்க. இனிப், புறநிலையில் இவ்வாறான மாற்றங்களும் ஏலாமையும் இருப்பினும் அகநிலையில் எஞ்ஞான்றும் ஒளி நிரம்பியிருத்தலால் கார் போர்த்த கதிர் எனலாயிற்று.

தூவெண் பஞ்சின்....ஒன்றி நடக்கும் இனியார் - பஞ்சு அகத்தும் புறத்தும் தூய வெண்மையாக இருத்தல் போல் நாவும் நெஞ்சும் ஒன்றி நடப்பார் தம் அகமும் புறமும் தூய்மையாக விளங்கும் என்றபடி அவ்வாறு விளங்குபவரே இனியார் என்றதுமாம். காட்சியும், சொல்லும், செயலும் தனித்தனியே இனிமை பயத்தலினும் இம்மூவினையும் ஒன்றி நடத்தலே இனிமையுடையது என்க. நெஞ்சு நடந்தவழி நா நடப்பதே இயல்பாக இருக்க, நா நடந்த வழி நெஞ்சு நடப்பதாக முன்பின் முரணிக் கூறியது ஏனெனில், மணம் நுகர்ந்த வழி மலர் காண்டலே புற நிகழ்ச்சியாதல் போல், சொல் வந்த பின்னரே நெஞ்சு உணரப்படும் ஆகலான் என்க.

இன்னார் - அவ்வாறு நாவும் நெஞ்சும் ஒன்றி நடவாதார்.

அஞ்சுதல் - அத்தகையாரால் பிற்றைக் காலத்து என்ன நேருமோ என்று அஞ்சுதல்.

முனிவின் நடுங்கிக் கனிவிற் கலக்கும் - இன்னாதார்க்கு இயல்பே அஞ்சுதலும், அவர் முனிந்து கூறுவனவற்றிற்கு நடுங்குதலும், இனியார்க்கு இயல்பே உவத்தலும், அவர் கனிந்து கூறுவனவற்றிற்கு உளங்கலத்தலும் இயல்பாயின வென்க. இவ்விரு நிகழ்வுகளும் அறிவு கலவாமல் உள்ளமே செய்கின்ற செயல்கள் ஆதலின், என் நிற்கா திறம் ஆயிற்று. ஈண்டு 'என்' என்ற அகவுணர்வு நிலை அறிவு பற்றி விளங்கிற்றென்க.

தற்படுத்தும் பெட்பு - தனக்கு உட்படுத்தும் தன்மை அறிவுணர்வால் ஆட்படாது உள உணர்வால் ஆட்படுதலின் 'என்' நிற்காது தற்படுத்தது எனலாயிற்று.

பொருள் சேரின்- பொருள் சேரப் பெறின் சேர்த்தல் என்னாது சேரல் என்றது, பொருளை விரும்பிச் சேர்க்காததும், இயல்பாகச் சேர்தலையே குறித்ததும் ஆகும். அவ்வாறு இயல்பாக வந்து சேரினும் அதனைத் தனக்காகக் பயன் படுத்திக் கொள்ளாது, தன் புறத்தே உள்ள யாவர்க்கும் பயன்படுத்தல் உள்ள உணர்வு நிரம்பியார் செய்கையாதலின், புறமிறைத்தல் இயல்பாயிற்று. அதுவும் அளவிட்டுச் செய்யப்படாததாகலின் இறைத்தல் எனலாயிற்று. அவ்வாறு சேரும் பொருளைத் தனக்கென வைத்துப் பேணிக் கொள்ளாது, தன்புறத்தே இருப்பார்க்கும் தட்டின்றி முழுதும் இறைத்தலால், பொருள் முட்டுப்பாடுற்று வறுமை மிகுதலை நிரப்பு எனலாயிற்று.

வறுமை என்பது ஏலாமை, சோம்பல், உழையாமை, முயற்சியின்மை முதலியவற்றால் வரும் வெறுமை நிலை,

நிரப்பு - ஈகை நிலையால் ஏற்படும் பொருள் முட்டுப்பாடு. இது சான்றோர் போற்றுதலுக் குரியதாகையின் நிரப்பு எனலாயிற்று. இதனை வறுமை எனக்குறித்தல் சாலாது. நிரப்பு மங்கலச் சொல். தொடர்ந்த வரிசைப்பட்ட வறுமைநிலை யாதலின் நிரல் நிரப்பு எனலாயிற்று. இத்தகைய இலவாந் தன்மையால் அறிவுணர்வு ஊறுபடும் ஆகையான் அறிவயிரும் நிரல் நிரப்பு எனலாயிற்று. அயிர்தல் ஆர உண்ணல்.

தன்னைச் சார்ந்த பிறர்க்குச் சேரும் பொருளையெல்லாம் இறைத்தலால் வரும் தொடர்ந்த வறுமை நிலை அறிவைத் தடைப்படுத்தி, அதனான் வரும் வினைப் பாட்டைக் குறைவிக்குமேயன்றி உளவுணர்வை சிதைத்து விடாது என்னும் குறிப்புத் தோன்றவே நிரப்பு அறிவு அயிரும் என்றது. எத்துணை வறுமை வந்துள்ள போதும் தாம் கொண்ட ஒழுகலாற்றை நல்லுணர்வு சான்றவர் என்றும் கைவிடாது தம் உள்ளவுணர்வில் துளியும் குன்றார் என்ற உறுதிப்பாடு தோன்றலே அவ்வாறு கூறலாயிற்று. ஒப்புரவு உள்ளத்தின் செயலாம். அறத்தால் வந்த பொருளைத் தம் திறத்தால் ஒன்றிப் புறத்தே இருப்பார் யாவர்க்கும் தட்டின்றி வாரியிறைத்து அதனான் பொருள் முட்டுற்ற சான்றவர், அவ்வினைப்பாட்டை அறிவால் ஆயாது உளத்தாலேயே பருகுவர் என்பது உட்பொருள். அறிவான் துன்பெனக் காணப்படுவதுள் உளத்தான் இன்பெனக் காண்டலும் உளதாகலின் இதுபற்றி விரித்துக் கூறலாயிற்று. ஒப்புரவு அறிவுக்குத் துன்பெனினும் உளத்திற்கு இன்பந் தருதல் பற்றியே வள்ளுவரும். ஒப்புரவினால் வரும் கேடு, விற்றுக்கோள் தக்கதுடைத்து என்று வலித்துக் கூறினார் என்க.

உகுகண்ணி உளங்கொளுத்த தகுமனைமேல் அழல் வீசி - தொடர்ச்சியாக வரும் வறுமை நிலையால் மனைவி கண்ணீர் உகுத்தாள் அஃது உளத்தைக் கொளுத்தியது என்றபடி நிரல் நிரப்புக்குக் கண்ணிர் உகுத்ததால் அவள்மேற் கடிதல் வேண்டுதலாயிற்று தம் ஒப்புரவு சான்ற உளத்தைத் தேராது, கண்ணீர் வடித்தல் கடிய வேண்டுவதாகலின் அழல் போலும் சுடு சொற்களை வீச வேண்டியதாயிற்று. என் நிற்கா திறஞ் சான்றதும், தன் படுத்து பெட்பு வாய்ந்ததும், கார் போர்த்த கதிர் போன்று இருப்பதுமான எம் - உள்ள உணர்வையும் அதன் ஒப்புரவையும் உணர்ந்து கொள்ளாத் தகைமையினோகிக் கண்ணீர் உகுத்த தன்மைக்கு அழன்று கடியலாயிற்று. உளம் கொளுத்தப் பெற்ற பின் அதனின்றெழுப்பும் வல்லுணர்வு அழல் போன்ற சாற்களை வீசிற்றென்க. ஒப்புரவினால் வரும் கேட்டிற்குத் தாளாத்தன்மையினாள் எனினும் அவள் தகுதி சான்ற மனைவியே என்று சுட்ட...தகுமனை எனலாயிற்று.

புறவாழ்க்கைப் புற்பழித்து - புறவாழ்க்கையின் புல்லிய தன்மைகளைப் பழித்து.

அகவாழ்க்கை அடிப்படுக்கும் - புல்லிய புற வாழ்க்கையை வெறுத்து, ஒளிசான்ற அகவாழ்க்கைக்கே அடிப்படுக்கும் உணர்வு. அகவாழ்க்கை - நல்லார் போய செந்நெறி நயக்கும் வாழ்க்கை; நாவும் நெஞ்சும் ஒன்றி நடக்கும் வாழ்க்கை.

மூட்டம்- அத்தகை வாழ்க்கையின் உள்ளார்ந்த உணர்வுகள் நிறைந்த நிலை. இந்நிலையின் அடங்கிக் கிடக்கும் நெஞ்சம்.

முற்றா நெஞ்சம் - இளமை நெஞ்சம். கள்ளமும், கவடும், பொய்யும், புனைவும் - சூழாது மென்மையும், இளகலும் சான்ற உள்ளம். உள்ளத்து இளமையும், அறிவின் முதுமையுமே சான்றோர்க்கு உவக்கும் தன்மையவாகலின், அப்பொருள் தோன்றக் கூறியது.

நெஞ்சு முற்றுதல் எதிர்ப்படும் மெல்லுணர்வுகளை அறியாது போதல் பற்றி, வேண்டுவது இளமை நெஞ்சமே என்றபடி உள்ள உணர்வுகள் மென்மை சான்றும் அறிவுணர்வுகள் வன்மை சான்றும் இருத்தலே இவ்வுலக வாழ்க்கைக்கு இன்பமும், அவ்வாறல்லாது, உள்ள உணர்வுகளில் வ்ன்மையும், அறிவு உணர்வுகளின் மென்மையும் பெறுதல் இவ்வுலக வாழ்க்கைக்குத் துன்பமும் தருதல்பற்றி, முற்றா நெஞ்சின் ஆட்டத்தழுந்திய இன்பம் எனலாயிற்று.

முற்றா நெஞ்சின் ஆட்டம்- மெல்லியது துளிக் காற்றுக்கும் ஆடுந் தன்மை போல், இளமை நெஞ்சம் துளி இன்பத்தையும் பேரின்பமாகக் கொள்ளும் தகையது என்க. ஆட்டம் - அசைவு. உள்ள அசைவுகள் ஒவ்வொன்றும் இன்பமே என்றபடி அத்தகைய இன்பம் எடுத்துரைக்கத் தக்கதும், முழுதும் எட்டத்தக்கதும் அன்று என்பதால், நாட்ட நாட்ட நா நாடாது எனலாயிற்று. அத்தகு இன்பத்திற்கு எல்லையே இல்லை என்பது பொருள்.

இப்பாட்டு, உணர்வு சான்ற அகவாழ்க்கையின் தன்மைகளைக்கூறி, ஒப்புரவாட்சியின் அகப்புறக் காட்சிகளைக்காட்டி, துன்புறு மாந்தர்தம் துயர்க்கு அவர் தாம் அகவாழ்க்கைக்கு அடிப்படுக்கா நிலையே கரணிய மென்றெடுத்து விளக்கி ஆற்றுப்படுக்கும் வஞ்சித்தளை பொதுளிய நேரிசை ஆசிரியப்பாவாம்

இப்பாட்டு பொதுவியல் என் திணையும், முதுமொழிக் காஞ்சி என் துறையுமாம்.