உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/நாணீள் கட்டுரை

விக்கிமூலம் இலிருந்து

10 நாணிள் கட்டுரை


யாங்கியா னாற்றுவ னையே! தூங்குமென்
றாங்குபல் லடிசி லட்ட, ஈங்கிது
நார்ப்பிணை சேக்கை யிழிந்துவெளி நண்ணி,
நீர்வார் செப்பி னளைந்துமண் நிரப்பிச்
சுள்ளி யடுக்கிக் கொள்ளி யூட்டி 5
வெள்ளிலைப் படைய லாயத்து விரித்துப்
பொய்யி னுண்டோர் பையல் மணந்து
செய்மணற் சிற்றில் வைகி வாழ்தலை
நிற்பா லுரைத்ததுங் கேட்டதும் நிகழ்த்தத்
தற்புதுக் கேள்வன் பின்னகந் தாழ்க்க 10
நனிசினந் திளையோன் குஞ்சி நலிக்கவன்
“அம்மே”யென, அவள் அடுத்திஃ தலைக்கவீ
‘தப்பே யெனையா னலற வோடி
வெப்புரை மாறி வீடு கிடத்தி
மேற்பணி மேயவிக் கால்குடை சிறுக்கி 15
மறுகி னிறங்கியப் பீறல் விளித்துக்
கரைக்கு நாணிள் கட்டுரை
உரைக்கப் போதா தொருசிறு நாவே!


பொழிப்பு:

எங்ஙனம் யான் பொறுத்தல் செய்வேன் ஐயனே! தூங்கும் என்று கருதி, யான் அடுக்களைக்கண் பல்வகையா உணவு வகை அடுதல் செய்ய, ஈங்கு இது கிடத்தப் பெற்ற நாரினால் பிணைத்த கட்டிலினின்று இறங்கி வெளிப்போந்து, நீர் வாரும் செப்பின் மண்ணிட்டுக் குழப்பிச் சுள்ளிகள் அடுக்கித் தீயூட்டிச் சமைத்த மண்சோற்றை வெற்றிலை விரித்துத் தன் கூட்டத்தார்க்குப் படையலிட்டுத் தானும் பொய்க்காட்சியாக உண்டு, அச்சிறுவர் கூட்டத்துள்ள ஒரு பையலை விளையாட்டாக மணந்து கொண்டு, தான் மணலாற் செய்த சிற்றில் மருங்கு வாழ்தல் போலும் பொய்யின் ஆடுங்காலத்து, யான் நம் இல்லத்துக்கண் நின்பால் உரைத்ததும் உரைக்கக் கேட்டதும் போன்றதோர் உரை நினைந்து இஃது அவன் பால் உரையாடல் செய்ய, அவ்வுரை கேட்ட இதன் புதுக் கேள்வனாகிய அவ்விளையோன், இதனுடைப் பின்னலைப் பற்றி வலித்துத் தலை தாழ்க்க, இது மிகச்சினந்து அவன் தலைமயிரைப் பற்றி வருத்த, அவன் வலிமேலிட்டு 'அம்மே' என அழைக்க, அவன்றாய் அவ்விடத்துப் போந்து இதனைக் கையால் அலைத்தல் செய்ய, ஈது ‘அப்பே’ எனக் கதற, யான் அலறிப்புடைத்து ஆங்கு ஓடி, அவன்றாயோடு வெப்பமான உரைகளை மாறி உரைத்து, இதனைப் பற்றியிழுத்து வீடு கொணர்ந்து கிடத்திப் பணி மேற்கொண்டு நான் புறக்கணிப்பாய் இருக்க, கால்குடையா நிற்கும் இச்சிறுக்கி மீண்டும் யானறியாவாறு தெருவில் இறங்கி, அப் பீறல் உடுத்த பையலை விளித்து அவனொடு நாள் முழுதும் நீளும்படி கரைதல் செய்தொழுகும் கட்டுரை முற்றும் நின்பால் உரைத்துக் காட்டுதற்குப் போதுவதாகாதது என் ஒரு சிறிய நாவே !

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

தலைவன் பொருள்வயிற் பிரிவதை ஆற்றாத தலைவி, அவன் பிரிவிடைக் காலத்து, தன் சிறிய மகளின் அடக்கலாகாக் குறும்புச் செயல்களையும், அவற்றால் தான் படுந்துயரமும் கூறி, அக்காலத்து எவ்வாறு ஆற்றி இருப்பேன் என்று கவன்று கூறியதாக அமைந்ததிப் பாடல்.

தலைவன் பிரிவால் தன் ஆற்றாமையை வெளிப்படக் கூறாது, தன் சிறு மகள்மேல் ஏற்றிக்கூறி, அவன் பிரிவைத் தவிர்க்க வேண்டினள் என்றபடி.

தலைவி, தன் குறும்பு மகளால் படுதல் தன் மனத்திற்கு மகிழ்ச்சி தருவதொன்றே எனினும், அதனைத் தான் படுத்துயரே போல் இட்டுக் காட்டுதல் ஏனெனின், தலைவனின் பிரிவைத் தடுத்து நிறுத்த வேண்டியே என்க. இனித் தன்னையும் தன் குழவியையும் பிரிந்து செல்ல விரும்புவானுக்குத் தன் மகளின் பிள்ளைக் குறும்பை நினைவூட்டிக் கூறுதல், மீதுற்றக் குழந்தையின் நினைவால் அவன் உள்ளம் பேதுற்றுப் பிரிவுக்கஞ்சும் என அவள் கருதினமையும் ஆகும். இனி, குழந்தையின் குறும்புத்தனத்தால் தான்படும் துயர் அவனுக்குத் தன்மேல் கழிவிரக்கம் ஏற்படவழிவகுக்குமேல், அதனாலும் அவன் செலவு தடைப்படல் நேரும் என்று அவள் கருதினாள் எனினும் பொருந்துவதாகும் என்க.

பிரியத்தலைப்பட்ட தலைவன் தன் போக்கை அவள் விரும்பவில்லை என்பதை முதற்கண் அவனுக்கு உணர்த்த விரும்பியவள் 'யாங்கு யான் ஆற்றுவன் ஜயே! என்றாள். ‘ஐ’ என்றது தலைவனை, "ஐ" தலைவன், ‘ஏ’ விளி, இரங்கக் கூறியது.

ஆற்றுதல் - பொறுத்தல்.

யாங்கு யான் ஆற்றுவன் என்பதால் ஆற்றுதற்கியலேன் என்று உணர்த்தினாள் என்க. தலைவனிடம் எதிர்மறையாக ஆற்றியிரேன் எனக்கடுத்துக் கூறுதல் மனையுறை மகளிர்க்கொத்த தன்றாகலின், எங்கன் ஆற்றியிருப்பேன்? என்று இரங்குதல் வினாவாகத் தொடுத்துக் கூறினள் என்றபடி அவள் இயலாமையை அவன் உய்த்துணர்ந்து கொள்வதே சால்புடையது என்று அவள் கருதினாள் என்க.

இனி, எங்ஙன் ஆற்றியிருப்பேன் என்று தன் இயலாமையைக் கூறிய அவள், அதற்குரிய காரணத்தையும் அடுத்துக் கூறத் தொடங்கினாள் என்க. அஃதன்றாயின் அவன் தன் பெண்மைக்கு இழிவு கருதலாம் என்று அவள் அஞ்சினாள் என்க.

தூங்கும் --- என்று அட்ட -குழந்தையைத் துங்க வைத்து. அது தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதிலேயே, தனக்குற்ற சமைத்தல் தொழில்களைச் செய்து கொள்ளலாம் என்ற கருத்தில் அவற்றில் ஈடுபட்டாள் என்க.

அடிசில் - அடுதல் தொழிலால் பண்ணப்படுவதாகலின் உணவைக் குறித்தது. அடுதல் - சமைத்தல். அடு- கொல், தீயிடு- பச்சைக் காய்கறிகளைக் கொல்லுதலும் தீயிடுதலுமாகிய தொழில் ஆகலின் அடுதல் சமைத்தல் என்றாயிற்று. இனிக் கொல்லுதலும் தீயிட்டு அழித்தலுமாகிய தொன்றாகலின் போரிடுதலும் அடுதல் எனப் பெயர் பெற்றது.

ஈங்கு இது - 'இது' வென்றது குழந்தையை.

நார்ப்பினை சேக்கை - நாரால் இழுத்துப் பின்னப் பெற்ற கட்டில், சேக்கை-சேண் வேர்ச்சொல். உயரத்தைக் குறிப்பது. உறங்குங்கால் உயர்வான இடங்களிலேயே உறங்குதல் இயல்பாகலின் சேண் என்ற வேரடியாகச் சேக்கை என்ற சொல் பிறந்து படுக்குமிடத்தைக் குறித்தது.

இழிந்து -நழுவி, கட்டிலினின்று ஓசைப்படாது இறங்கி, ஓசைப்படாது இறங்கியது குழந்தையின் வலக்காரத்தைக் காட்டும்.

வெளி - விரிந்த இடத்தைக் குறிக்கும் சொல். விள் வேர்ச்சொல். விள். விரிவு விளர் விளக்கம் முதலிய சொற்களை ஓர்க, விள்-வெள்-வெளி.

நீர்வார் செப்பு -நீர் மொள்ளும் செப்பு.

அளைந்து - குழப்பிச் சேறாக்கி.

சுள்ளி - சிறு சிறு விறகுச் செதிள்கள்.

அடுக்குதல் - அவற்றை எளிதில் தீப்பற்றுமாறு ஒன்றன் மேல் ஒன்று இடைவெளி தோன்ற அடுக்கி வைத்தல்.

கொள்ளி - பற்றப்படுவதாகிய தீ.

ஊட்டி - பற்றுமாறு செய்து.

வெள்ளிலைப் படையல் - வெள்ளிய இலை. வெற்றிலை, விளையாட்டயரும் சிறு மகளிர் தாம் மண்ணால் சமைத்த சோற்றை வெற்றிலையில் பரிமாறினர் என்பதாம்.

ஆயம் - விளையாடும் மகளிர் கூட்டம்.

பொய்யின் உண்டு - பொய்யாக உண்ணுதல் போலும் மெய்ப்பாடு காட்டி

பையல் மணந்து - சிறியோர் விளையாடுங்காலை, பெரியோர் மெய்யின் ஆற்றும் செயலேபோல், தாமும் பொய்யின் ஆடிக்காட்டி மகிழ்வது உலகியல்பாகவின், பெரியோர் தம்முள் மணந்து மகிழ்தல் போலும் தாமும் தம்முள் மணம் செய்வது போலும், மனம் செய்து கொண்ட கணவன் மனைவியர் உரையாடுதல் போலும், நடித்து மகிழ்வர் என்றபடி

செய்மனல் சிற்றில் - மணலால் செய்யப்பெற்ற சிற்றில்

வைகி- தங்கியிருந்து.

வாழ்தலை- வாழ்கின்ற பொழுது.

நிற்பால் உரைத்ததும் கேட்டதும்- யான் நின்பால் இல்லறம் புரியுங்காலத்து உரைத்தவற்றையும், உரைக்கக் கேட்டவற்றையும்.

நிகழ்த்த - நிகழ்த்திக்காட்ட

பெரியோர் உரையாட்டு சிறுவரைக் கவருமாகலின், அதுபோல் தாமும் தம் ஆயத்தாரிடைக் கணவன் மனைவியர்போல் உரையாடி மகிழ்வர் என்பதாம்.

தன் புதுக்கேள்வன் - புதிதாகத் தன்னை மணந்த உரிமையாளன் - கணவன்.

பின்னகம் - தலைமயிர்ப் பின்னல்.

தாழ்க்க - தாழும்படி இழுக்க

உரையாட்டால் சினமும் மகிழ்வும் தோன்றும் போலும் மெய்ப்பாடு காட்டி விளையாடுமிடத்து, சிறியோரும் பெரியோர் போலவே மனைவியர் மயிர்ப்பற்றி உலுக்குதல்; சிறியோர் முன்னர்ப் பெரியோர் இவ்வாறு நடப்பது, அவர்க்கு எத்துணைக் கவர்ச்சியான காட்சியாகப் பட்டு, அதுபோலும் அவர் நடத்திக் காட்டுதற்கு அவரை வழிப்படுத்திக் காட்டும் என்பதைப் பெரியோர் நினைக்க

நனி சினந்து - மிகவும் சினங்கொண்டு.

குஞ்சி- ஆடவர் தலைமயிர்.

நவித்தல் - வருந்தும்படி செய்தல்,

அவன்.அம்மே என - விளையாட்டாக அவன் தலைமயிரை அவள் பற்றியிழுத்து நலிக்க, அதனால் உண்மையிலேயே வருந்தினான் ஆகலின் அது தாளாது, அவன் தன் தாயை அம்மே என விளித்தான் என்றபடி

அவள் அடுத்து - அவன் தாய் இவர்களை நெருங்கி வந்து.

இஃது அலைக்க- இப் பெண்ணைக் கையால் அடித்து வருத்த

ஈது அப்பே என- அவன் துணைக்குத் தன் தாயை அழைத்துக் கொண்டது போலவே, இவளும் அவன் துணையினும் வலிந்த துணை வேண்டி, அப்பே’ என விளித்தாள் போலும்!

யான் அலற ஒடி- யானும் அலறிப் புடைத்து ஓடி

வெப்புரை மாறி - வெம்மையான சுடு சொற்களை ஒருவருக்கொருவர் மாறி உரைத்து.

வீடு கிடத்தி- தன் மகனைப் பற்றியிழுத்து வந்து மீண்டும் படுக்கையில் கிடத்தி.

மேற்பணி மேய- விட்ட பணிகளை மேற்கொண்டு ஈடுபட்டு நிற்க,

கால்குடை சிறுக்கி-கால் குடைந்து நிற்கும் சிறுமி, ஒரிடத்தும் நிற்காமல் ஓடுதலும் வருதலும் ஆகிய கால்களைக் குடைந்து நிற்கும் கால்கள் எனக் கூறலாயிற்று.

மறுகின் இறங்கி- தெருவில் இறங்கி.

அப் பீறல் விளித்து- அப் பீறல் உடுத்த பையனை அழைத்து. பீறல். கிழிந்த துணி, இழிவு தோன்றக் கூறியது. தன் மகளொடு சேர்ந்து விளை யாடுதற்குத் தகுதியற்றான் என இழித்துக் கூறினள் என்றபடி

கரைக்கும் - பொருளற்று வெறும் வாய்ச் சொல்லாக உரையாடல். காகம் போல் கரைந்து நிற்றல்.

நாள் நீள் கட்டுரை - நாள் முழுதும் நீளும் தன்மையில் நெடிய உரையாடல்-கதை.

உரைக்கப் போதாது ஒரு சிறு நாவே - உரைத்துத் தீராது என்பதை, அதனை எடுத்துக்கூற என்சிறு ஒருநா போதாது என்று கூறினாள் என்றபடி

‘நீ என்னைப் பிரிவேன் என்று கூறுகின்றாய். நான் நாள் முழுதும் குறும்பு மிகுந்த நின் மகளொடு எங்கன் ஆற்றியிருப்பேன். அவளை அடக்கவும் ஆகேன் என் மனைவினைகளைச் செய்யவும் அவள் விடுவாள் அல்லள். நாளும் தெருவிற் போந்து அவளொத்த பிள்ளைகளுடன் வாயும் கையும் ஆடி வம்புரைக்கு என்னை ஆளாக்குகின்றாள். அதன் பொருட்டு நான் துயருறுவது மிகுதி. எனவே எம் இருவரையும் விட்டுப் போவது நினக்கு ஏற்றதாகாது’ என்று இறைஞ்சிக் கூறினாள் தலைவி என்க.

இது முல்லை யென் திணையும், பிரிநிலைக்கழுங்கல் என் துறையுமாம்.